தேசபக்தத் துறவி!

-எஸ். குருமூர்த்தி

swami-dayananda-saraswati

சுவாமி தயானந்த சரஸ்வதி

(பிறப்பு: 1930 ஆக. 15 – மறைவு: 2015 செப். 23)

ஹிந்து தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து அதை மக்களிடையே எடுத்துச் சென்றவரும், சிறந்த ஞானியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி இன்று நம்மிடையே இல்லை.

ஆன்மிகம், கலை, கலாசாரம், சமூகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். “கடவுள் ஒருவர் அல்ல. கடவுளே எல்லாம்” என்று வலியுறுத்தியவர். வேத, தர்ம சாஸ்திரங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பலருக்கு ஆசானாக விளங்கினார்.

இவரிடம் வேத சாஸ்திரங்களைப் பயின்ற ஆயிரக்கணக்கானோர் இன்று மரபு வழியில் வந்த ஹிந்து கலாசார, பண்பாடுகளைத் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.

ஹிந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் பல்வேறு பிரிவினரை ஒன்றுபடுத்த “தர்ம ஆச்சார்ய சபா’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஹிந்து மதத்தின் மாண்புகளை எடுத்துக் கூறி, அத்வைத கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற தத்துவத்தையும் முன்வைத்தார்.

மதப் பிரசாரம் மூலம் மத மாற்றம் செய்வது எங்கள் உரிமை என்று கூறி வந்தவர்களிடம் அது தவறு என்று நிரூபித்துக் காட்டியதுடன் மத மாற்றமும் ஒருவகையில் வன்முறைதான் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டார். மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களைப் போல சிறந்த தேசபக்தராக விளங்கியவர்.

சிறந்த கல்வித் திறன் பெற்றிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, தாம் கற்ற வேத சாஸ்திரங்களையும், ஹிந்து மதக் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மக்களுக்குப் போதிப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார்.

ஹிந்து கலாசாரப் பண்பாடுகளைக் கட்டிக்காப்பதில் அவர் பெரும்பங்காற்றியதால்தான் இந்தியா இன்றளவும் தலைநிமிர்ந்து நிற்கிறது. இல்லையெனில், எப்போதோ மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் வேரூன்றி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்திருக்கும்.

ஹிந்துக்களின் தேசிய அடையாளம் வேத சாஸ்திரங்களைக் கற்று கலாசார மரபுகளைப் பின்பற்றுவதுதான். சுவாமி தயானந்த சரஸ்வதியின் பார்வையில், வேதாந்தம் என்பது வெறும் தத்துவம் மட்டுமல்ல, இந்திய வாழ்வியல் தர்மத்துடன் ஒன்றிணைந்தது.

இசை, இலக்கியம், சிற்பம், சமூகம், குடும்பம், இந்திய வழக்கப்படி முதியோர்கள், ஆசிரியர்கள், பெண்களை மதிப்பதை உள்ளடக்கியது. இந்தியா புனிதமான நாடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வேதாந்த தத்துவங்களைப் பரப்புவதற்காக பல்வேறு பள்ளிகளை நிறுவி செயலாற்றி வந்த சுவாமி சின்மயானந்தரின் மாணவராகச் சேர்ந்து வேத தர்ம சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து பின்னர் அவரின் சீடராகவும் இருந்தார்.

ஹிந்து தர்மத்தின் முக்கியத்துவங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி சமூகப் பணியாற்றி வந்த அவர், இதற்கென ஓர் இயக்கத்தை தோற்றுவித்து வேதங்களைப் பயிற்றுவித்து ஏராளமான ஆசிரியர்களை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள் உலகெங்கும் ஹிந்து தர்மத்தைப் போதித்து, கலாசார, பண்பாடுகளைக் கட்டிக்காத்து வருகின்றனர்.

1990-களில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு சென்னையில் தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் துறவிகள், ஆன்மிகவாதிகள், அறிவுஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பேச்சு மறக்க முடியாததாக இருந்தது.

மத மாற்றம் என்பதே வன்முறைதான் என்ற புதிய கருத்தை முன்வைத்தார். மத மாற்றம் என்பது ஆன்மிகம், மனோநிலை, கலாசாரத்தின் மீதான வன்முறையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

காந்திய வழியைப் பின்பற்றாத மதச்சார்பின்மையினர், அதுவரை மத மாற்றம் என்பது ஒருவரின் உரிமை என்றே கூறி வந்தனர். அதாவது, ஒருவர் மற்றொரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அந்த மதத்துக்கு மாறுவது தவறு இல்லை என்ற எண்ணமே அதுவரை இருந்து வந்தது. மத மாற்ற விவகாரத்தில் காந்திஜி அலட்சியம் காட்டியதால் மதச்சார்பின்மையினர், மத மாற்றமும் மதச்சார்பின்மையை உள்ளடக்கியதுதான் என்று கூறி அவரிடம் ஆதரவு தேட முயன்றனர்.

மத மாற்றம் என்பது ஒருவகையில் மத வன்முறைதான் என்று சுவாமி தயானந்த சரஸ்வதி கொடுத்த விளக்கம் புதிய சிந்தனையை ஏற்படுத்தியதுடன், மத மாற்றத்தின் உண்மையான முகத்திரையை வெட்டவெளிச்சமாக்கியது. 1999-ஆம் ஆண்டு அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி, பல்வேறு மதத் தலைவர்கள், அறிவுஜீவிகளுடன் சென்று போப்பை வரவேற்றார்.

அவரிடம், “அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன், நம்பிக்கை வைத்திருக்கிறேன், அனைத்து மதத்தினரையும் மதிக்கும் இந்தியாவுக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்’ என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், போப் அதற்கு உடன்படவில்லை. ஆனால், தைரியமும் திறமையும் ஒருங்கே கொண்டிருந்த தயானந்த சரஸ்வதி, மத மாற்றத்துக்கு எதிரான தனது போராட்டத்தை உலக அரங்குக்கு கொண்டு சென்றார்.

