மகத்தான மாமனிதர்

பி. கக்கன்
(பிறந்த தினம்: ஜூன் 18)


மதுரை
மாவட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் – பெரும்பி அம்மாள் தம்பதிக்கு 1909 ஜூன் 18ம் நாள் கக்கன் பிறந்தார்.

கோயில் பூசாரியாகவும், அரசு துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றிய தந்தையார், தன் மகனை லட்சியவாதியாக வளர்த்தார். தந்தையின் விருப்பப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேறி, ஆசிரியர் பயிற்சியை முடித்து, சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாத அய்யரும் கக்கன்ஜியும் சமுதாயப் பணியிலும், தேசப்பணியிலும் இணைந்தே செயல்பட்டனர். 1939 ஆகஸ்ட் 8இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜன சமுதாயத்தினர் நுழைய வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன்ஜியும் போராடினார். பவண மீனாட்சி கோயிலிலும், கேரள ஆலயங்களிலும் கக்கன்ஜியினால் ஹரிஜன மக்கள் ஆண்டவனை தரிசிக்க முடிந்தது.

மக்களில் ஒருவராய்…

சென்னை அரசு பொது மருத்துவமனை. ஒரு முதியவரான நோயாளி மருத்துவமனையில் சேர்வதற்காகச் சென்றார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்கச் சொன்னார். ஒருநாள், ‘முதலமைச்சர் வருகிறார் எழுந்து உட்காருங்கள்’ என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதிய நோயாளியின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன் மருத்துவமனையை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அந்த முதிய நோயாளியை கடந்து சென்றவர், சட்டென்று திரும்பி அருகில் அமர்ந்து, அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதியவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். முதியவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தச் செய்தார். அந்த முதியவர்தான் கக்கன். இந்த செய்தி கேட்ட தமிழகமே நெகிழ்ந்தது.

தியாகத் தழும்பு

கர்மவீரர் காமராஜரின் நேரடிச் சீடரான கக்கன்ஜி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் போராடியதால் சிறை சென்றார். சிறையில் கக்கன்ஜியை கம்பத்தில் கட்டி,  குருதி கொட்ட தடியாலடித்த போதும், ”காந்தியார் வாழ்க”, ”காமராஜர் வாழ்க”
என்றே முழக்கமிட்டார். கக்கன்ஜி மண்ணோடு மறையும் வரை அந்த வீரத்தழும்புகள் அவரது தியாகத்தை கூறிக்கொண்டிருந்தன.

எளிமையின் சிகரம்

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி இழந்தது. கக்கன்ஜி அமைச்சருக்காக அளிக்கப்பட்டிருந்த அறையில் கோப்புகளையும், அவருடைய பதவிக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனமான காரையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்.

தலைமைச் செயலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, மாநகரப் பேருந்தில் சாதாரண பொதுமக்களில் ஒருவராய் பயணித்தார். எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகி கக்கன்ஜி 1981 டிசம்பர் 28ம் நாள் மறைந்தார்.

நன்றி: விஜயபாரதம்

காண்க: தியாகத் திருவிளக்கு 

திவ்யப் பிரபந்தம் தந்த மகான்

நாதமுனிகள்
திருநட்சத்திரம்ஆனி – 27 – அனுஷம்
(ஜூன் 12)
தமிழின் பக்தி இலக்கியங்களில் வைணவர்களின் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு பேரிடம் உண்டு. வைணவ மகான்களால், ஆழ்வார்களால் பாடப்பட்ட அற்புதமான தெய்வத் தமிழ்ப் பாக்கள் சிதறிக் கிடந்த நிலையில், அவற்றைத் தொகுத்துநாலாயிரத் திவ்யப் பிரபந்தமாகதமிழுலகுக்கு வழங்கியவர் நாத முனிகள்.
ஸ்ரீ வைணவ ஆசார்ய பரம்பரை, பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, விஷ்வக்ஸேநர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்தே வருவது. முதல் மூவர் பரமபதத்தில் இருப்பவர்கள். நம்மாழ்வாரோஆழ்வார்பட்டியலில் இடம் பெறுபவர். ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளையே முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும்.
திருஅவதாரம்

முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்யசூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்பொது யுகத்திற்குப் பிந்தைய  823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈச்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்டபிறகு, நாதமுனிகள் ஆனார்.

