இந்த யுகம் பாரதியின் யுகம்

– பி.ஸ்ரீ. ஆச்சார்யா

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!தமிழ் இலக்கிய சரித்திரத்திலே ஒரு புதுயுகத்தின் ஆரம்பத்தில் தோன்றியவர் பாரதியார், ஆங்கில இலக்கியத்தின் கூட்டுறவினாலும், தேசியப் பேரியக்கத்தினாலும் இந்தியா முழுவதும் ஒரு புதிய இலக்கிய மறுமலர்ச்சி மண்டியெழுந்த காலத்தில், பாரதியார் நம் நாட்டிலே கவிதைத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு நவீன இலக்கியத்துறைகளிலும், அரசியல் சமூகம் முதலான துறைகளிலும் தம் உள்ளொளியாலும் எழுத்து வன்மையினாலும் வேகத்தினாலும் ஒரு பெருவழி காட்டியிருக்கிறார். இம்மறுமலர்ச்சி யுகத்தை ‘பாரதியுகம்’ என்று சிறப்பித்துப் பேசலாம்.

இவரை நாம் ‘தேசிய கவி’ என்று சிறப்பித்துப் பேசுகிறோம். இத் தேசிய கவி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒருங்கே விடுதலை தேடித் தந்தவர். இவர் பாடல்களை ‘தேச உபநிஷதம்’ என்றும், ‘அரசியல் கீதை’ என்றும் போற்றுகிறோம்.

இந்த தேச உபநிஷத்தின் புதிய சிந்தனைகளோடு பழைய, காலங்கண்ட, இந்து தத்துவத்தின் சாரமான சிந்தனைச் சுடர்களையும், தொன்று தொட்டு வரும் தமிழ் நாகரிகப் பண்பாடுகளையும் பார்க்கிறோம். அகில இந்தியாவின் ஆன்மா தமிழகத்தின் ஆன்மாவாகவும் இக்கவிஞருக்குக் காட்சி தந்தது. ஆம், தமிழ்த் தெய்வமும் பாரத அன்னையும் இவருடைய பராசக்திதானே?

இந்த தேசிய கவி – பராசக்தியின் இந்த ஆஸ்தான கவி- தமிழன்னையின் புதுமைப் புரட்சிக் கவி – வருங்காலத் தமிழக அமைப்பிற்கு வழிகாட்டும் தீர்க்கதரிசியாகவும் திகழ்கின்றார்.

வேதகாலம் தொட்டு, பக்தர்களும் சித்தர்களும் ஞானிகளும் மூழ்கித் திளைத்த ஆன்ம ஒளி கடலில் இத் தேசிய கவியும் மூழ்கித் திளைத்தவர்; எனினும் புரட்சிக் கவிஞர். வேதப் பெருமை பாடிய வாயால் ரஷ்யப் புரட்சியையும் பாராட்டி பொதுவுடைமையின் வெற்றியையும் பாடுகிறார். ஆகவே இவரது புரட்சி மனப்பான்மையில் தெய்வ பக்திக்கும் சமய ஞானத்திற்கும் அஹிம்சா தர்மத்திற்கும் இடமுண்டு. எல்லா மதங்களுக்கும் பொதுவான, சக்திமயமான, புரட்சிகரமான விளைவுகளோடு கூடிய ஞான பக்திக்கும் இடமுண்டு.

காளியும் கண்ணனும் முருகனும் அல்லாவும் கிறிஸ்துவும் ஹரிஜனங்களின் தேசமுத்துமாரியும் இவருக்கு ஒரே தெய்வத்தின் பல பெயர்களே. எத்தனையோ தெய்வ வழிபாடுகளுக்கிடையே பிற்காலத் தமிழர்கள் மறந்துவிட்ட சுதந்திர தேவிக்கு இவர் தனிச் சிங்காதனமிட்டு, பராசக்தியின் அதி முக்கிய அம்சமாகப் பாடியிருக்கிறார். சுதந்திர தேவியின் அருள் பெறாதவர்கள் பாவிகள் என்கிறார்.

‘அரசியல் சுதந்திரமற்ற பாவ பூமியில் புதிய புதிய கலைகளும் காவியங்களும் தோன்றுவதற்கு வழியில்லை, எனவே தமிழிலக்கியமும் க்ஷீணகதியுற்றுப் பாலைவனமாகிவிட்டது’ என்பதை உணர்த்தும் பாரதியார், சுதந்திர வெறி கொண்டு தமிழிலக்கியத்துக்கு புத்துயிர் அளித்தார்.

எல்லாரும் ஓர் குலம்

எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர் நிறை

எல்லாரும் ஓர் விலை

என்ற சுதந்திரக் கனவு நனவாகும்போது புதுமைத் தமிழிலக்கியமும் புதுமைத் தமிழகமும் உலகத்துக்கே ஒரு புதுமையாக வளர்ந்தோங்கும் என்பது திண்ணம்.

