சுதந்திரம் பிறப்புரிமை என்றவர்

 
பால கங்காதர திலகர்
(பிறப்பு: ஜூலை  23) 
(நினைவு: ஆக. 1)
சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்என சிங்கநாதம் செய்தவர் லோகமான்ய பாலகங்காதர திலகர்.
மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திலகர்.
இவர் 1856, ஜூலை 23 அன்று மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பிறந்தார். தாயார்:  பார்வதி பாய், தந்தை:  கங்காதர சாஸ்திரி.  திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், ‘கேசவராவ்’ என்று மூதாதையர் பெயராலும், ‘பாலன்’ என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.
பூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்என்றனர்.
அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்என்றார்.
திலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.
உண்மையே  பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.
இவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து நியூ இங்லீஷ் ஸ்கூல்என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.
மேலும் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு ஊட்டும் விதமாக சில நண்பர்கள் இணைந்து 1881ம் ஆண்டு மராட்டி மொழியில் கேசரிஎன்ற பத்திரிகையும் (இன்றும் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது) ஆங்கிலத்தில் மராட்டாஎன்ற பத்திரிகையும் தொடங்கினார். கேசரி பத்திரிகை, ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. தலையங்கம் மக்கள் படும் துன்பத்தை தெரிவித்தது. பத்திரிகை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது.  இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை ‘கேசரி’ இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி’யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே பெர்க்யூஷன் காலேஜ்என்று விரிவுபட்டது.
1885ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். 1896ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார்.
அந்த நேரத்தில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பஞ்சத்திலும், நோயிலும் அவதியுறும் வேளையில், இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா? என மக்கள் அரசை எதிர்த்தனர். ஆட்சியாளர்கள் மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து திலகர் பத்திரிகையில் எழுதினார்.
1897ம் ஆண்டு இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி,  1.25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை லோகமான்யர்என்று அழைத்தனர்.
1898ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்பு பர்மா சென்று வந்தார்.
அப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். ‘அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்’ என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர்  மீது நம்பிக்கை வைத்தார்.
1907ம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது மித, தீவிர கருத்துடையோரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் தனித்தனியே கூடி தீர்மானங்கள் போட்டனர். திலகர், இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஒற்றுமை இல்லையேல் சுதந்திரம் என்பது கனவு என்று கூறினார். எனினும் திலகர் தலைமையில் விடுதலை வீரர்கள் ஒருங்கிணைந்தனர்.
இதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.
இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர  தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார்.
திலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற  திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு  புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.
1919ல் ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது.
அப்போது,  காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்என்று திலகர் தெரிவித்தார்.
1920ம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத  திலகர் இறைவனடி (1920,  ஆகஸ்ட் 1)  சேர்ந்தார்.
1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.
இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார்.  இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.
கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம்.
இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது  நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.
-என்.டி.என்.பிரபு
காண்க:

Bal Gangadhar Tilak Biography

 

