ஓவியக் கலைஞர் காப்பியக் கவிஞர் ஆனார்!

 -டாக்டர் சரஸ்வதி ராமநாதன்

 

Ramalingampillai

நாமக்கல் கவிஞர்

வெ. ராமலிங்கம் பிள்ளை

(அக். 19, 1888 – ஆக. 24 ,1972)

 மூதறிஞர் ராஜாஜி,  “திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்தது” என்று கூறினார். அது நூற்றுக்கு நூறு சரியே!

பாரதியிடமிருந்து அவனது கவிதா  மண்டலம் பெற்றவை எனப் பின்வருமாறு சொல்வேன்:

  • தமிழுணர்வு, புரட்சி – பாவேந்தராக, சுரதாவாக
  • காந்தியம் – நாமக்கல்லாராக
  • தொழிலாளர் நலன் – திரு.வி.க. வாக
  • பொதுவுடைமை – ஜீவா, பட்டுக்கோட்டையாராக
  • பக்தி, தத்துவம் – கண்ணதாசனாக!

”ஒன்று மட்டும் உண்மை – அறிவு

ஊற்றில் எழும் பாட்டெழுதும்

செந்தமிழ் மாகவிக்கு மரணம்

வந்தபின்பு தான் பெருமை ஜனனம்”

என்ற கண்ணதாசன் வாக்கு சரியில்லாமல் போனது.

நாமக்கல்லாரும், கவியரசரும் வாழும் போதே பெருமை பெற்று ‘அரசவைக் கவிஞர்’ ஆகிவிட்டனரே!

சிறந்த ஓவியராக ராமலிங்கம் படங்கள் வரைந்து அவற்றை விற்று எளிய வாழ்வு வாழ்ந்து வந்தார். “நாட்டு விடுதலையில் நான் கொண்டிருந்த தீராத தாகமே என்னை ஓவியத்திலிருந்து காவியத்துக்கு இழுத்து வந்தது” என ‘என் கதை’ எனும் சுயசரிதையில் எழுதுகிறார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1953ல் ஜவஹர்லால் நேருவிடம் கவிஞரை அறிமுகப்படுத்தும்போது,  “மகாகவி பாரதிக்குப் பின் தேசிய கவிகளை இயற்றி, காந்தியடிகளின் அறப்போராட்டங்களுக்குக் கவிதை எழுதி, மக்களைச் சத்தியாகிரஹப் போராட்டங்களில் ஈடுபடுத்தியதுடன், தானும் சிறை சென்றார். காந்தியை, காந்தியத்தைக் குறித்து நாமக்கல் கவிஞர் போல எந்த மொழிக் கவிஞரும் எழுதவில்லை” என்று பாராட்டினார்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!”

-இது விடுதலைப் போர்வீரர்களுக்கு வீரநடைப் பாட்டு ஆனது. காந்தியின் சத்யாகிரஹத்தை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா?

”1906 கர்சனின் வங்கப் பிரிவினையால் நாடெங்கும் எழுந்த தேசியக் கிளர்ச்சியே எனது தேசாபிமான உணர்ச்சியின் எழுச்சி” என்கிறார் நாமக்கல்லார். அரவிந்தரின் ‘கர்மயோகி’ ‘வந்தே மாதரம்’; மோதிலால் கோஷ் நடத்திய ‘அமிர்த பஜார்’ ஆகிய பத்திரிகைகள் கவிஞரைப்போல் பல இளைஞர் நெஞ்சில் தேச பக்திக்கனலையும், சுதந்திர மூட்டின. 18 வயது . (அந்தக் காலப் புகுமுக வகுப்பு) படித்துக் கொண்டிருந்த சராசரி இளைஞனுக்கு உரிய கோரிக்கை விருப்பம் எதுவுமின்றி இந்திய சுதந்திர வேள்வியில் ஈடுபட்டார். இளமனதில் வீர சுதந்திரக்கனலை மூட்டிய அரவிந்தர் என்ற மகானைக் காணப் புதுவை சென்றார்.  வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா ஆகியோரை மட்டும் பார்த்து வந்தார்.

ஊர் ஊராகச் சென்று அரசியல் சொற்பொழிவுகள் நடத்தியதுடன் இயன்ற வழிகளில் எல்லாம் சேவை செய்தார். 1914, திருச்சி அரசியல் மாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரைச் சந்தித்து, தான் வரைந்த சில படங்களையும் தந்து ஆசி பெற்றார். தேசபக்தியை நாடக வழி ஊட்டிய டி.கே.எஸ். சகோதரர்கள், கிட்டப்பா ஆகியோருக்குப் பல பாடல்கள் எழுதித் தந்தார். இவரது தேசபக்தி, இவர் செய்து வந்த ஆசிரியத் தொழிலிலிருந்து பணி நீக்கம் செய்ய வைத்தது. (போர்டு உயர்தர ஆரம்பப் பாட சாலை)

