தமிழ்த் தாயின் தவப்புதல்வன்!

ஸ்ரீனிவாச ராமானுஜன் 

 (நினைவு நாள்: ஏப். 26)

 
இன்று ராமானுஜனின் நினைவு நாள்- இவ்வாண்டு ராமானுஜனின் 125-வது ஆண்டு. உலக சரித்திரத்தில் ஆர்யபட்டாவுக்கு எப்படி ஓர் இடமுண்டோ அதேபோலத் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்னொரு மாமேதை ராமானுஜன். சிலர் தங்களது படிப்பாலும் உழைப்பாலும் மேதைகளாகிறார்கள். ஆனால் ‘கணித மேதை’ ராமானுஜன் பிறவியிலேயே மேதை.

இவர் விட்டுவிட்டுச் சென்றிருப்பது இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே. அதில் இருக்கும் கணித மேதைமை உலகளாவிய அளவில் தன்னிகரற்றது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள்.

வறுமை ஒருவருடைய திறமையை முடக்கிப் போட்டுவிட முடியாது என்பதற்கு  ‘கணித மேதை’  ராமானுஜன் ஓர் உதாரணம். சிறுவன் ராமானுஜன் பள்ளிக்குச் செல்லப் புறப்பட்ட நிலையில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமானான். சமையலறையிலிருந்து மிகுந்த தயக்கத்துடன் மெதுவாக வெளியே வந்த ராமானுஜனின் தாயார் அன்று வீட்டில் சுத்தமாக ஒரு பிடி அரிசிகூட இல்லையென்றும் பக்கத்து வீடுகளில் பலமுறை வாங்கித் திருப்பித்தர இயலாததால் மீண்டும் அவர்களிடம் கேட்க முடியவில்லையென்றும் ராமானுஜனிடம் சோகத்துடன் தெரிவித்தார்.

மாலை வீட்டுக்கு வரவேண்டிய நேரத்துக்கு ராமானுஜன் வராததால் பதறிப்போன தாயார், ராமானுஜனின் நெருங்கிய நண்பனான வகுப்புத்தோழன் அனந்தராமனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் ராமானுஜனைத் தேடுவதற்கு அனந்தராமனை அனுப்பினார். ராமானுஜன் அங்குள்ள பெருமாள் கோயில் ஒன்றில் உள் மண்டபத்தில் தலைக்குப் புத்தகப் பையை வைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அனந்தராமன் பார்த்தான். மண்டபத்தின் காரைத்தரை முழுக்க சாக்கட்டியால் கணக்குப் போடப்பட்டிருந்தது. 

முந்தைய நாள் வகுப்பறையில் தனது கணித ஆசிரியர் ஒரு சிக்கலான கணிதப் புதிரைக் கரும்பலகையில் போட்டுப் போட்டுப் பார்த்தும் உரிய விடை கிடைக்காமல் தொடர்ந்து முயற்சித்து வந்தார். காலையில் வகுப்பறையில் இருந்தபோதும் அந்தக் கணக்கு ராமானுஜனின் மனதைக் குடைந்து கொண்டேயிருந்தது. மதிய இடைவேளையில் வகுப்பைவிட்டு வெளியே வந்து சாக்கட்டியால் பெருமாள் கோயில் மண்டபத் தரையில் அந்தக் கணக்கை பல முறைகளில் போட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தவன் பசியும் களைப்பும் சேர்ந்துகொள்ள அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டான். காலை முதல் உணவில்லை என்பதற்காகக்கூட கவலைப்படாத ராமானுஜன் கணக்குக்கு விடை கிடைக்கவில்லையே என்றுதான் கவலைப்பட்டான்.

ராமானுஜனின் தந்தையார் தனது ஊரான கும்பகோணத்தில் ஒரு ஜவுளிக் கடையின் குமாஸ்தாவாக மாதம் ரூ. 20 சம்பளத்துக்கு வேலையில் இருந்தார். இந்த மிகக்குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த இயலாத சூழல், வெளியூரிலிருந்து வந்த இரண்டு மாணவர்கள் மாதந்தோறும் தலா பத்து ரூபாய் வீதம் ராமானுஜனின் தாயார் கோமளத்தம்மாளிடம் உணவுக்கும் தங்குவதற்குமாகச் செலுத்தி கும்பகோணம் கல்லூரியில் படித்து வந்தனர். இவற்றையெல்லாம் வைத்துத்தான் அந்தக் குடும்பம் இயங்கி வந்தது.