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம்

எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து

கழிகவே!

என்று பாடிய பாரதியாரின் சுதந்திர உணர்ச்சி அரசியலில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் புரட்சிகரமாக வெளிப்பட்டது. ஆண்களோடு பெண்களுக்கும் சரிநிகர் சமானமாக விடுதலை வேண்டியவர். பல்வேறு வகுப்பினருக்கும் – முக்கியமாக ஹரிஜனங்களுக்கு – உடனே விடுதலை வேண்டினார். வறுமையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை வேண்டினார். கருத்துச் சுதந்திரம், மத சுதந்திரம் முதலான சகல சுதந்திரங்களும் வேண்டினார்.

இவர் கவிதையை தமிழ்ப் பெருமக்களின் அழியாத அட்லாண்டிக் மகாசமுத்திரத்திலும் கரைந்து போகாத சுதந்திர மகா சாஸனம் என்று சொல்ல வேண்டும். இத்தகைய மகா சாஸனத்தை நமக்கு அளித்த பாரதியாரின் மகத்தான மனப் பண்பையும் ஆத்ம சக்தியையும் பாரதியம் எனலாம்.

ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசத்துடன் நம் மக்கள் இதயப் பிரவேசமும் அளிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி ஹரிஜனப் பிரச்னையை முக்கியமான தேசியப் பிரச்னை ஆக்கியவர் மகாத்மா காந்தி என்பதை அறியாதார் இல்லை. ஆனால் காந்தியடிகளுக்கு முன்பே இத்துறையில் பெருவழி காட்டியவர் பாரதியார் என்பதை தமிழர்களும் நன்றாக அறிந்து கொள்ளவில்லை.

1917ஆம் ஆண்டில் பாரதியார் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஹரிஜனங்களுக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை என்பதை வற்புறுத்தியிருக்கிறார். பட்டணத்து ஹரிஜனங்களைக் குறித்து பாரதியார் பேசவில்லை. கிராமங்களில் உள்ள ஹரிஜனங்களையே குறிப்பிடுகிறார்.

‘அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு… ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து இந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதறவிடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக் கூடிய கைங்கரியம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமான கைங்கரியம்’. ‘நமக்கு மண் உழுது நெல் அறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேர்மையாய் நடத்த வேண்டாமா?’

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்கும் கலெக்டருக்கும் சம்வாதமாக பாரதியார் ‘நந்தன் சரித்திரக் கீர்த்தனை’ மெட்டில் பாடியிருந்த பாடல்கள் பாரதியாரை ஓரளவில் கவிஞரென்று அறிமுகப்படுத்திவிட்டது. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’, ‘வந்தே மாதரம் என்போம்’ முதலான தேசியப் பாடல்கள் ஒருபுதிய தேசிய கவிதையின் உதயத்தை அறிவித்தன. எனினும் ‘பாஞ்சாலி சபதத்’தைப் பார்த்தபோது தான், தமிழ் இலக்கிய வானத்தில் உண்மையாகவே ஒரு புதிய மேதை உதயமாகிவிட்டது தெரியவந்தது.

பாரதியார் பாரத ஜாதியை – தமிழ் ஜாதியை ஒன்றாக்க முயன்றார். அந்த முயற்சிக்கு, ஹரிஜனங்கள் மற்றவர்களோடு இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்று அபிப்ராயப்பட்டார். கங்கையிலே வந்துசேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாக மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறி, தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றனர்.

பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும் இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.

‘ஜாதி பேதங்கள் பிரயோஜனமில்லை என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக்காக, சமத்துவ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லட்சணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்! ஊண், உடை, பெண் கொடுக்கல் முதலிய விஷயங்களில் மூடத்தனமான கட்டுப்பாடுகளும் விதிகளும் தடைகளும் இருப்பதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.. சகல மனிதரும் சகோதரர். மனித வர்க்கம் ஓர் உயிர்’ இவ்வாறு முழங்குகிறது பாரதி முரசு.

பாரதியாருக்கு உண்மையான இந்தியாவும், உண்மையான தமிழ்நாடும் ஆரிய பூமியும் அல்ல; திராவிட ராஜ்யமும் அல்ல. நமது வேதம், நமது சாஸ்திரம், பாஷைகள், நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள், இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து.

காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளஸீ தாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி (இவை பாரதியார் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் படித்த நூல்கள்’) இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து. தஞ்சைப் பெரிய கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனங்கள், எல்லோராவின் குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரபசாஸ்திரியின் புல்லாங்குழல்- இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து’ என்று முரசு கொட்டுகிறவருக்கு, ஆரியனாவது திராவிடனாவது?

