தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!

எம்.பக்தவத்சலம்

எம்.பக்தவத்சலம்

(1897 அக்டோபர் 9 – 1987ஜனவரி 31 )

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும்.

பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம்” என்று சொல்லியிருந்தார் அளகேசன்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1987 மார்ச் 13-ம் நாள் பக்தவத்சலத்துக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசும்போது, “மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது” என்றார் கேரளத்தின் முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன். பக்தவத்சலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடிய இரு குறிப்புகளாக இவற்றைச் சொல்லலாம்.

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு பக்தவத்சலம்தான் இலக்கணம். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர் என்றும் சொல்வார்கள். கேள்வி களுக்குச் சட்டமன்றத்தில் ராஜாஜி பதில் சொல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், பதில் சொல்லும்படி தன்னைத்தான் அவர் தூண்டுவார் என்று சொல்லி, ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கையைக் குறித்து பக்தவத்சலம் பெருமைப்பட்டுக்கொள்வார்.

மாற்றுக் கட்சியானாலும் நண்பர்தான்

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

ஐந்து லட்சம் கொடுத்தால் கல்லூரி

ஐந்து லட்சம் கொடுத்தால் கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று பக்தவத்சலம் காலத் தில் ஒரு திட்டம் இருந்தது. பெரியார் பார்த்தார், “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்று கொடுத்தார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

தன்னிடம் வரும் எந்தக் கோப்பிலும், அதற்கான முடிவைத் தானே எடுத்து, குறிப்பு அனுப்புவது பக்தவத்சலத்தின் வழக்கம். “ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை” என்று பக்தவத்சலம் ஒருமுறை என்னிடம் கூறினார். கக்கனும் அப்படித்தான். “கக்கனிடமிருந்து ஏதேனும் வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்; எங்களுக்குச் சங்கடம் ஏதும் இருக்காது” என்று முன்னாள் தலைமைச் செயலர் கார்த்திகேயன் சொல்வதுண்டு. ‘பரிசீலித்துப் பார்வைக்கு வைக்கவும்’ என்று மட்டுமே அமைச்சர்கள் குறித்து வைப்பதைத்தானே பின்னாட்களில் பார்க்கிறோம்?

பக்தி பழமைவாதியாக்கிவிடவில்லை

இறைப்பற்றாளர் பக்தவத்சலம். ஆனாலும், பக்தியை எங்கே நிறுத்திவைக்க வேண்டும் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்களில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் அவர். கோயில்களுக்கு நிலச்சொத்து ஒத்துவராது. குத்தகை, பண்ணைச் சாகுபடியெல்லாம் பார்த்தாகிவிட்டது. பலனில்லை. காணி நிலத்துக்கு பாரதியார் ஏங்கவில்லையா? ஆண்டவனுக்கே நிவேதனம் என்ப தெல்லாம் அகம்பாவம். எனவே, நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்களிடமே விற்று முதலீடு செய்து, வட்டிப் பணத்தில் கோயில் களைப் பராமரிக்கலாம் என்பது 1976-ல் அவரது திட்டம். அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு, மயிலாப்பூர் அகாடமி கூட்டத்தில் பதில் சொன்னார், “நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.”

துணியின் இழைகளைப் பிரிக்கலாமா?

இந்திய ஓர்மையில் தளராத நம்பிக்கையுள்ளவர் பக்தவத்சலம். இனவழி அரசியலைக் குறிப்பிட்டு “வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்” என்றார். “புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?” இப்படியெல்லாம் இந்திய ஒற்றுமையை விளக்குவார்.

நான் தனியாக நின்றேன்

காங்கிரஸ் வழியிலான அவரது மொழிக் கொள்கை, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவர் கையாண்ட விதம், இவை இரண்டையும் குறைகூறுவார்கள். 1965 முதலாகவே மாறிவந்த அரசியல் சூழலை பக்தவத்சலம் கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள். இந்த விமர் சனங்களுக்கு அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்?

1950 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் உறுதி செய்தது. அந்த ஏற்பாடு தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இருப்பவர்கள் இந்தியில் ஒரு அட்சரம்கூடக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்கக் கூடாது என்பதல்ல. 1937-ல் நடந்ததைப் பார்த்திருந்ததால் இங்கே இந்திக்கு மாணவரிடையே ஒரு ஒவ்வாமை இருப்பது தெரிந்தது. எனவே, விரும்பினால் அந்த மொழியைக் கற்கலாம் என்பதாக மட்டுமே இருந்தது. எதற்கும் வழுக்கலாகப் பதில் சொல்லி அறியாத பக்தவத்சலத்தின் பதில் இதுவேதான்.

