தீபாவளி தெரி(ளி)வித்த ஒரு மொழி !

-ம.கொ.சி.ராஜேந்திரன்

 0.
கதிரவன்  தனது அன்றைய  அலுவல்களை  செவ்வனே முடித்து வானமென்னும்  நிறுவனத்தை விட்டு  வெளியேறும் மாலைநேரம்.  லேசான குளிர்காற்று  என்னை  சீண்டியபடி சென்றது. மனதும்  சுற்றி நெடுக  வளர்ந்திருந்த மரங்களைப்  போலவே உயரமாய்  எண்ணங்களே  இல்லாது வெற்றிடமான  பூங்காவைப் போல காலியாய்.
 .
அமைதியே, அமைதி மட்டுமே  ஆக்கிரமித்த  அந்தச் சூழல். எந்தச் சலனமும் இல்லாமல்  வானத்தை  வெறித்தபடியே  பார்த்துக்  கொண்டிருந்தேன். அப்பொழுதுதான்  அந்த பொருள் பொதிந்த  பாட்டு  என் கவனத்தை  திசை  திருப்பியது.
 .
அதன் அற்புத  வரிகள்  ஆயிரமாயிரம்  சிந்தனைகளை  வேகமாய்  அதே சமயத்தில் விவேகமாய்  எழுப்பியபடியே  சென்றது.  அந்தப் பாட்டின்  ஆழமான கருத்து  என்னில் பல  கேள்விகளை உருவாக்கியது. பாடல் தொடர்ந்து கொண்டு தான்  இருந்தது . ஆனால்  ஏனோ முதலில் கேட்ட  பாடல்வரிகள் மட்டுமே என் மனதில் ரீங்காரமிட்டுக்  கொண்டேயிருந்தன .
 .
என்னே  ஒரு தொலைநோக்குப்  பார்வை  கொண்ட சிந்தனை! என்னே  ஒரு தெளிவும், உறுதியும் கொண்ட  தீர்வு! பாடல்  இதுதான் :
 .
 “கிரேக்கம் அழிந்தது, எகிப்தியம் அழிந்தது, 
அமரபாரதம் வாழுது  காண்;
ஆதியும்  அந்தமும்  அற்ற  நாடிது! 
தூய்மையின் பண்பின்  காவலன் காண்;
போகவாதத்தின்  மாளிகை  சரிந்தது  மாறுது;
உலகின்  தாகம்  தீர்த்திட வல்லது  சங்க கங்கையே தான்.”
 .
உலகின் மிகப் பெரிய  நாகரிங்களை  உருவாக்கிய கிரெக்க,  எகிப்திய  அரசுகள்  தங்களது  டையாளங்களாக  பாழடைந்த கட்டிடங்களையும்,  சில பல நூல்களையுமே  விட்டுச் சென்றிருக்கின்றன.  உலகையே  தங்கள்  கொடியின்கீழ்  கொண்டுவர  ஆயிரக் கணக்கான  அதிகாரப்போர்களை  நடத்தின.
 .
அப்போர்களினால்  எங்கும் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. புதுப்புது  சட்டங்கள்  இயற்றப்பட்டு நீதிதேவனை தங்கள் சேவகனாக மாற்றிக் கொண்டனர். ஆட்சியென்னும்  போர்வையில்  பல லட்சக்கணக்கான  ஆண்களும், பெண்களும் மட்டுமல்லாது  குழந்தைகளும் கூட  அடிமைப்படுத்தப்பட்டனர். ஆட்சியாளர்களும். மதகுருமார்களும்  கைகோர்த்துக்கொண்டு தங்களை ‘கடவுளின்  பிரதிநிதிகளாக’ அறிவித்துககொண்டனர் . தங்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  கருவிகளையும், இயந்திரங்களையும் கூட  அயல்நாடுகளைத் தாக்கவும், அந்நாட்டு  வளங்களைச் சுரண்டவும் பயன்படுத்தி,   தங்களது போகவாழ்க்கைக்கு உரமாக்கிக் கொண்டனர்.
 .
இந்நிகழ்வுகளின்  சாட்சியங்களை  வரலாறு  தனது  ஏடுகளில்  பதிவுசெய்திருபபதை  நாம்  காண முடியும். கறைபடிந்த மேற்கத்திய நாகரிக  வரலாற்றைத்  தாண்டி  கீழைநாடுகளில் நம் பார்வையைத்  திருப்பினால்  வியத்தகு காட்சிகளை  நம்மால்   காண முடிகிறது. குறிப்பாக  அகண்ட  பாரத தேசத்தின்   புகழோங்கிய  கலாச்சாரமும், பெருமைமிகு ஆட்சியாளர்களும் தான்   நம்மை  வரவேற்கிறார்கள்.
 .
