தமிழ் வளர்த்த பேராசிரியர்

மு.வரதராசனார்
(பிறப்பு: 24 .04.1912  மறைவு: 10.10.1974 )
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும்,  தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனி இடமுண்டு என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அன்னாரின் சீரிய தமிழ்த்தொண்டு போற்றத்தக்கதாகும்.
தமது ஈடு இணையற்ற எழுத்தினால் உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் குடி புகுந்தவர் ‘மு.வ.’ என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசன் எம்.ஏ.,எம்.ஓ.எல்., பி.எச்.டி.,டி.லிட்.

இவர் தமிழ் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே 24 .04.1912 ல் பிறந்தார். தந்தையார் பெயர் முனுசாமி; தாயார் பெயர் கண்ணம்மாள்  மு.வ.வின் இயற்பெயர் திருவேங்கடம் என்பதாகும். எனினும் குடும்ப மரபுப்படி, ‘தாத்தாவின் பெயரை இடுதல்’ என்ற வழக்கப்படி இட்ட பெயரே ‘வரதராசன்’ என்பது. அப்பெயரே இறுதிவரை நிலைத்துப் புகழோங்கி நின்றது. 

தனது ஆரம்ப பள்ளிக் கல்வியை வேலத்திலும், வாலாசாவிலும் கற்றார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை திருப்பத்தூரில் பயின்றார். அன்னாரின் முதல் ஆசான் முருகய்ய முதலியார் ஆவார். அவரிடம் கற்றுத்தான் புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். வரதராசன் 1928 ம் ஆண்டு அதாவது தமது 16 ஆவது வயதில் முதன்முதலாக தாலூகா அலுவலகத்தில் எழுத்தாளராகப் பணி புரிந்தார். எனினும் 1935 ம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பனந்தாள் பரிசான ரூ. 1000 பெற்றுக் கொண்டார். யோசித்துப் பாருங்கள்! அந்தக்காலத்தில் இந்தியப் பணம் ரூ. 1000!

விடா முயற்சியுடைய மு.வ. அவர்கள் 1939 ல் பி.ஓ.எல்.பட்டமும், 1944 ம் ஆண்டு எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார்.  இதற்கிடையில் 1935 ம் ஆண்டு தமது சொந்த மாமன் மகளான ராதாவை மணம் புரிந்தார்.  இல்லற வாழ்வின் பயனாக திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று ஆண்மக்களைப் பெற்று பேருவகை அடைந்தார். மூவருமே மருத்துவத்துறையில் மேதைகளானார்கள். 

திருமணம் முடித்த போது அவர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகக் கடமையாற்றினார். அன்னாரின் திறமையை நன்கறிந்து கொண்ட டாக்டர் சு.லட்சுமணசாமி முதலியார் அவரை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக சேர்த்துக் கொண்டார். 1939 ம் ஆண்டு முதல் 1944 ம் ஆண்டுவரை அங்கு பேராசிரியராக இருந்தவர் 1945 ம் ஆண்டு அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். 

தமிழ்த்துறைத் தலைவர் பதவி ஒருபுறம்,  எழுத்துத்துறை மறு புறமென எழுதிக் குவிக்கத் தொடங்கினார். தமிழ்த் தாயின் தலைமகன் மு.வ. அவர் எழுதிய முதல் நாவல் ‘செந்தாமரை’ ஆகும் இரண்டாவது நாவல் ‘கள்ளோ? காவியமோ?’ இந்த நாவல்தான் அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இந்த நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மிகவும் பிடித்த நாவலும் இதுவே!

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகள் கற்றுப் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் தமிழே அவரது உயிராக இருந்தது.  சொற்பகாலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசியராகப் பணி புரிந்த வரதராசனார் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மறைவுக்குப்பின் 1961 ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரானார். இப்பணி 1971 ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 1971 ம் ஆண்டு முதல் இந்தத் தமிழ்வேந்தர் காலமாகும்வரை அதாவது 10௦.10௦.1974 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பூத்த, இணையற்ற துணைவேந்தராகப் பணி புரிந்தார். 

