நாட்டுப்பற்றும் மாட்டுக்கறியும்

-ஆர்.எஸ்.நாராயணன்

adimadu

இறை உணர்வுக்கும் இறைச்சி உணவுக்கும் தொடர்பு இல்லை. இறைச்சி உணவு அவரவர் விருப்பம், உடல் பாதுகாப்பு தொடர்பானது. எனினும், இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு மதத் தடை உள்ளது. மதம் மட்டும் அல்ல. சட்டமும் உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்து “பசு, கன்று, பால் வழங்கும் மிருகங்கள், உழவு மாடுகள் ஆகியவற்றைக் கொல்லக் கூடாது’ என்று தெளிவாகக் கூறுகிறது.

டாக்டர் அம்பேத்கர்தான் இப்படி ஒரு சட்டத்தைப் போட்டுள்ளார்! இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றிய காலகட்டத்தில் விவசாயத்தில் இயந்திரங்கள் அறிமுகமாகவில்லை. விவசாயப் பொருளாதாரம் உழவு மாடுகளை நம்பியிருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்து மாநில சட்டதிட்ட வரம்புக்குள் வருவதால், மாட்டுக் கொலைக்கும் மைய அரசுக்கும் தொடர்பு இல்லை. இடதுசாரிகள் ஆண்ட கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டைக் கொல்வது அனுமதிக்கப்படுகிறது. இடதுசாரி மாநிலங்களில்தான் மாட்டிறைச்சியைப் பக்குவப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் சக்கை போடு போடுகின்றன!

ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் மாட்டுக் கொலைகளைக் கண்டு கொள்வதில்லை. தமிழ்நாட்டில் பசுவதைச் சட்டம் உள்ளதால், மாடுகள் கேரளத்திற்குக் கடத்திச் செல்லும்போது, காவலர் கடமை மாமுல் வசூல் செய்வதுவே.

பசுக்களை தெய்வங்களாகப் போற்றும் மரபு இந்தியப் பண்பாடுகளில் ஓர் அம்சம். பசுவைக் கொல்வது பாவம் என்பது சரி. ஆனால், மாட்டிறைச்சி உண்டார் என்ற காரணத்திற்காக தாத்ரி, மயின்பூரி, உதம்பூர் ஆகிய ஊர்களில் மனிதர்களைக் கொல்வது அதைவிடப் பெரும் பாவம். இதனால் ஆமிர்கான் சகிப்புத் தன்மையைக் கேள்வி கேட்டுப் பின்னர் அடங்கிப் போனார்.

மாட்டுக்கறி உண்பதை எதிர்த்துக் கடுமையான சட்டம் போடுவது ஜனநாயகம் அல்ல. சாதம், ரொட்டி, பருப்பு, காய்கறி, பழம், பால் என்பது போல் இறைச்சியும் ஓர் உணவு.

இறைச்சி உணவைத் தவிர்ப்பது வேறு. மதம் வேறு. இறைச்சிக்காகக் காட்டில் திரியும் விலங்குகளைக் கொல்வது குற்றம். நாட்டுக்குள் வளர்ப்பு மிருகங்களாயுள்ள ஆடு, மாடு, கோழிகளைக் கொல்வது குற்றமாகாது.

மத அடிப்படையில் ஆட்டைக் கொன்றால் பாவம் இல்லை. கோழியைக் கொன்றால் பாவம் இல்லை. மாட்டைக் கொன்றால் மட்டுமே பாவம் ஒட்டும் என்பதில் பகுத்தறிவு இல்லை. எனினும், இந்தப் பிரச்னையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய வேண்டும்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய ஆரியர்களின் வாழ்வு ஆநிரைப் பொருளாதாரத்தை நம்பியிருந்தது. அன்று விவசாயம் மேம்படவில்லை. போதுமான அளவில் அரிசி, கோதுமை இல்லாத காரணத்தால் மாட்டிறைச்சி உண்ணப்பட்டது.

பின்னர், இறைச்சி உணவைக் கைவிட்டு சைவ உணவைப் போற்றும் அளவில் விவசாயம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் மெளரியப் பேரரசரான அசோகச் சக்கரவர்த்தி அகண்ட பாரதத்தை அரசாண்டார். நாட்டில் உணவு உற்பத்தி உயர, உழவு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அசோகர் புத்தமதம் மாறினார்.

“பசு, காளை மற்றும் பால் தரும் வீட்டு மிருகங்களைக் கொல்வோர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தண்டனைக்குள்ளாவர்..’ என்று எழுதி வைத்த அசோகரின் சாசனம், அப்படியே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்தாக ஏற்கப்பட்டுள்ளது.