நம்முடன் வாழும் காந்தி

அண்ணா  ஹசாரே
பிறப்பு: ஜன. 15 (1940)
 ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதா கொண்டுவர பாடுபட்டு வருபவர்;  தகவல் அறியும் உரிமைச் சட்டம் வர காரணமாய் இருந்தவர்;   ராலேகான் சிந்தி என்ற வறண்ட கிராமத்தைச் செழிக்கச் செய்தவர்… இப்படி பல சாதனைகளை செய்தும், செய்துகொண்டும் இருப்பவர்,  72 வயதான அண்ணா ஹசாரே.
இவர் பிறந்தது ஒரு சிறு கிராமம், ராலேகான் சிந்தி; இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் 7 குழந்தைகளுடன் ஒருவராய் 1940ல் பிறந்தார் அண்ணா ஹசாரே;  7ம் வகுப்புவரையே படித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பை செய்றார்.
அங்கு ஒரு சிறுதொழில் செய்ய ஆரம்பித்தார். சற்று பணம் வர ஆரம்பிக்கவே, சில தீய நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அதனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்யவேண்டிய நிலை இருந்தது. தானும் சில கெட்ட பழக்கங்களை பழகினார்.
1961ல் அத் தீயப் பழக்கங்களிலிருந்து மீண்டார். ராணுவத்தில் சேர்ந்தார். தான் அந்த தீய பழக்கங்களிலிருந்து விடுபட உதவியது  தன்னிடம் இருந்த பிரம்மச்சரிய விரதமே என்று குறிப்பிடும் இவர், தான் அதிலிருந்து விடுபட்டது கடவுளின் கிருபை என்றும் குறிப்பிட்டார்.
ராணுவத்தில் இவருக்கு வழங்கப்பட்ட கடும் பயிற்சி, இவர் இந்த பழக்கத்திலிருந்து வெளிவர பெரிதும் உதவியது.  அப்போது இவரது மனம் மனித வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. இவரது சிந்தனைக்கு ஒரு தெளிவும், வழியும்பிடிமானமும் கிடைக்கவில்லை, அதனால் மனிதனாய்ப் பிறந்து வாழ்வதில் ஒரு மகத்துவமும் இல்லைஎன்ற முடிவுக்கு வந்தார்.
அதன்படி இந்த அர்த்தமற்ற வாழ்க்கையை சுமப்பதைவிட முடித்துக் கொள்கிறேன், நான் என் சுய இச்சையோடு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் பொறுப்பல்லஎன்று எழுதினார். ஆனால் அந்த சமயத்தில் இவரின் தங்கைக்கு திருமணம் நடப்பதாக  இருந்ததால் தனது தற்கொலை எண்ணத்தை ஒரு மாதம் தள்ளிப்போட்டார்.
இந்த சமயத்தில் ஹசாரே  தில்லி ரயில்வே ஸ்டேஷனில் சுவாமி விவேகானந்தரின் படத்துடன் கூடிய  புத்தகத்தைக் பார்த்தார். அப்புத்தகம் அவரைக் கவர்ந்தது. அதில் மனிதப் பிறவியின்  மகத்தான லட்சியம், இப் பிறப்பிலேயே ஜீவன் முக்தி அடைவதுதான்என்ற சுவாமி விவேகானந்தரின் சொற்கள் ஹசாரேவுக்கு   மிகப் பெரிய  விழிப்புணர்வை ஏற்படுத்தியது; தன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டார்.
அர்த்தமில்லாத தேவதைகளின் பின்னால் ஓடாதே. நோயாளி, ஆதரவற்றவன், ஏழை, துன்பத்தில் பீடிக்கப்பட்டவன், இவர்கள் தான் உனது கடவுள். அவர்களுக்குச் சேவை செய். இதுதான் முக்தியடைய உண்மையான வழிஎன்ற விவேகானந்தரின் வரிகள், ஹசாரேவின்  உடம்பெங்கும் பரவி, தான் செய்ய வேண்டிய வேலைக்கு வழிகாட்டியதாகவே உணர்ந்தார்.  தொடர்ந்து ஆன்மீக இலக்கியங்கள் பலவற்றைப்  படிக்கலானார்.
1965 யுத்தத்தில் உடன் பணியாற்றிய பல நண்பர்களை குண்டு மழையில் இழந்தார். சில நண்பர்கள் ஊனமானார்கள். இவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது கடவுளின் கருணையே என்று நினைத்தார், தான் கடவுள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பினார். 
1975 போருக்குப் பின் ஹசாரே  வேலையை விட்டு கடவுள் தொண்டிலும், கிராம சேவையிலும் ஈடுபடத்  தீர்மானித்து ஊர் திரும்பினார். அப்போது ராலேகான் சிந்தி வறண்ட பூமி. பிரதான தொழில் சாராயம் காய்ச்சுவது.  மழை குறைவு;  சுகாதாரமான குடிநீர் கிடையாது;  மக்கள் பல நோய்களில் அவதிபட்டு வந்தனர்.