தன் கட்சிக்காரர்களே குறை சொல்வதைப் பற்றிக் கேட்டால், “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? சூழ்நிலையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. நான் தனியாக நின்றேன்” என்பார். சரியா, தவறா என்பதெல்லாம் வரலாற்றுப் பொருளாக விவாதிக்கப்படும். ஆனால், இவர் கட்சியைக் கைவிட மறுத்தார், கட்சி இவரைக் கை விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

– தங்க.ஜெயராமன்

(ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்)

நன்றி: தி இந்து (09.10.2014)

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

வரலாற்றால் மறைக்கப்பட்ட நாயகர்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.

இரட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன்

(ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945)

இந்திய அளவிலான தலித் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே இங்கே இருந்தனர். இவ்வாறு செயல்பட்ட தலைவர்களுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).

இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்து வதில் இருந்த சிற்சில தடைகள் 1835-ம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, இங்கு சுயமாய்ப் பத்திரிகைகள் நடத்தும் முயற்சிகள் எழுந்தன. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பத்திரிகை களைத் தொடங்கினார்கள். பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை முன்னோடி இதழ்களாகும். இந்த நிலையில்தான் தாங்கள் எப்பெயரால் ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார். முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது. கிராமங்களில் நடைபெற்ற சமூகப் பிரச்சினைகள்கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப் பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இவ்விதழ் பங்காற்றியது.

அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் தலையீடு செய்துவந்தார். எடுத்துக்காட்டாக, ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு ஒடுக்கப்பட்ட குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள். இதில், இரட்டை மலை சீனிவாசனின் பங்கு முக்கியமானது. 1894-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இது தொடர் பாகத் தனிநூலாக எழுதக்கூடிய அளவுக்கு இந்தப் போராட்டங்கள் விரிந்திருந்தன. 1923-க்குப் பின்னர், சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பி னராகவும் மேலவை உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. சட்டப்பேரவையில் அவரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் தொடர்பாக அவர் சிறு வெளியீடுகளை வெளியிட்டுவந்தார். அவ்வாறு அவரால் வெளியிடப் பட்டு, இன்றைக்குக் கிடைக்கும் பிரசுரங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை.

முரண்களை ஒதுக்கும் வரலாறு

வரலாற்றை எழுதும்போது சம்பந்தப்பட்ட காலத்தின் வெவ்வேறு குரல்கள், முரண்கள் போன்றவற்றை மௌனமாக ஆக்கிவிட்டு ஒற்றை வரலாற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளே பெரும்பாலும் நடக் கின்றன. உடனடி அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு எழுதப்படுவதால் வரும் தீமைகள் இவை. தலித் அரசியல் வரலாற்றியலிலும் இது போன்ற தருணங்கள் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு, வரலாறு பற்றி வெவ்வேறு கருத்து நிலை கொண்ட குழுவினர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இரட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தேடும்போது இந்த அம்சம் பளிச்சிடுகிறது.

மாறுபட்ட அணுகுமுறை

இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.

பூனா ஒப்பந்தமும் காந்தியுடனான உறவும்

தாழ்த்தப்பட்டோர் தரப்பிலிருந்து இந்திய தேசியவாத அரசியல் சந்தித்த முக்கிய அழுத்தம் என்றால், இரட்டை வாக்குரிமையும் அதைத் தொடர்ந்த பூனா ஒப்பந்தமும்தான். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பாக அம்பேத்கரோடு சேர்ந்து சீனிவாசனும் பங்கேற்றார். இது பற்றிய சிறு பிரசுரம் ஒன்றையும் நாடு திரும்பியதும் வெளியிட்டார்.