ஐக்கிய நாடுகள் சபையில் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் பேசிய தயானந்த சரஸ்வதி மத நம்பிக்கைகளில் சுயக் கட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை மதிக்க வேண்டும் என்றும், ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை தூஷிக்கக் கூடாது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்கள் மதத்தில் சேருமாறு யாரையும் தூண்டக் கூடாது என்றும், தங்களது மத நம்பிக்கையை வலுக்கட்டாயமாக மற்றொரு மதத்தினரிடம் திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மாநாட்டில் அவரது கருத்தை பலரும் வரவேற்றபோதிலும், அவரது மத நல்லிணக்கத் தீர்மானம் நிறைவேறவில்லை.

ஆனால், தமது கோரிக்கையின் அவசியத்தை உலக மதத் தலைவர்களிடம் எடுத்துரைத்து இணங்கவைக்க அவருக்கு மேலும் எட்டு வருடங்கள் ஆனது.

2008 டிசம்பர் 10-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 60-ஆவது ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட உலக அளவிலான மதத் தலைவர்கள், சுவாமி தயானந்த சரஸ்வதியின் புதிய அணுகுமுறையை ஏற்க முன்
வந்தனர்.

அதாவது, ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை மதிக்க வேண்டும்; ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை அவதூறாகவோ அல்லது தூஷிக்கும் வகையிலோ பேசக் கூடாது; அவர்களின் மத நம்பிக்கையையும், மதச் சின்னங்களையும் இழிவுபடுத்தக் கூடாது; வேறு மதத்தினரை தங்கள் மதத்துக்கு இழுக்கத் தூண்டும் வகையிலோ அல்லது கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்று தயானந்த சரஸ்வதி வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரகடனமாக வெளியிடப்பட்டது.

ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே பிரதமர் நரேந்திர மோடி தமது அணுகுமுறையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இதே கருத்தையே புனிதர் பட்டம் பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை சுவாமி தயானந்த சரஸ்வதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது ஹிந்து தர்ம ஆச்சார்ய சபையை அவர் நிறுவியது. இது இந்திய கலாசாரத்துக்கு அவர் ஆற்றிய சாதனையாகும்.

ஹிந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினர் ஒன்றுபடாமல் இருந்தநிலையில், மத மாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, சுவாமி தயானந்த சரஸ்வதி தனது பெரு முயற்சி மூலம் ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தினார்.

அவரது மற்றொரு முயற்சி அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றுபடுத்துவது. இதிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. அனைத்து மதமும் புனிதமானது. அனைத்து மதமும் மதிக்கப்பட வேண்டியது. எந்த ஒரு மதமும் மற்றொன்றைவிட உயர்ந்தது என்று யாரும் பேச அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு சில மதங்கள்தான் உண்மையானவை, மற்றவை போலியானவை என்ற எண்ணம் கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். மத துவேஷமும், மோதல்களும் ஏற்படுவதற்கு அதுதான் முக்கியக் காரணம் என்றார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்திய கலாசார, பண்பாடுகளை கட்டிக்காக்கவும், வேத தர்ம சாஸ்திரங்கள் தழைத்தோங்கவும் அரும்பணியாற்றி அதில் அவர் வெற்றி கண்டது ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

மகரிஷி அரவிந்தர் ஒரு முறை, “பெரிய மனிதர்களின் அரிய சாதனைகள் சில சமயங்களில் பேசப்படாமல் இருக்கும்” என்று சொன்னார். இது சுவாமி தயானந்த சரஸ்வதிக்கும் பொருந்தும்.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவின் மூலம் ஹிந்து மதம் ஒரு தலை சிறந்த துறவியை, மதக் காவலரை இழந்துவிட்டது. நாடு ஒரு சிறந்த தேசபக்தி மிக்க துறவியை இழந்துவிட்டது.

 

நன்றி: தினமணி (25.9.2015)

தாய்மை போற்றுதும்… தாயை வணங்குதும்…

– ஆடிட்டர் சு. குருமூர்த்தி 

வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பச் சரிவாலோ, ஏழ்மையாலோ கலங்காத மனோபலம்; பின்பு, குடும்பத்துக்கு வந்த ஏற்றத்தாலும், செல்வத்தாலும் புகழாலும் சற்றும் மாசுபடாத உள்ளம்; எந்த விதமான மனசஞ்சலமும் இல்லாமல் ‘விதவா தர்மத்தை’ 58 ஆண்டுகள் சாஸ்திர முறைப்படி அனுசரித்த ஒரு துறவியின் புனிதம்; பொன்னாசையோ, மண்ணாசையோ மட்டுமல்லாமல் மனிதர்களுக்கே இருக்கக்கூடிய சின்னச் சின்ன ஆசைகள் கூட இல்லாத பற்றற்ற அணுகுமுறை; குழந்தைகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் இவர்களுக்காகத் தன்னலமில்லாமல் உடலை செருப்பாக்கி உதவும் இயல்பு, கடவுளிடமும் பெரியோர்களிடமும், குறிப்பாக, காஞ்சி மகா ஸ்வாமியிடம் அளப்பரிய பக்தி; பெரிய அறிவுரைகள் கூறாமல் மற்றவர்களின் மனதை தன்னுடைய நடத்தையால் மாற்றும் தவ வலிமை – இந்த குணங்களெல்லாம் சேர்ந்து ஒரு மனித உருவம் எடுத்தால் எப்படி இருக்கும்?

