ஆண்டவனை தமிழால் ஆண்டவள்

ஆண்டாள் நாச்சியார்  
திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்
(ஆடி -17;  ஆக. 2)
ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ‘விஷ்ணு சித்தர்’ என்று பெயரிட்டனர். இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இவர் பெரியாழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படுகிறார்.  பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயது குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் அவதரித்தாள். அவளுக்கு, ‘கோதை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணு சித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள் காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள். இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார். ஒருநாள், கூந்தல் முடி ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார், அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார்.

மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார். “கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல, மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’’ என்று குரல் எழுந்தது. அன்று முதல் கோதைக்கு, ‘ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது. பின்னர், பெருமாளுடன் அவள் கலந்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர்,”திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்…’ என, அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக பாடியுள்ளார்.

உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின் போது, பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், ஆண்டாள் பாடிய திருப்பாவையும் பாடப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர், உலகெங்கும் பெருமை பெற்றதாக உள்ளது.

இந்தக் கோவிலில் நடை திறக்கும் போது, அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளைப் பார்ப்பதில்லை. அவளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் கண்ணாடி பார்த்து, தன்னை அழகுபடுத்திக் கொள்வாளாம். அதனடிப்படையில், இவ்வாறு செய்வது ஐதீகம். அந்தக் கண்ணாடியை, ‘தட்டொளி’ என்பர். பின்பு சன்னதியில் தீபம் ஏற்றப்படும். இந்தச் சடங்கைச் செய்யும்போது திரை போடப்பட்டிருக்கும். திரையை விலக்கியதும், பக்தர்கள் கண்ணில் முதலில் ஆண்டாள் படுவாள். பின்பே அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பர்.

ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பக்தியால், இறைவனையே துணைவனாக அடைந்த பெருமைக்குரியவள் தமிழுக்கு இறவாப்புகழுடைய திருப்பாவையை நல்கியவள் ஆண்டாள்.

காண்க:

ஆண்டாள்- ஓர் அறிமுகம் (தர்மா)


.

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்

 
பெரியாழ்வார்
திருநட்சத்திரம்: ஆனி – 25 – சுவாதி
(ஜூலை 10)
 
திருமால் அடியார்களான ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கனை பெரிய பெருமாள் என்றும், திருவரங்கத்தை பெரிய கோயில் என்றும் (காஞ்சி வரதர் கோயிலுக்கும் பெரிய கோயில் என்ற பெயருண்டு), ஜடாயு மஹாராஜாவுக்கு பெரிய உடையார் என்றும், மணவாள மாமுனிகளுக்கு பெரிய ஜீயர் என்றும் புகழுண்டு. அதேபோல் விஷ்ணு சித்தரான பட்டர்பிரானுக்கும் ‘பெரியாழ்வார்’ என்ற பெருமை உண்டு.
சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த மூலவரான நரஸிம்மம் பெரிய பெரிய பெருமாள் என்றும், அதே சுவாதியில் அவதரித்த கருடன் பெரிய திருவடி என்றும் போற்றப்படுகிறார்கள். அதே ஆனி மாதம், சுவாதியில் அவதரித்த பட்டர்பிரான் கருடனின் அம்சமாக வணங்கப்படுவதோடு, “பெரியாழ்வார்’ என்றும் வைணவத்தால் புகழ்ந்துரைக்கப்படுகிறார்.
பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனை மணந்து, ஆழ்வாருக்கு ‘திருமாலின் மாமனார்” என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தாள்.
ஆண்டாளை திருமாலின் திருக்கதைகளை சொல்லியே வளர்த்தார் பெரியாழ்வார். அதனால் ஆண்டாளுக்கு, ஆயவனான அரங்கன் மீது ஆசை ஏற்பட்டு, அது காதலாக மாறி, அவனைக் கரம்பிடிக்கும் பாக்கியமும் பெற்றாள். ஆண்டாள், விஷ்ணு சித்தரை ஒரு தகப்பனாக மட்டும் பார்க்காமல் தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டதால் ஆண்டாளுக்கு குருவருளோடு திருவருளும் கிட்டியது.
நாராயணனின் பெருமையை கூடல் மாநகர மன்னன் அமைத்திருந்த வித்வத் சபையில் நிரூபித்தார் பெரியாழ்வார். பாண்டியன் அமைத்த பொற்கிழி ஆழ்வாரின் திருவடியில் விழுந்தது. மன்னனுக்கோ மிக்க மகிழ்ச்சி. தன் சந்தேகம் தீர்த்த அந்தப் பெரியவரை “பட்டர்பிரான்’ என்று கௌரவப்படுத்தி ராஜாங்க மரியாதைகளுடன் அவரை யானை மீது அமரச் செய்து நகர் முழுக்க ஊர்வலம் வரச் செய்தான். அப்போது மேலும் ஓர் பேரதிசயம் நடந்தது. வானவெளியில் திருமால் கருடன் மீது ஏறி வந்து ஆழ்வாருக்குக் காட்சி தந்தான்.
“பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக் கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதமாகிவிடுமே” என்று தன் பொருட்டு கருடாரூடனாக காட்சியளித்த திருமாலின் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வாரின் மனத்தில் ஒரு பயம் ஏற்பட்டது. பார் புகழ் பரந்தாமனின் இந்தக் காட்சியைக் காணும் உலகத்தோரால் கண்திருஷ்டி படுமே என்று கவலைப்பட்டார். உடனே வாழ்த்து சொல்லி ‘பல்லாண்டு’ பாட ஆரம்பித்துவிட்டார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவன் திருமார்பினில் திகழும் திருமகளுக்கும், திருவாழியாழ்வானுக்கும், சங்காழ்வானுக்கும் பல்லாண்டு பாடினார்.
பெருமானுக்குப் பல்லாண்டு பாட தனக்கு எத்தகைய தகுதி உள்ளது என்பதை அவர் யோசிக்கவில்லை. பகவான் மீதிருந்த பரிவு ஆழ்வாரை பாட வைத்தது. இதனால்தான் பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள் அவரை “பொங்கும் பரிவாலே பட்டர் பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர்” என்று குறிப்பிடுகிறார்.
விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைவிட பெரியாழ்வாருக்கு கிருஷ்ணாவதாரத்தின் மீது ஈடுபாடு அதிகம். கிருஷ்ணனின் பால்ய லீலைகளைப் பாடியவர், தன்னை யசோதையாக பாவனை செய்து கொண்டு, அவனுக்கு நீராட்டல், பூச்சூட்டல், காப்பிடல் என்று திருவாய்மொழிகளை அருளிச் செய்துள்ளார்.

