மண்ணில் வரும் தெய்வசக்தி

-திருப்பூர் கிருஷ்ணன்

aravinda maharishi

மகரிஷி அரவிந்தர்

அலிப்பூர் சிறையில் தவம் நிகழ்த்தினார் ஸ்ரீ அரவிந்தர். ஓராண்டுத் தவம். சிறையிலேயே கிருஷ்ண தரிசனம் பெற்றார்.

ஸ்ரீ அரவிந்தருக்கு பகவத்கீதையை போதித்தான் கண்ணக் கடவுள். கண்ணனிடம் கீதையை நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். ஒருவன் அர்ச்சுனன். இன்னொருவர் அரவிந்தர்.

அர்ச்சுனனுக்குக் கீதை சொன்னபோது நடந்தது மகாபாரதப் போர். அரவிந்தருக்குக் கீதை சொன்னபோது நடந்தது சுதந்திர பாரதப் போர். அப்போது கீதை சொன்ன இடம் போர்க்களம். இப்போது கீதை சொன்ன இடம் சிறைத்தலம்.

அரவிந்தர் கிருஷ்ண தரிசனம் பெற்ற செய்தி, நாளிதழ்கள் மூலமாக பாரதியாருக்குக் கிடைத்தது. அப்போது புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் மகாகவி. கண்ணன் பாட்டு எழுதிய தனக்குக் கிடைக்காத கிருஷ்ண தரிசனம் அரவிந்தருக்குக் கிடைத்ததை எண்ணி மலைத்தார்.

பின்னர் ஒரு நிருபரை கொல்கத்தாவுக்கு அனுப்பி நேரில் விசாரித்து அரவிந்தர் கிருஷ்ண தரிசனம் பெற்றதை உறுதிப்படுத்திக் கொண்டார். அரவிந்தர் மேல் மிகுந்த மரியாதை கொண்டார்.

அதனால்தான் பின்னாளில் ஸ்ரீ அரவிந்தர் கப்பலில் புதுச்சேரி வந்தபோது அவரை வரவேற்று அவருக்குத் தங்குவதற்கு தன் நண்பர் சங்கரன் செட்டியார் மூலம் வீடு பார்த்துக் கொடுத்தார். இந்நாளில் ஸ்ரீ அரவிந்தரை வழிபட்டால் வீடுபேற்றையே அடைய முடியும் என அரவிந்த அன்பர்கள் நம்புகிறார்கள்.

அப்படிப்பட்ட மகானுக்குத் தங்குவதற்கு புதுச்சேரியில் வீடு பார்த்துக் கொடுத்த பெருமை நம் மகாகவிக்கு உரியது.

சுதந்திர எழுச்சியைத் தட்டி எழுப்பக் கூடிய உன்னதப் பேச்சாளரான அரவிந்தரை சுதந்திரப் போர்ச் சூழலிலிருந்து இழக்க மகாத்மாவுக்கு விருப்பமில்லை.

லாலா லஜபதிராய், தேவதாஸ் காந்தி ஆகியோரை தனித்தனியே அரவிந்தரிடம் அனுப்பினார் மகாத்மா. மறுபடி சுதந்திரப் போர்ப் பேச்சாளராக அரவிந்தர் இயங்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஆனால் அரவிந்தர் அதற்குச் சம்மதிக்கவில்லை. தான் ஸ்தூல உருவில் சுதந்திரப் போரில் முன்போல் கலந்துகொள்ளவில்லை என்றாலும், சூட்சுமமாக தியானத்தின் மூலம் சுதந்திரம் கிடைப்பதற்காகவே உழைத்து வருவதாக மகாத்மாவுக்கு சொல்லி அனுப்பினார்.

என்ன ஆச்சரியம், பல ஆண்டுகள் கழித்து பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தபோது அது ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளாக அமைந்தது.

அரவிந்தரின் தியான நெறி புதுச்சேரியில் வளர்ந்தது. மகாகவி பாரதியார், வ.வே.சு. ஐயர் உள்ளிட்ட பலர் அவருடன் தியானம் பழகினார்கள்.

