திருவாசகம் தந்த வள்ளல்

மாணிக்கவாசகர்
(திருநட்சத்திரம்: ஆனி – 20 –  மகம்)
(ஜூலை 5)

.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் கடைசியாக இருப்பவர் மாணிக்கவாசகர். முதல் மூவரும்  இயற்றிய பாக்கள்  தேவாரமாகத் தொகுக்கப்பட்டுள்ள  நிலையில்,  மாணிக்கவாசகர் பாடிய தீந்தமிழ்ப்  பாடல் நூல்கள்   திருவாசகம்,  திருக்கோவையார் ஆகியவை.
 
பொது யுகத்திற்குப் பிந்தைய ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் அமைச்சராக  இருந்தவர்.  ஈசன் மீதான் பக்தியால் அரசு செல்வத்தை கோவில் அமைக்க செலவிட்டதால் அரசரின் கோபத்திற்கு ஆளாகியதும் இவரைக் காக்க, சிவனே பிரம்படி பட்டதும், தெய்வத் தமிழின் சிறப்பை உணர்த்துவன. அபிதான சிந்தாமணியில் உள்ளபடி, அவரது சரிதம் இதோ…
 
பாண்டிய நாட்டில் திருவாதவூரில், சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தவர் மாணிக்கவாசகர். சிறுவயதிலேயே கல்வியில் சிறந்துவிளங்கிய இவர் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் அமைச்சரானார். அங்கு தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்தார். உயர் பதவியில் இருந்தபோதும் ஆட்சிபோகம் அவரை மயக்கவில்லை. சைவ சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த மாணிக்கவாசகர், சிவசேவையில் மகிழ்ந்து வந்தார்.
 

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப்பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார்.
அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம்என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல).
‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து,  திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.  தன் மந்திரிக்  கோலத்தை  அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.
பாண்டியன் ஒற்றர்களிடம் தனது  ஆணை தாங்கிய ஓலையைக் கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான். ஆனால்,  ‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி, வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து ”குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்” என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது.  குதிரைகள் வரவில்லை. ”இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்”  என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். வாதவூரார் சிவனை தஞ்சம் அடைந்தார்.
உடனே சிவபெருமான் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும்,  நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார்.  இதனாலே இறைவனுக்கு ‘பரிமேலழகர்’ எனும் காரணப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன். ”வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும்” என்று முரசு அறைவித்தான்.
வந்திக் கிழவி எனும்  மூதாட்டி மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஒரு  இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து ‘வேலை செய்யட்டுமா?’ என்று கேட்டார். ‘செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்’  என்று வந்தி கூறினாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்கினார்.
அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது; அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத் திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் உண்மை உணர்ந்தான்;  மாணிக்கவாசகர் பதம் பணிந்தான். மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.
அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி ‘தாங்கள் யாரோ?’ என்று வாதவூரார் கேட்டார். ‘நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்’ என்று அந்தணர் கூறினார். ‘நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்’ என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் ‘திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம்’ பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் ‘மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது.
மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார், ”பொருள் இதுவே” என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார். சிதம்பரத்தில் மாணிக்கவாசகர்  ஆனி மகம் நட்சத்திரத்தில் சிவ சாயுச்சிய நிலை அடைந்தார். தான் வாழ்ந்த 32  ஆண்டுகளில் இறவாப்புகழுடைய திருவாசகமும் திருக்கோவையாரும் தமிழுக்கு அணிகலனாக வழங்கிய அருளாளர் மாணிக்கவாசகர்.
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று புகழப்படுவது திருவாசகத்தின்  சிறப்பு. சிவபுராணம், திருவெம்பாவை  ஆகியவை  அதன் முக்கிய அங்கங்கள். தமிழின் பக்தி இலக்கியங்களில் மாணிக்கவாசகருக்கு பேரிடம் உண்டு. 63  நாயன்மார்களுள்  ஒருவராக வழிபடப்படும் மாணிக்கவாசகர், பக்தருக்கும் இறைவருக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தியவராகவும் அற்புதங்கள் பல செய்த தவசீலராகவும் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

காண்க:

மாணிக்கவாசகர் (விக்கி)

MANIKKAVACAKAR

திருவாசகத்தேன் தந்த பெருவள்ளல் (தமிழ் ஹிந்து)

மாணிக்கவாசகர் (தினமலர்)

திருவாதவூரர் புராணம் (Thevaaram.org)

திருவாதவூர் புராணம்

சிதம்பரம் ஆத்மநாதர்

மாணிக்கவாசகர் கோவில் (தினமலர்)

திருவாசகம் (shaivam.org)

திருக்கோவையார் (தமிழ்க் களஞ்சியம்)

சிவபுராணம் (வீடியோ)

திருவெம்பாவை

மாணிக்கவாசகர் குருபூஜை (தினமணி)

கல்லிலே கலைவண்ணம்

மாணிக்கவாசகர்  (தமிழ்வு)

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s