திருப்பம் நிகழ்த்துமா ஷயாரா பானு வழக்கு?

-ஏ.சூர்யபிரகாஷ்

shayara-and-shah-bano

ஷயாரா பானு (2016)- ஷா பானு (1986)

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு எதிரான ஒரு விவகாரத்தில், 70 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட அரசுகள் ஆமை வேகத்தில் செயல்பட்டு வந்தன.

தற்போதைய மத்திய அரசு இவ்விஷயத்தில் குழப்பமற்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது; உச்சநீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள ஷயாரா பானு வழக்கில் மதச்சார்பற்ற, ஜனநாயகப் பாரம்பரியத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில் தெளிவான பிரமாணப் பத்திரத்தை அரசு சமர்ப்பித்துள்ளது. எனினும், இவ்விஷயத்தில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இவ்வழக்கின் பிரதான அம்சம், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்டுவது தொடர்பானதாகும்.

அரசியலமைப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீது தனிப்பட்ட மதச் சட்டங்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்ற கேள்வியை ஷயாரா பானு வழக்கு எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக மத்திய அரசு முன்வைத்துள்ள வாதம் உளப்பூர்வமாக உள்ளது.அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளை வேறெந்தக் காரணமும் நசுக்கிவிட முடியாது என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்திருப்பது, முன்னெப்போதும் நடந்திராதது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் முடிவு நேர்கொண்ட பார்வையுடன் விளங்குகிறது.

இந்த வழக்கின் அடிப்படைப் பிரச்னையான முத்தலாக்கை மட்டும் மத்திய அரசு எதிர்க்கவில்லை, பாலின சமத்துவத்தை கேள்விக்குள்ளாக்குவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி (ஷரீஅத்), எந்த ஒரு முஸ்லிம் ஆணும் ஒரு  ‘துஹர்’ (இரு மாதவிடாய் நாள்களுக்கு இடையிலான காலம்) கால அளவுக்குள் தனது மனைவியிடம் ‘தலாக்’ என்று சொல்வதன்மூலம், திரும்பப் பெற முடியாத உடனடி விவாகரத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

ஷயாரா பானு

ஷயாரா பானு

இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணான ஷயாரா பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.  “ஒருசார்பான முத்தலாக் எனப்படும் தலாக்-இ-பித்அத் முறையானது முஸ்லிம் பெண்களை தட்டுமுட்டுச் சாமான்களைவிட இழிவாக மாற்றிவிடுகிறது.  அது பாலின சமத்துவம், மனித உரிமைகள் உள்ளிட்ட நாகரிக நடைமுறைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய நம்பிக்கைக்கு ஒவ்வாததாகவும் உள்ளது”  என்று நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார்.

சமூக இணையதளங்கள் வாயிலாகவும், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி வடிவிலும்கூட தலாக் செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இவ்வாறான விவாகரத்து நடைமுறையிலிருந்து முஸ்லிம் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தலாக்கை விடக் கொடுமையான, முரண்பாடான  ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற வழக்கம் இருக்கிறது. கோபத்திலோ, போதையிலோ தனது மனைவியை தலாக் செய்துவிட்ட முஸ்லிம் ஒருவர் தனது மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினாலும் அது உடனடி சாத்தியமில்லை. அதற்கு அந்த முஸ்லிம் பெண்  ‘நிக்காஹ் ஹலாலா’ சடங்கைக் கடந்தாக வேண்டும்.
அதாவது, விவாகரத்தான அந்த முஸ்லிம் பெண் வேறோர் ஆணைத் திருமணம் செய்து, இரண்டாவது கணவர் அந்தப் பெண்ணை தலாக் செய்த பிறகே, தனது முதல் கணவரை மறுமணம் புரிய முடியும். இந்த சடங்குகளுக்கு எதிராகவே ஷயாரா பானு வழக்கு தொடுத்தார்.

“முஸ்லிம்களிடையே நடைமுறையிலுள்ள தலாக்-இ-பித்அத், நிக்காஹ் ஹலாலா, பலதார மணம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் 1937-ஆம் வருடத்திய முஸ்லிம் தனிநபர் சட்டமான ஷரீஅத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று உத்தரவிட வேண்டும்” எனக் கோரிய ஷயாரா பானு, இந்திய அரசியலமைப்பின் 14, 15, 21, 25 ஆகிய ஷரத்துகள் வழங்கும் அடிப்படை உரிமைகளை ஷரீஅத் புறக்கணிப்பதாக வாதிட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அணுகுமுறை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஷாபானு வழக்கில் நடந்துகொண்டதற்கு நேர்மாறாகவும், முஸ்லிம் மதகுருமார்களின் பிடியிலிருந்து முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதாகவும் உள்ளது.

ஷா பானு

ஷா பானு

60 வயதான ஷா பானு, வசதி படைத்த வழக்குரைஞரான தனது கணவர் முகமது அகமத் தன்னைத் ‘தலாக்’ முறையில் விவாகரத்து செய்ததால், தனக்கு மாதம் ரூ.500 ஜீவனாம்சம் தரவேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தார்.

