நாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்

கே.பி.சுந்தராம்பாள்

(பிறப்பு: அக். 11)
கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.


நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும்.

‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

 
காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்….

முழு கட்டுரையைக் காண்க:  ஆம்பல்


 

காண்க:

கே.பி.சுந்தராம்பாள் (விக்கி)

K.B.SUNDARAMBAL

கொடுமுடிக்குயில்  (கீற்று)

கே..பி.எஸ். (ஈகரை)

நாடக உலகின் ராணி (மாலைமலர்)

கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் (நட்பு)

கே.பி.எஸ்.சை மாற்றிய மகாத்மா சந்திப்பு (தினமலர்)

கருணாநிதி வசனத்தை  எதிர்த்த கே.பி.எஸ் (முருகன்.org)

கானக்குயில் (தமிழ்நாட்டு தியாகிகள்)

கே.பி.எஸ் பாடல்கள் (ஒலி)

நாடகக் கலைஞர்களுக்கு வழிகாட்டி

விஸ்வநாத தாஸ் 
(பிறப்பு: ஜூன் 16) 
…நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருகனாக வந்தாலும், அரிச்சந்திரனாக வந்தாலும், தாஸ் சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடிச் சுதந்திர உணர்ச்சியூட்டுவதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தார். வெள்ளை நிர்வாகக் காவல்துறை அவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டிருக்கும், அவர் மேடைக்கு வந்ததுமே மக்கள், ‘வெள்ளை கொக்கு பாடுங்க’ என்பார்கள். பாடிய உடனே தான் கைது செய்யப்படுவோம் என்பதை தாஸ் அறிவார் என்றாலும் பாடுவார். உடனே கைது செய்யப்படுவார். சிறைக்குப் போவார். ஒரு நாள் நாடகம். ஆறு மாதம் அல்லது ஓராண்டு சிறை. இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த தாஸ், தன் குடும்பச் சொத்தும் அழிந்தும், குடும்பம் வறுமைப்பட்டுக் கடன்காரராக தாஸ் மாறிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. என்றாலும், லட்சியம் தேசத்தையே முன்நிறுத்தியது. அக்காலத்திய தலைவர்கள் மேற்கொண்ட சுதந்திரப் பிரசாரத்துக்குச் சற்றும் குறையாத அளவுக்கு தாஸும், சுதந்திரக் கிளர்ச்சி செய்திருக்கிறார்.

தாஸை வைத்து நாடகம் நடத்தும் நாடக கான்ட்ராக்ட்காரர்களை போலீஸ் மிரட்டியதன் காரணமாக, அவருக்கு நாடகங்கள் குறைந்தன. அதோடு ‘நாவிதர்’ சமுதாயத்தைச் சேர்ந்த தாஸோடு நடிக்க மாட்டோம் என்று நடிகைகள் பின்வாங்கினார்கள். இது தாஸை வெகுவாகப் பாதித்தது. மனதளவில் நொந்துபோனார். ஒவ்வொரு நாடகத்திலும், மறக்காமல்,“தாழ்த்தப்பட்ட சோதரைத் தாங்குவோர் உண்டோ, மண்ணில் ஏங்குவோர் உண்டோ” என்ற பாடலைப் பாடிக் கொண்டுதான் இருந்தார். நடிகைகளில், கே.பி.ஜானகி அத்தடையை மீறி அவருடன் நடிக்க முன்வந்தார். பிறகு முத்துலட்சுமி என்ற பிராமண நடிகை. பிறகு மற்றவர்களும் முன் வந்தார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டன் குதித்தது. பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களை கலந்து கொள்ளாமலேயே இந்தியாவை யுத்தத்தில் ஈடுபடச் செய்த ஜனநாயக மீறல் போக்கை விமர்சித்த காங்கிரஸ் பேரியக்கம், யுத்த நடவடிக்கையில் இந்தியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்தது. சென்னை ஆளுநர் எர்ஸ்கின், தாஸோடு தொடர்பு கொண்டார். யுத்தத்தை ஆதரித்து மேடையில் பாடினால், தாஸுக்கு ஆயுள் முழுவதும் ஆயிரம் ரூபாய் அரசு தரும் என்று பேரம் பேசினார். இது லட்சியத்துக்கும் மானத்துக்கும் இடப்பட்ட சவால் என்பதை உணர முடியாதவரா தாஸ்? கவர்னர் எர்ஸ்கினின் வேண்டுகோளைப் புறக்கணித்தார், விசுவநாததாஸ்.