தம் தந்தை ஈச்வரபட்டராழ்வாரோடும் குமாரர் ஈச்வர முனிகளோடும் காட்டுமன்னார் அனுமதி பெற்றுக் குடும்பத்தோடு வடநாட்டு யாத்திரை சென்றார் இவர். பல வைணவத் திருத்தலங்களைப் பார்த்துப் பாடிப் பரவசமடைந்து ஸ்ரீகோவர்த்தனபுரம் எனும் கிராமத்தில்யமுனைத் துறைவன்பகவானைத் திருத்தொண்டால் மகிழ்வித்தபடி சில ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒருநாள் கனவில் காட்டுமன்னார் இவரைவீரநாராயணபுரத்திற்கு மீண்டும் வருகஎன்றழைத்தார். எனவே குடும்பசகிதம் இவர் திரும்ப மன்னார் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கிருந்த வைணவ மக்கள் இவர் குடும்பம் தங்க ஒரு வீடும், வாழ்க்கை நடத்த வேண்டிய பொருட்களையும் கொடுக்க பெருமாள் சங்கல்பத்தால் நியமனம் செய்யப்பட்டனர்சில ஆண்டுகள் இவருடைய கைங்கர்யம் கோயிலில் தொடர்ந்து நடந்து வந்தது. அச்சமயம் சில வைணவர் வந்து பெருமாள் முன்ஆராவமுதேஎன்கிற திருவாய்மொழிப் பாசுரம் பாடி வணங்கினர். அது நாதமுனிகளுக்கு மிக உகந்ததாக இருக்க, அவர் அவர்களிடம், “இத் திருவாய்மொழிப் பாசுரத்திலே சாற்றுப் பாட்டில்ஓராயிரத்துள் இப்பத்தும்என வருகிறதே, உங்களுக்கு இப்படி அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் பாட்டும் வருமோ?” என்று கேட்டார். “இல்லை; இப்பத்துப் பாட்டுகளே தெரியும்; மற்றவை கிடைக்கவில்லைஎன்று அவர்கள்  கூறிச் சென்றனர்.
குருகூர் புறப்பட்டார்
குருகூர்ச் சடகோபன்என வைணவர் குறிப்பிட்டிருந்ததால், திருக்குருகூருக்குச் சென்ற நாதமுனிகள், ஆழ்வார் பாசுரங்கள் பற்றி விசாரித்தார். மதுரகவி ஆழ்வார் பரம்பரையில் வந்த ஒருவரைச் சந்தித்தார். அவர் பெயர் பராங்குசதாசர் அவரோ, “திருவாய்மொழியும் திவ்யப் பிரபந்தங்களும் சில காலமாக மறைந்து விட்டன. ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளியகண்ணிநுண்சிறுத்தாம்புஎனும் பிரபந்தம் எம்மிடமுள்ளது. இந்தப் பதினோரு பாசுரங்களை, ஆழ்வார் திருஉருவம் முன் ஒரு முகப்பட்ட மனத்துடன் பன்னீராயிரம் உரு ஜெபித்தால், நியமத்துடன் ஆழ்வார் திருவடிகளை எண்ணிச் செய்தால் நம்மாழ்வார் பிரசன்னமாவார் என்றும் மதுரகவி அருளியிருக்கிறார்என்றார்.
அவரிடம்கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களை உபதேசமாகப் பெற்று யோகியான நாதமுனிகள் பராங்குசதாசர் சொன்னபடியே தியானித்தார். ஆழ்வார் அவர் சமாதியில் நெஞ்சில் தோன்றினார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, “திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களை அடியேனுக்கு இரங்கி அருள வேணும்என்று நாதமுனிகள் விண்ணப்பித்தார்.

உடனே ஆழ்வார் நாதமுனிகளுக்குமயர்வற மதிநலமருளி ரஹஸ்யத்ரயம்திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களையும் அவற்றின் பொருளோடு தந்து அஷ்டாங்க யோகத்தையும் உபதேசித்து, யோக வேதாந்தத்தை அறியச் செய்தார். அவற்றை அநுசந்தித்துக் கொண்டு ஆழ்வார் திருநகரியலேயே சிலகாலம் ஸ்ரீநாதமுனிகள் தங்கிவிட்டார். பிறகு மீண்டும் வீரநாராயணபுரப் பெருமாள் காட்டுமன்னனார் அழைக்கவே திரும்பி வந்தார்.

யோக சமாதியில் நம்மாழ்வாரிடம் ஸ்ரீமந் நாதமுனிகள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் உபதேசமாகப் பெறும்போதுபொலிக பொலிகஎனும் பாசுரம் வந்தது. இதில்கலியும் கெடும் கண்டு கொண்மின்என்று நான் சொன்னதை உண்மையாக்கப் போகும் ஒரு மஹான் அவதரிக்கப் போகிறார்என்றார் ஆழ்வார்.