‘சுயராஜ்ஜியம் என் பிறப்புரிமை; எப்படியும் அதை அடைந்தே தீருவேன்’ என்ற திலகரின் கோஷ்டி, தீவிரவாத கோஷ்டி என்றனர். முடிவு மட்டுமல்ல, முறையும் சாத்வீக முறையாக இருக்க வேண்டுமென்ற காந்தி, கோகலே கோஷ்டி மிதவாத கோஷ்டி எனப்பட்டது. (காங்கிரஸ் என்றாலே கோஷ்டி எப்போதும் உண்டு போல!) 1914ல் தூத்துக்குடியில் கவிதைப் போட்டி ஒன்று நடத்தப் பெற்றது. தேசபக்திப் பாடல்கள் 100 புனைபவருக்குத் தங்கப் பதக்கமும் 500 ரூபாயும் பரிசு. நாமக்கல் கவிஞரும் 100 கவிதைகள் யாத்து அனுப்பினார். ஆனால் அரவிந்தர், திலகர் குறித்த பாடல்களை நீக்கினால் பரிசு தருவோம் என்ற அமைப்பாளரின் கருத்தை மறுத்து, எனக்கு உங்கள் பரிசு பெரிதல்ல; என் கொள்கையே பெரிது” என்று மனத்திட்பத்துடன் திரும்பினார் ராமலிங்கம்.

பரிசுக்கு ஏங்கியவரல்லர் கவிஞர். பின்னர் சேலத்தில் அந்தப் பாடல்கள் ராஜாஜி, சேலம் அனந்தாச்சாரியார், சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. ‘புலவர்’ என்று பட்டம் தந்தனர்.

”டி.கே.எஸ். சகோதரர்கள்,  ம.பொ.சி. இவர்களைப் பலமுறை நான் பார்த்துப் பேசி, அவர்கள்முன் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். தூய வெள்ளை நிறக் கதர் தவிர பிற ஆடை அறியாதவர்கள். தேசபக்தி, தெய்வபக்தி நிறைந்தவர்கள். டி.கே. சண்முகம் அவர்கள் நாமக்கல்லாரின் ‘ஆடு ராட்டே’ பாட்டு ஒவ்வொரு தமிழனின் இதய வீட்டிலும் ஆடியது” என்றார்.

‘ஆடு ராட்டே! சுழன்று ஆடு ராட்டே!

சுழன்று சுழன்று சுழன்றாடு ராட்டே!

சுயராஜ்ஜியம் வந்ததென்று ஆடு ராட்டே!

அந்நியர்கள் நூல் கொடுத்தும் ஆடை கொடுத்தும்

அங்கத்தை மூடுகின்ற பங்கம் ஒழியும் – நம்

கன்னியர்கள் நூற்கப் பல காளைகள் நெய்ய – நாம்

காத்துக் கொள்வோம் மானம் என்று ஆடு ராட்டே!’

-இதை அவர் முன்னிலையிலேயே, தமிழிசைப் பள்ளி மாணவியர்  நாங்கள் பாடி வாழ்த்துப் பெற்றோம் (வருடம் 1953). செட்டிநாட்டுடன் நிறையத் தொடர்பு கொண்டவர் நாமக்கல்லார். எங்கள் பள்ளத்தூர் முத்தையா ஆச்சாரி, சுப்பையா ஆச்சாரி சகோதரர்கள் கவிஞரைப் பலமுறை அழைத்துவந்து தங்கவைத்து, உதவிகள் செய்ததை நான் அறிவேன். அவர்களும் மிகச் சிறந்த காந்தி பக்தர்கள்.

1914, கானாடுகாத்தானில் பாரதியைச் சந்தித்தார் கவிஞர். வெங்கட கிருஷ்ணய்யா கவிஞரை ”இவர் நல்ல ஓவியரும் ஆவார்” என்று அறிமுகப்படுத்தியதும் பாரதி, ”நீர் என்னை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்” என்று சொல்லிக் கலகல என்று சிரித்தாராம். கிருஷ்ணய்யா, ”இவர் கவிதையும் புனைவார் என்றாராம். ஒரு பாட்டு பாடுமே!” என்றார் பாரதி.

ராமகாதையில் சீதையைப் பிரிந்திருந்த ராமன் தன்னையே நொந்து பாடுவது போல் நாடகத்திற்குப் பாட்டெழுதி இருக்கிறேன்.

‘நம்மரசைப் பிறர் ஆள விட்டு விட்டுத்

தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்,

தன் மனைவி பிறர் கொள்ளத்

தன்னுயிர் தாங்கி நின்று புலம்புவோரும்

இம்மையிலும் மறுமையிலும் இழிவடைந்து

எரி  நரகில் அழுந்திடுவார்!

என்று பாட,  “பலே பாண்டியா! பிள்ளை, நீர் புலவரே! நம் அரசைப் பிறர் கொள்ள, வணங்கிக் கைகட்டி நிற்பவர் நரகு எய்தத் தான் எய்துவர்” என்று உரக்கக் கூவினாராம்.