அன்றைய மேயர் வாசுதேவ் (நீதிக் கட்சி), விசுவநாத தாஸைப் பார்க்க வந்தார். கடன் சுமையால் தாஸின் வீடு ஏலத்துக்கு வர இருந்தது. எல்லாவற்றையும் இழந்த தாஸின் கடைசிச் சொத்து அந்தப் பரம்பரை வீடு ஒன்றுதான். தாஸின் குடும்பம் அங்கேதான் வாழ்ந்தது. இதைத் தெரிந்து கொண்ட மேயர் வாசுதேவ், தாஸைச் சந்தித்தார். பணம் தருவதாகவும், வீட்டையும் மீட்டுத் தருவதாகவும், இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத் தருவதாகவும், அதற்குரிய பிரதிபலனாக, தாஸ் காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

‘என்னால் புல்லைத் தின்ன முடியாது’ என்றார் தாஸ். 1940 டிசம்பர் 31-ம் நாள் இரவு, ‘வள்ளித் திருமணம்’ நாடகம், சாலக் கொட்டகை எனப்பட்ட ராயல் தியேட்டரில் நிகழ இருந்தது. ஒரு வார நாடக வருவாயில் கடனை ஓரளவு அடைத்து விடலாம் என்று நினைத்திருந்தார் தாஸ். முதல் மூன்று நாட்கள் மேடை ஏறும் உடல் நிலையில் அவர் இல்லை. அன்று இரவு மேடைக்கு முருகன் வேஷத்தில் வந்தார். முதல் காட்சி. முருகன், மயிலாசனத்தில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.

‘மாயா உலகம்-இம் மண் மீதே’ என்ற பல்லவி. தொடர்ந்து பாட முடியாமல் அவர் தலை சாய்ந்தது.  விசுவநாததாஸ் முருகன் வேஷத்தைக் கலைக்காமலேயே இறந்துபோனார். அதே வேஷத்தோடே அந்தக் கலைஞர்.  தாஸ் வாழ்ந்தது 54 ஆண்டுகள் மட்டுமே. இதில் 29 முறை சிறைக்குச் சென்றார் அந்த வீரத் தியாகி. தேசத்தைத் தவிர, விடுதலையைத் தவிர வேறு எதையும் நினைக்காத அந்தக் கலைஞனை, பின்னால் சுதந்திர இந்தியப் பதவிக்கு வந்தவர்கள் மறந்தே போனார்கள்.  .

செய்யும் தொழில் எதுவாயினும் அதில் தேச சேவை செய்ய முடியும் என்று நிரூபித்த நாடக கலைஞர் விஸ்வநாத தாஸ். அவரை நெஞ்சில்  இருத்திப் போற்றுவதே, தடம்புரளும்  இந்நாளைய கலையுலகத்தை மீட்சிபெற வைக்கும்.
 
 
 
காண்க:
 

மழலை இலக்கியம் படைத்த மாமா

ஆனந்த்  பை
மறைவு: பிப். 24
அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை.
கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா – சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929  ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த  இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12  வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற ஆனந்த் பை,  1954  ல் ‘மானவ்’ என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கி நடத்த முடியாமல் கைவிட்டார். பிறகு, டைம்ஸ் ஆப் இந்தியாவின் ‘இந்திரஜால்’ காமிக்ஸ் வெளியீட்டு பிரிவில் பணி புரிந்தார். 
1967  ல் இவரது மனக்கண்ணைத் திறக்கும் ஒரு  நிகழ்ச்சி நடந்தது.  தூர்தர்ஷன்  நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆனந்த் பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க புராணங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட பதில் அளித்த குழந்தைகள்,  நமது இதிகாசமான ராமாயணத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியதைக் கண்டார். ஸ்ரீ ராமனின் தாய் பெயர் சொல்ல முடியாத குழந்தையைக் கண்ட அவர், அப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துணிந்தார்.
நல்ல ஊதியம் தரும் வேலையைக் கைவிட்டு, ‘அமர் சித்திரக் கதா’  நிறுவனத்தை அதே ஆண்டில்  தொடங்கினார். பிரபல நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கிய நிலையில், இந்திய புக் ஹவுசின் ஜி.எல்.மிர்ச்சந்தனி ஆனந்த் பைக்கு கை கொடுத்தார். பாரதத்தின் பாரம்பரியம், இலக்கியங்கள், பண்பாடு, தலைவர்கள் குறித்த சித்திரக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே நிறுவனம் புகழ் பெற்றது. நிறுவனம் வளர்ந்தபோது, சித்திரக்கதை எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் மாறினார் ஆனந்த் பை.
ராமாயணம்,  மகாபாரதம்,  பாகவதம் கதைகள் மட்டுமல்லாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  நமது நாட்டின் மன்னர்கள்,  வீரர்கள், புலவர்கள், ஆன்மிக ஞானிகள், துறவிகள், சமயச் சான்றோர்கள், தொண்டுள்ளம் படைத்த மகான்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் குறித்த படக்கதைகளை அமர் சித்திரக் கதா நிறுவனம் வெளியிட்டது.  தற்போது, 440  தலைப்புகளில் 8.6  கோடி காமிக்ஸ் புத்தகங்களை, இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்த சித்திரக் கதை படித்து வளர்ந்த குழந்தைகளின் ஞானம் பாரதப் பாரம்பரியம் குறித்த தெளிவுடன் விசாலமானது.
1969 ல் ஆனந்த் பை நாட்டின் முதல் கார்டூன் சிண்டிகேட் நிறுவனமான ‘ரங் ரேகா பியுச்சர்ஸ்’ நிறுவினார்; 1980 ல் ‘டிவிங்கிள்’  என்ற ஆங்கில குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதன்மூலமாக லட்சக் கணக்கான குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தார்.
ராமுவும் சாமுவும், கபிஷ், லிட்டில் ராஜி, பேக்ட் பேண்டசி, பன் லேண்ட் போன்ற சித்திரத் தொடர்கள்  ஆனந்த் பையால் உருவாக்கப்பட்டவை. இவை பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் வெளியாகி, மழலைகளை மகிழ்வித்தன. தமிழில் வெளியான பைக்கோ  நிறுவனத்தின்  ‘பூந்தளிர்’ மாத இதழ், அமர் சித்திரக் கதா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இக்கதைகளை தமிழில் (தமிழாக்கம்: வாண்டுமாமா) வெளியிட்டது.
‘ஏகம் சத் (இறைவன் ஒருவரே)’, ‘வெற்றிக்கு ஏழு பாதைகள்’ ஆகிய இரு வீடியோ படங்களையும் ஆனந்த் பை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தயாரித்துள்ளார். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் நூல்கள், ஆளுமை வளர்ப்பு நூல்களையும் பை எழுதியுள்ளார். தனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை.
இவரது வாழ்வே, நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவு படுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த  வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால்  ‘பை மாமா’ ஆனார்.
குழந்தைகள்  இலக்கியம் படைப்பதில் பாரம்பரியம் காத்த ஆனந்த் பை, கடந்த பிப். 24  ம் தேதி மறைந்தார். ஆயினும், அவர் படைத்த அமர் சித்திரக் கதைகள் உள்ள வரையிலும் அவர் என்றும்,  புதிய புதிய  குழந்தைகளின் வாசிப்பில் வாழ்வார்.
-குழலேந்தி
காண்க:
.