அவரை அடியேன் சேவிக்க வேணும்என்றார் நாதமுனிகள். ஆழவாரும் அப்படியே உருவங்காட்டி சேவை சாதித்தார். உடனே நாதமுனிகள், “தேவரீரைக் காட்டிலும் அழகான இத் திருமேனியை எப்போதும் அடியேன் சேவித்துவர வழி செய்ய வேணும்என்க, அவ்வூர் சிற்பிக்கும் அப்படி சேவை சாதித்த ஆழ்வார், “இதேபோல விக்ரஹம் பண்ணி நம் சந்நிதியிலிருக்கும் நாதமுனிகளிடம் தருகஎன நியமித்தார். அதேபோல அவனிடம் நாதமுனிகள் ஒரு பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைப் பெற்றார். இது பின்னால் அவதரிக்கவிருந்த ஸ்ரீ ராமாநுஜருடைய திருமேனிச் சிலையாகும்.

நாதமுனிகளின் சீடர்கள்

இவருக்கு எட்டு சீடர்களிருந்தனர். அவர்களில் இருவர் மிக முக்கியமானவர். 1) புண்டரீகாட்சர் என்ற உய்யக் கொண்டார் 2) குருகைக்காவலப்பர். ஸ்ரீமந் நாதமுனிகளிடம் யோக வித்தையும் வேதாந்த ஞானமும் இரண்டுமே முழுமையாயிருந்தது.

குருகைக்காவலப்பரிடம், “அப்பா, எம்மிடம் யோகமும் திருவாய்மொழி திவ்யப் பிரபந்த வேதாந்தமும் உள்ளன. யோக வித்தையால் நீர் ஒருவர் மட்டும் உய்ந்து போகலாம். இந்த வேதாந்த ஞானத்தால் உலகோரையும் உய்விக்கலாம். உமக்கு எது வேண்டும்என்று கேட்டார்.

என் வழியைப் பார்த்துக் கொண்டு நான் போகிறேன். எனக்கு யோகத்தையே உபதேசியும்என்று வாங்கிக் கொண்டார் குருகைக்காவலப்பர். அவரிடம், “”என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்) வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்என்று கூறியனுப்பினார் நாதமுனிகள்.

புண்டரீகாட்சரை அழைத்து அதேபோலயோகமா, வேதாந்தமா? எது உமக்கு வேண்டும்?” என்று நாதமுனிகள் கேட்டார்.

ஆசார்யரே, பிணம் கிடக்க மணம் புணருவாருண்டோ? ஆன்ம நாசமடைந்தவராய் மக்கள் அழிந்திருக்க, அடியேன் என் ஒருவன் உயர்விற்காக மட்டுமான யோகம் கேட்பேனோ? மக்களை அறியாமைப் படுகுழியிலிருந்து விடுவித்து இறைவன் திருவடியில் சேர்ப்பிக்கும் திருவாய்மொழி திவ்யப் பிரபந்த ஞானமே வேண்டும்என்று கேட்டார்.

ஆகா! மக்களை உய்விக்கவந்தஉய்யக் கொண்டாரேஎன்று நாதமுனிகள் அழைக்க, புண்டரீகாட்சர்உய்யக் கொண்டார்ஆனார், அவரிடம்ரகசியம் வெளியிடாதீர்என்று கூறி, என் அந்திம தசைக்குப் பிறகு, பிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம் வேதாந்த என்றதையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.

உய்யக் கொண்டார் சரமதசை வரை, ஆளவந்தார் பிறக்காததால் அவருடைய சீடர்மணக்கால் நம்பியிடம் பவிஷ்யதாசார்ய சிலையையும் வேதாந்தியாக ஆளவந்தாரை ஆக்கி தர்சன நிர்வாஹராக ஆக்குவதையும் விட்டுச் சென்றார். பின்னாளில் அவர் அதை நிறைவேற்றினார்.

மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை & மருமக்களை திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர். இவர்களே இன்றும் இப்படிச் செய்துவரும்அரையர்களின் குலத்திற்கு ஆரம்பமாயினர்.
திருவாய்மொழி திவ்யப் பிரபந்தங்களை தேவகான இசையில் சேர்த்துத் தாமே பாடிப் பிரச்சாரம் செய்தார். மருமக்களிருவரையும் இதில் பழக்கி அர்ப்பணித்தார். தேவ கானத்தில் ராகம், தாளம் அமைத்து இயலும் இசையுமாக்கித் திவ்யப் பிரபந்தங்களைப் பரப்பினார். திருமங்கைமன்னன் செய்து வந்து நின்றிருந்த அத்யயன அருளிச் செயல் உற்சவங்களை மீண்டும் தொடங்கித் தாமே அரங்கன் முன் பாடி அபிநயம் பிடித்தும் காட்டி வந்தார். தம் குமாரர் ஈச்வரமுனிகளிடம்உனக்கு ஒரு மகன் பிறப்பான். ‘யமுனைத் துறைவன்எனப் பெயர் வைஎன்றும் உணர்த்தி வைத்தார்.

