சாம்பல்கூட நெருப்புக் கங்குகளாக மாறும்…

-பேரா. தி. இராசகோபாலன்

அடிப்படையில் இறை நம்பிக்கை இல்லாதவர், பண்டித ஜவாஹர்லால் நேரு. ஆனால், இந்திய நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக அவர் கட்டிய அறிவாலயம், நேரு பல்கலைக்கழகம். ஷாஜகான், தான் கட்டிய தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்ததைப் போல, நேரு தாம் உருவாக்கிய ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார். அறிவுத்தாகம் கொண்ட ஆன்மாக்களின் சரணாலயமாக இருந்த அந்த வளாகத்தில், இப்போது சில அபஸ்வரங்களும் குடியேற ஆரம்பித்துவிட்டன.

பாரத நாட்டிற்காகவே தவ வாழ்க்கை வாழ்ந்த நேரு, உலகத்தரம் வாய்ந்த ஹாரோவில் (லண்டனில்) தொடக்கக் கல்வியைக் கற்றார். பின்னர், புகழ் பெற்ற டிரினிட்டி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் பட்டத்தையும் பெற்றார். அந்த மாமனிதர் தாம் பெற்ற உலகத்தரம் வாய்ந்த கல்வியை, இந்திய மக்களும் பெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி எடுத்து, ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை நேருபிரானின் மூளைக்குழந்தை எனச் சொல்லலாம்.

1966-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தின் 53-ஆவது விதியின் கீழ் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விதி என வகுத்து, 14.11.1969 அன்று அப்பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது. அதற்குரிய வளாகமாக, பசுமையான வனப்பாங்கான இடத்தில், பறவைகளின் சொர்க்கம் எனக் கருதப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தை நேருவே தேர்ந்தெடுத்தார். இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் அங்கு இருக்க வேண்டுமென்று 37 இடங்களை மாணவர் சேர்க்கைக்குரிய மையங்களாகத் தெரிவு செய்யப்பட்டன.

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட இனத்தாருக்கென்று 22.5 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவில் எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் தரப்படாத ஆசிரியர் – மாணவருடைய விகிதாச்சாரம், நேரு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. ஒரு பேராசிரியருக்குப் பத்து மாணவர்கள் எனும் அடிப்படையில், மாணவர்கள் – பேராசிரியர்கள் சேர்க்கைகள் அமைந்தன. பன்னாட்டு மாணவர்களின் உறவு – கலாச்சாரம் வேண்டுமென்பதற்காகப், பத்து விழுக்காடு வெளிநாட்டு மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பேராசிரியர் குடியிருப்பும், மாணவர்கள் விடுதிகளும் மற்றப் பல்கலைக்கழகங்களில் தனித்தனியே கட்டப்பட்டிருக்கும். ஆனால், மாணவர்கள் – பேராசிரியர்களிடையே பரஸ்பர உறவும், எந்த நேரத்திலும் பேராசிரியர்களோடு கலந்துரையாடுவதற்காகவும், அடுத்தடுத்துப் பேராசிரியர்கள் குடியிருப்பும் மாணவர் விடுதிகளும் கட்டப்பெற்றிருக்கின்றன. பல்கலைக்கழக மான்யக்குழு மற்றமற்ற பல்கலைக்கழகங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு துறைகளுக்கு மட்டும் உயராய்வு மையங்களாக (யுனஎயய்உநன ளுவரனல ஊநவெசந) அங்கீகாரம் வழங்கும்.

ஆனால், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 9 துறைகளுக்கு உயராய்வு மைய அந்தஸ்த்தை வழங்கியிருக்கின்றது. பத்தாண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி வந்தபொழுது, பேராசிரியர் – மாணவர் உறவு வசிட்டர் – இராம இலக்குவன் உறவாகவும், பரமஹம்சர் – விவேகானந்தர் உறவாகவும் இருந்ததைக் காண முடிந்தது. அங்கிருக்கும் நூல் நிலையம் அறிவுப்பசிக்கு ஓர் அட்சயப்பாத்திரம்.

