அன்னமிட்ட கை

இடங்கழியார் நாயனார்

திருநட்சத்திரம்:

ஐப்பசி 8 – கார்த்திகை (அக். 25 )

ஒருவன் திருடினான் என்றால், அதற்கான காரணம் வறுமையே என்று உறுதியாகத் தெரிந்தாலும் கூட, அவனைச் சிறையில் அடைக்கிறது அரசாங்கம். ஆனால், இடங்கழியார் ஒரு நாட்டின் மன்னராக இருந்தாலும், நியாயமான காரணத்துக்காக திருடிய ஒருவரை விடுதலை செய்தார். இதன் காரணமாக சிவபெருமானின் அருளுக்கே பாத்திரமானார்.

கோனாடு எனும் குறுநிலப்பகுதியை ஆட்சி செய்தவர் இடங்கழியார். இவரது நாட்டைச் சேர்ந்த ஒரு சிவபக்தர், சிவனடியார்களுக்கு தினமும் அன்னதானம் அளித்து வந்தார். இவரது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். பக்தருக்கு வறுமையை உண்டாக்கினார். அடியவர்கள் வந்து, “அன்னம்’ என்று கேட்டால், என்ன செய்வது என்ற சிந்தனை ஏற்பட்டது. தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, தன்னை நம்பி வரும் பக்தர்கள் பட்டினியாக செல்லக்கூடாது என்ற எண்ணம் மேலிட்டது. அது, “திருடினால் என்ன?’ என்ற விபரீத எண்ணத்தை வளர்த்தது.

எனவே, அரண்மனை நெற்களஞ்சியத்தில் இருந்து நெல்லைத் திருட திட்டமிட்டார். அரண்மனை களஞ்சியத்துக்குள் யாரும் அறியாமல் புகுந்து விட்டார். சிறிய மூடை ஒன்று சற்று உயரமான இடத்தில் இருந்தது. அதை மெதுவாக இழுத்தார். ஆனால், அது சரிந்து கீழே விழுந்தது. இந்த சப்தம் கேட்டு சுதாரித்து விட்டனர் காவலர்கள். களஞ்சியத்துக்குள் வந்து பார்த்த போது, உடல் நடுங்கி நின்றார் சிவபக்தர். “வெண்ணீறு பூசிய நீர், இப்படிப்பட்ட செயலில் ஈடுபடலாமா?’ என, அவரை நோக்கி கடுமையாகக் கேட்ட காவலர்கள், மன்னர் இடங்கழியாரிடம் அவரை இழுத்துச் சென்றனர். தன் முன் அப்பாவியாய் திருநீறு பூசிய மேனியுடன் வந்து நின்ற சிவபக்தரைப் பார்த்த மன்னர் இடங்கழியார், “வெண்ணீறு பூசி பக்திப்பழமாய் இருக்கும் நீர், எதற்காக திருட வந்தீர்? உம்மைப் பார்த்தால் திருடன் போல் தெரியவில்லையே…’ என்றார்.

“அரசே… நான் சிவனடியார்களுக்கு அன்னமிடும் பணியைத் தவறாது செய்து வந்தேன். இப்போது, என்னை வறுமை வாட்டுகிறது. அடியவர்களுக்கு அன்னமிட நெல் இல்லாததால், இங்கே திருடப் புகுந்தேன். என்னை தண்டிப்பது பற்றி கவலையில்லை; ஆனால், எக்காரணம் கொண்டும் நான் செய்து வந்த இந்தத் தொண்டு மட்டும் நின்றுவிடக்கூடாது…’ என, கண்ணீருடன் சொன்னார்.         

வருத்தப்பட்டார் மன்னர் இடங்கழியார். “பக்தரே… இந்தப் பணியை நான் செய்திருக்க வேண்டும். ஆனால், என் குடிமக்களில் ஒருவரான நீர் செய்திருக்கிறீர். இனி, ஏழை அடியவர்களுக்கு உணவிடுவது என் கடமை. நீர் திருட வேண்டிய அவசியமிருக்காது. நானே அப்பணியைச் செய்வேன். உமக்கும் தேவையான நெல் தருகிறேன்…’ என்றார். இத்தகைய அருமையான தீர்ப்பளித்த இடங்கழியார், சிவனடியார்களுக்கு அன்னதானத்தைக் குறைவின்றி நடத்தியதால், சிவலோகம் அடைந்தார்.

அவரது குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நடத்தப்படும். அனைவருக்கும் உணவு கிடைத்து விட்டால், திருட்டுக்கு இட மில்லை என்பதை இடங்கழியாரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

நன்றி: தினமலர்
காண்க:  இடங்கழி நாயனார் புராணம்
காண்க: இடங்கழி நாயனார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s