‘காந்தி என்ற நாமம் நம்மைக்

காக்கும் தெய்வமாகுமே –

கருணை என்ற கருவி கொண்டு

உலகை வெல்லுவோமே  நாம்

ஆடுவோம் கூடுவோம் காந்தி புகழைப் பாடுவோம்”

– என்ற பாடலும்,

‘‘வனமகோத்சவ வைபவத்தினை

வான் மகிழ்ந்திட வாழ்த்துவோம்”

-என்ற பாடலையும்,

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் என்கின்ற ஜீவ நன்நாதம்

தேசத்தில் ஒற்றுமை சேர்க்கின்ற கீதம்

பேய் கொண்ட தன்மை நமைப் பிடித்தாட்டும்

பேத உணர்ச்சிகள் நாட்டை விட்டோட்டும்  (ஜெய்ஹிந்த்)

 

அச்சத்தைப் போக்கி நல் லாண்மையை ஊட்டி

அடிமை குணங்களை வேரொடு மாற்றித்

துச்சம் உயிரெனத் தொண்டுகள் செய்யத்

தூண்டிடும் சக்திகள் ஆண்டிடும் தூய (ஜெய்ஹிந்த்)

-என்ற பாடலையும் நானே மேடையில் பாடியிருக்கிறேன்.

காசி ஹிந்து சர்வகலாசாலைத் திறப்பு விழாவிற்குச் சென்ற கவிஞர், காந்தியடிகளைத் தரிசித்தார். உருகினார். காந்தியத்தில் ஈடுபாடு கொண்டு மிதவாதியானார். காந்தி பக்தராக, காந்தி பித்தராக மாறிவிட்டார்.

கரூரில் இவரது உரை கேட்டு அகிலன், கல்கி போன்ற எழுத்தாளர்கள் தேச விடுதலைச் சிந்தனையில் பெரிதும் ஈடுபாடு கொண்டனர். கவிஞர் பேச்சு, அவர் தலைமை வகித்த ஊர்வலம் எல்லாம் பலமுறை 144  தடை உத்தரவை சந்தித்தன. அவரது சாந்தம், காந்தியப்பற்று கண்டு அவரைக் கைது செய்யாமல் விட்டனர். ‘கதர்த் துணி வாங்கலையோ!’ என்று பாடி, மனைவியும், தொண்டர்களும் புடை சூழ மக்களைக் கதர் வாங்க வைத்தார்.

1937-ல் மதுக்கடை, கள்ளுக்கடை மறியல் செய்தார். ராஜாஜி மதுவிலக்குக் கொண்டு வந்ததும் மகிழ்ந்து பாடினார்  நாமக்கல்லார்:

‘விட்டது சனியன் விட்டது சனியன்

விட்டது நம்மை விட்டதடா!’

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழப்பதும்

கூசிட ஏசிடப் பேசுவதும்

சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்

சந்தி சிரிப்பதும் இனியில்லை’

உப்பு சத்தியாகிரகம் 1930ல் நடந்தபோது வழிநடைப் பாட்டாகக் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ பாடல் பிரபலமானது.

சுதந்திரம் இல்லாத நாடு, சூழ்புலி பேய் மிகும் பொல்லாத காடு” இப்படிப் பல கவிதைகள் சுதேச மித்திரன், கல்கி போன்ற ஏடுகளில், இதழ்களில் வந்து சுதந்திர வேள்வியில் பலரைக் குதிக்கச் செய்தன. 1932 சட்ட மறுப்பு இயக்கத்தில் சிறை சென்று, வேலூர்ச் காது பாதிக்கப்பட்டது.

தேச நலனுக்காகப் பாடியவர், வறுமையின் பிடியில் வாடியவர் கவிஞர். அந்திமக் காலத்தில் பொருள், புகழ், பதவி, பாராட்டு எல்லாம் கிடைத்தன.

”தமிழன் என்று சொல்லடா

தலைநிமிர்ந்து நில்லடா”

-என்ற வரிகள் எல்லா இடங்களிலும் பொறிக்கப்பட்டன.

”தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு”

-என்று பாடிய இவர் பெயர் தமிழகத் தலைமைச் செயலகத்திற்குச் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமே. அவரது நாமக்கல் வீடும், அவரது 50க்கு  மேற்பட்ட நூல்களும் நாட்டுடைமைஆக்கப்பட்டன.

தமிழ்ப்பணி, விடுதலை வேள்விப்பணி இரண்டையும் ஒருங்கே ஆற்றிய கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ஓவியக் கலைஞர், காவியப்புலவர், இசைக் கலைஞர், புதின எழுத்தாளர், உரையாசிரியர்,மொழி பெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட அறிவாளி. முதல் அரசவைக் கவிஞரும் அவரே என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தானே! வாழும் காலத்திலேயே புலவர்கள் பாராட்டுப் பெறுவது பெரும்பேறு.

 

நன்றி: விஜயபாரதம்

ஒரு தீபத்தில் நான்கு முகங்கள்

 – டாக்டர் சரஸ்வதி ராமநாதன்

kadalur Anjalai

கடலூர் அஞ்சலையம்மாள்

(1890-1961)

 

‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்கள் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என்றார் பாரதி.

அறிவில் மட்டுமா! தியாகத்திலும் தான் பெண்கள் சலிப்பின்றி, இளைப்பின்றி, தொய்வின்றி முன்னின்றிருக்கிறார்கள். ‘எத்தனையோ புகழ்பெற்ற மில்டன்கள் இங்கே உறங்கிக் கொண்டிருக்கலாம்’ என்று கல்லறைக் கவிதையின் கவிதை வரிகள் வரும். அதுபோல் வெளிச்சத்திற்கு வராது எத்தனையோ தியாக தீபங்கள் குடத்திலேயே அடங்கியிருக்கக் கூடும். அதிலும் ஒரே குடும்பத்தில் பலரும் விடுத்த வேள்வியில் அர்ப்பணமாகியிருக்கின்றனர் என்பது உண்மை!