ஹசாரே தனது கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களை அழைத்து, கிராமத்தை முன்னேற்ற தான் வைத்துள்ள திட்டங்களைச் சொல்லி அந்த இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி இளைஞர்களின் மனதில் எழுச்சியை ஏற்படச் செய்தார்.
முதலில் அங்கிருந்த மக்களிடம்  ஈடுபாட்டை ஏற்படுத்த அங்கிருந்த கோயிலை புனர் நிர்மாணம் செய்வது என முடிவெடுத்துமக்களுடன் இணைந்து  வேலையைத் தொடங்கினார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது வந்த பணம் ரூ. 19,000த்தை  செலவு செய்தார். இதன் பின் மக்களே முன்வந்து மரமாகவும்பணமாகவும்உடல் உழைப்பாகவும் செய்யகிராம மக்களிடையே உற்சாகம் ஏற்பட்டு  கூட்டு முயற்சியில் நம்பிக்கை ஏற்பட்டது.
மக்களின் உற்சாகத்தையும் அவர்களின் ஆதரவையும் கொண்டுகள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்களிடம் விளக்கினார். அவர்கள் முழுமனதுடன் மது அரக்கனை ஒழிக்க சங்கல்பம் செய்தனர். பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு அந்த ஊரிலிருந்து கள்ளச் சாராயத்தை ஒழித்தனர். அதில் நேரிட்ட இடைஞ்சல்களை மக்களின் அன்பால் வென்றார் ஹசாரே.
அதன் பின் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது.  தினசரி மக்கள் கோயில் வேலைகளிலும் பூஜையிலும் ஈடுபட்டு, பஜனை போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டர். ‘கிராமம் முழுவதும் ஒரு குடும்பம்’ என்ற உணர்வு அவர்களிடம் ஏற்பட்டது. மக்களின் ஒற்றுமையும் இளைஞர்களின் சக்தியையும் கொண்டு தீண்டாமை அரக்கனை ஒழித்துக் கட்டினார்.
கிராமே கூடி விவசாயம் செய்தனர்;   கிணறுகள் வெட்டினர். பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவினர். அவர்களுக்கு ஏற்பட்ட கடன்களை அடைத்தனர். மாணவர் விடுதி  ஏற்படுத்தினர். ராலேகான்  சிந்தி, தீண்டாமை ஒழிப்பில் மாவட்டத்தின் முதல் பரிசு பெற்றது.
மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டினர்.  அங்கு இப்போது விவசாயம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. சாண எரிவாயு இயந்திரங்கள் மூலம் எரிவாயுவும், உரங்களும் பெறுகின்றனர். மரங்கள் நட்டனர்;  பசு வளர்ப்பில் கவனம் கொடுத்தனர். கோழிவளர்ப்பு, தையல் வேலை என்று அனைத்துத் துறைகளிலும் கவனம் கொடுத்தனர்.
கிராம மக்களின் தானத்தின் மூலமும் உழைப்பின் மூலமும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பின்பு அரசு உதவி கிடைத்தது. தற்போது மற்ற ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்குவதில்  வெற்றி பெற்றிருக்கிறார்கள் ராலேகான் சிந்தி கிராம மக்கள். இவர்களின் வெற்றி மற்ற கிராமங்களையும் தொற்றி அவர்களுக்கும் உற்சாகம் பெற்றுள்ளனர்.
ராலேகான் சிந்தி ஒரு முன்மாதிரியான கிராமம். இப்படிப்பட்ட நிலையை நாட்டுக்கும் கொண்டுவர தற்போது அண்ணா ஹசாரே பாடுபட்டு வருகிறார். இவருக்கு பத்மஸ்ரீ (1990), பத்மபூஷன் (1992) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஏப். 5  முதல் ஏப், 8  வரை தில்லியில் இவர் நடத்திய தொடர் உண்ணாவிரதத்திற்கு மத்திய அரசு பணிந்தது. லோக்பால் சட்டம் குறித்து ஹசாரே கூறுவதை ஏற்க அரசு முன்வந்தது. இப்போது அதற்கான வரைவுக் குழுவில் ஹசாரே உள்பட பொதுநல விரும்பிகள் ஐவரும் அரசு பிரதிகள் ஐவருடன் இணையாக இடம் பெற்றுள்ளனர். இதன் வெற்றி இனிமேல் தான் தெரிய வரும்.
முன்பு எப்படி மாலேகான் சிந்தியில் கள்ளச்சாராயத்தை ஒழித்தாரோ அதேபோல, நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவுக்காக இப்போது போராடி வருகிறார், ஹசாரே.
இவரே இன்றைய மகாத்மா.
– என்.டி.என்.பிரபு
காண்க:
.