பிறகு, 1932 செப்டம்பர் 24-ல் காந்தியின் உண்ணா விரதத்தால் இரட்டை வாக்குரிமை கோரிக்கை கைவிடப் பட்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தில் சீனிவாசனும் கையெழுத்திட்டார். காந்தியோடு இணக்கம் கொண்டிருந்த சுவாமி சகஜானந்தர் போன்றோர்கூட இந்தக் கோரிக்கை தொடர்பாக அம்பேத்கரை ஆதரித்த உணர்வுபூர்வமான தருணம் அது. அந்தத் தருணத்தில் மற்றொரு தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. ராஜா, காந்தி சார்பாக நின்றபோது சீனிவாசன் அம்பேத்கர் ஆதரவாக இருந்தார். பின்னாளில் காந்தியோடும் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக சீனிவாசன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே 1906 முதலே காந்தியோடு தொடர்பு கொண்டிருந்த அவர், 1930-களில் ஹரிஜன சேவா சங்கத்தை காந்தி தொடங்கிச் செயல்பட்டுவந்தபோது, அவரோடு தலித் மேம்பாடு சார்ந்த உரையாடலை மேற்கொண்டிருந்தார். தன்னுடைய அரசியல் கருத்து நிலை பிறழாமலேயே அரசியல் இணக்கத்தை சீனிவாசன் பேணிய பண்பை இந்த உரையாடலில் அறிய முடிகிறது. காந்தியிடமும் இதற்கான இடம் இருந்தது. காந்தியோடு சீனிவாசன் கொண்டிருந்த இந்தத் தொடர்பு, இன்னும் அதிகம் ஆராயப்படாத ஒன்றாக இருக்கிறது. இதே போல, ஒடுக்கப்பட்டோருக்காக 1930-களின் இறுதியில் சீனிவாசன் உருவாக்க விரும்பிய அமைப்புபற்றிய தகவல்கள் மங்கலாகவே கிடைக்கின்றன. இவ்வாறு பல்வேறு அரசியல் நிலைப்பாட்டினரோடு ஒடுக்கப்பட்டோரின் மேம்பாடு சார்ந்து உரையாடக் கூடிய வெளி அவருக்கு இருந்தது.

இவ்வளவு இருந்தும், மொத்தமாக மதிப்பிட இரட்டைமலை சீனிவாசன் பற்றிய முழு வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை. 1938-ல் அவரே எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ என்ற சிறு வரலாற்றுக் குறிப்பு நூல், சிறு பிரசுரங்கள் தவிர, வேறெதுவும் கிடைக்கவில்லை. அவர் நடத்திய பத்திரிகையின் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை. அவரது இருபதாண்டு கால தென்னாப்பிரிக்க வாழ்க்கை பற்றிய பதிவுகள் கிடைக்கவில்லை. இப்படியாக, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுமை கொள்ளாமலே இருக்கிறது. இவ்வாறான ஆதாரங்களைத் திரட்டிப் பார்த்தால் தான் அவர் மேற்கொண்ட பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளுக்கு இடையேயான இணக்கத்தையும் தொடர்ச்சியையும் முரண்களையும் கண்டறிய முடியும். அவ்வாறு அறியும்போதுதான் ஒடுக்கப்பட்டோர் அரசியலின் இடைவெளிகளை நிரப்ப முடியும்.

– ஸ்டாலின் ராஜாங்கம்,

சமூக விமர்சகர்.

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

நன்றி: தி இந்து (24.09.2014)

காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி

காமராஜர்

மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975

.

தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது!

அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்!

அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் முதுகலைப் படிப்பு முடிக்கும்வரை கல்விக் கட்டணம் என்று எதுவும் செலுத்தியதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கல்வி விதி-92ன் படி கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தேன்.

எல்லோரும் கொண்டுவருவோம்!

இப்போது சத்துணவுத் திட்டம் இருப்பதுபோல அப்போது பள்ளிகளில் ஒரு வகை மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. மாணவர்களையும் சமுதாயத்தையும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கச் செய்த முறை அபாரமானது. தொடக்கப் பள்ளியில் வகுப்புக்கு ஒரு உண்டியல் வைத்து அன்றாடம் மாணவர்கள் அதில் சில்லறைக் காசு சேர்ப்போம். வகுப்புகளுக்குள் இதில் போட்டி உண்டு. பள்ளியில் கூட்டுவழிபாடு முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டிலிருந்து அன்றைக்குக் கொண்டுவந்த காய்கனி, தேங்காய் போன்றவற்றை மிகவும் சிலாகித்துச் சொல்லி ஒரு ஆசிரியர் ஏலம் விடுவார். இங்கிலாந்தில் இப்படி ஒரு நடைமுறை (ப்ரிங்க் அண்ட் பை) இருந்ததாக பின்நாட்களில் தெரிந்துகொண்டேன். தை மாத விடுமுறை நாட்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, நெல்லாகக்கூட மாணவர்கள் நிதி வசூலித்துவருவோம். அட்டைகளின் கட்டங்களில் கையொப்பமிடுபவர்களிடம் கட்டத்துக்கு நான்கணா வீதத்தில் பெற்றுவருவோம்.

