‘பால்காரர்’ காட்டிய பாதை…

வர்கீஸ் குரியன்
(26, நவம்பர்  1921 – 9, செப்டம்பர் 2012)இந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.

விவசாயமே தொழில். அப்பகுதியில் ‘ஆனந்த்’ என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.

‘பால்சன்’ என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

இத்தருணத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவன்தாஸ் படேல் என்னும் விடுதலை வீரர், “”வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு 1945-ல் ஊர் திரும்பினார்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, ஏதேனும் வழிசெய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார் திருபுவன்தாஸ் படேல். இதுதொடர்பாக, ஆலோசனை பெற, தன் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். நிலைமையை ஏற்கெனவே அறிந்திருந்த வல்லபபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றே சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவரே.

திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று, கூட்டுறவின் மூலம் பெறக்கூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946-ம் ஆண்டு இறுதியில் 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது.

ஆனந்தில் தொடங்கப்பட்ட இக் கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் – அமுல்) “அமுல்” என்கிற மந்திரச் சொல் ஆனது.

கூட்டுறவுக் கோட்பாடுகளிலிருந்து வழுவாமல் அதேசமயத்தில் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தது. இதை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனிசெஃப்’ அமைப்பு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் அமுலுக்குக் கணிசமான நிதி உதவி செய்தது.

“பசியிலிருந்து விடுதலை” என்கிற திட்டத்தின் வாயிலாக, விலைமதிப்புள்ள கருவிகளை நன்கொடையாக, ஐ.நா.வின் உணவு வேளாண் அமைப்பு (எஃப்.எ.ஓ.) வழங்கியது. அமுலின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் திருபுவன்தாஸ் படேல், மற்றொருவர் டாக்டர் வர்கிஸ் குரியன்.

1946-ல் கூட்டுறவு ஒன்றியம் பதிவு செய்யப்பட்டது முதல் 1973 ஜூலை மாதம் தானாக முன்வந்து ஒய்வுபெற்றது வரை திருபுவன்தாஸ் படேல் ‘அமுல்’ தலைவராக மட்டுமல்லாமல், ஒரு கர்மவீரராக, கெய்ரா மாவட்ட ஒன்றியத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

உலகின் கவனத்தை ‘அமுல்’ ஈர்க்கும் வகையில், 1949 முதல் சில ஆண்டுகள் முன்வரை, பால் கூட்டுறவு இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாக்டர் வர்கிஸ் குரியன்.

சர்வதேச அளவில் ‘பால் வளத்துறை நிபுணர்’ என்ற அங்கீகாரம், மகஸúஸ, பத்மபூஷண் மற்றும் பல உலக விருதுகளைப் பெற்ற குரியன், ஆரம்பகாலத்தில் பால்வளத் துறையில் நுழைந்ததே தற்செயலாகத்தான்.

இவர் பின்னணி இதுதான்: கேரள மாநிலம் கோழிக்கோடில் 1921 நவம்பர் 26-ல் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பிறகு கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றார். மத்திய அரசின் ‘ஸ்காலர்ஷிப்’ உதவியுடன், அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பொறியியல் பட்டம் பெற்றார். இவர் விரும்பிக் கேட்டிருந்தது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு; கிடைத்ததோ, பால்வளத்துறை பொறியியல் – கிடைத்ததை ஏற்றார்.

அமெரிக்க மேல்படிப்புக்குப்பின் நாடு திரும்பிய குரியன் ஆனந்திலுள்ள மத்திய அரசு பால் பண்ணை ஆய்வகத்தில் பொறியாளராக 1949-ல் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே மூடப்படும் நிலையில் இருந்த அந்த அலுவலகம், சில மாதங்களிலேயே மூடப்பட்டது.

மத்திய அரசு பண உதவியுடன் வெளிநாட்டில் படித்தார் என்பதால், அரசுப் பணியில் சில வருடங்கள் தொடர வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதற்கிடையே திருபுவன்தாஸýக்கும், குரியனுக்கும் ஆனந்தில் பரிச்சயம் ஏற்பட்டது. குரியன், கெய்ரா கூட்டுறவு அமைப்பில் தொடர வேண்டும் என்று திருபுவன்தாஸ் விரும்பினார். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. கெய்ரா மாவட்டம் சர்தார் படேலின் தொகுதியும்கூட.