ஏழாவது மாடியில் கிளிப்பிங் செக்சன்னுக்கு ஒரு தளத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். பேரிடரை நிர்வகிக்கும் திறனைப் பற்றி உலக நாடுகளில் எந்தெந்தப் பத்திரிகைகளில் வந்திருக்கிறதோ, அவற்றை எல்லாம் கத்தரித்து, ஒரு கிளிப்பில் சொருகியிருப்பார்கள். பேரிடர் மேலாண்மையியல் பற்றி ஓர் ஆராய்ச்சி மாணவன் ஆய்வுக் கட்டுரை வழங்க வேண்டுமென்றால், எல்லாப் பத்திரிகைகளையும் தேடி அலைய வேண்டியதில்லை. அந்தக் கிளிப்பை எடுத்தால் போதுமானது. இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு இதுவொரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பது, நேருபிரானாருடைய விருப்பம்.

தேசிய ஒருமைப்பாடு, சமூக நீதி, மதச்சார்பின்மை, மக்களாட்சியின் மாண்பினை வளர்த்தல் – பன்னாட்டு உறவு, சமூகப் பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக விடைகாண முயலுதல், தொடர்ச்சியான, ஆற்றல் மிக்க முயற்சிகளின் மூலம் புதுப்புது அறிவுத்திறன்களைப் பெறுதல், ஆகியன ஜவகர்லால் பல்கலைக்கழகத்தைத் தோன்றுவதற்குரிய காரணங்களாக நேரு பெருமகனார் கருதினார். உலகளாவிய பார்வை வேண்டும் என்பதற்காகவே, திரு. பார்த்தசாரதி கோபால்சாமி அவர்களைத் துணை வேந்தராக நியமித்தார்.

பல்கலைக்கழகங்களின் தரத்தை மதிப்பிட்டு அங்கீகாரம் வழங்கும் நேக் கல்விமான்களின் குழு, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு 4 மதிப்பெண்களுக்கு 3.9 மதிப்பெண்களை வழங்கியது. மற்ற பல்கலைக்கழகங்கள் இத்தகுதியைப் பெற்றதில்லை. இந்திய நாட்டுக் குடிமக்கட்குச் சமீப காலங்களில் வழங்கும் தகவல் அறியும் உரிமையை, நேரு பல்கலைக்கழகம் அங்கிருக்கும் மாணவர்களுக்கு 2006 ஆம் ஆண்டிலேயே வழங்கியிருக்கிறது. இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் ஒரு மாணவருக்கு அரசு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் செலவழிக்கிறது. புறக்கணிக்கப்பட்ட  பழங்குடியைச் சார்ந்த மாணவர்களின் நலன் காக்க ஒரு தனி அலுவலகமே அங்கு இயங்கி வருகின்றது.

அப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் உலகளாவிய புகழ் பெற்றவர்கள். மேனாள் பேராசிரியர்களாகிய பிபின் சந்திரா, ரொமிலா தாப்பர் போன்ற பேராசிரியர்களின் பெயர்கள், உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் உச்சரிக்கப்படும். அங்குப் பயின்ற பழைய மாணவர்கள் திக் விஜய் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் காரட், சீதாராம் எச்சூரி போன்றோர், பல்துறை ஆளுமைகளைப் பெறுவதற்கு, அப்பல்கலைக்கழகம் தந்த பயிற்சியே காரணம் எனலாம்.

ஆனால், இத்தகைய உலகளாவிய புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் 03.02.2016 அன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பண்டித நேருபிரானின் ஆன்மா கேள்விப்படுமானால், அவருடைய சாம்பல்கூட மீண்டும் நெருப்புக் கங்குகளாக மாறும். கங்கையிலும் கடலிலும் கரைக்கப்பட்ட அவருடைய அஸ்தி கூட, பீனிக்ஸ் பறவைகளாக உயிர்த்தெழும்.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கோ, பதிவாளருக்கோ தெரிவிக்காமல், அனுமதி பெறாமல், பல்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் விளம்பரத் தட்டிகளை மாணவப் பேரவையின் தலைவர் கன்னையாகுமார் காஷ்மீர் மாணவர்களின் துணையோடு வளாகம் முழுதும் ஒட்டிவிட்டான். தேசத்துரோகம் செய்த அப்சல் குரு – மஹ்பூல் பட் ஆகியோருக்கு எடுக்கப்படும் விழா என்பதைத் தெரிந்து கொண்ட மாணவப் பேரவையின் துணைத்தலைவர் ஷெக்லா ரஷீத்தும், மாணவப் பேரவையின் துணைச் செயலர் சாராப் குமார் சர்மாவும் இந்த் சதிச் செயலைத், துணைவேந்தர் – பதிவாளர் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

முன் அனுமதி பெறாமலேயே தேசத்துரோகச் செயலை நடத்திவிடலாம் என்று நினைத்த கன்னையா குமார், செய்தி மேலிடத்தின் கவனத்திற்குச் சென்றுவிட்டதை அறிந்து, பல்சுவை நிழற்பட நிகழ்ச்சி ஒன்றனைப் பூப்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப் போவதாகத் துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் விண்ணப்பித்தான். சதிச்செயலை ஊகித்து உணர்ந்த துணை வேந்தர் ஜகதீஷ் குமாரும், பதிவாளர் புபீன்தர் சுல்சியும், அந்த இடத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என தடை விதித்தனர்.