எங்கள் அப்பச்சி

1968-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். கிறிஸ்துமஸ் விழாக் காலம். காமராஜர், நாகர்கோவில் தொகுதி நாடாளு மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவருக்காகப் பிரச்சாரம் செய்ய நானும் சில மாணவர்களுடன் திங்கள்சந்தை என்ற ஊரில் தங்கியிருந்தேன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் மத்தையசுக்கு ஆதரவாக காரைக்குடி சா. கணேசன் பேசும்போது காமராஜரைக் குறிப்பிட்டு, “ உள்ளூர் சந்தையில் விலைபோகவில்லை, வெளியூருக்கு வந்திருக்கிறது” என்பார். அதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு நடந்த விருதுநகர் தேர்தலில் காமராஜர் வெற்றிபெறவில்லை என்பதை அவர் அப்படிக் குறிப்பிட்டார். ஆனால், காமராஜருக்கு நாகர் கோவில் வெளியூரல்ல என்பதை நாங்கள் பிரச் சாரத்தின்போது கண்டோம். சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் ஊருக்கு வெளியே வந்து எங்களை வரவேற்று, “எங்க அப்பச்சிக்கா நீங்க ஓட்டு கேக்க வரணும்?”, “எங்க தாத்தாவுக்கு நாங்க ஓட்டு போட மாட்டோமா?” என்றெல்லாம் கேட்பார்கள். மரத்தடியில் விசுப்பலகையில் எங்களை உட்காரவைத்துப் பதநீர் கொடுத்து உபசரிப்பார்களே தவிர, வாக்கு கேட்க விட மாட்டார்கள். இவ்வளவு செல்வாக்குடன் இருந்தாலும், தனக்குப் பிரச்சாரம் செய்ய வந்துகொண்டேயிருந்த பெருங்கூட்டத்தில் யாரெல்லாம் பேசினால் தனக்குப் பாதகமாகும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

தலையணையின் கீழ் ரூ. 160

தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவரால் பெயரிட்டு அழைக்க முடியும். நல்லதானாலும், கெட்ட தானாலும் அவர்களுடன் பங்கேற்க அவர் தயங்கு வதில்லை. சுதந்திரம் அடைந்தால்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று இருந்த தொண்டர்களுள் எனது மாமனாரும் ஒருவர். அவரது திருமணத்தின்போது காமராஜருக்குக் கடுமையான பல்வலி. அதைப் பொருட்படுத்தாமல், முகத்தோடு தலையையும் ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு திருவல்லிக்கேணியில் நடந்த திருமணத்துக்கு வந்து, இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், சிரமப்படுகிறவர்களுக்கு அவர்கள் கேட்குமுன் கொடுப்பது அவர் வழக்கம். இத்தனைக்கும் தன் கையில் ஒரு சல்லிக் காசுகூட அவர் வைத்துக்கொள்வதில்லை. ‘அவர் இறந்தபோது அவருடைய தலையணைக்குக் கீழே 160 ரூபாய் ஒரு காகித உறையில் இருந்தது’ என்று அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அது ஒன்றும் கட்டுக்கதையல்ல. காமராஜரைப் பற்றிச் சொல்லப்படும் இதுபோன்ற விஷயங்கள் கட்டுக்கதை போன்று நமக்குத் தோன்றுவதற்குக் காரணமே, தற்போதைய அரசியல்வாதிகளின் ‘எளிமையான’ வாழ்க்கைமுறைதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

எதிர்கொள்வது, வெற்றிகாண்பது!

பிரச்சினைகளுடன் சமாதானம் செய்துகொள்வது அவருக்குப் பழக்கமில்லை. அரசியலானாலும் நிர்வாக மானாலும் உள்கட்சிப் பூசலானாலும் எதிர்கொண்டு சந்திப்பார். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்க்கும்வரை அவர் தூங்குவதில்லை. இப்படி விடாப்பிடியாக இருப்பவர்கள் அரசியலில் வெற்றி காண்பது அரிது. ஆனால், காமராஜர் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார். அன்றைய மத்திய உள்துறை அமைச் சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி தலைமையில், காமராஜரைப் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், “காமராஜரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பிரச்சினைகளை எதிர்கொள்வது, வெற்றிகாண்பது என்று கூறிவிடலாம்” என்றார். காமராஜரின் தன்னம்பிக்கையும் துணிவும் நிகரற்றவை.