1948 ல் சென்னைப் பல்கலைக்கழகத்திலே முதன்முதல் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற இவர் 1972 ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி டி.லிட் (இலக்கியப் பேரறிஞர்) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட் என்ற சிறப்புப்பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான். 

அதுமட்டுமல்ல; ரஷ்யா, மலேசியா, இலங்கை, பாரிஸ், சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மன், கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான உலக நாடுகளை வலம் வந்த முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கே உரியது! அமரர் மு.வ.வாழுங் காலத்தில் பங்கு கொள்ளாத, தொண்டாற்றாத தமிழ்க் கழகங்களே இல்லை.  தமிழ்நாடு புத்தகக் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம், ஆட்சி மொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ்வளர்ச்சிக்கழகம், தமிழிசைச் சங்கம், தமிழ்க்கலைமன்றம், என்பன அவற்றுள் சிலவாகும். 

டாக்டர் மு.வரதராசன் அவர்கள் பதின்மூன்று நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘அகல் விளக்கு’ என்ற நாவல் இந்திய ஜனாதிபதியின் சாகித்திய அகாடெமி  விருதினைப் பெற்றது.  அன்னாரின் ‘கள்ளோ? காவியமோ?’ நாவலும்,  ‘அரசியல் அலைகள்’ , ‘மொழியியற் கட்டுரை’ என்ற நூல்கள் சென்னை அரசாங்கத்தின் பரிசுகளைப் பெற்றன.

மேலும் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’, ‘ஓவச் செய்தி’, ‘மொழிநூல்’,  ‘விடுதலையா?’ போன்ற நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அவருக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்தன.

தவிர அன்னார்,  சிறுகதைகள் (2), நாடகங்கள் (6), சிந்தனைக் கதைகள் (2), கட்டுரை நூல்கள் (11), இலக்கிய நூல்கள் (24), கடிதஇலக்கியம் (4), இலக்கிய வரலாறு (1), மொழியியல் (6), பெரியவர்களின் வாழ்க்கை வரலாறு (4), ஆங்கிலநூல்கள் (2), சிறுவர் இலக்கியம் (4), சிறுவர் இலக்கணம் (3), மொழிபெயர்ப்பு நூல்கள் (2), ‘யான்கண்ட இலங்கை’ (1) என்ற பயண இலக்கியம் உட்பட எழுத்துத் துறையில் தொடாத துறையே இல்லை எனலாம். 
மேலும் டாக்டர் மு.வ.வின் உயிரோட்டமுள்ள புகழ்பூத்த பல நூல்கள் தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றன. இந்திய சுதந்திரப் பேராட்ட நூற்றாண்டின் போது, 15.08.1957 அன்று அவருக்கு சென்னை அரசாங்கம் ‘தமிழிலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர்’ என்ற பாராட்டுப் பத்திரம் வழங்கி, அழகிய நடராஜர் உருவம் பொறித்த செப்புக்கேடயத்தை வழங்கிக் கௌரவித்தது. 

கலைகளுள் எழுத்துக் கலைக்குத் தனி ஆற்றல் உண்டு, என்று அறிஞர்கள் கூறுவார்கள். ஆண்டுகள் பல சென்றாலும், காலம் கடந்து வாழும் பண்பு எழுத்துக் கலைக்கே உண்டு. உயிரோவியங்கள் பலவற்றைப்படைத்து, ஆயிரம், ஆயிரம் தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த டாக்டர் மு.வ.இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார். 

அதனால் தானே என்னவோ 10.10.1974 அன்று சென்னையில் அவர் காலமாகும் போது கூட அதே எடுப்பான எழில் மிகு தோற்றம், கூரிய மூக்கு, சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள், அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, அகன்றநெற்றி, புன்னகை பூத்தமுகம், நீண்ட மெல்லிய கைகள், அழகான பல்வரிசை, பண்பட்ட நெஞ்சம் உடையவராக இருந்தார். அவரது நூல்கள் எமக்கு வழிகாட்டும்!

இணுவையூர் ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன்

காண்க:

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s