மக்களின் மனசாட்சிக் குரல்

எழுத்தும் தெய்வம்
 தினமணி நாளிதழ்
(22.11.2010) தலையங்கம்
  
மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.
 
தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி “ஸ்பெக்ட்ரம்’ அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.
 
எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல், மக்கள் மத்தியில் பயமோ, வெறுப்போ இல்லாமல் பழகக்கூடிய வாய்ப்பும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான், குடியரசுத் தலைவராலும், மாநில ஆளுநர்களாலும் பத்திரிகையாளர்களில் ஓரிருவர் அடையாளம் காணப்பட்டு மாநிலங்களவைக்கும், மேலவைக்கும் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். மக்களோடு மக்களாகப் பழகும் இந்தப் பத்திரிகைப் பிரதிநிதிகள் மக்களின் நிஜமான பிரச்னைகளை எடுத்துரைக்கவும், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டவும் முடியும் என்பதால்தான் இத்தகைய ஒதுக்கீடு நமது அரசியல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
 
அதேநேரத்தில், பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில், நிருபர்களுக்குத் தரப்படும் மதிப்பையும், மரியாதையையும் பயன்படுத்தி, தவறான வழிமுறைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதை நாம் எப்படி மறுப்பது? “எழுத்தும்  தெய்வம், எழுதுகோலும் தெய்வம்’ என்று பத்திரிகைப் பணியை ஒரு தவமாக, சமுதாயப் பணியாகக் கருதிப் பணியாற்றுபவர்கள் மத்தியில், எழுத்தைப் பிழைப்பாக்கி, பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் செயல்படும் இடைத்தரகர்களும் பலர் மலிந்துவிட்டனர் என்கிற உண்மையை மறைத்துவிடவா முடியும்?
 
அரசியல்வாதிகள் மத்தியில் சேவையுணர்வு குறைந்து, பணம், பதவி, அதிகாரம் போன்றவைகளின் மீது மோகம் ஏற்பட்டு விட்டிருப்பதைப் போன்று, அதிகார வர்க்கத்தினர் மத்தியில், தாங்கள் மக்கள் சேவைக்காக மாதச் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் என்கிற எண்ணம் மறைந்து ஊழலுக்கு உதவிக்கரம் நீட்டும் போக்கு அதிகரித்திருப்பது போன்று, குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது போன்று, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் எழுத்துப் பணிக்குத் தொடர்பே இல்லாதவர்கள் பலர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உலவுகிறார்கள் என்பதும், இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதும் நிஜம்தானே!
 
சமுதாயப் பங்களிப்பாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளோடும், இலக்கியப் பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்துடனும் பத்திரிகை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களும், தினசரிகளும்கூட இந்தப் பட்டியலில் அடக்கம். அதேநேரத்தில், அதிகார வர்க்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அந்தத் தொடர்பின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கும் ஒரு கூட்டம் தயாராகிறதே, அதை எப்படித் தடுத்துவிட முடியும்?
 
சமீபகாலமாக, காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் காணப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக்காகப் போராடும் பத்திரிகைகள் குறைந்து, நிருபர்கள் என்கிற போர்வையில் வியாபாரிகளின் சார்பிலும், சமூக விரோதிகளின் சார்பிலும், தவறுகளுக்குத் துணைபோகத் தயாராக இருக்கும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் போன்றோருடன் கூட்டணி ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை வேதனையுடன் வேடிக்கை பார்க்க முடிகிறதே தவிர, இவர்களை வடிகட்டவோ, விலக்கி நிறுத்தவோ முடியாதே, என் செய்ய?
 
மாவட்ட அளவில் இப்படி ஒரு நிலைமை இருந்ததுபோய், மாநில அளவிலும் தேசிய அளவிலும்கூட இந்தப் போக்கு, கடந்த இருபது ஆண்டுகளாக, மலிந்துவிட்டிருக்கிறது. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவும், “கார்பரேட்’ கலாசாரத்தின் தாக்கமும், பத்திரிகையாளர்களை அரசியல் இடைத்தரகர்களாக மட்டுமல்லாமல், சமூக விரோதிகள், வர்த்தக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டணியில் இன்றியமையாத அங்கமாக மாற்ற முற்பட்டுவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இப்போது வெளியாகி இருக்கும் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்.
 
பொதுநல வழக்கு மையம் என்கிற சமூக ஆர்வலர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு வருமானவரி இலாகாவினரால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒட்டுக்கேட்ட தொலைபேசி உரையாடல்களுக்கு நீதிமன்றத்தில் மரியாதை தரப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பத்திரிகையாளர்கள் என்பதுதான் நமக்கு வேதனை அளிக்கும் விஷயம்.
 
பிரதமர் மீது படிந்திருக்கும் களங்கத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் ஊழல்களையும் திசைதிருப்ப, “அவுட் லுக்’, “ஓபன்’ போன்ற பத்திரிகைகளையேகூட விலைபேசி ஊழலில் தொடர்புடையவர்கள் இதுபோன்ற பரபரப்புச் செய்திகளை வெளியிட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுபோல, பத்திரிகையாளர்களும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாக வேண்டும்.
 
சிதைந்துவரும் மக்கள் மன்றத்தின் நம்பிக்கைக்கு நடுவில் இருக்கும் வெள்ளி ரேகை பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களின் நேர்மையும்தான். அதுவும் சிதைந்துவிட்டால் இந்தியாவைக் குழப்பமும் பேராபத்தும் சூழ்ந்துவிடும். பத்திரிகையாளர்கள் இடைத்தரகர்களாகிவிடக் கூடாது!
 
நன்றி: தினமணி
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s