செய் அல்லது செத்து மடி!

சரித்திரம்

ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே நாளில்தான் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ (குவிட் இந்தியா) தீர்மானத்தைப் பிரேரேபித்து நிறைவேற்றினார்.

அதோடு தேசமக்கள் அனைவருக்கும் ஓர் எழுச்சிமிகு அதிரடி மந்திர வாசகத்தையும் வழங்கினார். ‘செய் அல்லது செத்து மடி’ என்று அந்த கொதிப்புமிக்க வீர வாசகமே நாடெங்கும் ஆகஸ்ட் புரட்சியைப் பீறிடச் செய்தது.

1942 ஜூன் இறுதியில் இரண்டாம் உலக யுத்த நெருக்கடி நிலை பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தைத் திக்குமுக்காடச் செய்தது. பர்மாவை ஆக்கிரமித்துத் தலைநகர் ரங்கூனைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் இந்தியா – பர்மா எல்லை நோக்கி விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருந்தன. ஏற்கெனவே சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணடைந்துவிட்டது. மேற்கே, வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமல் தலைமையிலான ஜெர்மானிய நாஜி ராணுவம் எகிப்தைக் கைப்பற்றி கிழக்கு நோக்கி முன்னேறியவண்ணம் இருந்தது.

ஜெர்மன்-ஜப்பான் படைகள் இந்தியாவில் சந்தித்து கைகோத்து வெற்றிகொண்டாடும் என யுத்த விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறினர். மலேயா, பர்மா நாடுகளிலிருந்து இந்திய அகதிகள் சாரிசாரியாக இந்தியாவுக்கு ஓடிவந்த வண்ணமிருந்தனர்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பிரதேசங்களில் கொள்ளைக் கூட்டத்தினரின் அட்டகாசம் பெருகிற்று. பஞ்சாப், ராஜஸ்தான், வங்காளம் வட்டாரங்களில் தானியப் பற்றாக்குறையால் கடும் பஞ்சம் உருவாகி வந்தது. இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு நிலைகுலையும் அபாயம் நிலவியது.

இந்த இறுக்கமான நெருக்கடிச் சூழ்நிலையிலேதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி “இந்தியாவை விட்டு வெளியேறு” – பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு உடனடியாய் விலக வேண்டும் என்கிற தீர்மானத்தை ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக பம்பாயில் ஆகஸ்ட் 7, 8 (1942) தேதிகளில் கூடியது.

அந்தத் தீர்மானத்தை முன்வைத்து மகாத்மா காந்தி முதலில் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் ஆற்றிய நீண்ட, உணர்ச்சிகரமான உரை, நம் நாட்டு மக்களை உலுக்கி உறைய வைத்தது. அவ்வுரையின் சில வாசகப் பகுதிகள்:

“உங்களைச் சோர்வினின்றும் தட்டி எழுப்பி, உண்மையான ஜனநாயக ஆட்சி பெறுவதற்கான வழிமுறையை நான் இன்று உங்கள் முன் பிரஸ்தாபிக்கிறேன். போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்; அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல. இயன்ற அளவு தியாகங்களால் உங்களது உறுதி படைத்த வலிமையை நிரூபித்தால் பிரிட்டிஷார் வேறு வழியின்றி நமக்கு சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும். என்னைப் பொறுத்தவரை அகிம்சை ஓர் அசைக்கவொண்ணா கோட்பாடு. ஆனால், நீங்கள் அகிம்சையை ஓர் அரசியல் கொள்கையாக மட்டுமே ஏற்கக்கூடும். கட்டுப்பாடான போர் வீரர்கள் போன்று நீங்கள் அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து, அதனின்றும் சிறிதும் பிறழாமல் இந்த இறுதிப் போராட்டத்தில் செயல்படுவீர்களாக. இம்முறை நான், இந்திய சுயாட்சி, மந்திரிசபை போன்றவற்றிற்காக வைஸ்ராயுடன் பேரம் பேசப் போவதில்லை. பூரண சுதந்திரத்திற்கு எள்ளளவும் குறைவான வேறெதும் என்னைத் திருப்திப்படுத்தாது. ஒருக்கால் ‘உப்புவரி நீக்கப்படும், மதுவிலக்கு அமலாகும் மாகாண மந்திரிசபைகளுக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கப்படும்’ என்றெல்லாம் கூறி வைஸ்ராய் இறங்கி வரலாம். ஆனால், நான் பிடிவாதமாய்ச் சொல்வேன், ‘பூரண சுதந்திரத்திற்குக் குறைவான வேறெதும் வேண்டாம்’ என்று.