ராமானுஜனின் வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் ஒரு நாள் தங்களது கணிதப் பேராசிரியர் வகுப்பில் நடத்திய கணிதச் சூத்திரம் குறித்து வீட்டுக்கு வந்த பிறகு தங்களுக்குள் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த வாதப் பிரதிவாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜன் அவர்களின் கணித நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான். அந்த மாணவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் வகையில், இரண்டு, மூன்று நிமிடங்களில் சர்ச்சைக்குரிய அந்தக் கணக்கின் சரியான வழிமுறைகளையும் விடையையும் எழுதிக் காட்டினான் ராமானுஜன்.

கும்பகோணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனான ராமானுஜன் மெட்ரிகுலேசன் தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். கும்பகோணம் அரசு கல்லூரியில் எப்ஏ வகுப்பில் சேர்ந்தான்.

கும்பகோணம் கல்லூரியில் ஜூனியர் சுப்பிரமணியம் ஸ்காலர்ஷிப் என்ற ஒரு உதவித்தொகையினை படிப்பில் சிறந்த மாணவனுக்கு வழங்கி வந்தனர். அந்த உதவித்தொகை கிடைத்தால்தான் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையிலிருந்த ராமானுஜன், அதற்குண்டான தேர்வுகளை எழுதினார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ராமானுஜன் ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களைவிட மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றுத் தோல்வியுற்றார்.

இரண்டாவது முறை எழுதி உதவித்தொகைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமானுஜத்தால் எப்ஏவுக்கான இறுதித் தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற இயலவில்லை. தோல்வியடைந்த நிலையில் பெற்றோரின் வேண்டுகோளின் விளைவாகவும் கணிதப் பேராசிரியர் பி.வி. சேஷ ஐயரின் தூண்டுதலாலும் மீண்டும் எப்ஏ படிக்க எண்ணி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். திடீரென்று ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் கோளாறு காரணமாக இவர் எப்ஏ படிப்பையே பாதியில் விட்டுவிட்டு கும்பகோணம் திரும்பவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

பிறகு இடைவெளி விட்டு 1907-இல் மூன்றாவது முறையாக கல்லூரியில் சேராமல் நேரடியாக எப்ஏ தேர்வு எழுதி அதிலும் தோல்வியைத் தழுவினார்.

தனித்திறன் பெற்ற ராமானுஜன் வேலையில் சேர்ந்து முடங்கிவிடக்கூடாது என்று எண்ணியே சேஷ ஐயர் சென்னையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்தியக் கணிதச் சங்கத்துடன் ராமானுஜனுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதில் சேரப் பரிந்துரையும் செய்தார்.

அதிலிருந்து ராமானுஜன் மேற்கொண்ட கணித ஆய்வுகளை அச்சங்கத்துக்கு அனுப்பி வந்தார். கும்பகோணத்திலிருந்தவாறே கணித ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராமானுஜன் ஒரு கட்டத்தில் 1911-இல் சென்னைக்கே சென்று முழு மூச்சாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