இவருடைய நூல்கள்

இவர்நியாய தத்வம்‘, ‘புருஷ நிர்ணயம்‘, ‘யோகரகசியம்என நூல்கள் எழுதியதாகச் சொல்வர். அவை இன்று கிடைப்பதில்லை. இவருடைய நியாய தத்துவ நூலிலிருந்து சில பகுதிகள், ஸ்ரீமத் ஆளவந்தார்,  எம்பெருமானார்ச்ருத ப்ரகாசிகா பட்டர்தேசிகர் முதலான பேராசிரிய ஆசார்யர்களால் தங்கள் நூல்களில் எடுத்துககாட்டப் பட்டுள்ளன. யோக ரகசியம், புருஷ நிர்ணயம் இவரின் நூல்களென பெரிய திருமுடியடைவில் இருந்து தெரிகின்றது. ஆனால் எந்நூலும் இன்று இல்லை.

இன்னொரு சமயம் வீரநாராயணபுரம் அருகில் இருந்த காட்டில் வேட்டையாடி விட்டு ராஜா, மந்திரி, ராணி வேலையாட்களுடன் இவரைப் பார்க்க வந்தபோதும் நாதமுனிகள் சமாதியில் இருந்தார். இவருடைய பெண்ணிடம் தான் வந்ததாகச் சொல்லி விட்டு அரசன் சென்றான். யோகநிலை விட்டு ஸ்ரீமந்நாதமுனிகள் எழுந்ததும் அவர் பெண், வேட்டைக்கார வேடத்துடன் அரசன் வந்ததை விவரித்தாள். கையில் வில், அம்புக்கூடு, தலையில் கொண்டையிட்டு துணி கட்டி இருந்த இரு ஆடவர், ஓரிளம்பெண், கூட ஒரு குரங்கு என்று சொல்ல, ஸ்ரீராமனே தம்பி இலக்குவனுடன், நடுவில் சீதாபிராட்டி வர, ஆஞ்ச நேயருடன் வந்திருக்கிறார் என்று பக்திப் பிரேமை மிகத் தேடிக் கொண்டு அவர்கள் போன வடதிசையில் ஓடினார். குரங்குக் காலடித் தடம் கண்டாராம். அவ்விடம்குரங்கடிஎனப் பெயர் பெற்று இன்றும்  இருக்கிறது.
எங்கும் ஸ்ரீராமரைக் காணாமல் வியாகூலம் மேலிட பல இடங்களிலும் அலைந்து பரமபதித்து விட்டார். “வைகுந்தம் சென்றேனும் அவர்களைக் கண்டு வருவேன்என்றே மூச்சை விட்டாராம்.அப்போது அவர் பிராயம் 93,  917 ல், தாது ஆண்டு, மாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி அன்று திருநாடு அலஙகரித்தார். சீடர்கள் சேர்ந்து அவர் மகன் ஈச்வரமுனியைக் கொண்டு காரியங்களைப் பரக்க நடத்தினர். இவர் யோகசீடர் குருகைக்காவலப்பர் அந்த இடத்திலேயே தம் 70 ம் ஆண்டு கடைசி தினம் வரை யோகத்தில் இருந்தார். பிறகு அவர் சந்நிதி அங்கு உண்டானது.

செங்கோட்டை ஸ்ரீராம்
காண்க:

 

கருடனின் அம்சமாக அவதரித்தவர்

மதுரகவி ஆழ்வார்
திருநட்சத்திரம்:
சித்திரை – 5 – சித்திரை
(ஏப். 18)

திருக்கோளூர் – பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய இந்த ஊருக்கு இன்னுமோர் சிறப்பு சேர்ந்தது. அது – மதுரகவியாழ்வார் என்னும் வைணவ அடியாரைத் தோற்றுவித்த காரணத்தால்!

திருக்கோளூரில் சிறப்போடு வாழ்ந்த மக்களிடையே, முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபினரும் இருந்தனர். அந்த மரபில், முன்குடுமிச் சோழிய மரபு சிறக்கும் வண்ணம், ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை பொருந்திய சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயாம்சராக (கருடனின் அம்சமாக) மதுரகவியாழ்வார் அவதரித்தார்.