கடலூர் அஞ்சலையம்மாள் குடும்பத்தைக் குறித்து அறிந்தால் வியப்பீர்கள்!

 விடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்திலேயே களம் இறங்கியவர் அஞ்சலை. விடுதலைப் போராட்டத்தில் தென்னாட்டின் முதல் பெண்மணியாக ஈடுபட்டவர். 1890-1961 இவர் வாழ்ந்த 71 ஆண்டுக் காலம்! முருகப்ப படையாச்சியுடன் ‘அவர் காரியம் யாவினும் கை கொடுத்த, மாதரசியாகக் குடும்பம் நடத்திய கற்புடை மனைவி.

31 வயதில் சுதந்திர வீராங்கனையாக வெளிவந்த அஞ்சலை, 1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டம். 1937ல் உப்புச் சத்தியாக்கிரகம். 1938ல் மறியல். 1940ல் தனிநபர் அறப்போராட்டம். 1941-42ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் எனப் பங்கு பெற்று எத்தனை சிறைவாசம் மகிழ்ந்து ஏற்றார் தெரியுமா! கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரிச் சிறைகளின் சுவர்களும் இந்தப் பெண்மணியின் தியாகக் கதையைப் பேசும்.

இன்று மேடைகளில் மகளிர் பேசுவது, பாடுவது வியப்பில்லை. 1921ம் ஆண்டில் கிராமம் கிராமமாகச் சென்று அஞ்சலை அஞ்சாமல் முழங்கியது சாதனையல்லவா? கர்ப்பிணியாக இருக்கும் போதும் போராட்டத்தில் குதித்துச் சிறைப்படுவார். பேறு காலத்திற்காகச் சில வாரங்கள் பரோலில் வெளி வருவார். மீண்டும் கைக் குழந்தையுடன் சிறை செல்வார். சிறைவாசத்தால் எத்தனை கருச்சிதைவு, எத்தனை உதிரப் போக்கு; எத்தனை நோய்கள்! எத்தனை வேதனை! அத்தனையும் தாங்கிய அஞ்சலையை எத்தனைபேர் இன்று அறிவார்கள்! பெண்கள் படையைத் திரட்டுவதில் அஞ்சலையம்மாளின் பேச்சுவன்மை பயன்பட்டது.

 கொடி காத்தவன் திருப்பூர் குமரன் என்று நாடே அறியும். ஆனால் அதே போல் ‘கொடி காத்த வீரமங்கை அஞ்சலை’ என்பதையும் நாடு தெரிந்து கொள்ள வேண்டும். கடலூரில் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ஒருகையில் தன் கைக்குழந்தை, மறுகையில் காங்கிரஸ் பேரியக்கக் கொடியுடன் களமிறங்கிய வீர மாது அஞ்சலையம்மாளை காவலர் கண் மூடித்தனமாகத் தாக்கியபோது கைக்குழந்தையைக் கீழே விட்டாரே தவிரக் கொடியைக் கீழே போடவில்லை!

 கொடுமைக்காரன் ‘நீல்’ துரை என்ற வெள்ளைக்காரன். அவனது சிலை நமது நாட்டில் இருக்கக் கூடாது என்று தேசபக்தர்கள் பல இடங்களிலும் கிளர்ச்சி செய்தனர். அந்தப் போராட்டத்தில்  முருகப்ப படையாச்சி, அஞ்சலையம்மாள் 9 வயது மகள் அம்மாக்கண்ணு (இவரே பிற்காலத்தில் லீலாவதி என்று பெயர் பெற்றார்) மூவரும் சிறை சென்றனர். 9 வயதுச் சிறுமி அம்மாக்கண்ணு இளம் பெண்கள் சிறையில் சென்னையில் அடைக்கப் பெற்றாள்.

மகாத்மா காந்தி கடலூர் வந்தால் அஞ்சலையம்மாள் இல்லத்தில் தங்குவார்கள். தன் ஆவேசப் பேச்சால் அதிகம் பெண்களை விடுதலை இயக்கத்தில் பங்கு பெற வைத்தார் அஞ்சலை!

 ‘வீட்டை, நிலத்தை விற்று விடுதலைப் போராட்டத்திற்குச் செலவு செய்தாயாமே!’ என்று ஒருவர் கேட்ட போது, விடுதலை என்ற பெரிய சொத்து  நமக்குக் கிடைக்க என் சிறிய சொத்துக்களை இழந்தால் பரவாயில்லை” என்ற தியாகி அஞ்சலை!

முருகப்ப படையாச்சி (1873-1971) தேசபக்தியில் இவருக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்லர்.   பல ஆண்டுகள், பல போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். விடுதலை வேள்விச் செய்திகளைச் சேகரித்துத் தருவதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதும் முருகப்ப படையாச்சியும் அவர் மனைவி அஞ்சலை அம்மாளும் செய்த பணிகளில் சில. பெண்கள் கட்சிப் பொறுப்புக்கு வருவது இன்று பெருமை! அன்று உலக அதிசயம்! 1929-லேயே சட்டமன்றத் தேர்தலில் நின்று, அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்ற சாதனை மங்கை அஞ்சலை.