அசோக சக்கரவர்த்தி ஆண்ட அகண்ட இந்தியாவின் காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 26.1.1948 வரையில், இந்திய விவசாயத்திற்கு உழவு மாடுகளே ஜீவாதாரமாயிருந்தன.

1960-களில் விவசாயத்தில் இயந்திரங்கள் அறிமுகமாயின. இன்று அறுவடைக்கும் இயந்திரம் வந்துவிட்டது. டிராக்டரும் டில்லரும் வந்த பிறகு மனிதனுக்கும் வேலை இல்லை; உழவு மாட்டுக்கும் வேலை இல்லை.

எனவே, விவசாய முக்கியத்துவம் கருதி மாடுகளைக் கொல்லக் கூடாது என்ற அசோகர் காலத்துச் சட்டம் இன்று பொருந்துமா? நல்ல பால் மாடுகளுக்கே போதிய தீவனம் கிட்டுவது இல்லை. மேய்ச்சல் நிலமும் இல்லை.

பசு வளர்த்துப் பால் தரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் ஒரு விவசாயியின் மனநிலையில் சிந்திப்பது நன்று. பால் விற்பனையில் ஏற்படும் நஷ்டம் மலடாகிவிட்ட பசுக்களை அடிமாடாக விற்றுப் பெறும் பணம் ஈடுசெய்து வருகிறது. அனைத்துலகச் சந்தையில் மாட்டிறைச்சிக்கு நல்ல விலை உள்ளது. மலட்டுப் பசுக்கள் ரூ.10,000 முதல் 12,000 வரை விலை போகும்.

நாளுக்கு நாள் இந்தியாவில் அடி மாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதின் காரணம் கறவை மாடுகள் சினைப் பிடிக்காமல் மலடாவது அதிகமாகி விட்டது. அன்று நம்மிடமிருந்த நாட்டுப் பசுக்கள் 7, 8, ஈத்துக்கள் போடும். இன்றுள்ள கலப்பினப் பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு ஈத்தோடு சரி, மலடாகிவிட்ட பசுக்களுக்குத் தீனி போடும் சக்தி பால் விவசாயிகளிடம் இல்லை. ஆகையால் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.

முன்பெல்லாம் பசுக்களைவிட காளைகளுக்கு மவுசு அதிகம். நல்ல விலை போகும் என்று வளர்ப்பார்கள். ஏனென்றால், உழவு மாடுகளுக்குத் தேவை இருந்தது.

இன்று கறவை மாடு கன்று ஈன்றதும் அது கிடாரி என்றால் வளர்ப்பார்கள். அதுவே காளை என்றால் ஈன்ற மாடு கறக்கும் வரை – சுமார் 7, 8 மாதங்களுக்கு மாடு சுரப்பு இறக்குவதற்காகக் காப்பாற்றுவார்கள். கறவை நின்றதும் வந்த விலைக்கு காளைக் கன்றை விற்று விடுவார்கள். அப்படி விற்கப்படும் இளம் கன்றுகள் கசாப்புக்குத்தான்.

ஜல்லிக்கட்டுக்காகப் பழக்கப்படும் காளைக் கன்றுகள் காங்கேய இனமென்றால் காப்பாற்றப்படலாம். கலப்பினக் காளைகள் வேலைக்கு ஆகாது. பாயவும் தெரியாது. பரம சாதுக்களாயிருக்கும்.

பால் விவசாயிகளும் மனிதர்களே. மேழிச் செல்வம் செழிக்க மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள். கறவை நின்ற மாடுகளையும் காளைக் கன்றுகளையும் மனதாற விற்பது இல்லை. பாவ உணர்வு இருந்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலை.

மேய்ச்சல் இல்லாவிட்டால், வைக்கோலைப் போட்டு வளர்க்கலாம் என்றால் வைக்கோல் மலிவாகக் கிடைப்பது இல்லை. காவிரி டெல்டா பகுதிகளில் மட்டுமே வைக்கோல் மலிவு. மானாவாரி வறட்சி மாவட்டங்களில் காசு கொடுத்தாலும் வைக்கோல் கிடைக்காது.

சோளத் தட்டை பன்மடங்கு விலை அதிகம். அப்படியே வைக்கோல் கிட்டினாலும் ஒற்றைக் கையால் தூக்கும் அளவில் உள்ள ஒரு குட்டிக் கட்டு வைக்கோல் ரூ.80க்கு விற்கப்படுகிறது! இப்படி விலை கொடுத்து வாங்கிப் பால் மாட்டைக் காப்பாற்றுவதே பெரும்பாடாயுள்ளபோது மலட்டு மாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? தீனியே வழங்க முடியாமல் பட்டினி போட்டு தினமும் சித்திரவதை செய்வதைவிட, அடிமாடாக விற்பது பாவம் குறைவுதான்.