இவர் தமிழ் மொழியிலும்,  வடமொழியிலும் புலமை பெற்றுத் திகழ்ந்தார். சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, பக்தி முதலியன வாய்க்கப் பெற்றிருந்தார்.  தமிழில் தேனினும் இனிய கவிதைகளைப் புனைந்து, திருமால் மீதான தம் பாடல்களைப் பாடிவந்தார். மதுரமான கவிதைகளைப் பாடிய காரணத்தால், இவருக்கு ‘மதுரகவியார்’ என்னும் பெயர் ஏற்பட்டது.

புண்ணியம் நல்கும் திருப்பதிகளான அயோத்தி, மதுரா, கயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஏழு தலங்களையும் சேவிக்க யாத்திரை சென்றார். இங்கெல்லாம் சென்று, இறைவனை சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்தார். அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற ராமபிரானையும், சீதாபிராட்டியையும் சேவித்து திருவடி தொழுது அங்கு வசிக்கலானார்.

ஒருநாள் நள்ளிரவு. இவர் திருக்கோளூர் எம்பெருமானை எண்ணி, அந்தப் பதி இருக்கும் தென்திசை நோக்கித் தொழுதார். அப்போது அவர், தென்திசையில் வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்வியமான பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. அது இன்னதென்று அறியாமல், கிராம, நகரங்கள் ஏதும் வேகின்றனவோ? அல்லது காட்டுத் தீ சூழ்ந்ததோ? எனத் திகைத்து நின்றார். இவ்வாறே அடுத்த சில தினங்களிலும் கண்டு ஆச்சர்யத்தால் மேனி சிலிர்த்தார்.

அந்தத் திவ்விய ஒளி, முன்னினும் சிறப்புற அதிக ஒளி பொருந்தியதாய் விளக்கியதால், பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் ஆசையோடு தென் திசை நோக்கிப் புறப்பட்டார். நெடுந்தொலைவு வந்து, அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நடந்து, இறுதியில் திருக்குருகூரை அடைந்தார். அதுவரையில் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இவ்வளவு தூரம் நடத்தி அழைத்து வந்த அந்த ஒளி, திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.

மதுரகவியார் அவ்வூரில் உள்ளவர்களைப் பார்த்து, ”இங்கு ஏதேனும் சிறப்புச் செய்தி உண்டோ?”  என்று கேட்டார்.  அவர்கள், அந்த ஊரில் வாழும் நம்மாழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். நம்மாழ்வாரின் வரலாற்றைக் கேட்ட மதுரகவியார், கோயிலின் உள்ளே சென்று,  நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னது இவர் நினைவுக்கு வந்தது.

மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். ”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார் மதுரகவியார்.

”அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)

தனக்குத் தகுந்த விடை கிடைத்தவுடனே, நம்மாழ்வாரையே தன் குருவாக ஏற்றுக் கொண்டாடினார். பிறகு அவரருளைப் பெற்று, நம்மாழ்வார் அருளிச் செயல்களைப் பட்டோலையில் எழுதினர். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப் பாமாலையின் முதற்பா ”கண்ணிநுண்சிறுத்தாம்பு” எனத்  தொடங்குவதால்  அதற்குக்  ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு’   என்பதே  பெயராயிற்று.

இவ்வாறு இருக்குங்காலை,  நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.

இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ”உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?” என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ”இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்” என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழப்  பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து,  திருவாய்மொழியில் ‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார்.

அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.  பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார்.  சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.

மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி. அவருக்கு மற்ற தெய்வங்கள் எதுவும் தேவைப்படவில்லை.

பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்றுதான். அவை ‘குருகூர் சடகோபன்’ என்னும் நம்மாழ்வாரின் புகழை மட்டுமே கொண்டிருக்கின்றன. இருப்பினும் மதுரகவியாரே நம்மாழ்வாரைக் கண்டுபிடித்து பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில் அவர் வைணவ உலகால் கொண்டாடப்படுகிறார்.

-செங்கோட்டை ஸ்ரீராம்

காண்க:

மதுரகவி ஆழ்வார் (விக்கி)

மதுரகவி ஆழ்வார் – சிறுகுறிப்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு ௦ விளக்கவுரை (திராவிட வேதம்)

திருக்குருகூர் (தினமலர்)

மதுரகவி (தமிழ்முரசு)

மதுரகவி (தேசிகன்)

MADHURAKAVI AZHVAR