‘தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை’ என்று பழமொழி. 9 வயதில் அம்மாக்கண்ணு,  நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் குதித்துச் சிறை சென்றாள். ராஜாஜி சிறையிலிருந்த வீரத் திருமகளைக் காந்திஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அம்மா, அப்பா, மகள் வெவ்வேறு சிறையில் வெங்கொடுமைப் பட்டனர்!

வார்தாவுக்குக் காந்தியடிகள் அம்மாக்கண்ணுவை அழைத்துச் சென்று வளர்த்து, லீலாவதி எனப் பெயர் சூட்டினார். இந்த லீலாவதியின் கணவர் யார் தெரியுமா? வட ஆற்காடு மாவட்டத்தில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் க.ரா. ஜமதக்னி! யுவதி லீலாவதி சிறையிலிருந்த தன் தந்தை முருகப்பாவைச் சந்திக்கச் செல்லும் போது ஜமதக்னியைப் பார்த்தார். உள்ளம் ஒத்த காதல் மலர்ந்தது. இருவர் மனத்திலும் இருந்த தேசப்பற்று இருவரையும் இணைத்தது. இருவரும் இந்திய விடுதலைக்குப் பிறகுதான் மணம் என்றும் முடிவு செய்து அதன்படி கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர்.

இரு குடும்பங்களும் ஒத்த கருத்துடையவை. பதிவுத் திருமணம் நடந்தது என்றாலும் பெற்றோரின்முழுச் சம்மதத்துடன்! கல்யாணச் செலவு வெறும் மூன்று ரூபாய் தானாம்! புரட்சி, புதுமை, எளிமை எல்லாம் நிறைந்த லட்சிய தம்பதிகள் லீலாவதி- ஜமதக்னி என்று நல்லோர் போற்றினர்.

பெரிய படிப்புகள் படிக்கவில்லை; ஆனால் சுதந்திர வாஞ்சையை உலகிய அறிவுடன் சேர்த்துப் படித்தனர் இக்குடும்பத்தார். பாரிஸ்டர் பட்டம் பெறவில்லை அஞ்சலை; ஆனால் அழுத்தமாக, ஆவேசமாக வாதாடி, பேசி, மக்களை விடுதலைப் போராட்டத்தில் இறங்கச் செய்வார். பட்டிதொட்டி மட்டுமல்லாது சென்னைப் பட்டினத்திலும் இவர் குரல் ஓங்கி ஒலித்தது.

 புறநானூற்றில் மூதின் முல்லை என்று ஒரு துறை. அதில் அமைந்த பாடல்கள் மறக்குடிப் பெண்களின் வீரத்தைப் புகழும். முதல் நாள் போரில் அண்ணனையும் அடுத்த நாள் போரில் தன் ஆருயிர்க் கணவனையும் இழந்த வீரப் பெண்மணி,மூன்றாம் நாள் போர்ப் பறை கேட்டதும் சற்றும் தயங்கவில்லை. அழவில்லை. விளையாடிக் கொண்டிருந்த தன் பச்சிளம் பாலகனை (ஒரு குடிக்கு ஒரே மைந்தன்) அழைத்து, வெள்ளாடை உடுத்தி, தலைமுடிக்கு எண்ணெய் தடவி, வேலினைக் கையில் தந்து ‘புறப்படு மகனே புறப்படடா போர்க்களம் நோக்கிப் புறப்படடா!’ என்று அனுப்பினாளாம். (கெடுக சிந்தை  கடிதிவள் துணிவே; மூதின் மகளிர் ஆதல் தகுமே!) இதற்கு எந்த விதத்திலும் குறையில்லா வீரம் அஞ்சலை முருகப்பா குடும்பத்தாருடையது.

ஒவ்வொரு குடும்பமும் நாட்டு விடுதலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று குரல் களமிறங்கிய தியாக தீபம் அஞ்சலை. கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் உடலுக்குச் சிரமம் தரக்கூடாது என்பர். இவரோ ஊர் ஊராக வண்டியில், சைக்கிளில் கூட அலைவார். சத்தான உணவு உண்ணவேண்டும் என்பார்கள். சிறையின் களி தான் இவருக்குப் பாதி  நாள் கிடைத்தது.

துடிப்பு, வேகம், தாகம், லட்சியம் எல்லாமே தன் குடும்பம் நோக்கி இல்லாமல் நாட்டுநலம் நோக்கியே இருந்த மிகப் பெரிய தியாகக் குடும்பம் முருகப்பா – அஞ்சலை குடும்பம். அவர்களின் தியாக முத்திரை சுதந்திர வரலாற்றில்  நிச்சயம் பதிந்து காலத்தை வென்று  நிற்கும். அப்பா, அம்மா, மகள், மருமகன் என ஒரே வீட்டில் நான்கு முகம் கொண்ட தீபமாகத் தங்களை விடுதலை யாகத்திற்கு ஒளி ஏற்றியவர்கள் கடலூர் அஞ்சலையம்மாள் குடும்பத்தார்!

 ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’

நன்றி: விஜயபாரதம் 

போர்முனைப் பண்பாளர்

 – டாக்டர் சரஸ்வதி இராமநாதன்

(நவம்பர் 4, 1880 - மார்ச் 13 1953)

(நவம்பர் 4, 1880 – மார்ச் 13 1953)

சித்த(ரஞ்சன்) மருத்துவர்

தீர்த்தகிரி முதலியார்

தேச விடுதலைக்குப் பின்னரே ‘தியாகி’ எனப்பட்டவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆனால் முன்பே ‘தியாகி’ போராட்ட வீரர், மெய்த்தொண்டர், என்றெல்லாம் பலராலும் அடையாளம் காட்டப்பட்டவர் தீர்த்தகிரி முதலியார். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தலைவர் டாக்டர். சோமையாஜுலு (இவரை நான் தரிசித்துப் பேசியிருக்கிறேன்.) தீர்த்தகிரியாரை தியாகி எனப் பாராட்டியுள்ளார்.

’’எல்லாம் படிச்சவன் எதை எதையோ பேசி நாட்டைக் கூறு போடறான். படிக்காத உழைப்பாளி உழைச்சு உழைச்சுச் சோறு போடறான்” என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஹரிஜன முன்னேற்றம், கதர் இயக்கம், நெசவாளர் முன்னேற்றம் என்று செயலாற்றிய செயல்வீரர் தீர்த்தகிரியார்.

தர்மபுரியை அடுத்த அன்னசாகரம் இவர் பிறந்த ஊர். தகப்பனார் நாராயண முதலியார். கோயில் தர்மகர்த்தா.

இடதுசாரிக் கொள்கையில் பிடிப்பும் திலகர் மீது பக்தியும் கொண்ட முதலியார், வ.உ.சி,  சிவா ஆகியோருடன் நெருங்கி தொடர்பு கொண்டிருந்தார். காந்தியின் அஹிம்சாநெறியைப் பின்னர் ஏற்றுக்கொண்டர். சாக்குப் போன்ற  கனத்த கதராடை அணிந்து, சிம்மக்குரலில் பாரதி பாடல்களைப் பாடியவாறு இருப்பார்.

 பிரிட்டிஷ்காரனின் அடக்குமுறையை எதிர்த்துக்குரல் கொடுத்தால் உடனே ‘ராஜதுரோகம்’ என்று குற்றம் சாட்டிச் சிறையில் போடுவான். 1906, 1916ம் ஆண்டுகளில் 1.5, 2 ஆண்டுகள் சிறை வாழ்க்கையைப் பரிசாகப் பெற்றார் தீர்த்தகிரி. மீண்டும் உப்பு சத்தியாக்கிரஹத்திற்கு 1930ல் கண்ணனூர் சிறை வாழ்வு! சட்ட மறுப்புப் போராட்டத்திற்காக 1931ல் திருச்சியில் சிறைவாசம். 1942ல் நாடே கொந்தளித்த தெழுந்த வெள்ளையனே வெறியேறு” போராட்டத்திற்காக அலிப்பூர் சிறைத்தண்டனை! சுப்பிரமணிய சிவாவுடன் சிறையில் ஏற்பட்ட நட்பு இறுக்கமாக இறுதிவரை இருந்தது. சிறையிலிருந்து மீண்ட சிவா வத்தலக்குண்டு செல்லாமல் பாப்பாரப்பட்டி செல்ல, தீர்த்தகிரியாரின் அன்பும், அவரது சகலை சின்னமுத்துவின் பாசமுமே காரணம். சிறையில் நாடகம் போடுவார்கள். தேசபக்திக் கனலை ஊதி வளர்க்கதான்! ’பாணபுத்து வீரன்’ நாடகத்தை  தீர்த்தகிரி நடத்தினார்.

வள்ளி திருமணம், கோவலன், சதயம் போன்ற நாடகங்களைத் தானே எழுதி, நடத்தி, இடையிடையே சுதந்திரதாகம் ஏற்படுத்தும் வசனங்கள், பாடல்களைச் சேர்த்தார். துண்டுப் பிரசுரங்களாலும் சுதந்திர வாஞ்சையை மூட்டினார். போராட்டச் செய்திகளை இதழ்களில் வெளியிட முடியாத காலம்; கையெழுத்துப் பிரதி எடுத்துப் பல இடங்களுக்கும் அனுப்பினார் தீர்த்தகிரி. கடலூரில்  இருந்த அஞ்சலை, முருகப்ப படையாச்சி தம்பதிகள் சுதந்திரப் போராட்டம் குறித்த செய்திகளை ஊர் ஊராகப் பரப்பி, செய்தி சேகரித்துத் தந்து முதலியாருக்கு உதவினார்கள்.

சுதந்திரத்தீ கொழுந்து விட்டெரிந்த காலத்தில் ‘சாதி மதங்களைப் பாரோம்  – உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்’ என்று பாரதி பாடியது போலத்தான் இருந்தார்கள். வ.உ சிதம்பரம் பிள்ளையும் சிவாவும் நண்பர்கள். சிவாவும் தீர்த்தகிரி முதலியாரும் நண்பர்கள். முதலியாரும் முருகப்ப படையாச்சியும் நண்பர்கள். இன்று தேசியத்தலைவர்கள் பெயரை வைத்துச் சாதி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்களே!

பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் கட்டச் சிவாவும் தீர்த்தகிரியாரும் முயன்று அடிக்கல் நாட்ட தேசபந்து சித்தரஞ்சன்தாஸை வரவழைத்தனர்.  1928ல் மகாத்மா காந்தியையும் 1937ல் நேருவையும் வரவழைத்தார். இவரது மாப்பிள்ளை எம்.எஸ்.அய்யம்பெருமாள், ஜி.ஏ. வடிவேலு (பின்னர் ஜனதாதளத்தலைவர் ஆனார்) டாக்டர் தெய்வம் மற்றும் பலநூறு தொண்டர்களை உருவாக்கி வழிநடத்திய மாமனிதர் தீர்த்தகிரியார். உப்பு சததியாக்கிரகமா, நீலன் சிலை அகற்றும் போராட்டமா, கள்ளுக்கடை மறியலா? முதலில் நிற்பவர் முதலியார்.

முதலியார் பெரிய வசதியான குடும்பத்தவர் அல்லர்; போராட்டமே வாழ்க்கை என்றபோது, பொருளீட்டுவது எப்படி? சித்த மருத்துவம் அறிந்தவர். நாட்டு மருந்து தயாரிப்பவர். பல்பொடி, தலைவலி மருந்து, லேகியம் தயாரிப்பார். அதுவும் பாதி இலவசத்திலேயே போய்விடும், நோய் என்று வந்தவர்களுக்கு மருத்துடன், உணவோ, கஞ்சியோ எது இருந்ததோ அதையும் தந்து அனுப்பும் உயர்ந்த உபகாரி. அதிகம் படித்தவரல்லர், ஆனால் பாட்டு, நாடகம் தானே எழுதி நடிக்கும் ஆற்றல் பெற்றவர்.

மருத்துவப் புத்தகம் நிறையப் படித்தார். மருத்துவத்தை விட இவரது மனிதநேயம் பெரிது. தான் தயாரித்த பற்பொடியைச் ‘சித்தரஞ்சன் பற்பொடி’ என்று பெயர் தந்து சித்தரஞ்சன் தாஸ் மீதிருந்த பக்தியைக் காட்டினார்.  தலைவலி மருந்தை ‘சித்தரஞ்சன் பாம்’ என்றார்.

தீர்த்தகிரி சாது போலிருப்பார். குரலோ சிம்மக்குரல். பாட்டோ பேச்சோ கம்பீரம்தான். அஞ்சாத நிமிர்வு அவரது தனிச்சிறப்பு. அலிப்பூர் சிறை வார்டனாயிருந்த ஹன் என்பவரும் அவரது குடும்பத்தாரும் வயிற்றோட்டத்தால் அவதியுற்ற போது தன்வசம் இருந்த மருந்துகள் தந்து குணப்படுத்தியதாக அவரது மானுட நேயம் குறித்து என் சித்தப்பா (அலிப்பூர் சிறையில் அவருடன் இருந்த தியாகி) சொன்னாராம். ஒரு முறை தீர்த்தகிரியார் வீட்டைச் சோதனை போட்டார்களாம் – ஏன்? பணம் இருக்கிறதா குண்டு இருக்கிறதா என்றா? இல்லை! தடை செய்யப்பட்ட வீரசாவர்க்கரின் ‘எரிமலை’ புத்தகம் இருக்கிறதா என்றுதான் சோதனை. எங்கு தேடியும் போலீஸார் அந்தப் புத்தகம் இருப்பதைக் கண்டுப் பிடிக்க முடியவில்லை. அவர்கள் போனபின் வீட்டுக்குள்ளேயிருந்தே அந்தப் புத்தகத்தை முதலியார் எடுத்து வந்தாராம். ‘நீர் எம்டன் ஐயா’ என்று சிவா பாராட்டினாராம். எம்டன் கப்பல் வீரதீர சாகசம் புரிந்த காலத்தில், சாமர்த்தியசாலிகளை ‘எம்டன்’ என்று சிலாகிப்பது வழக்கமாயிற்று. இன்றும் சில இடங்களில் அவன் ‘பலே எம்டன்’ என்று சொல்லும் பழக்கம் இருக்கிறது உண்மையில் பல விதங்களில் தீர்த்தகிரியார் எம்டன் தான்.