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும் பெரியாழ்வார் திருமொழியும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் மின்னும் ரத்தினங்கள். இனிய வைணவத் தமிழ்ப் பாக்களால் இறைவனையே மயக்கிய பெரியாழ்வாரை நாமும்

இந்த  ஆனி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் பதம் பணிவோம்!  பரமனின் அருள் பெறுவோம்!

 
-மாடபூசி ஆழ்வான்
நன்றி: தினமணி (வெள்ளிமணி)
 
காண்க: 
பெரியாழ்வார் (தெய்வத்தமிழ்) 
பெரியாழ்வார் (விக்கி)
PERIYALVAR

ஆண்டாள்
பெரியாழ்வார் (தினமலர்)

நான்காயிரம்  அமுதத் திரட்டு

பெரியாழ்வார் (பாலஹனுமான்)  
பெரியாழ்வார் வாழ்வில் (திரிசக்தி)
பெரியாழ்வார் திருமொழி (தமிழ்க் களஞ்சியம்)
திருப்பல்லாண்டு (தமிழ்க் களஞ்சியம்)
4000 திவ்யப் பிரபந்தங்கள்
அப்போதைக்கு இப்போதே (வீடியோ)

.

வேதம் தமிழ் செய்த மாறன்

நம்மாழ்வார்

திருநட்சத்திரம்:
வைகாசி – 4 – விசாகம்
(மே 18)

திருமகளின் தலைவனாயும், கருணைக் கடலானவனுமான ஸ்ரீமன் நாராயணன் உலகினோர் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் திரு அவதாரம் செய்விக்கிறான். இத்தகைய பெரியோர்கள்தான் வைணவ சமயத்தின் அஸ்திவாரங்கள், ஆணிவேர்கள். எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஊறி ஆழ்ந்தவர்கள் என்பதால் இவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர். 
இத்தகைய பெருமைமிக்க ஆழ்வார்கள் தமிழ் நாட்டின் புண்ணிய நதி தீரங்களில் அவதரித்திருக்கிறார்கள். அவ்வகையில் வற்றாத வளம் கொழிக்கும் பாண்டிய நாட்டில் தாமிரபரணி நதி தீரத்தின்பால் உள்ள திருக்குருகூர் தலத்தில் அவதரித்தவர்தான் சுவாமி நம்மாழ்வார். 
இந்த அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர்தான். (கி.பி.9ம் நூற்றாண்டின் முற்பகுதியில்). ஒரு பிரமாதி ஆண்டில் வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமையன்று விசாக நட்சத்திரத்தில் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாக அவதரித்தவர். 
 
