சுதந்திரம் பிறப்புரிமை என்றவர்

 
பால கங்காதர திலகர்
(பிறப்பு: ஜூலை  23) 
(நினைவு: ஆக. 1)
சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்என சிங்கநாதம் செய்தவர் லோகமான்ய பாலகங்காதர திலகர்.
மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திலகர்.
இவர் 1856, ஜூலை 23 அன்று மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பிறந்தார். தாயார்:  பார்வதி பாய், தந்தை:  கங்காதர சாஸ்திரி.  திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், ‘கேசவராவ்’ என்று மூதாதையர் பெயராலும், ‘பாலன்’ என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.
பூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்என்றனர்.
அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்என்றார்.
திலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.
உண்மையே  பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.
இவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து நியூ இங்லீஷ் ஸ்கூல்என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.
மேலும் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு ஊட்டும் விதமாக சில நண்பர்கள் இணைந்து 1881ம் ஆண்டு மராட்டி மொழியில் கேசரிஎன்ற பத்திரிகையும் (இன்றும் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது) ஆங்கிலத்தில் மராட்டாஎன்ற பத்திரிகையும் தொடங்கினார். கேசரி பத்திரிகை, ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. தலையங்கம் மக்கள் படும் துன்பத்தை தெரிவித்தது. பத்திரிகை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது.  இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை ‘கேசரி’ இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி’யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே பெர்க்யூஷன் காலேஜ்என்று விரிவுபட்டது.
1885ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். 1896ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார்.
அந்த நேரத்தில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பஞ்சத்திலும், நோயிலும் அவதியுறும் வேளையில், இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா? என மக்கள் அரசை எதிர்த்தனர். ஆட்சியாளர்கள் மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து திலகர் பத்திரிகையில் எழுதினார்.
1897ம் ஆண்டு இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி,  1.25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை லோகமான்யர்என்று அழைத்தனர்.
1898ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்பு பர்மா சென்று வந்தார்.
அப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். ‘அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்’ என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர்  மீது நம்பிக்கை வைத்தார்.
1907ம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது மித, தீவிர கருத்துடையோரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் தனித்தனியே கூடி தீர்மானங்கள் போட்டனர். திலகர், இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஒற்றுமை இல்லையேல் சுதந்திரம் என்பது கனவு என்று கூறினார். எனினும் திலகர் தலைமையில் விடுதலை வீரர்கள் ஒருங்கிணைந்தனர்.
இதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.
இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர  தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார்.
திலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற  திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு  புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.
1919ல் ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது.
அப்போது,  காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்என்று திலகர் தெரிவித்தார்.
1920ம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத  திலகர் இறைவனடி (1920,  ஆகஸ்ட் 1)  சேர்ந்தார்.
1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.
இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார்.  இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.
கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம்.
இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது  நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.
-என்.டி.என்.பிரபு
காண்க:

Bal Gangadhar Tilak Biography

 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s