“இதோ, இத்தருணத்தில் ஒரு மந்திரம், சுருக்கமான தாரக மந்திரம், வழங்குகிறேன். அதனை நீங்கள் இதயத்தில் பதியுங்கள். உங்களது ஒவ்வொரு மூச்சும், செயலும் அந்த மந்திரத்தின் வெளிப்பாடாக அமையட்டும். அந்த மந்திரம் இதுதான். “செய் அல்லது செத்துமடி” . இந்தியாவை விடுவிப்போம், அன்றி அம் முயற்சியில் செத்து வீழ்வோம்! அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம். நமது தேசம் அடிமைத்தளையில் கட்டுண்டு அவலப்படுவதைக் காண கணமேனும் பொறுக்க மாட்டோம் என்கிற அசைக்கவொண்ணா வைராக்கியத்துடன், ஒவ்வொரு காங்கிரஸ்காரனும், காங்கிரஸ்காரியும் இந்தப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அதுவே உங்களது சபதமாக இருக்கட்டும். ‘இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்’ என்று கடவுளையும் உங்கள் சொந்த உளச்சான்றையும் சாட்சியாகக் கொண்டு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள். உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர், கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.

இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்!

“சுதந்திர இந்தியாதான் தன்னிச்சையாக நேச நாடுகளுடன் இணைந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு அபாயத்தை முழு வீச்சுடன் எதிர்த்து முறியடிக்க முடியும். ஆனால், இன்றோ இந்தியர்கள் அடிமைத் தளையில் பிணைபட்டு நடைப்பிணங்களாக ஆகிவிட்டனர். மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். இந்திய மக்கள் ஒளி வீசும் கண்படைத்தவர்களாகப் புத்துயிர் பெற வேண்டுமாயின் சுதந்திரம் இன்றே, இப்போதே வேண்டும்; நாளை அல்ல. ஆகவேதான் உடனடியாய் சுதந்திரம் பெற நாம் உடனடியாய் முனைவோம். அல்லது அம் முயற்சியில் செத்துமடிவோம் என்று சூளுரைப்போம்…”

நேரு – ஆசாத் யோசனையின் பேரில் ஒரு சில திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேறியது. வெளியில் அலைமோதிய ஆயிரக் கணக்கான மக்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது.

ஆகஸ்ட் 8 முன்னிரவில் திரும்பவும் கூடிய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காந்திஜி இவ்வாறு அறிவுறுத்தினார்: “நமது இறுதிப் போராட்டம் இக் கணமே தொடங்கிவிட்டதாகக் கருதக் கூடாது. நீங்கள் அனைவரும் என் கையில் போராட்ட அதிகாரத்தை ஒப்படைத்து விட்டீர்கள். மேன்மை தங்கிய வைஸ்ராயைச் சந்தித்து காங்கிரஸின் உரிமைக் கோரிக்கையை ஏற்கும்படி மன்றாடுவதே எனது முதல் நடவடிக்கை. அதற்கு இரண்டு – மூன்று நாட்களாவது ஆகும். அதுவரை காத்திருங்கள்”.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் காத்திருக்கவோ காந்திஜிக்கு அவகாசமோ சந்தர்ப்பமோ அளிக்கவோ விரும்பவில்லை. மறுநாள் (1942 ஆகஸ்ட் 9-ம் தேதி) விடியற்காலை ஐந்து மணி அளவில் காந்திஜியும், பம்பாயிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களும் படுக்கைகளிலிருந்து எழுப்பப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாகவே ரகசியமாக நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

