சொல்வேந்தர் தீரர் சத்தியமூர்த்தி

-பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன்

(1887, ஆக. 18- 1943, மார்ச் 28)

நெற்றி நிறையத் திருநீறு, குங்குமம்,  தலையில் காந்தி  குல்லாய், கோட், அங்கவஸ்திரம் இவற்றுடன் சிம்மக் குரல் கேட்கிறது என்றால், தீரர் சத்தியமூர்த்தி பேசுகிறார் என்று தெரியுமே! புதுக்கோட்டைக்காரர் என்று சொன்னாலும் திருமெய்யத்துக்காரர்.  அந்தப் பெருமானின் நாமமே சத்தியமூர்த்தி. கலையார்வம், நாடக நடிப்பு, சமூக சீர்த்திருத்தச் சிந்தனை, ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் என்ற மும்மொழியிலும் சரளமாகப் பேசும் ஆற்றல், எல்லாம் கொண்ட வழக்கறிஞர். பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.

19.8.1887ல் திருமெய்யகத்தில் சுந்தர சாஸ்திரிகள் – சுப்புலட்சுமி அம்மாளின் மகனாகப் பிறந்து,  தந்தை செய்த வழக்கறிஞர் தொழிலை இவரும் ஏற்றார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சென்னையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் வி.வி. ஸ்ரீநிவாச ஐயங்காரிடம் தொழிலைத் தொடங்கினார். 1917லேயே கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் (30 வயதில்) மிக ஆவேசமாக, அழுத்தமாகப் பேசி பெருந்தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேர விடுதலைப் போராட்ட வீரர் ஆனார். 1919ல் காங்கிரஸ் மகாசபை சார்பில், பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவில் பேச அனுப்பப்பட்டார். ஆங்கிலேயர் பலர் கூடி இவரது சொல்லாற்றலை, அதில் தெரிந்த சத்தியத்தைப் பாராட்டினர் எனப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.

1920ல் முழுநேரத் தொண்டனாக ஊர்தோறும் தன் பேச்சாற்றலால் மக்களின் சுதந்திர தாகத்தை அதிகமாக்கினார். ‘ஒருவேலையை வெள்ளையன் செய்தால் கூலி அதிகம். இந்தியன் செய்தால் கூலி குறைவு. ஏன்? அவன் தோள் வெளுப்பாம். நம் தோல் கறுப்பாம்! அடுக்குமா இது இந்தியனே!’ என்று பாமரனையும் சிந்திக்க வைத்தார்.

மோதிலால் நேரு, சித்தரஞ்சன்தாஸ் போன்ற தலைவர்கள் சட்டசபைக்குள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சென்றால் தான் ஆங்கில அரசை அதிகார பூர்வமாக எதிர்க்க முடியும் என்றார். காங்கிரஸில் பலர் இதை எதிர்த்தனர். சுயராஜ்யக் கட்சி உதயமானது. 1923இல் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தொகுதியிலிருந்து, சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் சென்னை மாகாண சட்டசபைக்கு சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்கு, தீண்டாமை, நிற பேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், மக்களின் அடிப்படை வசதிகள், பெண் கல்வி, பெண்ணுரிமை எனப் பல செய்திகளை விவாதித்து அலசியிருக்கிறார். பாரதியாரின்  கவிதை நூல்களை அரசு தடை செய்தபோது, 1.10.1928ல் இவர் பேசிய பேச்சு சட்டசபை வரலாற்றில் தனித்த சிறப்புடையது. ‘பாரதி பாடல் எழுதிய  ஏட்டை எரிக்கலாம்; அதை ப்பாடும் வாயை, கேட்டவர் மனத்து உணர்வை என்ன செய்ய முடியும்?’ என்றார்.

காந்தியடிகள் ‘இது போன்ற பல சத்திய மூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் என்றோ நாட்டை விட்டு ஓடியிருப்பர்” எனப் புகழ்ந்தார். அன்றும் சிலர் இவரது உண்மைப் புகழை மறைக்க முயன்றனர்.

