விஞ்சு புகழ் வாஞ்சி

– பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் 

வீர வாஞ்சிநாதன்

(1886 – ஜூன் 17, 1911)

தேவக்கோட்டையில் என் இல்லத்தின் எதிரே மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடந்தபோது ராமஸ்வாமிஜி சொல்லித் தந்த பாடல் வரிகள் என் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தன.

”நரபலி கொடுத்த வீர வங்கமும் பாஞ்சாலமும் இன்று
நானிலம் அசைக்க வினவிடும் கேள்வி
நெஞ்சை உலுக்கிடுதே! எங்கே உன் வீரம்?
வில்லினை எடு வீரா…”

– என்று வளர்ந்த பாடல், வீரம் தமிழருக்கு இல்லையா என்று துடித்தெழ வைத்தது.

‘துன்பங்களுக்கு  அஞ்சாதே! அவற்றைக் காதலி. மரணத்தின் முடிவைத் தழுவு. வீர தீரர்களுக்கே சுயராஜ்ஜியம் உரியது’ என்றார் சுவாமி விவேகானந்தர்.  ‘ஆங்கிலேயன் பாம்பு; அவனைக் கண்ட இடத்தில் விளாசி அடித்துக் கொல்ல வேண்டும்’ – மேடம் காமா கட்டளையிட்டார்.

‘உயிரை வாங்கிவிட்டு உயிரை விடுங்கள்; ரத்தம் சிந்தாமல் தேவியின் வழிபாடில்லை’ என்றார் மகான் அரவிந்தர்.

புறப்பொருள் வெண்பா மாலை,  புறநானூறு,  கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களிலும், போர் குறித்த பாடல்களில் தன்னைப் பலியிட்டு வீரமரணம் எய்திய வீரர் குறித்த செய்திகள் உள. ஆனால் வீர வாஞ்சி ஐயர் ஆஷ்துரையைச் சுட்டுத் தானும் சுட்டுக் கொண்ட மாபெரும் வீரப்புரட்சி,  நினைத்தாலே உளம் சிலிர்க்க வைக்கிறது.

தருப்பை ஏந்திய  கை துப்பாக்கி பிடித்தது. காயத்ரி சொல்லும் வாய் புரட்சி கீதம் இசைத்தது. பருவமடைந்த நாள் முதலே விதவை வாழ்க்கை பெற்ற வாஞ்சி மனைவி பொன்னம்மாள் தியாகம் மிகப் பெரிது.

அன்றைய திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் செங்கோட்டையில் கோயில் மணியக்காரர் ரகுபதி ஐயர் பெற்ற பிள்ளையே வாஞ்சிநாதன். இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் படித்து, அதன் பின் திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் அந்த நாளிலேயே பி.ஏ. பட்டம் பெற்றார். 23 வயது வாஞ்சி, முன்னீர்ப்பள்ளம் சீதா ராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணம் புரிந்தார். பரோடா சென்று மரவேலை குறித்த தொழில் கல்வி கற்று புனலூரில் காட்டிலாகாவில் வேலை செய்தார்.

காளி படத்திற்கு முன் நின்று குங்குமம் கலந்த நீரைப் பருகி, அவரவர் வலது கைக்கட்டை விரலை நுனியில் கத்தியால் அறுத்து, வழியும் குருதியினால் வெள்ளைக் காகிதத்தில் குறியிட்டுச் சபதம் செய்ய வேண்டும். ”வெள்ளைக்காரரின் ரத்தத்தைக் குடிப்பேன். எத்தகைய பேராபத்து வந்தாலும் ரகசியத்தை வெளியிடேன். எதிரியிடம் மாட்டிக் கொண்டால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வேன்” என்ற வீரசபதம் ஏற்பவரே பாரத மாதா சங்க உறுப்பினர் ஆவர். எருக்கூர்  நீலகண்டப் பிரம்மச்சாரி முன்பு  வாஞ்சிநாதன் அப்படித்  தான்  உறுப்பினர் ஆனார்.

புதுவை சென்று வ.வே.சு. ஐயரைச் சந்தித்தார். தூத்துக்குடி சப் கலெக்டராயிருந்த ஆஷ், வ.உ.சி, சிவா, பாரதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்த கொடுமைகள்  கொஞ்ச நஞ்சமா? அக்டோபர் 16, 1906ல் வ.உ.சி பதிவு செய்த சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை அழிக்க முயன்ற மகாபாவி! ‘குற்றால அருவியில் 20 வெள்ளையர்கள் குளித்தால் வேறு இந்தியர் யாரும் அங்கு குளிக்கக் கூடாது’ என்று நிறத் திமிருடன் உத்தரவும் போட்ட  ஆஷ்.

அவனைக் கொல்வதென்ற முடிவும் திட்டங்களும் தயாராயின. குறி பார்த்துச் சுடும் பயிற்சியில் வாஞ்சி தேறிவிட்டார். 17.6.1911 சனிக்கிழமை ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில், அவரது மனைவியுடன் கொடைக்கானலுக்குச் சென்று ஓய்வெடுக்க சென்னை செல்லும் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தான்.

அடுத்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஜமீன்தார், அவரது மகன், காஸ்ட்ஸ் பாதிரியார், நெல்லை சர்வே ஆபீஸ் ராமன் வெங்கடராமன்,  நிலக்கிழார் பிள்ளை ஆகியோர் பயணம் செய்தனர்.

காலை 10.30 மணிக்கு வாஞ்சி என்ற வீர வாஞ்சிநாதன் ஆஷ் இருந்த பெட்டிக்குள் ஏறிக் கைத்துப்பாக்கியால் மார்பை நோக்கிச் சுட்டார். இதயமற்ற பாவியின் இதயத்தைத் துளைக்கக் குண்டு பாய்ந்தது நியாயமே! கொடுங்கோலர்கள் கொல்லப்பட்டபோது நல்லோர் மகிழ்ந்த வரலாறுகள் உலகில் உண்டே!

‘ஹெல்ப்..  ஹெல்ப்’ என கதறிய ஆஷ் அலறலைக் கேட்ட போலீசார்,  ஏவலாளர் பிடிக்க வந்தபோது ஓடி கழிவறையில் ஒளிந்தார் வாஞ்சி. யாரிடமும் பிடிபடலாகாது என்று தன் வாயினுள் துப்பாக்கியை வைத்துச் சுட்டு வீரசுவர்க்கம் அடைந்தார்.

வாஞ்சிநாதன் என்ற வீர இளைஞன் அன்று வேட்டைக்குப் போகிறவர் அணியும் கோட்டு அணிந்திருந்தார்.  மணிபர்சு, இரண்டாம் வகுப்பு டிக்கெட், ஐந்து அணா,  ராணி விக்டோரியா படம்  இவற்றுடன் ஒரு கடிதமும் இருந்ததாம். வீர வாஞ்சியின் மனத்திலிருந்ததை ஒளிக்காமல் எழுதிய கடிதம். அதில் ‘ஆர். வாஞ்சிஐயர், செங்கோட்டை’ என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது.

”ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி தர்மத்தையும்,  சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சித்து வருகிறான். 

எங்கள் ராமன்,  சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தன், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சனான ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3,000 மதராஸிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம்.

அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை”

-என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆஷ், வாஞ்சி இருவருடைய மரணமும் ஒன்றா? பாவி ஆஷ் தண்டனை பெற்றான், அது புலையுறு மரணம். வாஞ்சியின் உயிர்த்தியாகம் தேசபக்தியின் விளைவான தெய்வமரணம். பிரிட்டிஷ் அரசு போலீசை முடுக்கிவிட்டது. நாடெங்கும் கெடுபிடி; சோதனைகள்!