சுட்டது, விட்டோம் என்று கையை உதறிவிடுவது அவர் வழக்கமல்ல. தீர்வே இல்லை என்றிருந்த தமிழ்நாட்டு நெசவாளர் பிரச்சினைக்கு, நூல் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்செய்து, தீர்வுக்கு முயற்சி செய்தார். இதற்காக அப்போது ஐந்தரை லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தனவாம். நெசவாளர்கள் பட்டினி கிடந்தபோது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உண வளிப்பதில் பிடிவாதமாகச் செயல்பட்டார்.

‘தி இந்து’ பாராட்டிய காமராஜரின் ஆங்கிலம்

காலணா பத்திரிகையான ‘ஜெயபாரதம்’முதல் ‘தினச் செய்தி’, ‘காங்கிரஸ் செய்தி’, பின்னர் ‘நவசக்தி’வரை இத்தனை பத்திரிகைகளும் அவர் பராமரிப்பில் நடை பெற்றவையே. அவரைப் படிக்காத மேதை என்று சொல்வது உயர்வுநவிற்சி கருதிச் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும். அவர் நிறையப் படித்தார். அன்றாடம் எல்லா தினசரிகளையும் படித்துவிடுவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமாகவே சரளமாகப் பேசக் கூடியவர். 1969-ல் ஒருமுறை அவரது வீட்டு மாடி அறையில் அவரைச் சந்தித்தேன். ஒற்றைக் கட்டில்; அருகே சில கதர் வேட்டிகளும் சட்டைகளும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராக்கைகளில், அறையின் ஒரு சுவர்ப் பரப்பு முழுவதும் தமிழ், ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தன. நாடாளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை ஒருமுறை ‘தி இந்து’ நாளிதழ் ‘காமராஜர் மாசில்லாத ஆங்கிலத்தில் உரையாற்றினார்’ என்று விவரித்திருந்தது.

எனக்குத் தெரியும், உட்கார்!

நல்ல உயரம். களையான முகத்தில் தீட்சண்யமான, புடைபரந்த கண்களோடு கம்பீரமாக இருப்பார். தேனாம் பேட்டை மைதானக் கூட்டமொன்றில், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவராக கக்கனை காமராஜர் அறிவித்தார். கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி ஒரு சலசலப்பு. “எனக்குத் தெரியும், உட்கார்” என்று அவர்களை அமர்த்தினார். பார்ப்பவர்கள் அவரது கம்பீரத்துக்கு அடிபணியாமல் இருக்க முடியாது. மேடைப் பேச்சிலும் நெஞ்சைத் தொடும் உண்மையின் தொனியும், அந்த உண்மை மட்டுமே கோத்துத்தரும் சொற்களின் அழகும் அவரது பேச்சைக் கேட்டவர்களின் அனுபவம்.

காமராஜர், இரவில் வெகுநேரம் கழித்தே தூங்கு வார். மாம்பலம் டாக்டர் சவுரிராஜன், தலைச்சேரி தாமோதரன் இவர்களோடு காமராஜர் எலியட்ஸ் கடற்கரையில் இரவில் வெகு நேரம் அரசியல் அலசிய பிறகு வீட்டுக்குச் செல்வார். ஒரு நாளைக்கு இரு வேளை நீராடி உடை மாற்றுவது அவரது வழக்கம். அசைவ உணவுகளில் பிரியம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்பர்கள் கோயில் பிரசாதம் கொடுத்தால் அணிந்துகொள்வது தவிர அவராகவே சாமி கும்பிட்டுப் பார்த்ததில்லை என்பார்கள். 1972-ல் விலைவாசி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தமிழகம் முழுவதும் காமராஜர் தீவிரமாக நடத்திக்காட்டினார். இறுதிவரை இந்திரா காந்தியுடன் அவர் சமரசம் செய்துகொள்ளவேயில்லை. அவ்வளவு தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டிருந்த காமராஜர் அதற்கு எப்படிச் சம்மதிப்பார்?

– தங்க. ஜெயராமன்

நன்றி: தி இந்து (04.10.2014)

.