முஸ்லிம் தனிநபர் சட்டமான ஷரீஅத்படி, விவாகரத்து செய்துவிட்ட ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை என்பது கணவர் அகமது கானின் வாதம். இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் தொடங்கி கடைசியில் தலைமை நீதிபதி வை. சந்திரசூடன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வுக்கு தீர்ப்புக்கு வந்தது.

தலாக் முறைப்படி விவாகரத்து செய்யப்பட்ட ஷாபானு தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டி நீதிமன்றத்தில் முறையிட்டபோது, உச்ச நீதிமன்றம் 1986-இல் முற்போக்கான தீர்ப்பை வழங்கியது. நாட்டின் மதச்சார்பற்ற சட்டப்படி முஸ்லிம் பெண்ணுக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்குவங்கியைக் கைப்பற்றும் நோக்கில், இந்திய அரசியல் சாசனத்தை பலிகொடுத்து, ஷரீஅத் சட்டமே இந்திய சட்டத்தைவிட மேலானது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் புதிய சட்டம் 1986-இல் இயற்றப்பட்டது.

அந்த அறமற்ற செய்கையைத் திருத்தும் வகையில், உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் விளங்குகிறது. ஷா பானு வழக்குக்குப் பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முத்தலாக் முறை விவாகரத்துக்கு எதிரான ஷயாரா பானு வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்திருப்பதுதான் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான காரணம்.

ஷயாரா பானு வழக்கின் பின்னணியை அறிவது அவசியம். ஓராண்டுக்கு முன் ஷயாரா பானு அவரது கணவரால் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப்பட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு அவர் சென்றார்.

அதேசமயம், முத்தலாக் முறையை எதிர்த்து பல்வேறு முஸ்லிம் பெண்கள் அமைப்புகள், கல்வியாளர்கள் தாக்கல் செய்த மனுக்களும் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது.

வழக்கில் தனது வாதத்தை முன்வைத்த ஷயாரா பானு, உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகள் தனது வாதத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.

சரளா முத்கல் வழக்கில், 1872-ஆம் வருடத்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், 1936-ஆம் வருடத்திய பார்ஸி திருமணச் சட்டம், 1955-ஆம் வருடத்திய இந்து, பெளத்த, சீக்கிய திருமணச் சட்டங்களின்படி இருதார மணம் தண்டனைக்குரியது என்று தீர்ப்பளித்ததைக் குறிப்பிட்ட ஷயாரா பானு, முஸ்லிம் பெண்களுக்கு இவ்விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுவதை எடுத்துரைத்தார்.

1939-ஆம் வருடத்தில் முஸ்லிம் திருமணச் சட்டம் நீக்கப்பட்ட பின், தற்போதைய ஷரீஅத் சட்டத்தில் இருதார மணத்தின் பாதிப்பிலிருந்து முஸ்லிம் பெண்களைக் காக்க முடிவதில்லை என்றார் அவர். இவ்வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பை மத்திய அரசு தெளிவாக முன்வைத்துள்ளது.  ‘பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும், பெண்களின் கண்ணியத்தைக் காப்பதும் அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்பீடுகள். அவை மாற்ற இயலாதவை. மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் தனிப்பட்ட மதத்தின் பெயரால் சம உரிமைகளுக்கு பங்கம் விளைவிப்பதை ஏற்க முடியாது. பிற மதத்தைச் சார்ந்த பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளை குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்திருப்பதாலேயே ஒரு (முஸ்லிம்) பெண் இழக்க நேரிடுவது முறையல்ல’ என்று பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

“மதரீதியான தனிநபர் சட்டங்கள் நமது பன்முகத்தன்மையைப் பாதுகாக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால், அதுவே அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள பாலின சமத்துவத்துக்கு தடையாகலாமா? பாலின சமத்துவம் நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாகும்” என்றும் அரசின் பிரமாணப் பத்திரம் கூறுகிறது.

இவ்வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்கப்படாவிடில், நாட்டின் குடிமக்களில் பெரும்பகுதியினர் தங்கள் அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளை இழக்க நேரிடும். முந்தைய அரசுகள் போலல்லாது, தற்போதைய மத்திய அரசு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதன் அடிநாதம், இந்திய அரசியல் சாசனம் மட்டுமே பிரதானம் என்பதுதான். அதற்கு மேலானதாக வேறெதுவும் இருக்க முடியாது. எனவேதான் இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

 

குறிப்பு:

திரு. ஏ.சூர்யபிரகாஷ், தி பயனீர் நாளிஅத்ழில் ஆசிரியராக இருந்தவர். தற்போது, பிரசார்பாரதியின் தலைவராக உள்ளார்.

இக்கட்டுரை, தி நியூ இந்தியன் பத்திரிகையில் ஆங்கிலத்திலும், தினமணியில் தமிழிலும் வெளியானது.

நன்றி: தினமணி (03.11.2016)

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s