விடியற்காலையில் காந்திஜி கைதாகும்போது ஒரு சில பத்திரிகையாளர்களே அவ்விடத்தில் இருந்தனர். அவர்கள் மூலம் காந்திஜி இந்திய நாட்டு மக்களுக்கு அறிவித்த சிலவரிச் செய்தி இதுதான்:

“அகிம்சை அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு அரசாங்கத்திற்கு எதிராக அவரவர் இஷ்டப்படி மனதொத்த அளவில் செயல்படுவீர்களாக! ஒட்டுமொத்தமான வேலை நிறுத்தம் போன்ற இதர அகிம்சை முறைகளைக் கையாளலாம். சத்தியாக்கிரகிகள் சாவுக்குத் துணிந்து வெளிவர வேண்டும். உயிர் வாழ்வதற்காகப் பின்வாங்கக் கூடாது. தனிநபர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினால்தான் தேசம் உயிர் வாழும். ‘கரேங்கே யா மரேங்கே’ (செய்வோம் அல்லது செத்துமடிவோம்).”

பூனாவுக்கு அருகில் ஆகாகானுக்குச் சொந்தமான ஓர் தனித்த பழைய அரண்மனையில் ஒரு பகுதியில் மகாத்மா காந்தி காவலில் வைக்கப்பட்டார். சரோஜினி நாயுடு, மீராபெஹன், காந்திஜியின் செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோரும் அதே அரண்மனையில் காந்திஜியுடன் காவலில் வைக்கப்பட்டனர். அன்று மாலை பம்பாயில் காந்திஜி பேசவிருந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசப் போவதாக அறிவித்த காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவும் கைது செய்யப்பட்டு ஆகாகான் அரண்மனையில் காந்திஜியுடன் சிறைவாசம் தொடங்கினார். (கைதான மறுவாரமே, ஆகஸ்ட் 15 அன்று மகாதேவ் தேசாய் மாரடைப்பால் மரணமடைந்தார்).

அன்றைய தினமே (1942 ஆகஸ்ட் 9) நாடு முழுவதும் போலீஸார் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாகாண, மாவட்ட, நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்தனர். அனைத்துக் காங்கிரஸ் குழுக்களும் சட்டவிரோதமானவை எனத் தடை செய்யப்பட்டது; அவற்றின் நிதிகள் முடக்கப்பட்டன. பத்திரிகைகளும் அச்சகங்களும் காங்கிரஸ் இயக்கங்கள் பற்றியோ அதற்கெதிரான அரசாங்க அதிரடி நடவடிக்கைகள் பற்றியோ செய்திகள் வெளியிடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்து, அதைத் தொடர்ந்து படுகள அடக்குமுறையை அரசாங்கம் அவிழ்த்துவிட்டதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படித்த வகுப்பினர்களும் கொதித்தெழுந்தனர். வன்முறை வெடித்தது. காவல் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தபால் நிலையங்கள் தீக்கிரையாயின. ஆங்காங்கே தந்திக் கம்பிகளை அறுத்தல், ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தல், பாலங்களுக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தல், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்குதல் போன்ற அராஜகச் செயல்கள் தலைவிரித்தாடின. அரசாங்கம் போலீஸ் அடக்குமுறையை மென்மேலும் முடுக்கிவிட்டது. துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைதுகள், தடியடிகள், விசாரணையின்றி சிறைவாசம் மலிந்தன.