தமிழக காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி

தீரர் சத்தியமூர்த்தி
நினைவு: மார்ச் 28
இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணிய ஆங்கிலேய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. ஜேம்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து இங்கிலாந்துப் பேரரசின் அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்பவில்லையென்றால், யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்புகிறீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டார்.
யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம். அதுமட்டுமல்ல.  அந்நியர்களாகிய உங்களை உதைத்து வெளியே தள்ளவும் விரும்புகிறோம்என்றார் அந்த சுதந்திரப் போராட்ட வீரர். இந்த பதிலைக் கேட்டு ஜேம்ஸ் அதிர்ந்து விட்டார். இவ்வாறு துணிச்சலாக கூறியவர்  சத்தியமூர்த்தி. இப்படி பல வகையிலும் துணிச்சலாக அவர் நடந்து கொண்டதால், அவர் தீரர் சத்தியமூர்த்திஎன்று புகழ்ந்து பாராட்டப்பட்டார்.
அந்த வீரர் பிறந்தது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமயம் ஆகும். 1887, ஆக. 18ம் நாள் பிறந்தார்.  தந்தை சுந்தரேச சாஸ்திரி. திருமயத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சத்தியமூர்த்தி சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.
படிக்கும்போதே, எந்தத்  தலைப்பாக இருந்தாலும், சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் பேராற்றலைப் பெற்றிருந்தார். இவரது சொற்பொழிவு கேட்போரை மெய்மறந்து கேட்கச் செய்திடும் வல்லமை உடையது. ஒருமுறை வடமொழி மாநாட்டில் பாரதத்தின் தலைசிறந்த இதிகாசமான ராமாயணம் பற்றி உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக ஆங்கிலம் அல்து தமிழில் சொற்பொழிவாற்றும் இவர், அனைவரும் வியக்கும்படி வடமொழியில் ஆற்றினார். இந்நிகழ்வு வடமொழியிலும் இவருக்கு புலமை இருந்ததைத் தெளிவுபடுத்தியது.
நாடகத்தில் நடிப்பதுஇயக்குவது ஆகியவற்றில்  ஆர்வம் கொண்டிருந்தார்;  பம்மல் சம்மந்த முதலியார் அவர்களின் நாடகத்தில் நடித்துள்ளார்;  திரைப்படத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்;  தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.
வழக்கறிஞரான இவர் நாட்டுப்பற்று கொண்டிருந்ததால்,  நாட்டு  விடுதலைக்காப் போராடி வந்தார். ‘ஹோம் ரூல்’ இயக்கத்தில் பங்கேற்றிருந்தபோது அவ்வியக்கத்துடன் உண்டான கருத்து வேறுபாட்டினால், அதிலிருந்து விலகினார். பின் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.
1919ல் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு நவீன  அரசியல் கோட்பாடுகளை கற்றார். அவற்றை நம் நாட்டிற்கு எடுத்துக் கூறி வழிநடத்தவும் செய்தார். காங்கிரஸ் பேரியக்கம் 1992ல் பிளவுபட்டு ‘சுயராஜ்யக் கட்சி’ உதயமான போது, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
1923ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். சென்னை மாநகராட்சியிலும் உறுப்பினரானார். சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறைத் தண்டனை பெற்றார். 1936ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறுபோராட்டத்தில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை பாதிக்கப்ட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த அவரால் முன்பு போல் பொதுவாழ்வில் ஈடுபட முடியாமல் போனது. 1943, மார்ச் 28ம் நாள் சத்தியமூர்த்தி  இயற்கை எய்தினார்.
இவரைப் போன்ற பலரின் தியாகமே நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது.  கர்மவீரர் காமராஜரின்  அரசியல் குருவாக தீரர் சத்தியமூர்த்தி   போற்றப்படுகிறார்.
தீரர் சத்தியமூர்த்தி,  இலக்கியம், நாடகம்திரைப்படம்அரசியல் என பல துறைகளில் ஈடுபட்டு முழுமை பெற்ற மனிதராக வாழ்ந்ததை நினைப்போம். அவரது  பல்துறை ஆர்வத்தையும் தேச நேசத்தையும் நாமும் நம்முள் காண்போம்.
-என்.டி.என்.பிரபு
காண்க:
.