இல்லங்களில் வாழ வைப்போம்!

”உலகெங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ் கட்டாயம் இடம் பெற வேண்டும். தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்ததும், தமிழர்களுக்கான மொழி என்பதையும் தாண்டி, இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக பரிணாமம் பெற்றுவிட்டது. எனவே தமிழை உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பொறுப்பு மத்திய அரசிற்கு உண்டு…”

-என்று தனது மன வெளிப்பாடுகளைக் காட்டியுள்ளார் ஈரோடு தமிழன்பன். காட்டிய இடம்: கோவை நிர்மலா மகளிர் கல்லூரி. நிகழ்வு: சென்னை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்தரங்கு நிறைவு விழா.

இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக பரிணாமம் பெற்றுவிட்டதாக தமிழைக் கொண்டாடும் இலக்கியவாதிகளும் தமிழறிஞர்களும் தங்களது பார்வையை முதலில் விசாலமாக்க வேண்டும். அப்போதுதான், தனக்கு அருகிலுள்ள சூழல் அவர்களது கண்களுக்குத் தெரியும்.

இவர்கள் தமிழர்களின் இல்லங்களுக்குச் சென்று பார்த்தால், இவர்கள் இத்தனை நாட்கள் செய்துவந்த ‘தமிழ்ப்பணி’யின் ஆழம், அருமை புரிந்துவிடும்.

எத்தனை தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில மோகத்திற்கு அடிமை ஆக்கியுள்ளனர்! தங்கள் குழந்தைகள்  திருவாய் மலர்ந்து ”மம்மி, டாடி” என்று அழைக்கும்போது புளகாங்கிதம் அடையாத தமிழ்ப் பெற்றோர் எத்தனை பேர்?

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது, ஆங்கிலக் கல்வி பயில்வது, ஆங்கில நாட்டின் நாகரிகங்களைக் கடைபிடிப்பது, ஆங்கிலத்தில் பேசுவதே அறிவாளியின் அடையாளமாகப் பேணுவது என்று வாழும் தற்போதைய தமிழுலகின் முரண்பாடுகள் தமிழன்பனுக்குத் தெரியவில்லையா? தமிழன்பர்கள் அனைவரும் மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டிய கேள்வி இது.

முதலில், தமிழைக் காப்பதாக மேடைகளில் முழங்குவதை நிறுத்துங்கள். எதற்கெடுத்தாலும் அரசு செய்ய வேண்டும் என்று வேண்டுவதையும், சில காலத்திற்கு ஒத்திவையுங்கள். முதலில் நமது இல்லங்களில் தமிழை ஒலிக்கச் செய்யுங்கள்!

இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒளிபரப்பாகும் ‘தமிழ்க் கொலை’ நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுங்கள். மது போதையில் தள்ளாடும்  தமிழ் இளைஞர்களை மீட்டெடுக்க ஆக வேண்டிய பணிகளில் ஈடுபடுங்கள். நமது குழந்தைகளுக்கு பேசும் வயதில் ஆத்திசூடி கற்றுக் கொடுங்கள். தமிழன்னை உண்மையாகவே உங்களை வாழ்த்துவாள்!

எதைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாமல், எது முக்கியமில்லையோ அதனையே முழங்குவது தமிழக அறிஞர்களின் மரபு என்ற இழிநிலையை முதலில் மாற்றுங்கள். கேடுகெட்ட அரசியல் கண்ணோட்டத்துடன்  சிந்திப்பதைத் தவிர்த்தாலே, கவர்ச்சிகரமான கோஷங்களில் இருந்து  விடுதலை பெறுவோம்.

133 அடி உயர வான்புகழ் வள்ளுவனின் சிலையையே எத்தனை நாட்களுக்கு அண்ணாந்து பார்த்து பிரமிக்கப் போகிறோம்? குறள்வழி நாம் எப்போது நடக்கப் போகிறோம்? நமது அடிப்படைப் பிரச்னையை உணர்வோம். அதைக் களைய முயற்சிப்போம். தமிழை நமது இல்லங்களில் முதலில் வாழ வைப்போம்!

-ம.கொ.சி.ராஜேந்திரன்.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s