கவியாளும் புலவனுக்குச் சிறையும் ஒரு வீடுதான். 1929 சைமன் கமிஷன் எதிர்ப்பு. 1930 ஒத்துழையாமை இயக்கம் – இவற்றில் சத்தியமூர்த்தியின் பங்கு மகத்தானது. பலன் – சிறைவாசம்! அந்நியத் துணி பகிஷ்கரிப்புக்கா 1931ல் மீண்டும் சிறைவாசம். உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் விடுதலைப் போரில் தீவிரம் காட்டினார். 1934ல் டில்லி மத்திய சட்டசபைக்கு சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் சத்தியமூர்த்தி என்பதே அவரது நாவன்மை, அர்ப்பணிப்பு இவற்றின்பால் தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டும்.

ஜனநாயக மரபுக்கு உட்பட்டுச் சட்டசபைக்குள், சொல்வல்லனாக, சோர்விலனாக, 20.2.1936 அடக்கு முறைச் சட்டத்திருத்த மசோதா குறித்து 6 மணி நேரம் (360 நிமிடங்கள்) தொடர்ந்து பேசிய தீரர் சத்தியமூர்த்தியின் உரை அந்த நாளில் கின்னஸ் சாதனைக்குரியது!

12 ஆண்டுகள் சென்னை மாநகராட்சி உறுப்பினராயிருந்து 6.11.1939 மேயராகப் பொறுப்பேற்று ‘முதல் குடிமகன்’ என்பதற்குப் பதிலாக ‘முதல் சேவகன்’ என்று தன்னை அழைத்துக் கொண்டார். பல நல்ல திட்டங்கள் கொணர்ந்தார். பூண்டி நீர்த்தேக்கம், சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இவரும் உதவினார். கே.பி. சுந்தராம்பாளை, கிட்டப்பாவை மேடைகளில், தேசியப்பாடல்கள் பாட வைத்தார். ‘மனோகரா’ நாடகத்தில் இவர் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாம். சென்னை மியூசிக் அகாடமி தோன்றவும் பெரிதும் உதவினார். உயர்ஜாதிப் பெண்கள் பரதநாட்டியம் ஆடுவது இழுக்கு என்ற நிலையை மாற்றிப் பலரையும் நாட்டியம் பயில வைத்தார்.

இந்தச் சொல்லரசர் ஒரு துறையிலா சாதனை செய்தார்? ஒரு நாளில் 24 மணி நேரம் போதாது என உழைத்திருக்கறாரே! ‘கொண்ட கடமையில் தூங்கியவர் புகழ் இழந்தார்’ என்றார் பட்டுக்கோட்டையார். புதுக்கோட்டையார் வாழ்வே புகழ்க் கோட்டைதான். அதற்குக் காரணம் என்ன?

1. நாநலம் என்னும் நலனுடைமை அவரிடமிருந்தது.

2. அவர் வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர்;  ‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித்திரிந்து, செம்மை மறந்தவரல்லர்.’

3. மக்கள் நலனுக்காகவே மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள் என்பதைக் கணமும் மறவாது, ஒல்லும் வகையில், ஓவாது பொதுநலத்திற்கு உழைத்த தலைவர்.

4. கலைவழி, உரைவழி, செயல்வழி என மூவழியாலும் தேசப்பற்று எனும் கனலை ஊதி ஊதி, முத்தீ வளர்த்தவர்.

5. ‘சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்து துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்’ எனத் துடித்தெழுந்து வயிற்றுப் பிழைப்பைப் பற்றியும், வக்கீல் தொழிலைப் பற்றியும் சிறிதும் எண்ணாது சுதந்திர வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட தூய அந்தணர்.

