ஆண்டவனை தமிழால் ஆண்டவள்

ஆண்டாள் நாச்சியார்  
திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்
(ஆடி -17;  ஆக. 2)
ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ‘விஷ்ணு சித்தர்’ என்று பெயரிட்டனர். இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இவர் பெரியாழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படுகிறார்.  பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயது குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் அவதரித்தாள். அவளுக்கு, ‘கோதை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணு சித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள் காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள். இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார். ஒருநாள், கூந்தல் முடி ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார், அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார்.

மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார். “கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல, மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’’ என்று குரல் எழுந்தது. அன்று முதல் கோதைக்கு, ‘ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது. பின்னர், பெருமாளுடன் அவள் கலந்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர்,”திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்…’ என, அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக பாடியுள்ளார்.

உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின் போது, பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், ஆண்டாள் பாடிய திருப்பாவையும் பாடப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர், உலகெங்கும் பெருமை பெற்றதாக உள்ளது.

இந்தக் கோவிலில் நடை திறக்கும் போது, அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளைப் பார்ப்பதில்லை. அவளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் கண்ணாடி பார்த்து, தன்னை அழகுபடுத்திக் கொள்வாளாம். அதனடிப்படையில், இவ்வாறு செய்வது ஐதீகம். அந்தக் கண்ணாடியை, ‘தட்டொளி’ என்பர். பின்பு சன்னதியில் தீபம் ஏற்றப்படும். இந்தச் சடங்கைச் செய்யும்போது திரை போடப்பட்டிருக்கும். திரையை விலக்கியதும், பக்தர்கள் கண்ணில் முதலில் ஆண்டாள் படுவாள். பின்பே அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பர்.

ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பக்தியால், இறைவனையே துணைவனாக அடைந்த பெருமைக்குரியவள் தமிழுக்கு இறவாப்புகழுடைய திருப்பாவையை நல்கியவள் ஆண்டாள்.

காண்க:

ஆண்டாள்- ஓர் அறிமுகம் (தர்மா)


.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s