பாரதத்தின் ஆன்மிக ஜோதி!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 
(பிறப்பு: பிப்.  20)

சமீப காலத்தில் இந்தியாவில் தோன்றிய சமய மறுமலர்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் (1836 – 1886) ஆன்மிக சிந்தனையும், நீதிக் குட்டிக்கதைகள் வாயிலாக அவர் அளித்த அறிவுரைகளின் தாக்கமும் மகத்தானவை.

உண்மையான இந்துவின் நோக்கைப் போல, “”அனைத்து மதங்களும் ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் போன்றவை. ஆன்மிக சாம்ராஜ்யத்தில் தனித்த வேறுபாடுகளுக்கு இடமுண்டு” என்றார். இக்கருத்துக்களை அவர் வெறும் புத்திபூர்வமான போதனைகளாக வழங்கவில்லை. அவை அனுபவ பூர்வமானவை.

ஹத யோகம், பரவசநிலை, நிர்விகல்ப சமாதி போன்ற கடும் ஆன்ம சாதனைகளுக்கு தம்மை உட்படுத்திக்கொண்டது மட்டுமின்றி, சுஃபி இஸ்லாமிய ஞானியரின் யோக சாதனா முறைகளையும் மேற்கொண்டார். பண்டைய கிறித்துவ தியான வழிபாட்டில் ஆழ்ந்து அமிழ்ந்து தேவ தூதனின் பிரகாசம் கண்டார். உச்ச உயர் இறையுணர்வு ஒன்றேயன்றி வேறல்ல என விளக்கினார்.

“இந்தியாவைப் பொறுத்தவரை சமூக சீர்திருத்தமும், சமூகத்தில் புரையோடிவிட்ட தப்பெண்ணங்களையும் மூடப் பழக்க வழக்கங்களையும் களைந்தெறிவது அவசியம்தான். ஆயினும் வெறும் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது; சமயம் சார்ந்த ஆன்மிக உணர்வு பெருக்கெடுத்தால்தான் சமூகம் தூய்மை பெறும். ஆண்களும் பெண்களும் தார்மிக -ஆன்மிக ரீதியில் வளம் பெற முடியும். அந்நிலையில் தீமைகள் பல தாமாகவே விலகும்” என்பதே ராமகிருஷ்ணரின் அடிப்படை அறிவுரை.

அம்மகானின் சீடர் சுவாமி விவேகானந்தரும் இதையேதான் அடிக்கடி வலியுறுத்தி, தமது இந்தியப் புனருத்தாரண திட்டங்கள் யாவற்றிலும் செயல்படுத்த விழைந்தார்.ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு அருளிய வாக்குகளை, பதில்களை,  தெள்ளிய ஆன்மிக செல்வத்தை அமுதமொழிகளில் உபமான – உபமேய நீதிக்கதைகள் மூலம் பொழிந்த வண்ணமிருந்தார்.

திட்டமிட்ட நீண்ட சொற்பொழிவு ஏதும் ஆற்றியதில்லை. அறநூல்கள் எழுதவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு படிப்பறிவு கிடையாது. தமது தெள்ளிய, எளிய போதனைகளுக்கான சமாச்சாரங்களை, அனைவரும் அறிந்த புராணக் கதைகள், உப கதைகள், மரபு வழி புனைவுகள்,கிராமியப் பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து எடுத்து, புதிய மெருகூட்டித் தமக்கே உரித்தான எளிய பாணியில் விளக்கம் அளித்தார். தலைமுறை தலைமுறையாக வழக்கிலுள்ள இறைமை சார்ந்த ஆய்வுரைகளின் பொழிப்பாகச் சுருக்கி, குட்டி நீதிக் கதைகளாக வார்த்தெடுத்து வாரி வழங்கலானார்.

தாம் முன்பு கடைபிடித்த கடும் சாதனா முறைகளை அவர் தமது சீடர்களுக்கு சிபாரிசு செய்யவில்லை. குடும்பஸ்தனான ஒரு சீடர், ஒரு சமயம், சன்னியாசம் மேற்கொள்ள விரும்பியபோது, ஸ்ரீராமகிருஷ்ணர் அன்பே உருவாய்ப் பகர்ந்தார்: “உலகைத் துறப்பதால் உமக்கென்ன லாபம்? குடும்ப வாழ்க்கை கற்கோட்டை போன்றது. அக்கோட்டைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு உமது எதிரிகளாம் தீமைகளை எதிர்த்துப் போராடலாம். தாக்குப் பிடிக்கலாம். வெளியே வந்தாலோ எதிரிகள் உம்மை சுலபமாகச் சூழ்ந்துகொள்வார்கள். வீழ்த்துவார்கள். கடவுள் மீதான உமது நாட்டம் முக்கால்வாசியாவது நிரம்பிய பிறகு வேண்டுமானால் நீர் துறவு பற்றி யோசிக்கலாம்” என்றார்.