அரசாங்கம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் ஆகஸ்ட் புரட்சி வலுவிழந்து, அடுத்த இரண்டே மாதங்களில் பிசுபிசுத்துவிட்டது. தலைமறைவான இடதுசாரி காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடத்திய ரகசிய இயக்கமும் 1943-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடுக்கப்பட்டுவிட்டது.

1943 நவம்பரில் உடல்நலம் மிகக் குன்றி, படுத்த படுக்கையாக இருந்த கஸ்தூர்பா காந்தி, 1944 பிப்ரவரி மாதம் உயிர்நீத்தார். அன்னாரது உடல், ஆகாகான் அரண்மனை மைதானத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அதற்கு ஆறு வாரங்களுக்குப் பின், காந்திஜி கடும் மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்டார். அத்துடன் ரத்த சோகையும், குறைந்த ரத்த அழுத்தமும் அவரை வாட்டின.

“மிஸ்டர் காந்தியின் உடல்நிலை மிகவும் குன்றிவிட்டது. இனி தீவிர அரசியலில் ஈடுபடும் நிலையில் அவர் இல்லை. சிறைக் காவலில் அவர் மாண்டு போனால் மக்களிடையே அரசாங்கத்திற்கு விரோதமான உணர்வு மேலோங்கும்” என்று வைஸ்ராய் லண்டனுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் விளைவாக, காந்திஜியை ‘உடல்நிலை காரணமாக’ விடுவிக்க, 1944 மே 6-ஆம் தேதி வைஸ்ராய் உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தி மிக்க மன – உடல் சோர்வுடன் வெளியே வந்தார். அதுவே அவரது கடைசி சிறைவாசம். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1945 ஜூன் 14 அன்று காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

1944 ஜூலை 28 அன்று காந்திஜி வெளியிட்ட அறிக்கையில் அவர் பின்வருமாறு கூறினார்: “… பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிப்பது உட்பட நாச வேலைகள் அனைத்துமே வன்முறைச் செயல்களே ஆகும். ‘நடந்து போன அத்தகைய செயல்கள் மக்களின் மனத்தையும் ஆர்வத்தையும் உணர்ச்சிகரமாக உத்வேகித்தன’ என்றெல்லாம் என்னிடம் பலர் எடுத்துக்காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் அந்த நடவடிக்கைகள் நமது தேசிய இயக்கத்திற்கு தீங்கு விளைவித்துவிட்டன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை”.

ஆம்! ஆகஸ்ட் புரட்சியின் சில விளைவுகள் அரசியல் களத்தில் காங்கிரசுக்குப் பாதகமாகவே அமைந்தன. ஏறத்தாழ மூன்றாண்டு காலம் (1942-1945) காங்கிரஸ் தடை செய்யப்பட்டுச் செயலிழந்து கிடந்தது. தலைவர்கள் சிறையில் இருந்தனர். அதன் நிதிகள் முடக்கப்பட்டுவிட்டன. நடைமுறையில் காங்கிரஸ் ஸ்தாபனம் நிலைகுலைந்து ஸ்தம்பித்துவிட்டது எனலாம். முஸ்லிம் லீக் கட்சிக்கு இது ஒரு எதிர்பாராத நல்லதிருஷ்டமாகவே அமைந்தது. அத்தகைய தேசிய அரசியல் சூன்ய காலகட்டத்தில் முகமதலி ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக் ஒரு பலம் பொருந்திய கட்சியாகக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. பாமர முஸ்லிம் மக்களின் மத உணர்வைத் தூண்டிவிட்டு, தனி நாடு கிடைக்காவிடின் சுதந்திர இந்தியாவில் இந்துக்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய நேரிடும். இஸ்லாமுக்குப் பேராபத்து என்றெல்லாம் திகிலைக் கிளப்பி, காங்கிரஸýக்கு எதிராகத் தனிப் பெரும் கட்சியாக லீக் தலையெடுத்து, இந்தியப் பிரிவினைக்கு வழிகோலியது.

-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (07.08.2012)

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s