இந்திய ஏற்றுமதியில் மாட்டிறைச்சி கணிசமான பங்கு வகிக்கிறது. சுமார் 5,000 கோடி டாலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணியும் கிட்டுகிறது. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான சூட்டோடு கார்கில், டெஸ்கோ போன்ற பன்னாட்டு பகாசூர உணவு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட அடிமாடுகளை வெட்டி நல்லமுறையில் பக்குவம் செய்து அலங்காரமாகப் பொட்டலம் கட்டி அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொட்டலங்கள் உள்ளூரிலும் கிடைக்கும்.

அனைத்துலக மாட்டுக்கறிச் சந்தையில் பிரேசிலும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன. ஒரு காலத்தில் நிறைய சதைப் பற்றும், எடையும் கொண்ட ஓங்கோல், நெல்லூர் வெள்ளை மாடுகள் இந்தியாவில் இருந்தன. இவை அனைத்தும் இப்போது பிரேசிலில் உள்ளன.

உலக முன்னணி உணவு பகாசூரர்கள் இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு இறக்குமதி செய்து அங்குள்ள பசுக்களுக்கு ஓங்கோல் விந்து செலுத்துவதுடன், கலப்பு இல்லாத தூய ஓங்கோல் ரகமும் வளர்க்கப்படுகிறது. ஆகவே, பிரேசில் மாட்டுக்கறி நல்ல விலை பெறுகிறது.

இந்திய மாட்டுக்கறிச் சந்தையில் நாட்டு ரக அடிமாடுகளுக்கு கலப்பின அடிமாடுகளைவிட ரூ.1,000 வரை மாட்டுத் தரகர்கள் சேர்த்துத் தருவதுண்டு. நம்மிடமுள்ள மாடுகள் பெரும்பாலும் ஜெர்சி, பிரீசியன், ஸ்விஸ் ரெட் கலப்பினம்.

எனினும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாட்டுக்கறி கணிசமாக உயர்வதன் காரணம், பெரும்பாலான இந்தியர்கள் மாட்டுக்கறி உண்பது இல்லை. பசுவதைச் சட்டத்தை விட மதத்தடை காரணம். பெரும்பாலான இந்துக்கள் மாட்டுக்கறி உண்பது இல்லை. இஸ்லாமியர்களும் ஆடு, கோழியைத்தான் அதிகம் விரும்புவார்கள். கிருத்துவர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் மாட்டுக்கறிக்கு மதத் தடை இல்லை.

தில்லித் தலைநகரில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி எரிகிறது. விஷயம் நாட்டுப்பற்றைச் சார்ந்தது. தேசத் துரோகி அஃப்சல் குருவுக்கு ஏன் தூக்கு தண்டனை என்று இடதுசாரிக் கூட்டம் கேள்வி கேட்கிறது. மாணவர் தலைவர் கன்னைய குமார் கோஷ்டி கைதாகியுள்ளது. தில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. இவர் கைதாகுமுன்பு பா.ஜ.க.வை வெறுப்பேற்ற பன்னாட்டு நிறுவனமான கார்கில் தயாரித்த மாட்டுக்கறிப் பொட்டலத்தை வேண்டுமென்றே உண்டதாக போலீஸ் தரப்பில் ஒரு தகவல் உண்டு.

நாட்டுப்பற்றுக்கும் மாட்டுக்கறிக்கும் என்ன தொடர்பு? கன்னையா என்றால் கிருஷ்ண பகவான். பசுவின் காவலர் அப்படி செய்யலாமா? மாட்டுக்கறி உண்பது உடல் நலத்தைப் பொறுத்த விஷயம். மாட்டுக்கறி ஏற்றுமதி பொருளாதார விஷயம்.

விவசாயத்தில் இயந்திரங்களைப் புகுத்தி நமது மேழிச் செல்வங்களைக் கோழைப்படுத்தியது யார் குற்றம்? குறைந்தபட்சமாக நம்மிடம் காங்கேயம் காளைகள் எஞ்சியுள்ளன. ஜல்லிக்கட்டுக்குச் சட்ட ரீதியான அனுமதி வழங்கி காங்கேயக் காளைகளைக் கறியாக்கி விற்காமல் வளர்ப்பதும் நாட்டுப்பற்றுதான்.

 

குறிப்பு:

திரு. ஆர்.எஸ்.நாராயணன், வேளாண்மை எழுத்தாளர்.

நன்றி: தினமணி (27.02.2016)