இங்கு பாராளும் மன்னர்களைவிட பிச்சை பெற்று  வாழும் மகரிஷிகள் வணங்கப் பெற்றர்கள். பாடம்  சொல்லிக் கொடுத்த  ஆசிரியர்கள்  தெய்வமாக  வழிபடப்பட்டார்கள். தட்சசீலத்திலும் , நாலந்தாவிலும்  அமைந்திருந்த  பல்கலைக்கழகங்கள் அன்றைய உயர்ந்த கல்வியைப் பறைசாற்றும்  கலங்கரை விளக்கங்கள்.  தில்லி  இரும்புத்த்தூணும்,  திருநள்ளாறு  சனிபகவான்  ஆலயமும்  விஞ்ஞான உலகத்தையே அதிசயக்க வைக்கின்ற விஷயங்களாகத் தானே  விளங்குகின்றன?
 .
வேதமும், கீதையும்  ஞானப் பொக்கிஷங்களாக  இன்றும் கல்வியில் சிறந்த  சான்றோர் கருதுவது  கண்கூடு . தஞ்சை  பெரிய கோயிலும்,  ஹம்பி  சிற்பங்களும் , ராமேஸ்வரக்  கோயிலின்  மூன்றாம் பிரகாரமும் , எல்லோரா  ஓவியங்களும் நமது கலைகளின்  உச்சத்தைத்  தொட்டுக் காட்டுகின்றன.
 .
வால்மீகியின் ராமயணமும், வள்ளுவனின்  முப்பாலும்  எப்பாலோர்க்கும்  என்றைக்கும்  எப்பொழுதும்  எந்நாட்டவர்க்கும்  வழிகாட்டும் இலக்கியங்கள் தானே? அன்றுமுதல் இன்றுவரையிலும்  கோடிக் கணக்கான  மக்கள் கங்கை நதியை  புனிதமாக வழிபடுவதும் , இமயமலை இறைவன் வாழும்  இடமாக  போற்றுவதும்,  குமரிமுனைப்  பாறையில்  இறைவி கன்னியாய்  தவம் செய்யும்  தலமாகக் காண்பதும்  வெறும் கற்பனையல்ல.  இம்மண்ணில் வாழும் கோடிக் கணக்கான மக்களின் நாடிநரம்புகளில்  கலந்துவிட்ட  வாழ்வியல்நெறி தானே?
 .
இவ்வாறு பல்லாயிரமாண்டுகளாக  கங்கையின் நீரோட்டம்போல்  இங்கு  பாரம்பரியமான பண்பாட்டு நதி   ஓடிக்கொண்டிருப்பதின்  ‘ரிஷிமூலம்’ எது ?  காலச்சூறாவளியில்  அகப்படாமல் பாரதப் பண்பாடு  கம்பீரமாய் தலைசிறந்து  நடைபோடுவதனின் ‘மூலரகசியம்’ தான்  என்ன ?  அந்த ரிஷிமூலத்தை அறிவிக்கும் நாள்தான்  ‘தீபாவளித் திருநாள்’.
 .
இத்தேசத்தில்  தனிமனிதனைவிட  குடும்பம்  பெரிது. குடும்பத்தைவிட  ஊர் பெரிது.  ஊரைவிட  சமூகம்  பெரிது.  சமூகத்தைவிட  நாடு  பெரிது.  நாட்டைவிட  தருமம்  எனப்படும் அறம்  பெரிது. ஆண்டவனே ஆனாலும் , அதிகாரம் மிக்க  அரசனே  ஆனாலும்,  பிச்சை பெற்றுண்ணும்  வாழ்க்கை வாழும்  ஆண்டியேயானலும்,  இங்கு வாழ்க்கையின்  மையம்  அறம; தருமமே.
 .
தான்  ஈட்டிய  பொருளையோ, தன்வசமிருக்கும்  திறனையோ  பிறர்நலனுக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும்  தருமம் சாராத  நெறியில்  செலவழிக்காத  எவரும்  இங்கு சாதனையளராவதுமில்லை; சரித்திரமாய்  வணங்கப்படுவதுமிலை.  தான்  ஈன்ற பிள்ளையேயானாலும்  தர்மநெறிகளை  அழிக்க முற்பட்டால், அதர்மச் செயல்களில்  ஈடுபட்டால்  அவனை  அழிக்கவும்  தயங்காத  அன்னையர்களே  இப்பூமியில்  வணங்கத்தக்கவர்கள்.
 .
இத்தகு ‘தருமம்  காக்கும்  நல்லோர்கள்  அனைவருக்கும்  ஆண்டவனின்  ஆசிகள்  மட்டுமல்ல; வழிகாட்டுதலும்   உண்டு’ என்பதையே  நரகாசுரனும்  சத்தியபாமாவும்  பகவான்  ஸ்ரீ கிருஷ்ணனும்  நமக்கு  பாடமாக  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 .
நம் பொய்யாமொழிப் புலவர்  திருவள்ளுவரும்  இத்தர்ம நெறியினை  குறளாக  பதிவுசெய்துள்ளார்:
 .
“குடிசெய்வே  மென்னும்  ஒருவருக்கு  தெய்வம்
மடிதற்று  தான்  முந்துறும்”
 .
– அனைவருக்கும்  இதயங்கனிந்த  தீபாவளித்  திருநாள்  வாழ்த்துக்களை  தேசிய சிந்தனைக்  கழகம்  அகமகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறது.
.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s