தூக்குமர நிழல்கள்…

கன்னையா குமார்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ‘எதிர்-சிந்தனையா’ அல்லது ‘தேச விரோதமா?’ -இந்தக் கேள்வி எல்லாருடைய மனதிலும் இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் வழக்கமான பணிகள் நிறுத்தப்பட்டு, ஜே.என்.யு. பற்றி விவாதிக்கப்படுகிறபோது, அந்த அளவுக்கு இந்தப் பல்கலைக்கழகம் மிகச் சிறப்புடையதா, மாற்றுச் சிந்தனையின் களமா என்று சாதாரண மனிதர்களிடமும் ஆச்சரியம் மேலிடுகிறது.

ஆங்கிலேயர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் பிரிட்டிஷ் அரசைப் பொருத்தவரை தேசத் துரோகி. ஆனால், விடுதலைபெற்ற இந்தியாவில் வாஞ்சிநாதன் ஒரு தியாகி; விடுதலை வீரர். அவருக்காக நாம் சிலை வைப்போம்; மணிமண்டபம் கட்டுவோம்.

வாஞ்சிநாதனைப் போல இந்த மண்ணில் பலர் ஆங்கிலேயரைக் கொன்று, தங்களை உயிர்த்தியாகம் செய்து கொண்டனர். விடுதலைபெற்ற இந்தியாவில் இவர்களுக்காக விழா நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதனை இந்தியாவில் கொண்டாடுவதைப் போல நாம் இங்கிலாந்தில் விழா நடத்த முடியுமா? நடத்தினால் அதன் பொருள் என்ன? இங்கிலாந்து அரசு அத்தகைய விழாவை அனுமதிக்குமா?

காஷ்மீர் பிரிவினைவாதிகளைப் பொருத்தவரை அஃப்சல் குரு ஒரு போராளி. காஷ்மீர் விடுதலைக்காக போராடும் முயற்சியில் தூக்குமரத்தை முத்தமிட்டவர். அவரது செயல் காஷ்மீர் பிரிவினைக்கான தொடர் போராட்டத்தில் இன்னொரு விதை.

ஆனால், அவர் இந்திய மண்ணில் குற்றவாளி. இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்தவர். பத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமானவர். இந்திய சட்டத்தின் கீழ் தூக்கிலிடப்பட்டவர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் அஃப்சல் குரு நினைவு நாளை ரகசியமாக கொண்டாடலாம். அதைத் தடுக்க முடியாது. இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் நீடிக்கும்வரை அவர்கள் வெளிப்படையாக அஃப்சல் குருவுக்கு விழா எடுக்க இயலாது. ஏனென்றால், அவர் இந்தியாவுக்கு எதிராக சதி செய்தவர்.

இந்நிலையில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய அரசு நிதியில் செயல்படும் பல்கலைக்கழகத்தில், அஃப்சல் குரு நினைவு தினம் அனுசரிப்பது சரியா?

இதை அந்தப் பல்கலைக்கழகம் எவ்வாறு நடத்த அனுமதித்தது? அனுமதி மறுக்கப்பட்டும் நடத்தப்பட்டிருந்தால் ஏன் அந்த மாணவர்களை வெளியேற்றாமல் இருக்கிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரத்தில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவசரநிலைக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்ததோடு அறிவுஜீவிகளுடன் இணைந்து போராடும் களமாகவும் இருந்தது என்பது உண்மையே.

அப்போது இந்தப் பல்கலைக்கழகம் தேசிய உயிர்ப்புடன் இருந்தது என்பதும் உண்மையே. ஆனால், அது இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். இந்திய நாட்டுக்கு எதிரான போராட்டம் அல்ல.

நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது அதை நீக்குவதற்காக போராடியவர் யாருமே தேசவிரோதிகள் அல்ல. அவர்கள் உண்மையான கருத்துமாறுபாடு கொண்டவர்கள். கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திப் போராடியவர்கள். அவர்கள் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். நாட்டுக்கு எதிராகப் போராடவில்லை.

ஜே.என்.யு.வில் நடந்த அந்த நிகழ்ச்சி தூக்கு தண்டனைக்கு எதிரான ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்று சொல்லப்படுமேயானால், அதை ஏன் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளில் பிப்ரவரி 9-ஆம் தேதி நடத்த வேண்டும்? வேறு எத்தனையோ பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள். ஏன் ஒரு பொதுநாளை தேர்வு செய்திருக்கக் கூடாதா?

எந்தத் தேதியில் வேண்டுமானாலும் தூக்குதண்டனைக்கு எதிரான போராட்டம் நடத்தலாம் என்றால், நவம்பர் 21-ஆம் தேதிகூட, அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட நாளைக் கூட, தேர்வு செய்யலாம்தான்.

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாவோயிஸ்ட்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. அதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தை யாரும் ஒன்றும் செய்துவிடவில்லை.

தண்டேவாடா வனப்பகுதியில் காவலர்கள் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டபோது ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இனிப்பு வழங்கியதாக மாணவர்களே குறிப்பிடும் நிகழ்ச்சி இந்திய அரசுக்கு தெரிந்திருந்தும் அதை பொருள்படுத்தவில்லை.

ஏனென்றால், அதுவும் கூட மாற்றுச்சிந்தனையாகவே கருதப்பட்டது. ஏனென்றால், மாவோயிஸ்ட்டுகள் ஆட்சிக்கு எதிரானவர்கள் மட்டுமே. அவர்கள் தனிநாடு கேட்பவர்கள் அல்ல. பிரிவினைவாதிகள் அல்ல.

அஃப்சல் குரு இந்திய ஆட்சிக்கு எதிரானவரா அல்லது பிரிவினைவாதியா?

ஒவ்வொரு செயலும் அவரவர் பார்வையில், அவரவர் மண்ணில் வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வரை எது எதிர்-சிந்தனை, எது தேச விரோதம் என்பதில் குழப்பம் இருக்கவே செய்யும்.

கன்னையா குமாரும் இதில் தொடர்புடைய மற்ற மாணவர்களும் தூக்குமரத்தின் நிழல்கள் மட்டுமே.

தூக்குமரத்தின் அடியில் சுயநல அரசியல்வாதிகள் தங்களை வெளிச்சம் போட்டுக்கொள்ளும்வரை நிழல்கள் இருக்கும். அவர்கள் வேறு இடத்தில் வெளிச்சம் போடும் சூழலில், இந்த நிழல்கள் காணாமல் போகும்.

 

குறிப்பு:

திரு. இரா.சோமசுந்தரம், பத்திரிகையாளர்.

நன்றி: தினமணி (26.02.2016)