இனம் காக்க வந்த மீட்பர்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்

(ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945),   அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் பல முகங்களை உடையவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, ‘பறையன்’ என்ற திங்கள் இதழையும் நடத்தியவர் இவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்திருக்கிறார்.  தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை இவர்.

செங்கல்பட்டு  மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர்.  சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்’ என்றார்.

1884 ம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனிவாசன் 1980 ம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப்  ‘பறையன்’  என்று பெயர் வைத்தார்.

‘பறையன்’, 15 ரூபாய்  மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல்  ‘பறையர் மகாஜன சபை’யை  இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.  1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893ஆம் ஆண்டு ‘பறையன்’ பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம்  30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.

1904-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘ராவ்சாகிப்’ பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

”செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்” என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.

இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுகள் தீண்டாமையை ஒழிக்கும் வேகத்தை சமூக நீதியை விரும்புவோருக்கு என்றும் வழங்கிக் கொண்டிருக்கும்.

காண்க:

சம உரிமைக்கான முதல்குரல் 

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 .

பலர் அறியாத ‘தியாகதீபம்’

 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க “அக்ரகாரத்து அதிசய மனிதர்’ என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற “தினமணி’ நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை “ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்’ ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை “தேசிய சங்கநாதம்’ என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் “தென்னாட்டுத் திலகர்’ என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. “”இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

‘தேசிய சங்​க​நா​தம்’ டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .

மகாகவியின் பிரார்த்தனை

மகாகவி பாரதி
(பிறப்பு: டிச. 11)

வேண்டுவன

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

-மகாகவி பாரதி

காண்க:

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகட்டும்!