இந்தச் சூழலில்தான் சென்னையில் தங்கியிருப்பதற்கும் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுவதற்கும் தேவையான வருமானத்தை உருவாக்க எண்ணி சென்னையில் 1912-இல் அக்கெüண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்ந்தார். இந்த வேலை பிடிக்காமல் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு சென்னை போர்ட் டிரஸ்ட்டில் ஆவணப் பிரிவு குமாஸ்தா வேலையில் மாதம் ரூ. 30 சம்பளத்துக்குச் சேர்ந்தார். தன் மனைவி மற்றும் தாயாரையும் சென்னைக்கே அழைத்து வந்தார் ராமானுஜன். தனது குடும்பப் பொருளாதாரப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கல்லூரி மாணவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் தனி வகுப்பு நடத்தி வந்தார்.
ராமானுஜனின் அபாரக் கணிதத் திறமையை நன்கு உணர்ந்துகொண்ட போர்ட் டிரஸ்ட்டின் தலைவர் ஆங்கிலேய அதிகாரி சர்.பிரான்ஸிஸ் ஸ்பிரிங், மேலாளர் ராவ்பகதூர் எஸ். நாராயணய்யர் ஆகியோர் ராமானுஜனை நன்கு ஊக்குவித்தனர். ஒரு கட்டத்தில் அலுவலகத்திலேயே கணித ஆராய்ச்சியை மேற்கொள்ள மகிழ்வுடன் அனுமதித்தனர்.
இந்தக் காலகட்டத்தில்தான் லண்டன் மாநகரிலுள்ள உலகப் புகழ்மிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரும், கணிதத்துறை வல்லுநருமான பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி சர்வதேச கணிதச் சஞ்சிகை ஒன்றில் ஒரு கடினமான கணிதப் புதிரை வெளியிட்டு அதற்கு உலகில் எப்பகுதியிலுள்ளவரும் தக்க பதிலளிக்கலாம் என்ற வேண்டுகோளையும் விட்டிருந்தார்.
இதற்கு முன்பே பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு தனது கணிதக் குறிப்புகளை அனுப்பியிருந்தும் எவ்விதப் பலனும் ஏற்படாத நிலையில், ராமானுஜன் பேராசிரியர் ஜி.எச். ஹார்டியின் கணிதப் புதிருக்கு உடனடியாக விடையை அனுப்பி வைத்தார்.
ராமானுஜனின் விடை ஹார்டியை வியப்பில் ஆழ்த்தியது. உலகெங்கும் இருந்து வந்து குவிந்துள்ள புதிருக்கான பதிலில் எந்தப் பேராசிரியரும் எழுதாத அளவில் கனகச்சிதமான புதிய முறையில் எழுதப்பட்டிருந்த வழிமுறைகளையும் விடையையும் பார்த்துப் புல்லரித்துப் போனார் ஹார்டி. ஹார்டி ராமானுஜத்தைப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் ஒரு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதம் ராமானுஜத்தை ஆனந்தத்தின் எல்லைக்கே இட்டுச் சென்றது. இவரின் இதர கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஹார்டிக்கு உடனே அனுப்பி வைத்தார். ஹார்டி அங்கிருந்தவாறே எடுத்த முயற்சியினாலும் சென்னையிலிருந்த ராமானுஜனின் கணிதத் திறமையை நன்கு உணர்ந்த பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும் சென்னைப் பல்கலைக் கழக கணித ஆராய்ச்சி மாணவராகச் சேர்க்கப்பட்டார் ராமானுஜன். இதற்கென உதவித்தொகையாக பல்கலைக் கழகம் மாதம் ரூ. 75 ராமானுஜனுக்கு அளித்தது.
பேராசிரியர் ஹார்டி இன்னும் பல முறைகளில் முயன்று ராமானுஜனை லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வந்து அங்கு கணித ஆராய்ச்சியைத் தொடர வழி ஏற்படுத்தித் தந்தார். அரசு அதிகாரிகளும் பல்கலைக் கழக உயர் மட்ட அலுவலர்களும் இதற்கு ழுழுமையாக ஒத்துழைத்தனர்.
ராமானுஜன் லண்டன் செல்வதற்கு அரசு ரூ. 10,000 ஒதுக்கீடு செய்ததோடு பல்கலைக்கழகம் ஆண்டுக்கு ரூ. 250 அளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அரசே அறிவித்தது.
1914-இல் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு இணைந்த டிரினிடி காலேஜில் சேர ஹார்டியே உதவினார். அங்கும் அவருக்கு ஆண்டுதோறும் 60 பவுண்ட் உதவித்தொகை பெறுவதற்கு ஹார்டி வழி வகுத்தார்.
1916-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கணிதத்தில் இவருக்கிருந்த பாண்டித்தியத்தைப் பாராட்டி கெüரவ பி.ஏ பட்டம் அளித்து மிகச்சிறந்த கல்வியாளர்கள் முன்னிலையில் கெüரவித்தது. 1918-இல் லண்டன் ராயல் சொசைட்டி ராமானுஜத்துக்கு பெரும்புலவர் எனும் உலகின் மிக உயரிய அங்கீகாரத்தை அளித்து மகிழ்ந்தது. சிறுவயதிலிருந்தே உடல்நலம் பாதித்திருந்த ராமானுஜன் லண்டன் சென்ற பிறகு மோசமானது. அங்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சையும் பலனளிக்கவில்லை.
லண்டனில் ஐந்தாண்டுகால தீவிர கணித ஆய்வுக்குப் பிறகு 1919-இல் வேறு வழியின்றி ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் இந்தியா திரும்பினார் ராமானுஜன். லண்டனிலிருந்து பல வெற்றிகளைக் குவித்து இந்தியா திரும்பிய ராமானுஜனுக்கு சென்னையில் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்தியா வந்த பிறகு எல்லாவித சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் உடல் நலிவடைந்து கொண்டே சென்றது. தனது முப்பத்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே 1920 ஏப்ரல் 26-ஆம் தேதி ராமானுஜன் மரணமடைந்தார்.
கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். 
– த. ஸ்டாலின் குணசேகரன்
நன்றி: தினமணி  (26 .04 .2012)

 .
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s