ஒருநாள் புதுச்சேரி முழுவதும் ஒரு நறுமணம் கமழ்ந்தது. என்ன நறுமணம் இது என திகைப்போடு ஸ்ரீஅரவிந்தரை வினவினார் ஜெயடேவி என்ற சாதகர். விண்ணிலிருந்து தெய்வீக சக்தி மண்ணில் இறங்குகிறது, மனிதனை அதிமனிதனாக்க வல்ல சக்தி அது. அந்தச் சக்தி இறங்கும் நேரம் இத்தகைய நிகழ்வுகள் தோன்றுவதில் ஆச்சரியமில்லை என அரவிந்தர் சொன்னார்.

அரவிந்தரோடு தங்கியிருந்த அம்புபாய் புரானி என்ற அன்பர் மூன்றாண்டுகள் தன் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருநதார். பின்னர் அவர் புதுச்சேரி திரும்பி அரவிந்தரை தரிசித்தபோது வியப்பில் ஆழ்ந்தார். காரணம் மாநிறமாக இருந்த அரவிந்தர், இப்போது பொன்னிறத்தில் ஒளிவீசிக் கொண்டிருந்தார்.

எப்படி வந்தது இந்தத் தங்க நிறம் என திகைப்போடு கேட்டபோது, தெய்வ சக்தி மனித உடலில் இறங்கும்போது நேரும் புற விளைவுகள் குறித்துப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார் அரவிந்தர்.

பிரசண்ட விகடன் என்ற முன்னோடித் தமிழ் இதழை நடத்திய நாரண துரைக்கண்ணன், அரவிந்தர் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அரவிந்தரின் வலது காலில் மட்டும் மெலிதாக ஒரு கருப்பு நிற நரம்பு தெரிவதாகவும் மற்றபடி அரவிந்தரின் வடிவம் முழுவதும் தங்க நிறம் பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபாலனும் அரவிந்தர் குறித்து அரவிந்தர் வாழ்ந்த காலத்திலேயே ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

அரவிந்தரை அவர் காலத்தில் பெரும் ஆன்மிக சக்தியாக இனம் கண்டு கொண்டாடிய இந்தியக் கவிஞர்கள் இருவர். ஒருவர் வங்கக் கவிஞர் தாகூர். இன்னொருவர் தங்கக் கவிஞர் நம் பாரதி.

அரவிந்தர் ஸித்தி அடைந்தபோது அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டார் என்றே மருத்துவ அறிக்கை சொல்லிற்று. ஆனால் மருத்துவர்களே பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அரவிந்தரின் உடலில் நிகழ்ந்தது.

சுமார் 111 மணிநேரம் ஸ்ரீ அரவிந்தரின் உடலில் அவர் காலமானதற்கான எந்தப் புற அறிகுறியும் தென்படவில்லை. ஒரு பொன்மயமான ஒளி அந்த உடலைச் சுற்றி மெலிதாகப் படர்ந்திருந்தது. அந்த ஒளி விலகுவதற்காக அன்னை காத்திருந்தார். அன்னையின் மனத்தில் உத்தரவு கிடைத்த பின்னரே அவர் ஸ்ரீ அரவிந்தரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தார்.

அரவிந்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது,  “ஸ்ரீ அரவிந்தரே! தெய்வ சக்தியை மண்ணில் இறக்கிட வேண்டும் என வாழ்நாள் முழுதும் உழைத்தீர்களே, இனி அது எவ்விதம் நடக்கும்?” என ஓர் அன்பர் கண்ணீரோடு வேண்டினார். அப்போது “ஹொபே, ஹொபே, ஹொபே” என அவர் காதில் அரவிந்தரின் குரல் கேட்டது.  ‘ஹொபே’ என்ற வங்காளச் சொல்லுக்கு  ‘நடக்கும்’ என்பது பொருள்.

தெய்வ சக்தி மண்ணில் இறங்க வேண்டுமானால் மனிதர்கள் தூய தவ வாழ்வு வாழ வேண்டும்.

தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் நிறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாகும் போது தெய்வ சக்தி மண்ணில் இறங்குவது சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி (15.08.2016)