இந்த மகத்தான சம்பத்தே பாரதியாரின் இந்தியா-பாரதியாரின் தமிழ் வீடு. இவ்வீட்டிலே தம்பிகளான ஹரிஜனங்களிடம் அண்ணன்மார் விசேஷ அன்பு காட்ட வேண்டும் என்பது பாரதி மதம், பாரதியம்.

‘ஒரு புதுக்கட்டுப்பாடு செய்து கொள்வோமே, அந்தக் கட்டுப்பாடு யாதெனில்- ஒருவருக்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை; ஒருவருக்கொருவர் பயப்படுவதில்லை.

மானிடரே! இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவருக்கொருவர் கோபம், அல்லது அவமதிப்பு, அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். (சாதித்திமிர் உள்ள இந்துக்களும் ஹரிஜனங்களும் நடந்து கொண்ட மாதிரி இது; நிறத் திமிருடன் கூடிய வெள்ளையரும் மற்றவரும் நடந்து கொண்ட மாதிரியும் இதுதான்.)

மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்திருக்கிறது. இதை மாற்றி அன்பை மூலாதாரமாக்க வேண்டும்’.

இந்தப் பாரதிவாக்கை, அரசியல் சுதந்திரம் பெற்ற தமிழர் விரைவில் அமைத்துக் கொள்ள வேண்டிய ஒரு புதுவாழ்வு, இயக்கத்திற்கு அஸ்திவாரக் கல் என்று சொல்லலாம்.

இந்த அஸ்திவாரத்திலே உறுதியான கட்டடமாக அமைய வேண்டும் நமது தமிழர் புதுவாழ்வு இயக்கம். பாரதியத்தைத் துணையாகக் கொண்டால், கட்டடத்தைப் புதுமையாகவும், பெருமையாகவும், அழகாகவும், உறுதியாகவும் கட்டி வாழலாம்.

(கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலுக்கு பி.ஸ்ரீ. ஆச்சார்யா எழுதிய முன்னுரையிலிருந்து…)

இன்று பாரதியார் பிறந்த நாள்.

நன்றி: தினமணி (11.12.13)

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு  முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

இதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.

அவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.

வரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.

நாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.

அவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது? குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது?

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.

இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.

இதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”

இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்;  வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.

ஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா?

தினமணி (24.12.2012)
காண்க: வமுமுரளி
.

”என் வாழ்வே எனது செய்தி” – மகாத்மா காந்தி

 சிந்தனைக்களம்

1947 புதுதில்லி சுதந்திரக் தினக் கோலாகலங்களைப் புறக்கணித்து மகாத்மா காந்தி கல்கத்தாவில் மதக்கலவரங்களினின்றும் அமைதி காக்கச் சென்று தங்கிய வரலாற்றை ஆதாரபூர்வமான விவரங்களுடன் அ. அண்ணாமலை தெளிவுபடக் கோத்தளித்துள்ளது (‘தினமணி’ 15-8-2012) சிலாகிக்கத்தக்கது.

 ஆகஸ்ட் 14 – 15 நள்ளிரவில் தலைநகரில் அரசியல் நிர்ணய சபையில் சுதந்திர நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த அவைத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தமது தொடக்க உரையில், “சென்ற முப்பது ஆண்டுகளாக நமது சுதந்திர இயக்கப் பாதையில் வழிகாட்டும் பேரொளியாகத் திகழ்ந்து நம்மை வெற்றிச் சிகரத்துக்கு இட்டுச் சென்றவரும், தத்துவ தரிசியுமான மகாத்மா காந்தி நம் அனைவரின் மட்டற்ற மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரித்தானவர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

 அதையடுத்து ஜவாஹர்லால் நேரு தமது உணர்ச்சிகரமான பேருரையில் காந்திஜியை நினைவுகூர்ந்து இவ்வாறு பகன்றார்: இன்றைய தினம் நமது முதற்கண் நினைவுகள் இந்திய சுதந்திரத்தை நிர்மாணித்த சிற்பியான நமது தேசப்பிதாவையே சாரும்.

 பாரதப் பாரம்பரியத்தின் திருஉரு அவர். விடுதலை ஒளிப்பந்தத்தைத் தூக்கிப்பிடித்து நம்மைச் சூழ்ந்திருந்த காரிருளைக் களைந்து இந்தியாவை ஒளிமயமாக்கினார்.

 சென்ற காலத்தில் பல சமயம் நாம் அன்னாரது அறிவுரைகளினின்றும் பிறழி வழிதவறிச் சென்றோம். எனினும், நாம் மட்டுமல்ல, நமது வருங்காலச் சந்ததியரும் இந்தியத் தவப்புதல்வராம் மகாத்மா காந்தியின் அரிய அறிவுரைகளை இதயத்தில் பதிப்போமாக.