ஆனால் விஷத்தில் புழுத்த புழுவாகிய கன்னையா குமார் காஷ்மீரி மாணவர்களைக் கூட்டிக்கொண்டு, சபர்மதி தாபாவில் அரங்கேற்றிவிட்டான். காஷ்மீருக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் பயங்கரவாதிகள் தாம் இந்தத் தேசத்தின் தியாகிகள் இந்தியா அழிகின்ற வரையில் எங்கள் போராட்டம் தொடரும். இந்தியா சுக்குநூறாக உடைகின்ற வரை எங்கள் போராட்டம் தொடரும் எனும் கோஷங்களை எழுப்பிக்கொண்டும், இதுவொரு தபாலாபீசு இல்லாத நாடு எனவொரு காஷ்மீரப் புலவன் பாடலைப் பாடிக் கொண்டும், வெறிக்கூத்து ஆடியிருக்கின்றனர். அவர்களுடைய கரங்களில் அப்சல் குருவின் படங்கள்.

அப்சல்குருவின் நினைவு நாளைக் கொண்டாடுவதாகச் சொல்லிக்கொண்டு, அன்றைக்கு அந்தப் போராளிக் குழுவினர் மகிஷாசூரனுடைய படத்திற்கு முன்னால் மாட்டுக் கறியைப் படைத்து, அதனை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். இந்த மாணவர்கள் சிரியாவுக்குச் சென்று சைத்தானுக்கு முன்னர் பன்றிக் கறியைப் படைத்து, அதனை உண்டு மகிழ முடியுமா தெருமுனையில் கட்டி வைத்துக் கல்லாலேயே அடித்து அவர்களைக் கொன்றுவிடும் அந்த அரசாங்கம்.

இசட்.ஏ. பூட்டோ இந்தியர்களுக்குப் பொல்லாதவராக இருந்தபோதிலும், பாகிஸ்தானுக்கு நல்லவர். என்றாலும், அங்கு அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்சல் குருவினுடைய நினைவுநாளை இங்குக் கொண்டாடும் வக்கிரப்பட்ட மாணவர்கள், பாகிஸ்தானுக்குச் சென்று, பூட்டோவினுடைய நினைவுநாளைக் கொண்டாடுகிறோம் எனச் சொல்லி, பாகிஸ்தான் ஒழிக எனக் கோஷமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா திறந்த வாய் மூடுவதற்குள்ளே துப்பாக்கிகள் அவர்களுடைய தொண்டையைக் கிழித்துவிடும்.

இவற்றையெல்லாம் நாட்டுப் பற்றும் ஆன்மீகப் பற்றும் கொண்ட அரசியல்வாதிகளின் துணையுடன் ஆவணப்படுத்திய காவல்துறையின் இணை ஆணையர் திரு. பாஸி அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழகம் அம்மாணவனை வளாகத்தைவிட்டுத்தான் வெளியேற்றியது. ஆனால், நீதிமன்றம் தேசத்துரோகக் குற்றம் சாட்டி 124ஏ விதிப்படி, அப்சல்குரு இருந்த திகார் சிறைக்குள்ளேயே தள்ளியது.