Mother of S.G.கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தன்னுடைய 97-வது வயதில் இறைவனடி சேர்ந்த எனது தாய்தான் அந்த ‘மனித தெய்வம்’. எனக்கு இந்த ஜென்மாவில் கிடைத்த பெருமைகளில் எல்லாம் மிகப்பெரிய பெருமை, அவளுக்கு மகனாகப் பிறந்ததுதான் என்று நான் கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்! அவள் குடும்பத்தில் வாழ்ந்த சந்நியாசி. அவளுக்குத் தெரிந்த மந்திரம் எல்லாம் நெறி தவறா வாழ்க்கையும், அறம் தவறாக் குடும்பமும், ஒருவருக்கொருவர் ஆற்றும் எதிர்பார்ப்பில்லாத உழைப்பும்தான்.

எந்த மாமியாரைப் பற்றி மருமகள்கள் நல்லபடியாகப் பேசுகிறார்களோ அந்த மாமியார் நல்ல மாமியார் மட்டுமல்ல, ஒரு உயர்ந்த குணம் உள்ளவராகத்தானே இருக்க முடியும்? என் தாயின் மேன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பொருளாதாரத்தில் வேறுபட்ட பல குடும்பங்களிலிருந்து வந்த அவருடைய நான்கு மருமகள்களிடமும் பேசினால் போதும்.

ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக ஒன்பது ஆண்டு காலம் இயலாமை வாய்ப்பட்டு எனது தாய்க்கு மருமகள்கள்தான் எல்லா பணிவிடைகளையும் செய்யவேண்டும் என்கிற நிலைமையில் இருந்தபோதும்கூட, பக்தியுடனும் அவர்கள் தினசரி பணிவிடை செய்ததை வைத்தே அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். தங்கள் மாமியார் காலமான பிறகு மருமகள்கள்  “எங்களுக்குத் தாயாகவும், ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருந்து எங்களுக்கு ஆசாரமும், கலாசாரமும், பதிபக்தியும், பண்பும், கூட்டுவாழ்க்கையின் உயர்வையும் சொல்லிக் கொடுத்த, நீங்கள் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே” என்று அவர் மறைந்து பல நாட்கள் ஆன பிறகும்கூட அவரை அடிக்கடி நினைவுகூர்ந்து புலம்புகிறார்கள் என்றால், அந்த மாமியார் – என் தாய் – எப்படிப்பட்டவளாக இருந்திருக்க வேண்டும்? மருமகள்கள் மட்டுமல்ல, பேத்திகள், பேரன்களின் மனைவிமார்கள் எல்லோருமே இன்னும் கூட அவரது பிரிவின் துயரிலிருந்து மீண்டபாடில்லை. அப்படிப்பட்டவள் என் அம்மா.

அந்த நல்ல மருமகள்களை, அதற்குப் பிறகு அவர்களுடைய மகள்களை, மருமகள்களை உருவாக்கிய என் அம்மா, தன்னைப்போல் அடுத்த இரு தலைமுறைகளை உருவாக்கியிருக்கிறார் என்றுதானே பொருள்? நான் எழுதுவதில் ஒரு வார்த்தை கூட மிகையல்ல என்பதை என் குடும்பத்துடன் பழகிய நூற்றுக் கணக்கானோர் வழிமொழிவார்கள்.

இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்று மேலைநாட்டு நாகரிகத்தைப் பார்த்து மயங்கும் பல படித்த மேதாவிகள் கருதுகிற, ஆனால், எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய, மன நிம்மதி தரக்கூடிய, வாழ்க்கை முறையை அவளிடமிருந்து பெற்ற எங்கள் கூட்டுக்குடும்பத்தில் என்னையும் சேர்த்து நான்கு பிள்ளைகள், ஒரு பெண். 15 பேரன்-பேத்திகள், இதுவரை பிறந்திருக்கும் 17 கொள்ளுப்பேரன்-பேத்திகள் உள்பட 37 பேர். அந்தப் பெரிய குடும்பத்துக்கு அவள் தலைவி மட்டுமல்ல, தெய்வமும் கூட!

அவள் பள்ளிக்கூடம் சென்றதில்லை. முறையாக எழுத்தறிவு பெற்றதில்லை. படிக்கத் தெரியும் அவ்வளவுதான். அவள் பிறந்தது விழுப்புரம் அருகில் இருக்கும் பாணாம்பட்டு என்கிற கிராமம். திருமணம் ஆனது தனது ஒன்பதாவது வயதில். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுவாமிநாதன் என்பவரைத்தான் கணவனாக வரித்தார். 1950-களில் பல ஆண்டுகள் மழை பெய்யாததால், நிலங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக விற்க வேண்டியதாயிற்று. குடும்பம் வறுமைக்கோட்டுக்குள் நுழைகிறது. அந்த நிலையில் 1955-இல் கணவனை இழந்து விதவையாகிறாள் என் தாய். அப்போது அவளுக்கு வயது 39.

அதற்குப் பிறகு வறுமையுடன் போராட்டம். உற்றார், உறவினர்களின் உதாசீனம். பெரிய பிள்ளைகள், என்னுடைய இரண்டு அண்ணன்மார்கள், சென்னை சென்று, சிம்சன் கம்பெனியில் வேலையில் அமரும் வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. பிள்ளைகள் தலை எடுத்து, கிராமத்தில் குடும்பத்தின் கெüரவம் திரும்பும் வரை அவள் அங்கிருந்து வெளியேறவில்லை. நான் பள்ளிப்படிப்பு படித்து முடிக்கும்வரை கிராமத்திலேயே இருந்துவிட்டு, அதன் பிறகுதான் சென்னை வருகிறாள் என் அம்மா.