ஆஷ் கொலையின் இதர விளைவுகள் தெரியுமா? தெரிந்திருந்தால் நமது நாடு இப்போதுள்ள தள்ளாட்டத்தில் தான் இருக்குமா?

1. புனலூர் கிரிமினல் வக்கீல் வெங்கடேசுவரய்யர் போலீஸ் பிடிக்கும்  முன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

2. செங்கோட்டை தருமராசய்யர் வீடு சூறையிடப்பட்டது.  ஐயர் நஞ்சருந்தி வீரசுவர்க்கம் சேர்ந்தார்.

3. ஒட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை கடைசி வரை போலீசார் கரங்களில் அகப்படாமல் தலைமறைவாகவே இருந்து மறைந்தார்.

4. செங்கோட்டை கஸ்பா அழகப்ப பிள்ளை மாந்தோப்பில் பதுங்கியிருந்தபோது கைதானார்.

5. தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

6. நீலகண்ட பிரம்மச்சாரி தாமே சரணடைந்தார்.

7. கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சாவடி அருணாசலம் பிள்ளையைக் கைது செய்தனர்.

8. தண்டனைகள் விவரம்:

அ) நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 வருட சிறை.
ஆ) கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணனுக்கு 4 வருடம்.
இ) ஆலப்புழை ஹரிஹரய்யருக்கு 3 வருடம்,
ஈ) மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளைக்கு 2 வருடம்.
.

12 வருடச் சிறை தண்டனை பெற்றவர்கள்:

1. தூத்துக்குடி முத்துகுமாரசாமி பிள்ளை
2. தூத்துக்குடி சுப்பையா பிள்ளை
3. செங்கோட்டை ஜெகநாத ஐயங்கார்
4. புனலூர் பாபு பிள்ளை
5. செங்கோட்டை பிச்சுமணி (எ) வெங்கடாசலம் ஐயர்
.

9. காமா அம்மையார் 1911 ஜூலை ‘வந்தே மாதரம்’ இதழில் ஆஷ் கொலையை வரவேற்றும், வீர வாஞ்சியைப் போற்றியும் எழுதினார்.

வீரன் வாஞ்சி, ஆஷ் மார்பில் வைத்த குறி பிரிட்டிஷ் அரசின் பிடரியைப் பிடித்துக் குலுக்கி விட்டது!

வெள்ளை கலெக்டர் 100 வருடங்களுக்கு முன் நெல்லை மாவட்டம், கயத்தாற்றில் கட்ட பொம்மனைத் தூக்கிலிட்டான். 100 வருடங்களுக்குப் பின் அதே நெல்லைச் சீமையில் வெள்ளை கலெக்டரை வீரவாஞ்சி சுட்டு வீழ்த்தினார். இன்று 101 ஆண்டுகள் ஓடிவிட்டன!

ஆனால் வாஞ்சிக்கும் அவன் தியாகத்திற்கும் அரசும் மக்களும் என்ன நன்றி காட்டி விட்டார்கள்?

வாஞ்சியின் இளம்வயது மனைவி பொன்னம்மாள், கடைசிவரை கஷ்ட ஜீவனம் நடத்தி பென்ஷனுக்கு மனுபோட்டு கருணையற்ற இந்த அரசால் அலைக்கழிக்கப்பட்டார். ‘அஹிம்சை’ என்ற பெயரில் தேசபக்தரின் மனைவிக்கு காங்கிரஸ் அரசு ஹிம்சை என்பதை விட வேறு என்ன சொல்வது?

‘வாஞ்சி மணியாச்சி’ என்ற ரயில் நிலையம் தியாகத்தின் நிரந்தர அடையாளச் சின்னம்.  தேசப் பற்றுள்ள வீர இளைஞர்கள் அந்த மண்ணை முத்தமிட்டு நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?’ என்றார் மகாகவி பாரதி.

அதைக் காப்பது நம் கடன்!

நன்றி: விஜயபாரதம் வார இதழ்

***

காண்க: தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s