6. ‘மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் யார்? கருமமே கண்ணாயினார் என்று சொன்ன பாடலின் ஜீவசித்திரமே சத்தியமூர்த்தி.

7. ‘சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது’ என்ற குரலின்படி சிம்மக் குரலெடுத்துச் சீறிவரும் சொல் தொகுத்து ஆங்கில அரசை ஆட்டிப் பார்த்தார்.

8. ‘பிரிட்டிஷ் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து அதன் பிடரியை உலுக்குவேன்’ என்று சபதம் செய்து அதன்படி லண்டன் சென்று அங்கு முழங்கி, காந்தி மகத்துவத்தை உலகிற்குக் காட்டியவர்.

1948க்கு முன் தமிழகத்தில் மன்னராட்சி நிலவிய ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. தொண்டைமான் மன்னர்கள் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டு ஆண்டனர். 12.11.1920லேயே தீரர் சத்தியமூர்த்தி ”மன்னராட்சி வேண்டாம், சுயாட்சி பெறக் கிளர்ச்சி செய்யுங்கள்” என மேடைகளில் முழங்கினார். மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானுக்கு ஆஸ்திரேலிய மனைவி வழிப் பிறந்த இளவரசுக்கு வாரிசு உரிமை தரக்கூடாது எனவும் கிளர்ச்சி செய்தார். மக்களையும் திரட்டினார்.  சமஸ்தான அரசு இவர் புதுக்கோட்டைக்குள் நுழையக் கூடாதென்று தடை விதித்தது. 2 வருடங்களுக்குப் பின் தடை நீக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் புதுகை ஏக இந்தியாவுடன் இணைந்தது! தீரர் சத்திய மூர்த்தி செய்த முயற்சிகள் பலனளித்தன! பார்க்க அவரில்லை!

இரண்டாம் உலக்போர் மூண்டது. அரசின் போக்கை எதிர்த்து சத்தியாக்கிரஹம். 13.12.1940ல் கைதானார். 9 மாதத்தில் உடல் மேலும் பலவீனப்பட்டது. 8.8.1942 வெள்ளையனே வெளியேறு (Quit India) கிளர்ச்சி குறித்து பம்பாயில் பேசிவிட்டுவரும் வழியில் கைதானார். மகாராஷ்டிர மாநிலம் அம்ரோதி சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நைந்தது. உள்ளமோ சுதந்திரச்சுடரின் உறுதியாகப் பரப்பிக் கொண்டிருந்தது. மீண்டும் சென்னை சிறைக்கு மாற்றம் எனப் பந்தாடியது வெள்ளை அரசாங்கம்.

இன்று சிறைக் கைதிகளின் சாவு, காவல் கைதிகளின் சாவு என்றால் தட்டிக்கேட்க மனித உரிமை கமிஷன் இருக்கிறது. அன்று இந்தியனான மனிதனுக்கு என்ன உரிமை இருந்தது? பாவிகள் என்ன செய்தார்களோ தெரியவில்லை. சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட சத்தியமூர்த்தி தீவிர சிகிச்சைகள் பலனின்றி 28.3.1943 அன்று வீரமரணம் அடைந்தார்.

ஆம், தியாகிகளின், வீரர்களின் மரணம் ‘புலையுறு மரணம்’ அன்று. தெய்வ மரணம் தான்! விடுதலை விடுதலை என்று உச்சரித்த வீரன் சிறைக்கைதியாகவே பாரதத்தாயின் மடியில் உறங்கியது கொடுமை!

இவரது நூற்றாண்டுவிழா 1987ல் கொண்டாடப்பட்டு திருமயம், புதுக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் அவரது முழு உருவச்சிலை நிறுவப்பெற்றது. நாம் நினைவிலே சிலை செய்து அவருக்காக வைப்போம்!

வாழிய பாரத மணித் திருநாடு!

நன்றி: விஜயபாரதம்

காண்க:

தமிழக காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி

.

 

Leave a comment