 திட நம்பிக்கையும், மன உரமும், துணிவும், அதேசமயம் பணிவும் ஒருங்கே திரண்ட மகோத்தமராகக் காந்திஜி திகழ்கிறார். புயல் வீசினாலும் அல்லது மழைகலந்த சூறாவளி குமுறினாலும் அவர் அளித்த சுதந்திர ஒளிப் பந்தத்தை நாம் ஒருபோதும் அணையவிட மாட்டோம்”.

 ஆகஸ்ட் 15 காலையில் சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற மவுண்ட்பாட்டன் பிரபு பின்வருமாறு அறிவித்தார்.

 “இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இனி நான் உங்கள் ஊழியன்.

 இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அகிம்சை வழியில் இந்திய சுதந்திரத்தைச் செதுக்கி உருவாக்கிய மகாத்மா காந்திக்கு இந்தியா காலங்காலமாகக் கடமைப்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது.

 அன்னார் இப்போது இங்கே நம்முடன் இருக்க இயலாமற்போனது நமது பேரிழப்பே ஆகும். அதைப்பற்றி நாம் எவ்வாறு வருந்துகிறோம். இங்கில்லாவிடினும் அவர் நம் அனைவரின் நினைவில் எத்துணை ஆழமாகப் பதிந்து நிலைகொண்டுள்ளார் என்பதை அவர் அறிவாராக…”

 கல்கத்தாவில் ஹைதரி மன்ஸில் என்ற பழைய கட்டடத்தில் தங்கியிருந்த காந்திஜி, சுதந்திர தினத்தை உபவாசம் அனுஷ்டித்தும், கைராட்டையில் நூல் நூற்றும் அமைதியாகக் கழித்தார். அந்நகரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.

 மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் உயர் அதிகாரி காந்திஜியை அணுகி, பத்திரிகைகளில் பிரசுரிக்க அன்னாரது சுதந்திர தின அறிக்கை அல்லது செய்தி வேண்டினார். “என்னத்தைச் சொல்ல? நான் வெதும்பி வறண்டு போய்விட்டேன்” என்று மறுதலித்தார் மகாத்மா. “”இத் தருணத்தில் உங்கள் ஆசிச்செய்தி இல்லையேல் அது நல்லதல்ல” என்று அந்த அதிகாரி மன்றாடினார். “சொல்வதற்கு செய்தி ஏதுமில்லை; அது நல்லதல்ல என்றால் கெட்டதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!” என்று தட்டிக்கழித்தார் அண்ணல் காந்தி.

 பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் (பி.பி.ஸி.) விசேஷ நிருபர் குரல் பதிவுக் கருவியுடன் அண்ணலை அணுகி “சுதந்திரதினச் செய்தி ஏதேனும் கூறுங்கள்; உங்கள் குரலிலேயே உலகமெங்கும் உடனடியாய் ஒலிபரப்புகிறோம்” என்று கேட்டபோது காந்திஜி, “இம்மாதிரியான ஆசை காட்டலுக்கெல்லாம் நான் மசியமாட்டேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நீங்கள் மறந்துவிடத்தான் வேண்டும்” என்று புன்முறுவிப் பதிலளித்தார்.

 இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1945 மே மாத இறுதியில் சிகாகோ டிஃபண்டர் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் அமெரிக்க நீக்ரோ பிரதிநிதி காந்திஜியைப் பேட்டி கண்டார். முடிவில், “சிறப்புச் செய்தி ஏதாகிலும் நீங்கள் அளியுங்களேன்?” என்று விண்ணப்பித்தார்.

 அதற்கு காந்திஜி, “எனது வாழ்விலேயே என் செய்தி அடங்கியுள்ளது. அவ்வாறு இல்லையெனில், இப்போது நான் எதையும் புதிதாகச் சொல்வதினாலோ எழுதுவதினாலோ ஏதும் நிறைவுபெறப் போவதில்லை” என்றார்!

 ஆம்! காந்திஜியின் வாழ்வே அவரது செய்தி. “அகிம்சை, அன்பு, சத்திய நாட்டம், எளிய வாழ்வு – உயரிய சிந்தனை, மத நல்லிணக்கம், அப்பழுக்கற்ற அரசியல், மக்களைப் பொருளாதார ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்துதல், கடையனுக்கும் கடைத்தேற்றம்’ இவையே அவரது வாழ்வின் சாரம். இவற்றை நாம் மனத்தில் இறுத்தி, கூடியவரை செயலில் கடைப்பிடிப்போமாக.

– லா.சு. ரங்கராஜன் 
நன்றி: தினமணி (28.08.2012)