டிசம்பர் 2001 இல் அப்சல் குரு, பாராளுமன்ற வளாகத்தைத் தகர்ப்பதற்குச் சதித்திட்டம் தீட்டி, அதனை முறையாகத் திட்டமிட்டு நடத்திக் காட்டியவன். அப்சல் குரு வழக்கினைத் தீர விசாரித்த நீதிபதி, அவனுக்கு 05.08.2005 அன்று தூக்குத்தண்டனை விதித்தார். அத்தண்டனை 03.02.2013 அன்று திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டது. ஓர் அங்கன்வாடி ஊழியரின் மகனாகப் பிறந்த கன்னையா குமாருக்கு ஜவகர்லால் நேரு பல்லைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது, எவ்வளவு பெரிய கிடைத்தற்கரிய பேறு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதே பல்கலைக்கழகத்தில் படித்து, லிபியாவின் பிரதம மந்திரியான அலி ஷெய்தினைப் போல உயர்ந்திருக்க வேண்டுமே

அல்லது அதே பல்கலைக் கழகத்தில் படித்து, மந்திரி சபை செயலரான அஜித் செத் அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டுமே அல்லது அதே பல்கலைக்கழகத்தில் படித்து, நேபாலில் பிரதம மந்திரி ஆன பாபுராம் பட்டரைப் போல உயர்ந்திருக்கலாமே 2013 இல் தூக்கிலிடப்பட்டுக் கல்லறைக்குள்ளே புழுத்துக் கொண்டிருக்கும் தேசத்துரோகிக்குக் குரல் கொடுப்பதால், அவர் என்ன எழுந்து வந்து விடப்போகிறாரா அல்லது ஏற்கனவே எழுதப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்ப்பைத் திருத்தி எழுத முடியுமா

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய தேசம் முழுமைக்கும் சிந்தனைகளை வாரி இறைக்கும் கலைக்களஞ்சியமாகவும், அமுதசுரபியாகவும் இருக்க வேண்டும் எனக் கனவு கண்டாரே நேரு பெருமானார். இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டால் அவருடைய ஆன்மா சாந்தியடையுமா இந்தியர்கள் அனைவரையும் இந்தியர்களாகவே ஆக்குவதற்காக நேருவைப் போல் பாடுபட்டவர்கள் வேறு எவரும் கிடையாது என்று சொன்னாரே, ஸர் ஐசக் பெர்லின், அந்த பெர்லின் வாக்குப் பொய்த்துப் போனதோடு, படிப்பு என்னும் படியில் ஏறினால், மதிப்பு என்னும் மாளிகையை அடையலாம் எனும் பொன்மொழியை மறந்து, திகார் சிறைக்குச் செல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்.

இந்தியா ஒழுங்கீனமாக இருக்க வேண்டும் என்பதை ஒழுங்காக கற்ற நாடு என்று 1960-இல் இந்தியத் தூதராகவிருந்த ஜே.கே. கால்பிரெய்த் சொன்னதை, இன்று நிரூபித்துவிட்டானே அந்த மாணவன் இந்தியா என்றும் மாறாத ஒரு தேங்கியக் குட்டை என்று சொன்னாரே பிரிட்டிஷ் மாக்சீயப் பேரறிஞர் ஹாப்ஸ்பாம். அந்த வாதத்திற்கு உயிர் ஊட்டிவிட்டானே, அந்த மாணவன்.

கன்னையா குமாரும் அவருடைய காஷ்மீரி நண்பர்களும் செய்தது, தேசத்துரோகச் செயல்தான். என்றாலும், ஒருவரை வாழ்நாள் முழுமையும் சிறைச்சாலையிலேயே வைத்திருக்கக்கூடிய 124ஏ விதியைக் காட்டி அவர்களைத் தண்டித்திருக்க வேண்டாம். மேலும், அவர்களைப் பாட்டியாலா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டுவரும் பாதையில், வழக்கறிஞர்கள் எனும் போர்வையில் வந்தவர்கள், கன்னையா குமாரைக் கிள்ளியும், அறைந்தும், அதனைப் படம் எடுத்த பத்திரிகைக்காரர்களைத் தாக்கியும் இருக்க வேண்டும். ஒரு கறுப்பு ஆடு வேலியை உடைத்துக்கொண்டு வயலுக்குள் நுழையும்போது, அதனைப் பின்பற்றி ஓநாய்களும் உள்ளே நுழைவதைத் தடக்க முடியாது.

இந்திய நாட்டின் தேசியப் பறவை மயில் அந்த மயில், கூண்டுக்குள் முட்டைகளை இடும். அந்தக் கூண்டுக்குள் இருக்கின்ற முட்டைகளைச் சுவைத்துக் குடிப்பதற்கென்றே, அந்தக்கூண்டுக்குள் சில பாம்புகள் வந்து படுத்துவிடும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமும் ஒரு மயில் கூண்டு. இனியாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

குறிப்பு:

திரு. தி.இராஜகோபாலன் பேராசிரியர்.

நன்றி: தினமணி (1.3.2016)