அதிகம் படிக்காதவர். சித்தமருத்துவத்தை  நூல்கள் படித்தே அறிந்தவர். பாட்டுக் கற்றுக்கொள்ளாதவர். பாடி நடித்து, மக்களை சுதந்திர தாகம் கொள்ளவைத்த கலைஞர். மேடைச்பேச்சுப் பேசப் பயிற்சிப் பெறவில்லை; சட்டம் படித்ததில்லை. ஆனால் கம்பீரமான பேச்சால் அனைவரையும் ஈர்த்தார். வறுமை வாட்டியபோதும் வள்ளல் தன்மை மாறாது வாழ்ந்தவர். இவர் ‘எம்டன்’தானே! அந்நாளில் சிறை அதிகாரியைக் கண்டால் எவரும் அஞ்சுவர். அதிலும் சில முரடர்கள் சிறை அதிகாரிகளாயிருந் திருக்கிறார்கள். என் சித்தப்பா தாகத்திற்குத் தண்ணீர் கேட்டபோது, சிறுநீரைக் கோப்பையில் பிடித்துவந்து ‘வந்தேமாதரம் சொன்ன வாய்க்கு இதுதான்’ என்று தந்த வார்டன் போன்ற கொடியர்களும் இருந்தார்கள். வேலூர் சிறை அதிகாரி கடுமையாகப் பேசியபோது,  அஞ்சாநெஞ்சன் தீர்த்தகிரி எதிர் நின்று பலத்த குரலில் வாதிட்டாராம்; அவரைத் தள்ளி பூட்ஸ் காலால் அந்த அதிகாரி மிதித்தாராம்.

‘சதையைத் துண்டு துண்டாக்கினும்

எங்கள் எண்ணம் சாயுமோ!

ஜீவன் மாயுமோ?’

என்று உரத்த குரலில் பாடியவாறு எழுந்தாராம் முதலியார்.

கள் குடிப்பதை நிறுத்துமாறு, குடிகாரர்களுக்கு பாட்டால், பேச்சால், புத்தி சொல்வார்.

‘கள்ளுக்குடித்தவனே,

காரவடை தின்னவனே,

பெண்டாட்டி பிள்ளை எல்லாம்

திண்டாட்டம் போடுதடா!’

-என்று பாடுவார். கள் குடித்தவனைக் குளிப்பாட்டி, கையில் ஒரு தேங்காயைத் தந்து ஊர் முழுதும் கும்பிடும் தண்டனிட்டு வரச் செய்து திருத்த முயல்வாராம். அஹிம்சா முறையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுத் தொண்டர்களுடன் அடி உதைபட்டார்.

 ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிற்று. அந்த நாளில் நோய் வந்தால், அம்மை போட்டால் மாரியாத்தா விளையாடிவிட்டாள் என்று கோயிலுக்கு வேண்டுதல் செய்வார்கள். பிளேக் வந்தபோது பல ஊர்களில் ‘பிளேக் மாரியம்மன்’ கோயில்கள் உருவாயின. அன்னசாகரத்தையும் பிளேக் தாக்க, குடியாத்தம், சென்னை என இடம் மாறினார். முதலியார் இடம் மாறினாலும் கொள்கைத் தடம் மாறாது. சென்னை லிங்கிச் செட்டிதெருவில், ‘கருணைப் பிரவாகநிதி வைத்திய சாலை நடத்தினார். கருணை பிரவகித்தது; நிதி இல்லை. 1946ல் ஏரிவெள்ளத்தால் அன்னசாகரம் வீடும் போனது. வள்ளல் குணம் கொண்டவரை வறுமை வாட்டியது.

 இவரது தொண்டு, தூய்மை, சுதந்திரவேட்கை ஆற்றல் எல்லாம் அறிந்த அன்பர்கள், சேலத்தில் சுதந்திரத் தூண் அமைக்கச் சேகரித்த நிதியில் எஞ்சிய தொகையை இவருக்குத் தந்து உதவத் திட்டமிட்டனர்.

சேலம் வரதராஜுலு நாயுடு வீட்டிற்கு அந்தப் பணத்தைப் பெறச் சென்றபோது  கல் தடுக்கி விழுந்தார். அதுவே தீராத நோயாகி அவரது இறுதிப் பயணத்திற்குச் காரணமாயிற்று.

 சுதந்திரம் வந்து விட்டது. 50 ஆண்டுகள் பட்ட துன்பமெல்லாம்  போய் விடியல் வந்துவிட்டது. ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இருக்கமாட்டான். பசி பட்டினி இருக்காது. ”வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்றெல்லாம் ஆடிப் பாடினார் முதலியார். ஆனால் அவரது வறுமை தீராத நிலையில், ஆசைக்கனவுகள்  கானல்நீராகவே 13.3.1953ல் அமரர் ஆனார். அவரும் அவரது சகலை சின்னமுத்து முதலியாரும் சுதந்திரப் பயிருக்கு நீரூற்றி, உரம் போட்டு வளர்த்தவர்கள்.

காந்தியடிகள் மீது கொண்ட பக்தியால் மகளுக்குக் காந்திமதி என்று பெயரிட்டார். மாப்பிள்ளை அய்யம்பெருமாளும் தேசியத்தொண்டர். தர்மபுரி நகரத் திடல் ‘தீர்த்தகிரியார் திடல்’ என்று அழைக்கப் பெறுகிறது. மாவட்டக் காங்கிரஸ் தலைவர் தமிழ்நாடு கைத்தறி சங்கத் துணைத் தலைவர் என்று பொறுப்புகளை (பதவிகளையல்ல) ஏற்று உழைத்த உத்தமர் தீர்த்தகிரியார்.

 ‘தமக்கெனவாழாப் பிறர்க்குரியவர்’

நன்றி: விஜயபாரதம் 

காண்க:  டி.என்.தீர்த்தகிரி (விக்கி)

.