கெய்ரா பகுதியில், ‘பால்ஸன்’ என்னும் அன்னிய பால் நிறுவனத்தின் கோரப் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும், எளிய பால் உற்பத்தியாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949-ல் நியமிக்கப்பட்டார்.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். பால் வரத்து பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழி செய்வதே குரியனின் உடனடிக் கடமையாக இருந்தது. பி.எம்.எஸ். என்னும் மும்பை அரசு பால் திட்ட அமைப்புகளுக்கு பால், வெண்ணெய் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தீவிரமாக முயன்றார்.

இந்த ஒப்பந்தத்தால், மகாராஷ்டிர அரசுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள், நியாயமான விலை, உயர்தரம், கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய அரசின் பொறுப்பு ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம், முதல்முறையாக அமுலுக்கு வந்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் ஊட்ட உணவான பால் பெüடர் மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து வகை பால் உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத் தரத்தை மிஞ்சினார். இதன் பயனாக, நீண்டகாலமாக இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த ‘கிளாங்கோ’, ‘ஆஸ்டர் மில்க்’ போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் ‘குழந்தை உணவுப் பெüடர்கள்’ இந்தியச் சந்தையிலிருந்து படிப்படியாக மறைந்தன.

ஒரு கூட்டுறவு நிறுவனம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பது முதன்முதலாக நிரூபணம் ஆனது.

இந்த வெற்றிக்குக் காரணம், குரியனின் சில உத்திகளே ஆகும். கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பால் உற்பத்தியில் குடும்ப உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினார்கள். உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை – கிராமம் முதல் ஒன்றியம் வரை – தாங்களே நிர்வாகம் செய்தனர். வெளியார் தலையீடு சிறிதும் அனுமதிக்கப்படவில்லை.

அர்ப்பணிப்பு உணர்வு, செயல் திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், பொருத்தமான அணுகுமுறைகள், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. உலகின் சிறந்த நவீன தொழில்நுட்பம், உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகள் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக விவசாயிகளின் ஈடுபாடு நிலைத்து நின்றது.

விவசாயிகளின் வறுமை பழங்கதையானது. விவசாயிகளுக்கு வீடுகள், நல்ல சாலைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகளுக்கு உயர் கல்வி ஆகியவை எளிதாகக் கிடைத்தன. சுருக்கமாகச் சொன்னால், அந்தப் பகுதியே ஒரு சொர்க்க பூமியானது.

இதனால், ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கினார் வர்கிஸ் குரியன். இன்னும் சொல்வதென்றால், உலகிலுள்ள 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை ரூ. 13,000 கோடி. உலகில் உள்ள மிகப் பிரபலமான “பிராண்டு’ பெயர்களில் “அமுல்’ ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல! பல ஆசிய நாடுகள் இன்று “குரியன் மாடலை’ப் பின்பற்றுகின்றன.

இத்தனை சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் வர்கிஸ் குரியன் 9-9-2012-ல் காலமானார். வெண்மைப் புரட்சியின் தந்தை மறைந்துவிட்டார். நண்பர்களாலும், பத்திரிகைகளாலும் செல்லமாக, ‘பால்காரர்” என்றழைக்கப்படும் குரியன் மறைந்தாலும் அவர் காட்டிய பாதை கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.

குரியன் அடிக்கடி கூறி வந்தார். “நாங்கள் பாடுபடுவது மாடுகளுக்காக அல்ல; மனிதர்களுக்காகவே!” கூட்டுறவு கோட்பாடுகள்; மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக இயல்; உள்ளூர் மக்களின் ஈடுபாடு. இம் மூன்று அம்சங்களின் இணைப்பே, குரியனின் பாணி! பல நாடுகள் குரியன் மாடலைப் பின்பற்ற முடியுமானால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாமே? நோய்வாய்ப்பட்டிருக்கும் கூட்டுறவு இயக்கம் – புத்துயிர்பெற அவர் காட்டிய பாதை உதவட்டும்!

– எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி: தினமணி  (13.09.2012)

Verghese Kurien (wiki)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s