காரணம், தலைகுனிந்து வெளியேற அவள் தயாராக இல்லை. தலைநிமிர்ந்த பிறகு தான் வெளியேற வேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜெயித்த பிறகுதான் வெளியேறினாள். அவளது அந்த வைராக்கியம்தான் இன்று என்னைப் போற்றுவார் போற்றலுக்கும், தூற்றுவார் தூற்றலுக்கும் இடையில் தலைநிமிர்ந்து எந்த விமர்சனங்களையும் எத்தகைய பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை அளித்திருக்கிறது என்று கருதுகிறேன்.

சென்னையில் முதலில் ஒண்டிக்குடித்தனம். பின்பு நான்கு பிள்ளைகளும் படிப்படியாக நல்ல நிலைக்கு வந்து, திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்த பிறகுதான் சொந்த வீடு வாங்கினோம். அதற்கு முன்னால், 12 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு வீடு தர யாரும் முன் வராமல் இருந்த சோதனையான காலகட்டத்தையும் சிரித்துக்கொண்டே எதிர்கொண்டாள் என் தாய்.

பின்பு சொந்த வீடு வந்தது. அதன் பின் சொந்த வீடுகள் வந்தன. அம்மாவின் ஆசி பெற உற்றார் உறவினர், பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், என் தாயின் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் கிடையாது. வறுமையில் அவள் எப்படி துவளவில்லையோ, அதேபோல் பெருமைகளும் அவளை மதிமயங்க வைக்கவில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல ஏற்றுக்கொண்டாள் அவள்.

அவளுக்கு எப்போதும்போல இரண்டு வெள்ளைப் புடவைகள் – ஒன்று அவள் மேல்; இன்னொன்று கொடியின் மேல் – மடிப்புடவையாக உலர்ந்து கொண்டிருக்கும். அவள் இறக்கும் வரை இரண்டே புடவைகள்தான்.

அவளுக்கென்று ஒரு பெட்டியோ, அலமாரியோ கிடையாது. அவளுக்கென்று வைத்துக்கொள்ள ஏதாவது இருந்தால்தானே பெட்டியும் அலமாரியும் தேவை? படுக்க ஒரு பாய் மட்டும்தான். மழைக் காலத்தில் பாயின் கீழே போட ஒரு கோணிப்பை; தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு மரக்கட்டை; குடிதண்ணீர் வைத்துக்கொள்ள ஒரு சொம்பு; ஜபம் செய்ய துளசி மாலை; படிக்க, பகலில் தினமணி பத்திரிகை, இரவில் ராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம் போன்ற புத்தகங்கள் — இவ்வளவுதான் அவளுடைய ஆஸ்தி. அவள் கையில் ஒரு விசிறிதான் இருக்கும். எனக்கு இதுவே போதும் என்று நினைக்கும் மனப்பக்குவம் என் அம்மாவுக்கும் இருந்தது.

வராந்தாவிலோ கூடத்திலோ தரையில்தான் படுப்பாள் என் தாய். 2004-இல், இடுப்பில் எலும்புடைந்து வேறு வழியில்லாததால் என் தாய் கட்டிலில் படுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் என் தாய் கட்டிலில் உயிர் விட்டாள். இல்லையென்றால் தரையில், பாயில் தான் உயிர் துறந்திருப்பாள். 2004-க்கு முன்னும், பின்னுமான வித்தியாசம் அவ்வளவுதான்.

அன்னத்தை அதிகம் சமைக்க வேண்டும் என்று கூறுகிறது உபநிஷதம். பிறருக்கு அளிக்காமல் தான் மட்டும் சமைத்து உண்ணுவது பாவம் என்கிறார் கிருஷ்ண பகவான். இந்த உயர்ந்த செயல்களை உபநிஷதத்தையும், கீதையையும் படிக்காமலேயே என் தாய் செய்து வந்தாள். எங்கள் வீட்டில் குறைந்தது, குடும்பத்தினர் அல்லாத ஐந்து அல்லது ஆறு பேராவது ஊர்க்காரர்களோ, நண்பர்களோ தங்கி இருந்து படிப்பதோ, வேலைக்குப் போவதோ சகஜமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த பலரும், சென்னையில் படிக்க, வேலை பார்க்க என்றால் நேராக எங்கள் வீட்டிற்கு வந்த விடுவார்கள். அம்மா இருக்கிறார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு!

கூட்டுக் குடும்பமான எங்கள் வீட்டில் நாங்களே 20 பேர். தங்கியிருந்து படிப்பவர்கள் என நான்கைந்து பேர். மேலும் விருந்தினர்கள். அவ்வப்போது வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள். இவ்வளவு பேருக்கும் என் தாய்தான் சமைப்பாள், பரிமாறவும் செய்வாள். வீட்டில் எல்லோரும் உண்ட பிறகே, தான் உண்ணுவாள்.

1964-இல் சென்னை வந்த எங்களுக்கு குடும்ப டாக்டர் எங்கள் அம்மாதான். வாரா வாரம், ஏதாவது கஷாயங்கள் தந்துகொண்டே இருப்பாள். மிளகு, ஜீரா ரசம், மிளகு-வெந்தையக் குழம்பு போன்ற மருத்துவக் குணங்களுள்ள உணவைத்தான் சமைப்பாள். உணவின் மூலமே குடும்பத்தை நோய் நொடியில்லாமல் பாதுகாக்க முடியும் என்பதை மருத்துவம் படிக்காமலே அவள் படித்து வைத்திருந்தாள். இன்றுவரை நாங்கள் அம்மாவின் பாணியை மாறாமல் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். எங்கள் குடும்பத்தில் இன்றுவரை எந்தவிதமான பெரிய உடல் நலக்குறைவு இல்லாமல் இருக்க அதுவும் ஒரு பெரிய காரணம்.