நால்வேத சாரத்தை நற்றமிழ்ப் பாசுரங்களாக நல்கியருளிய நம்மாழ்வார், ஆழ்வார்களில் முதன்மையானவர். பிறந்தது முதல் இவர் பால் அருந்தவில்லை. அழவில்லை. வேறு உபாதைகளும் இல்லை. கண் திறந்து பார்க்கவும் இல்லை. இருப்பினும் உடல் மெலிந்து வாடவும் இல்லை.
உலக இயல்புக்கு மாறுபட்டும் இருந்தார். ஆக, இவருக்குமாறன்எனப் பெயரிட்டு குருகூர் ஆலயத்துப் புளியமரத்தில் தொட்டில் கட்டிவிட்டனர் பெற்றோர்கள் 
திருமாலின் ஆணைப்படி ஆதிசேஷனே மிகப் பெரிய பொந்துள்ள புளியமரமாக தோன்றினான் என்பர். இந்த புளிய மரத்தின் பொந்தில் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் மூழ்கி இருந்தார். நம்மாழ்வார் என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மாறனார் ஆழ்ந்த மோனத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு திருமால் கருடசேவை காட்சிதந்து மறைந்தருளினார். 
அத்தரிசனத்தின் பயனாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார். திருவிருத்தம் என்பது ரிக் வேதத்தின் சாரம் என்றும் திருவாசிரியம் என்பது யஜூர்வேதத்தின் சாரம் என்றும், பெரிய திருவந்தாதி அதர்வண வேதத்தின் சாரம் என்றும், திருவாய்மொழி சாம வேத சாரம் என்றும் பெரியோர்கள் கூறுவர். 
இவரது அமுதத் தமிழ்ப் பாசுரங்களில் ஆழ்ந்த அனைவருமே சமயம், இனம் போன்ற வேறுபாடுகள் இன்றி இவரை அன்புடன்நம்மவர்என்று உரிமை பாராட்டிப் போற்றியதால் இவர்நம்மாழ்வார்என நானிலத்தில் அறியப்பட்டார். 
நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலையாக எழுதியவர் மதுரகவியார் என்னும் ஆழ்வார். இவர் நம்மாழ்வாரின் சீடரானது ஒரு வியப்பூட்டும் சம்பவம்.
யாத்திரையில் இருந்த மதுரகவியார் வானில் காணப்பட்ட ஒரு ஒளியைத் தொடர்ந்து, ஓர் உந்துதலால், ஆழ்வார் திருநகரி வந்தடைந்து சுவாமி நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்தில் மோன நிலையில் களைபொருந்திய ஒளிப் பிரபையுடன் விளங்கிய நம்மாழ்வாரை நோக்கிசெத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என மதுரகவியார் கேள்வி கேட்க, அதற்கு ஆழ்வார் “”அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்என பதிலுரைத்தாராம்
 (இதன் பொருள்; உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணுவடிவாய் உள்ள ஆன்மா வந்து புகுந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்? பதில்: அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு அவ்விடத்திலேயே இன்புற்றேன், இளைத்தேன் என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்).  
அப்பதிலைக் கேட்ட மதுரகவியார் நம்மாழ்வாரைக் கை கூப்பி வணங்கி அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும் என வேண்ட நம்மாழ்வாரும் தம்முடைய பாசுரங்களை எழுதும் பணியை அருளினார். 
நம்மாழ்வாருடைய பாடல்களில் இறையுணர்வு, அன்பு, இன்பம், பொதுமையின் சிறப்பு, கவிதையின் எழில் முதலியன காணப்படும். பரமபதம் உட்பட இவரால் பாடல்பெற்ற திவ்ய தேச தலங்கள் 35 ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இவருடைய பாசுரங்களை வேண்டி அந்தந்த திவ்ய தேச எம்பெருமான்களே இவரைத் தேடி வந்து காட்சி கொடுத்து பாசுரங்களைப் பெற்றனர் என்பதே. நூல் இயற்றப்புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று இவ்வாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று 
வைணவ சம்பிரதாயத்தில் இவரை அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புகள்) என கூறும் வழக்கம் உண்டு. அவை முறையே (தலைபூதத்தாழ்வார், இரண்டு கண்கள்பொய்கை, பேயாழ்வார், முகம்}பெரியாழ்வார், கழுத்துதிருமழிசையாழ்வார், இரண்டு கைகள்குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், மார்பு}தொண்டரடிப் பொடியாழ்வார், தொப்புள்திருமங்கையாழ்வார், பாதங்கள்மதுரகவியாழ்வார்!
எம்பெருமான் திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கராக நம்மாழ்வார் இருந்ததால் பெருமானது பாதுகையாக இவர் மதிக்கப்படுகிறார். ஆகவே எம்பெருமான் திருப்பாதுகை இவரது பெயரான ஸ்ரீசடகோபன் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புடைய இந்த ஆழ்வார் இந்த மண்ணுலகில் முப்பத்திரண்டு ஆண்டுகளே உயிர் வாழ்ந்துள்ளார். 
வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படும் நம்மாழ்வார், தமிழுக்கு வைணவ பக்தி இலக்கியம் மூலமாக அளித்துள்ள கொடைகள் தமிழின் புத்திளமைக்கு என்றும் சான்றாக விளங்கும் 
காண்க: