நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?

கவிதை

நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?

நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!
 
ஊழல் செய்து வயிறு வளர்க்கும்
உழைப்பே இல்லா உண்ணிகள் ஆட்டம்!
லஞ்சப் பேயை லாவகம் ஆக்கி
லாபம் பார்க்கும் சுயநலக் கூட்டம்!
 
பகுத்தறி வென்ற பெயரினில் நாட்டின்
பாரம்பரியம் இகழ்ந்திடும் துஷ்டர்!
முற்போக் கென்று சொல்லிக் கொண்டே
முன்னேறாமல் தடுக்கும் கயவர்!
 
ஏழை, செல்வர் பிளவு பெருக்கி
ஏய்க்கும் எண்ணம் நெஞ்சில் கொண்டோர்!
பசியால் வாடும் ஏழைகளின் பால்
பரிவினைக் காட்டும் பண்பினை அற்றோர்!
 
கோயிலுக் குள்ளே குண்டு வெடிக்கும்
குரூர மான பயங்கர வெறியர்!
மதப்பிரி வினையால் நாட்டைப் பிளந்தும்
மனமடங் காத மமதை கொண்டோர்!
 
சாதிக ளுக்குள் சங்கடம் வளர்த்து
சண்டைகள் மூட்டும் சகுனி குலத்தோர்!
சேவை என்ற பெயரினில் நாட்டை
கூறாய் ஆக்கும் ஐந்தாம் படையோர்!
 
ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்யும்
ஆணவம் மிக்க அரசியல் தலைவர்!
நம்பிய வர்களின் கழுத்தை அறுத்து
தன்னலம் பேணும் தந்திரக் காரர்!
 
அந்நிய நாட்டு சித்தாந் தங்கள்
அமுதம் என்று சொல்லித் திரிவோர்!
பண்பா டொழிக்க முயற்சிக் கின்ற
பதர்களுக் குதவும் பாவ மனத்தோர்!
 
மத மாற்றத்தால் நாட்டைக் குலைக்கும்
மதியிலி செயலை வளர்க்கும் தீயோர்!
காட்டிக் கொடுக்கும் துரோகத் தனத்தால்
நாட்டைக் கெடுக்கும் நாணய மற்றோர்!
 
ஒற்றுமை விதையில் அமிலம் ஊற்றி
ஒழிக்க நினைக்கும் அண்டை நாட்டோர்!
தினமும் படுகொலை செய்து மகிழும்
தீமையின் உருவாய் வாழும் பகைவர்!
 
எத்தனை வடிவம் எடுத்திடும் போதும்
எத்தர்கள் உருவம் ஒன்றே யன்றோ?
இத்தனை தெரிந்தும் இனிமேல் நாமும்
இழிவைத் தாங்கிப் பொறுப்பது நன்றோ?
 
நாடு என்பது நாமென்று உணர்ந்தால்
நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?
நாம் எல்லோரும் இணைந்து எழுந்தால்
நரகா சுரர்கள் அற்பம் தானே?
– வ.மு.முரளி
காண்க:
 எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை
அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 
.

மன்னித்துவிடு மகாத்மா!

மகாத்மா காந்தி
(பிறப்பு: அக். 2)
(நினைவஞ்சலிக் கவிதை)

 

புயலொன்று புறப்பட்டுவந்தபோது,
ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க.
அணைகள் கட்டிப் பார்த்தார்கள்  தடுக்க.
நீ மட்டும்தான் பூவாக நின்று போராடினாய்.

அன்னியர்கூட்டம் அணு ஆயுதம் ஏந்தி நின்றபோது
நீ மட்டுமே அன்பை ஆயுதமாக ஏந்தி நின்றாய்.
முரட்டுக் கூட்டங்களுக்கு முன் நீ முன்வைத்ததெல்லாம்
முன்பு யாரும் சொல்லாத மந்திரம்.

அடக்குமுறைக் கரங்களுக்கு
அஹிம்சையைப் பரிசளித்தாய்.
விலங்கு பூட்டிய கைகளுக்கு
விருதுகள் கொடுத்தாய்.
தேசத்தைப் பிடித்தவர்களை
நேசத்தைக் கொட்டி விரட்டினாய்.
உலக வரலாற்றில் நீ மட்டுமே
புதிய பக்கத்தைப் புரட்டினாய்.

உன் நடைபாதை
எங்கள் புனிதப் பயணத்துக்கு வழிகாட்டியது.
உன் உடைபாதை
எங்கள் பொருளாதார வாழ்வுக்கு ஒளி கூட்டியது.

உன் வெள்ளைக் கதர் ஆடையை சில
கருப்பு மனிதர்கள் அணிந்திருப்பதற்காக
நாங்கள் வேதனைப்படுகிறோம் மகாத்மா.
அது மட்டுமல்ல-

எங்களை மன்னித்துவிடு.
தேசத்துக்கே ஊன்றுகோலான
உன் கைத்தடியைத் தொலைத்துவிட்டு
திண்டாடி நிற்கும் எங்களை மன்னித்துவிடு.

– ஆதலையூர் சூரியகுமார்
காண்க:

வீரத்தாயை வணங்குவோம்!

பகத்சிங்
(பிறப்பு: செப். 28)
 அஞ்சலிக் கவிதை

சட்லஜ் நதியின் கலகல ஓசை
அதன் அருகில் தூங்க உனக்கும் ஆசை
ஹூசன்வாலா சமாதிக்குள் நீ….
நிரந்தரமாக சஹீத் ஆனாய்.

சந்தூ குடும்ப ஆதவன் நீ
பகத் என்ற தேச பக்தன் நீ
சந்தன மணம் பரப்பினாய் நீ
சிம்ம கர்ஜனை எழுப்பினாய் நீ

பதிமூன்று வயதில் தொடங்க ஒரு புரட்சி
ஆனது ஆங்கிலேய ஆட்சிக்கு ஒர் மிரட்சி
சர்க்காரின் புத்தகங்ளுக்குத் தீ
அவர்களது உடைகளுக்கும் தீ

பரவியது எங்கும் சுதந்திரத் தீ
அடிக்கு அடி எங்கும் செய்தி
அஞ்சா நெஞ்சம் கொண்ட தங்கமே
வெடிகுண்டை வைத்த இளம் சிங்கமே

“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற கோஷம்
கிளம்பியது நாட்டில் ஆக்ரோஷம்
ஆங்கிலயேர் மீது கொண்டது துவேஷம்
கலைந்து போனது அவர்களது வேஷம்.

நேர்ந்தது லாலா லஜபதிராயின் கொலை
வைத்தாய் ஆங்கிலேயருக்கு உலை
சுட்டாய் அவனைத் திட்டத்துடன்
தூக்கிலும் தொங்கினாய் மகிழ்ச்சியுடன்.

உன் தேசப் பற்றை என்னவென்று சொல்ல
யாரும் நிகரில்லை உன்னை வெல்ல.
உன்னை நாங்கள் எப்படி மறப்போம்?
உன்னைப் பெற்ற வீரத் தாயை வணங்குவோம்.

                      – விசாலம்
                       நன்றி: வல்லமை

காண்க:

புரட்சியின் தளகர்த்தர்கள்
.