காலை நாலரை மணிக்கு ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே வீடு, வாசல் எல்லாம் பெருக்குவாள், தண்ணீர் தெளிப்பாள், கோலம் போடுவாள். இது அம்மாவுடைய 87 வயது வரை ஒரு நாள்கூடத் தவறாமல் தொடர்ந்தது. ஒரு நாளைக்கு 13-14 மணி நேரம் வேலை என்பது என் தாய்க்கு சர்வ சாதாரணம். மிச்ச நேரம் தான் ஜபமும், தூக்கமும்.

ஆசார அனுஷ்டானங்களில் அவள் நெருப்புபோல. சின்னக் குழந்தை கூட அவள் மேல் பட்டுவிட்டால் உடனே குளித்துவிட்டுத்தான் மறு வேலை. அந்த அளவுக்கு அவள் தன்னுடைய உடலைப் புனிதமாக வைத்திருந்தாள். நாங்கள் எங்கள் அம்மா மடியில் படுக்க வேண்டுமென்றால் இரவு 10 மணிக்கு அவள் படுக்கும்போதுதான் கிட்டே போக முடியும். விதவா தர்மத்தை அந்த அளவுக்குக் கடைப்பிடித்த, உண்மை சன்யாசி அவள்.

என் அன்னை பெண்ணாக இருந்தும், விதவை ஆன பிறகு, பொன்னைத் தொட்டது கிடையாது. நான் பார்த்து பொன்னே அணியாத, என் அம்மாவுக்கு கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எங்கள் ஆசை. ஆனால், மறுத்துவிட்டார் அம்மா. அவள் இறந்த பிறகு, தகனம் செய்யும்போது அவளுடைய உடலில் ஒரு பவுன் நாணயத்தை வைத்தோம். மறுநாள் சஞ்சயனத்திற்கு அஸ்தி எடுக்கும்போது, அந்தத் தங்கக் காசு கொஞ்சமும் சேதமாகாமல், ஒரு மூலையில் மட்டும் சற்றுக் கருகி இருந்த நிலையில் கிடைத்தது. இதுவரை தங்கக் காசு அப்படியே கிடைத்ததே இல்லை என்று பிரமிப்புடன் சொன்னார் அங்கு இருக்கும் மயானக் காப்பாளர்.

தொண்ணூற்று ஏழு வயதில் என் தாயின் உடல், நிறத்தில் தங்கம்போல இருந்தது. இறந்த பிறகும் அப்படியே, பேத்திகளெல்லாம் பாட்டியின் கால், கை விரல்களுக்கு நகம் வெட்டும்போது, “பாட்டி உன் கால், விரல்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது, ஏன் எங்களுக்கு அந்த அழகான கால்களையும் விரல்களையும் நீ கொடுக்கவில்லை?” என்று கேட்கும் அளவுக்கு, அந்த வயதிலும் அழகானவளாக இருந்தாள் எங்கள் தாய். அது மனித உடல் இல்லையே, ஒரு யோகியின் உடல் அல்லவா, அதுதான் காரணமோ என்னவோ?

நான் பிரபல ஆடிட்டராகப் பெயர் எடுத்த பிறகும், பத்திரிகைத் துறையிலும் மற்ற துறைகளிலும் எனக்கு தேசிய அளவில் பெயரும் புகழும் வந்த பிறகும், என் தாய் ‘இதோ பார், என்னுடைய பிள்ளையை’ என்று வெளியில் பேசியதே கிடையாது. மனதுக்குள்ளே பெருமை இருந்திருக்கலாம். ஆனால், அவள் வெளியில் ஒரு வார்த்தை கூட அது பற்றிப் பேசியது கிடையாது.

1987-இல் என்னை மத்திய அரசு கைது செய்தபோது, சிறையில் இருந்து, நான் வெளியில் வருகிற வரை, அம்மா யாரிடத்திலும் பேசவே இல்லை. சரியாக உண்ணவில்லை. தன் பிள்ளை கைதாகி, குடும்பத்துக்கு இழுக்குத் தேடி விட்டானே என்று மனதிற்குள் வருந்தினாள். போலீஸில் கைது செய்யப்படுவது என்பது குடும்பத்துக்கு இழுக்கு, கௌரவக் குறைச்சல் என்று கருதிய தலைமுறை என் தாயுடையது. தினமணி பத்திரிகையை, குறிப்பாக, ஏ.என். சிவராமனின் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுத்துவிடாமல் படிக்கும் என் அம்மாவுக்குத் தவறு செய்தது அரசாங்கம்தான் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்த பிறகுதான் அவள் மனதில் பட்ட காயம் நீங்கியது.

அவள் எனக்கு ஏற்பட்ட அருமை, பெருமைகளைப் பெரிதாக நினைக்கவில்லையே, அது ஏன் என்று பல நாள் நான் யோசித்திருக்கிறேன். பிறகு, எனக்குப் புரிந்தது இதுதான். நான் என்னதான் புகழ் பெற்றவனாக இருந்தாலும் அவள் பார்வையில் நான் நான்கு பிள்ளைகளில் ஒருவன், அவ்வளவே. இப்படி எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை அவளிடம் இருந்ததால்தான் எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பமாக இன்றும் தொடர்கிறது.

அதுமட்டுமல்ல, நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் எல்லாம் என் அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்கள். அதனால் அவள் பூரித்துப் போனது கிடையாது. தாழ்ந்திருந்தபோது அவளை உற்றார் உறவினர் சிறுமைப்படுத்தியதை அவள் எப்படி எதிர்கொண்டாளோ, அதுபோல உயர்ந்த நிலை வந்தபோதும் அதையும் எடுத்துக்கொண்டாள். அதனால்தான் அவள் ஒரு யோகி.

