யானையழித்த சிவபக்தர்

எறிபத்த நாயனார்
திருநட்சத்திரம்: மாசி – 9 – ஹஸ்தம்  
(பிப். 21)
சோழ மன்னர்களுக்குரிய தலைநகரங்கள் ஐந்து. அவற்றினுள் ஒன்று கொங்கு நாட்டிலிருக்கும் கருவூர். அங்கு ஆனிலை எனும் திருக்கோயில் இருக்கிறது. அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடும் சிவனடியார்களுக்கு தீங்கிழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி ஒருவர் நின்றார். அவரது பெயர் எறிபத்தர்.
அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஆனிலையடிகளுக்கு பூத்தொண்டு செய்து வந்தார். ஒருநாள் சிவகாமியாண்டார் வழக்கம்போல் கூடையை பூக்களால் நிரப்பி எடுத்துக்கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்றார். அப்போது அவ்வழியே புகழ்ச்சோழ மன்னரின் பட்டத்து யானை, பாகர்களும் குத்துக்கோற்காரர்களும் (யானையின் வருகையை எதிரில் வருவோருக்கு அறிவிப்பவர்கள்) சூழ நடந்து வந்தது.

அந்த யானை சிவகாமியாண்டாரை நெருங்கி பூக்கூடையைப் பற்றி மலர்களை கொட்டிவிட்டு வேகமாக நடந்தது. இதனால் கோபமுற்ற சிவகாமியாண்டார் யானையை அடிக்க முயன்றார். ஆனால் யானையின் நடைக்கு முன்னால் சிவகாமியாண்டாரால் நடக்க முடியவில்லை. தன் மூப்பு காரணமாக கால் தளர்ந்து கீழே விழுந்தார். ஆனிலையப்பா, உன் முடிமேல் ஏறும் மலர்களை ஒரு யானையா மண்ணில் தள்ளுவது? சிவனே, சிவனேஎன அழுது ஓலமிட்டார்.

இந்த ஓலம் கேட்டு அவ்வழியே வந்த எறிபத்தர் சிவகாமியாண்டாரை அடைந்து, நடந்ததை அறிந்தார். அந்த யானை எங்கு போனது?” என வினவ, இவ்வீதி வழியே போயிருக்கிறது என சிவகாமியாண்டார் கைகாட்ட உடனே எறிபத்தர் விரைந்து சென்று யானையின் மீது பாய்ந்தார். யானையும் எறிபத்தரை தாக்க எத்தனித்தது. எறிபத்தர் தன் கையிலுள்ள மழுவால் யானையின் துதிக்கையை வெட்டி எறிந்தார். யானை கதறிக்கொண்டு கீழே விழுந்தது. பின்னர் பாகர்களையும் குத்துக்கோற்காரர்களையும் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்தோடி ‘பட்டத்து யானை கொல்லப்பட்டது என புகழ்ச்சோழ மன்னருக்கு தெரிவித்தனர்.
உடனே மன்னர் தன் படைசூழ யானை இறந்து கிடந்த இடத்தை அடைந்தார். அங்கிருந்தவர்கள் எறிபத்தரைக் காட்டி, ‘மழுவைத் தாங்கி நிற்கும் இவரே பட்டத்து யானையைக் கொன்றவர் என்றார்கள். 
எறிபத்தரைக் கண்ட அரசர் திடுக்கிட்டு, இவர் சிவனடியார். யானை பிழை செய்திருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதை கொன்றிருக்கமாட்டார் என எண்ணி, எறிபத்தர் முன்சென்று ‘யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன். இந்த யானை செய்த பிழைக்கு  இதனை பாகரோடும் மாய்த்தது போதுமா?’’ என்றார்.
எறிபத்தர் நடந்ததைக் கூறினார். உடனே புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி ‘சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும், பாகர்களையும் கொன்றது போதாது, என்னையும் கொல்ல வேண்டும். அடிகளின் மழுவால் என்னை கொல்லுதல் முறையல்ல’’ என்று கூறி, தனது உடைவாளை எடுத்து, ‘இதனால் என்னைக் கொன்றருள்க’’ என்றார்.
எறிபத்தர், இவரிடமிருந்து வாளை வாங்காவிடில் அரசர் தற்கொலை செய்து கொள்வார் என்றெண்ணி வாளை வாங்கினார். உடனே அரசன்,  ஆ இப்பெரியார் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்என மகிழ்ந்தார். ஆனால் எறிபத்தரோ,  இத்தகைய அன்பருக்கா தீங்கு நினைத்தேன். நான் பாவி பாவி எனவே முதலில் என்னுயிரை மாய்த்துக் கொள்வதே முறை என்று வாளைக் கொண்டு தன் கழுத்தை துண்டித்துக் கொள்ள முயன்றார்.
அதைக்கண்ட மன்னர், ‘’கெட்டேன், கெட்டேன்’’ எனக் கூறி வாளையும் கையையும் பிடித்தார். அரசர் தடுத்து விட்டாரே என எறிபத்தர் வருந்தி நின்றார்.
இது அன்பினால் விளைந்த துன்பம். இத்துன்பத்தை மாற்ற உங்கள் திருத்தொண்டின் மாண்பை உலகத்தவருக்கு காட்ட வேண்டி சிவபெருமான்  திருவருளால் இவையாவும் நிகழ்ந்தன என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. உடனே யானை, பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கினார். இருவரும் இறைவனின் திருவருளை நினைத்து மகிழ்ந்தனர். இறையருளால் பூக்கூடையில் பூக்கள் நிறைந்தன. சிவகாமியாண்டார் ஆனந்தமடைந்தார்.
எறிபத்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி புகழ்ச்சோழர் பட்டத்து யானை மீதேறி தன் படைகள் சூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் பூக்கூடையை தண்டில் தாங்கி தம் திருத்தொண்டு செய்ய விரைந்தார். எறிபத்தர் தாம் ஏற்ற திருத்தொண்டை குறைவறச் செய்து திருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார். அன்றுமுதல் இவர் எறிபத்த நாயனார் என அழைக்கப்படுகிறார்.
அம்பை சிவன்
காண்க:
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s