தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது எப்படி?

diwali 221014

‘சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான்’ என்ற பொன்மொழியைக் கேட்டிருப்போம். அதற்கான வாய்ப்புகளை வழங்கவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வண்ணமயமான விழாவான தீபாவளி பண்டிகையின் அடிப்படை நோக்கமே பிறரை மகிழ்விப்பதாக உள்ளது.

பெற்ற அன்னையைத் தவிர வேறு யாராலும் தான் கொல்லப்படக் கூடாது என்று பெற்ற வரத்தால் நரகாசுரன் ஆணவம் அடைந்து உலக மக்களை வாட்டினான். அவனை அழிக்கக் கிளம்பிய கிருஷ்ணனுக்கு உதவியாக, நரகாசுரனின் அன்னையான பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவே தேர் ஓட்டினாள்.

போர்க்களத்தில் கிருஷ்ணன் அடிபட்டு மயங்க, தானே போரிட்டு கணவனைக் காத்ததுடன், நரகனையும் வீழ்த்தினாள் சத்தியபாமா. அப்போது தாய்மை உணர்வுடன் கிருஷ்ணனிடம் பாமா பெற்ற வரமே நராசுர சதுர்த்தி.

அசுரன் கொல்லப்பட்ட ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று மக்கள் அனைவரும் அதிகாலையில் நரகாசுரனை நினைந்து எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பாமா வேண்டினாள். இதுவே தீபாவளிக்கான புராணக் கதை.

தனது மகன் இறந்தாலும், உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற தியாகச் சிந்தையுடன், எந்த அன்னையும் செய்யத் தயங்கும் செயலை பாமா செய்தாள். தனது மகன் இறந்த நாள் வருத்தத்திற்குரியதாக இல்லாமல் மகிழ்ச்சிக்குரியதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வரமும் பெற்றாள். அதனால்தான் இன்றும் நரகாசுரன் நம் இதயங்களில் வாழ்கிறான்.

தற்போது தீபாவளி நாடு முழுவதும் அற்புதமான வர்த்தக வாய்ப்பாக மாறிவிட்டது. புதிய ஆடை ராகங்கள், அணிகலன்களின் அறிமுகத்துக்கு ஏற்ற காலமாக தீபாவளி மாறிவிட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சுவைத்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறோம். உறவுகளுடன் அளவளாவி, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்சிகளில் லயித்து, பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம். சந்தோஷம்தான்.

ஆனால், உறவுகளை இழந்த முதியவர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் இந்த தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவார்கள்? ஊர் முழுவதும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், ஒதுக்குப்புறமாய் நின்று இயலாமையுடன் வேடிக்கை பார்க்கும் இவர்களும் தீபாவளி கொண்டாட வேண்டாமா? அப்போதுதானே ஊர் முழுவதும் தீபாவளிக் கோலாகலம் முழுமையாகும்?

உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்தே வாழ்கிறோம். சமுதாயத்திடம் இருந்து நாம் பெரும் பயன்கள் கணக்கற்றவை. உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, வாழும் சுற்றுப்புறம்… அனைத்திலும் சமுதாயத்தின் பங்களிப்பு உள்ளது. அந்த சமுதாயத்திற்கு நாம் என்ன பிரதிபலன் செய்ய முடியும்?

இதற்கான வாய்ப்பே பண்டிகைகள். இவற்றை நாம் மட்டும் கொண்டாடினால் போதாது. பண்டிகை கொண்டாட வாய்ப்பற்றவர்களுக்கும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான வழிகளை நாம் உருவாக்கலாமே!

நாட்டு மக்களுக்காக அன்னையே போர்க்கோலம் தரித்து, மகன் என்றும் பாராது அசுரனை வீழ்த்திய நாளை ‘தீபாவளி’ என்று கொண்டாடுகிறோம். இன்னாளில், நம்மால் இயன்ற அளவு செலவிட்டு புத்தாடைகளையும் பலகாரங்களையும் பட்டாசுகளையும் வாங்கி, ஆதரவற்ற அன்புள்ளங்களுக்கு வழங்கலாமே!

கைவிடப்பட்ட முதியோரையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் இன்னாளில் சந்தித்து அளவளாவி மகிழலாமே. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தானே?

-வ.மு.முரளி

 

நன்றி: வ.மு.முரளி இணையதளம்

விவேகானந்தம்-150: ஒரு வேண்டுகோள்

Vivekananda Rock

அன்புள்ள நண்பர்களுக்கு

வணக்கம்.சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா நாடு முழுவதும் சிறப்பாகக்  கொண்டாடப்பட  உள்ளது. இதையொட்டி சங்க  துணை அமைப்புகளுள் ஒன்றான ‘தேசிய சிந்தனைக் கழகம்  ஒரு  பிரத்யேக முயற்சியில் இறங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தரின் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள், துறவிகள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள்,  பத்திரிகையாளர்களிடம் கட்டுரை/ கவிதைகளைப் பெற்று அதனை வெளியிடத் தீர்மானித்துள்ளது.

இதற்காக,  விவேகாகானந்தம்150.காம் ‘ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு  வருகிறது. இத்தளத்தில் ஜனவரி 1 முதல் ஆண்டு முழுவதும் தினசரி ஒரு கட்டுரை/ படைப்பு வெளியாகும்.

இதில் எழுத உள்ளவர்களில் சிலர் (உ.ம்): சுவாமி விமூர்த்தானந்தர், சூரிய  நாராயண ராவ்,   அரவிந்தன் நீலகண்டன், பத்மன்,  ஜடாயு, சுப்பு, மருதாசல அடிகள், சுகிசிவம், பேரா. சத்யசீலன், தமிழருவி மணியன், பேரா. சரஸ்வதி ராமநாதன், ஓவியர் பிரபாகர்,  பேரா. ஸ்ரீநிவாசன், நம்பி நாராயணன் உள்ளிட்ட  பலர்.

இந்த இணையதளம் விவேகானந்தரின் 150வது ஆண்டுவிழாவுக்கு நல்லதொரு காணிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இத்தளத்தில் ஆர்வமுள்ள அனைவரும் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இது தொடர்பாக எழுத விரும்பும் நண்பர்கள் என்னை கீழ்க்கண்ட  மின்னஞ்சல் முகவரியிலோ மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்  கொள்கிறோம்.

இந்த தேசப்பணியில் அனைவரும் தோள் கொடுக்குமாறு வேண்டுகிறோம்.

என

அன்புடன்

குழலேந்தி
மின்னஞ்சல் முகவரி: kuzhalendhi@gmail.com

அலைபேசி எண் : 99526 79126

வெளிவர உள்ள இணையதள முகவரி: www.vivekanandam.com (to be uploaded)
.

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு  முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

இதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.

அவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.

வரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.

நாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.

அவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது? குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது?

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.

இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.

இதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”

இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்;  வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.

ஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா?

தினமணி (24.12.2012)
காண்க: வமுமுரளி
.