என் அம்மா தியாகத்தின் உருவான தாய்மைக்கு ஓர் உதாரணமே தவிர, விதி விலக்கல்ல. இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களில் என்னுடைய அம்மாபோல ஒரு தாய் தன்னுடைய உடல், பொருள், ஆவியை குடும்பத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் தியாகம் செய்வதால்தான் இன்று நம் சமுதாயம், கலாசாரம், குடும்பங்கள் இவையெல்லாம் காப்பாற்றப்படுகின்றன. அதனால்தான் நம்முடைய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது.

குறிப்பு: பிரபல தணிக்கையாளரும்  பத்திரிகையாளருமான திரு. சு. குருமூர்த்தி தனது அன்னை குறித்து எழுதிய கட்டுரை இது.

 நன்றி: தினமணி (11.05.2013)

(இன்று – மே 12 -அன்னையர் தினம்)

கடவுளுக்குத்தான் வெளிச்சம்…

சிந்தனைக்களம்  

பொறுப்பான பதவிகளில் தகுதியானவர்கள் அமரும்போதுதான் அந்தப் பதவிக்குப் பெருமை. பதவியால் அலங்கரிக்கப்படுபவர்களைவிட, யாரால் அந்தப் பதவி அலங்கரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் மரியாதை. அரசியல் சட்ட அமைப்புகளான குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தணிக்கை ஆணையர், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஆளுநர்கள் போன்ற எல்லாப் பதவிகளுமே சரியானவர்கள் பதவியில் இருந்தால் மட்டுமே அந்தப் பதவிக்கும் பெருமை, தேசத்துக்கும் பெருமை.

 குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேசத்தின் மிக உயர்ந்த பதவி குடியரசுத் தலைவர் பதவிதான். அந்தப் பதவியை வகிப்பவர்தான் தேசத்தின் முதல் குடிமகன் எனும்போது சர்வதேச அளவில் நமது நாட்டு மக்களின் தராதரத்திற்கு உதாரணமாகக் குடியரசுத் தலைவரைத்தான் அடையாளமாகக் கருதுவார்கள்.

 வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், அந்தப் பதவியை அலங்கரித்த மாமனிதர்களையும், அந்தப் பதவிக்கே களங்கம் கற்பித்த தவறான தேர்வுகளையும், குடியரசுத் தலைவர் பதவியின் மகத்துவம் உயர்ந்து மரியாதைக்குரியதாக இருந்த காலகட்டத்தையும், தரம் தாழ்ந்து நம்மைத் தலைகுனிய வைத்த சம்பவங்களையும் மீள்பார்வை பார்க்க வைக்கிறது.

 குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்வதற்கு 35 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதுமா என்றால் “ஆமாம்’ என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியவில்லை. கையெழுத்துப் போடத் தெரிந்தவராக, அரசியல் சட்டம் தெரிந்தவராக, தேசப்பற்று மிக்கவராக, சமைக்கத் தெரிந்தவராக, ஆமாம் சாமி போடத் தெரிந்தவராக என்று வெவ்வேறு விதமான தகுதிகள் கொண்டவர்களாக வெவ்வேறு காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை அனுபவம்.

 சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று குடியரசுத் தலைவர்களாகப் பதவியை அலங்கரித்த பாபு ராஜேந்திரப் பிரசாத், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர் ஹுசைன் ஆகிய மூவரும் 1950 முதல் 1969 வரை அவர்கள் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்தவர்கள். அவர்களால் பதவி பெருமை பெற்றது என்பதுடன், இந்தியக் குடியரசு அவர்களை முதல் குடிமகன்களாகத் தேர்ந்தெடுத்ததில் பெருமிதம் அடைந்தது.

 ஜாகீர் ஹுசைனின் அகால மரணத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவமும், அதை அலங்கரித்தவர்களின் தகுதியும் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அடுத்த 15 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் மாளிகையின் இருண்ட காலம் என்று சொன்னால்கூடத் தவறில்லை. தேசத்தின் முதல் குடிமகனுக்கான அடிப்படைத் தகுதியே பிரதமரின் விரலசைப்புக்குத் தலையாட்டுவது என்று சட்டத்திருத்தம் கொண்டு வராத குறையாக அந்தப் பதவி தரம் தாழ்த்தப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.

 காங்கிரஸ் கட்சியில் 1969-இல் ஏற்பட்ட பிளவு, குடியரசுத் தலைவர் பதவி தரம் தாழ்ந்து போனதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனுவில் சஞ்சீவ ரெட்டியின் பெயரை முன்மொழிந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்தும் இட்டார்.

 சஞ்சீவ ரெட்டியையும், தனது கட்சித் தலைமையையும் முதுகில் குத்தும் நம்பிக்கைத் துரோகத்தை இந்திரா காந்தி அரங்கேற்றியதுதான், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்தப்பட்ட முதல் அவமரியாதை. தனது அதிகார பலத்தையும், நயவஞ்சகத்தையும் முழுமையாகப் பயன்படுத்தித் தான் சார்ந்த கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிகளின் சுயேச்சை வேட்பாளரான வி.வி. கிரியைக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வைத்தார் அவர்.

 இந்திரா காந்தி அனுப்பும் உத்தரவு எதுவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடுவதுதான் குடியரசுத் தலைவர் பதவியின் முழுமுதற் கடமை என்று செயல்பட்டதால் பெருமைக்குரிய “ரப்பர் ஸ்டாம்ப்’ குடியரசுத் தலைவர் என்கிற கேலிப் பெயருக்கு ஆளானதைப் பெருமையாகக் கருதிச் செயல்பட்ட குடியரசுத் தலைவர் வி.வி. கிரி. வி.வி. கிரியும் சரி, அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த பக்ருதீன் அலி அகமதும் சரி, ஆளும் கட்சியின் கைப்பாவைகளாகவும், பிரதமர் அலுவலகம் அனுப்பும் அத்தனை உத்தரவுகளிலும் படித்துப் பார்க்காமல் கையொப்பமிடும் இயந்திரங்களாகவும் செயல்பட்ட அவலம் நிகழ்ந்தது.