வேறொரு தருணம் “வெளி உலகை முற்றிலும் துறப்பதற்கு அவசியம் என்ன? உலகாயதப் பற்றை மட்டும் துறந்து தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்க்கை நடத்தலாமே?” என்று அறிவுறுத்தினார்.

நான் எப்போது விடுதலை பெற்று ஆன்ம சாட்சாத்காரம் பெறுவேன்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நீர் எப்போதும் ஆன்ம சொரூபியாகத்தான் உள்ளாய். மாயா வினோதம்தான் உமது அகக்கண்ணை மறைக்கிறது. இந்தக் கதை தெரியுமா? ஒரு சிங்கம் தனது குட்டியை ஈன்றுவிட்டு இறந்துவிட்டது.  தாயை இழந்த சிங்கக்குட்டி தனது உண்மையான சொரூபத்தை அறியாமல் ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து புல் மேய்ந்து ஓர் ஆடு போல் வாழ்ந்து வந்தது. மிருகங்களைக் கண்டு மிரண்டு ஓடுகிற ஆடுகளோடு சேர்ந்து பயந்து தானும் ஓடிக்கொண்டிருந்தது. அதன் பரிதாப நிலையை மற்றொரு சிங்கம் கவனித்தது. சிங்கக் குட்டியைப் பிடித்து ஒரு நீரோடைக்கு இழுத்துச் சென்று தண்ணீரில் அதன் உருவத்தைப் பார்க்கச் செய்தது. அதன் வாயில் சிறிது மாமிசத் துண்டைத் திணித்தது. “புல்லைத் தின்னும் ஓர் அற்ப ஆடு அல்ல நீ; என்னைப் போன்ற ஒரு சிங்கம்’ என உணர வைத்தது. கர்ஜித்துத் துள்ளிக் குதித்தது சிங்கக்குட்டி. தான் சிங்கம் என உணர்ந்ததும் புல் மேய்தல், பயந்தோடுதல் போன்ற பொய்யான மனப் பிராந்திகள் சட்டென மறைந்து போயின. அதுபோல, நீர் உமது யதார்த்த சொரூபத்தை உணர்ந்ததும், பொய்யான ஆசைகள், புலன் உணர்வுகள் படுத்தும் பாடுகள் யாவும் விடுபட்டுப்போம்” – இவ்வாறு உவமைக் கதையுடன் விளக்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

“இறையுணர்வில் ஒன்றிட சமய வழிபாடுகள், சடங்குகள், ஆசார அனுஷ்டானங்கள் அவசியம் தானா? அவை யாவும் அரிசியின் உமி போன்றவை தானே?” என்ற வினாவுக்கு விடையளிக்கையில், “ஆம்! ஆனால் உமி இல்லையேல் வயலில் நெல் விளையாது. நீ உண்பது அரிசி. விதைப்பதோ உமியோடு இழைந்த நெல்” என்று புன்னகைத்தார் பகவான் ராமகிருஷ்ணர். தொடர்ந்து, “பலாப்பழத்தை அறுத்துப் பிசினை விலக்கிப் பலாச்சுளை எடுப்பதற்காகக் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டியுள்ளது. முட்புதர்கள் நிறைந்த தரையில் நடக்கச் செருப்பு அணிகிறோம். அதே போன்று, அரசியல் அல்லது சமூக சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கடவுளை ஆன்மார்த்தமாகக் கண் கசிந்து, நேசித்து, அவனைச் சரணடைந்த பின் காரியத்தை மேற்கொண்டால்தான் சுயநலமின்றி, லஞ்ச லாவண்யங்களை அறவே தவிர்த்து சீரிய தொண்டு புரிய முடியும்” என்றருளினார்.

தமது குருநாதரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பதித்துள்ளது போல், “ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எந்தப் புதுமையான உண்மையையும் போதிக்கவில்லை; எதையும் மறுக்கவோ, அழிக்கவோ அல்லது நிறைவு செய்யவே அவர் தோன்றவில்லை. பழமை நீதிகளை புதுமெருகுப் பொலிவுடன் எளிய சொற்களில் எடுத்துரைத்துப் புரிய வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் பாரதத்தின் பண்டைய சமய சித்தாந்தங்களின் புறவடிவப் பிழம்பாகப் பிரகாசித்தார்”.

– லா.சு.ரங்கராஜன் 
நன்றி: தினமணி –  வெள்ளிமணி (24.02.2012 )
குறிப்பு: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 வது ஜெயந்தி உற்சவம் அவரது பக்தர்களால், பிப். 22 முதல் பிப். 26 வரை, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
காண்க: 
 
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s