 ஜூன் 25, 1975! சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள் அது. அன்றுதான் இந்திரா காந்தி அரசால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாவம், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நள்ளிரவில் தட்டி எழுப்பப்பட்டார். அவர்முன் நீட்டப்பட்ட அவசரநிலைச் சட்டப் பிரகடனத்தில், எந்தவிதக் கேள்வியும் எழுப்பாமல் கையெழுத்திட்டுத் தனது இந்திரா விசுவாசத்தைப் பிரகடனப்படுத்திய மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தூங்கப் போனார்.

 விடிந்தபோதுதான் இந்தியாவே இருண்டுவிட்டது வெளிப்பட்டது. செய்திகளே இல்லாமல் பத்திரிகைகள் வெளியாகின. விமர்சனத்துக்கு வழியே இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியத் திருநாடே அவசரநிலைச் சட்டத்துக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகித் தவித்தது. கேள்வி எதுவும் கேட்காமல் அவசரநிலையைப் பிரகடனம் செய்த பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்திய களங்கத்தின் கறை காலத்தால் அழியக்கூடியதா என்ன?

 1977-இல் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசு தோற்கடிக்கப்பட்டு, ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அவரால் பதவியின் இழந்த பெருமை மீட்கப்பட்டதா என்றால் இல்லை. 1982-ல் கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிற்று. மீண்டும் கிரி – அலி நாள்களுக்குத் தாழ்ந்தது குடியரசுத் தலைவர் பதவியின் மதிப்பும் மரியாதையும்!

 இந்திரா காந்தியின் அகால மரணமும், ராஜீவ் காந்தியின் வெற்றியும் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் சற்றும் எதிர்பாராதவை. தான் மீண்டும் இன்னொரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பதை அறிந்தவுடன் அரசியல்வாதியான கியானி ஜெயில் சிங் தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் கூடப் பொருள்படுத்தாமல் தரம் தாழ்ந்து அரசியல்வாதி போலச் செயல்படத் துணிந்தார்.

 ராஜீவ் காந்தியைப் பதவி நீக்கம் செய்து இன்னொரு ஆட்சியைப் பதவியில் அமர்த்தினால் என்ன என்பது வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபடி சதித்திட்டம் தீட்டத் தொடங்கிய ஜெயில் சிங் மறந்துவிட்ட ஒரு எதார்த்த உண்மை என்ன தெரியுமா? ராஜீவ் காந்தி அரசுக்கு அன்றைய மக்களவையில் ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது என்பதுதான்.

 தரம் தாழ்ந்தவர்களைத் தகுதிக்கு மீறிய பெரிய பதவிகளில் தராதரம் தெரியாமல் அமர்த்துவதால் வரும் சோதனைகள் இவை. ஜெயில் சிங்கின் சிறுபிள்ளைத்தனமான (சில்லறைத்தனமான) செய்கைகளை நமது பத்திரிகைகள் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் போக்கு என்று வர்ணித்ததுதான் அதைவிட விசித்திரம்.

 பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி தனது இழந்த மரியாதையையும், பெருமையையும் மீண்டும் பெற்றது ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். சுதந்திர இந்திய சரித்திரத்தில் மிகவும் இக்கட்டான, பிரச்னைக்குரிய காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக ஆர். வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான், கூட்டணி அரசுகள் அமையும்போது குடியரசுத் தலைவராக இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் நெறிமுறைகளாக நிலை பெற்றன.

 எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படிப்பட்ட நிலைப்பாடைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்ததால்தான், “விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலைவர்’ (ரூல்புக் பிரசிடென்ட்) என்று ஆர். வெங்கட்ராமன் சரித்திரத்தில் இடம் பெற்றார். 1989-இல் தனிப்பெரும்பான்மை இல்லாத ஆனால், தனிப்பெரும் கட்சியாக 9 } வது மக்களவையில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பது, கூட்டணி அமையுமானால் அதை எப்படி அனுமதிப்பது போன்ற சிக்கலான அரசியல் சட்டப் பிரச்னைகளுக்குத் தேர்ந்த முடிவுகளை எடுத்து, வரைமுறைகளை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திய வரலாற்றுப் பெருமை அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனையே சாரும்.

 ஆர். வெங்கட்ராமனைத் தொடர்ந்து சங்கர் தயாள் சர்மாவும், ஆர்.கே. நாராயணனும் அந்த உயர்ந்த பதவியின் மரியாதையைக் காப்பாற்றியதுடன் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர்களாகத் தங்களது செயல்பாடுகளால் மதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அரசியல் தொடர்புள்ளவர்களே குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு மாற்றப்பட்டது அ.ப.ஜெ. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். குடியரசுத் தலைவர் பதவிக்கு அதுவரை இல்லாத மதிப்பும், மரியாதையும், மக்கள் செல்வாக்கும் ஏற்பட்டதும் அவரது பதவிக்காலத்தில்தான்!

 அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதே ஒரு வித்தியாசமான அனுபவம். தான் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதே கூட அப்துல் கலாமுக்குத் தெரியாது. அன்றைய பிரதமர் வாஜ்பாயி, “எங்கே இருக்கிறார் அப்துல் கலாம்?’ என்று விசாரிக்கச் சொன்னபோது, அவர் தமிழகத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிளஸ் டூ மாணவ – மாணவியருடன் உரையாடிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரைப் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது.

 தகைசால் சான்றோர் பட்டம், பதவிக்காக விண்ணப்பிப்பது வழக்கமல்ல என்பது அப்துல் கலாம் விஷயத்தில் நிரூபணமாகியது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும்படி பாபு ராஜேந்திரப் பிரசாதை எல்லோரும் வற்புறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜியை, வல்லபபாய் பட்டேலின் மறைவுக்குப் பிறகு காணப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சராகவும், 1952-இல் சென்னை ராஜதானியில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. காமராஜின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொள்ளச் செய்ய வற்புறுத்த வேண்டி வந்தது.

 வேறு சிலர் பெரிய பதவிகள் அவர்களைத் தேடி வந்தும், சற்றும் பொருள்படுத்தாமல் தாங்கள் கொண்ட கொள்கையிலும், செயல்திட்டங்களிலும் தொடர்ந்து நடை போட்டனர். உதாரணமாக, சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராக இருக்கும்படி பண்டித ஜவாஹர்லால் நேருவே வற்புறுத்தியும் அதை நிராகரித்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். முதலிலேயே குறிப்பிட்டதுபோல, பதவிகள் அந்தப் பதவிகளை அலங்கரிப்பவர்களால்தான் பெருமை அடைகின்றன. தகுதியற்றவர்கள் மரியாதைக்குரிய பதவிகளில் அமர்த்தப்படும்போது மதிக்கப்படுவதில்லை, சகிக்கப்படுகிறார்கள், அவ்வளவே!

 1987-இல் மீட்டெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-இல் மீண்டும் அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. பிரதிபா தேவிசிங் பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கு அவருக்கு இருந்த தகுதிதான் என்ன? விடை தெரியாமல் புதிராக இருந்த இந்தக் கேள்விகளுக்கு ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோது விடையளித்தார்.

 “”நமது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் நேரு குடும்பத்துக்கு ஆற்றிய சேவைக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசுதான் குடியரசுத் தலைவர் பதவி. நேரு குடும்பத்தில் சமைப்பது, வரும் பார்வையாளர்களுக்கு டீ, காபி கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது என்று கெüரவம் பார்க்காமல் சேவை செய்திருக்கிறார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், நாம் அப்படியெல்லாம் நேரு குடும்பத்துக்குக் காட்டும் நன்றி விசுவாசத்திற்குப் பலனில்லாமல் போகாது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்” என்று ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டார் அவர்.

 பத்துப் பாத்திரம் தேய்த்த நன்றி விசுவாசத்துக்குக் கொடுக்கப்பட்ட பதவிக்கு, காங்கிரஸ் கட்சி மக்கள் மன்றத்தில் தந்த விளக்கமே வேறு. முதன் முறையாக ஒரு பெண்மணியைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று காரணம் கூறினார்களே, பிரதிபா பாட்டீலைவிடத் தகுதியான பெண்மணிகள் யாருமே காங்கிரஸ் கட்சியில் இல்லையா, இல்லை சோனியா காந்தியின் கண்களில் தட்டுப்படவில்லையா? ஒருவேளை, அவரைத் தவிர வேறு யாரும் நேரு குடும்பத்துச் சமையல் அறையில் வேலை செய்யவோ, பத்துப் பாத்திரம் தேய்த்துத் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தவோ முயற்சிக்கவில்லையோ என்னவோ…

 இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பை 2007 போலவே மீண்டும் சோனியா காந்தியிடம் ஒப்படைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சோனியாவின் தேர்வு என்று சொன்னால், அது நிச்சயமாக அப்துல் கலாம் போன்ற தகுதியும் தரமும் வாய்ந்த, பதவிக்குப் பெருமை சேர்க்கும் ஒருவராக இருக்க வழியில்லை. நேரு குடும்பத்திற்குச் சேவகம் செய்யும், பத்துப் பாத்திரம் தேய்க்கும், வீட்டைப் பெருக்கி மெழுகும், தோட்டத்தைப் பராமரிக்க உதவும் இத்தியாதி இத்தியாதி சேவகம் செய்யும் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.

 இப்போதைக்கு பிரணாப் முகர்ஜி, மீராகுமார், பி.ஏ. சங்மா, ஹமீத் அன்சாரி போன்றவர்களின் பெயர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரணாப் முகர்ஜி அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டுவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். அவரது எண்ணம் புரிந்து கொள்ளக் கூடியதும்தான்.

 இன்றைய மத்திய அமைச்சரவையிலேயே அதிகமான பணிச்சுமையைத் தாங்குபவர் பிரணாப்தான். வயதுக்கு மீறிய வேலைப்பளுவால் துவண்டு போயிருக்கிறார் மனிதர். இரண்டாவதாக, தன்னை ஒருகாலமும் பிரதமராக்க சோனியா காந்தி சம்மதிக்க மாட்டார் என்று அவருக்குத் தெரியும். மூன்றாவதாக, இன்றைக்கு இருக்கும் நிதிநிலைமையில், இருபது ஆண்டு கால தாராளமயமாக்கலின் தாக்கத்தால் தளர்ந்தும் துவண்டும்போய்த் தள்ளாடும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் தன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது கூடவா அவருக்குத் தெரியாது.

 இதிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தஞ்சம் அடைந்துவிடப் பிரணாப் முகர்ஜி நினைப்பதில் தவறில்லை. ஆனால், சோனியா காந்தி அதற்கு அனுமதிப்பாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற உண்மையை உரக்கச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டார் சங்மா. அதனால் அவரைக் குடியரசுத் தலைவராக்க சோனியா காந்தி ஒப்புக் கொள்வாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 சரி, மீரா குமார்? வேறு ஏதாவது வீட்டு வேலை நன்றாகச் செய்யும் ஊழியர்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

-எஸ்.குருமூர்த்தி 

நன்றி: தினமணி (09.06.2012)


.