தீபாவளி தெரி(ளி)வித்த ஒரு மொழி !

-ம.கொ.சி.ராஜேந்திரன்

 0.
கதிரவன்  தனது அன்றைய  அலுவல்களை  செவ்வனே முடித்து வானமென்னும்  நிறுவனத்தை விட்டு  வெளியேறும் மாலைநேரம்.  லேசான குளிர்காற்று  என்னை  சீண்டியபடி சென்றது. மனதும்  சுற்றி நெடுக  வளர்ந்திருந்த மரங்களைப்  போலவே உயரமாய்  எண்ணங்களே  இல்லாது வெற்றிடமான  பூங்காவைப் போல காலியாய்.
 .
அமைதியே, அமைதி மட்டுமே  ஆக்கிரமித்த  அந்தச் சூழல். எந்தச் சலனமும் இல்லாமல்  வானத்தை  வெறித்தபடியே  பார்த்துக்  கொண்டிருந்தேன். அப்பொழுதுதான்  அந்த பொருள் பொதிந்த  பாட்டு  என் கவனத்தை  திசை  திருப்பியது.
 .
அதன் அற்புத  வரிகள்  ஆயிரமாயிரம்  சிந்தனைகளை  வேகமாய்  அதே சமயத்தில் விவேகமாய்  எழுப்பியபடியே  சென்றது.  அந்தப் பாட்டின்  ஆழமான கருத்து  என்னில் பல  கேள்விகளை உருவாக்கியது. பாடல் தொடர்ந்து கொண்டு தான்  இருந்தது . ஆனால்  ஏனோ முதலில் கேட்ட  பாடல்வரிகள் மட்டுமே என் மனதில் ரீங்காரமிட்டுக்  கொண்டேயிருந்தன .
 .
என்னே  ஒரு தொலைநோக்குப்  பார்வை  கொண்ட சிந்தனை! என்னே  ஒரு தெளிவும், உறுதியும் கொண்ட  தீர்வு! பாடல்  இதுதான் :
 .
 “கிரேக்கம் அழிந்தது, எகிப்தியம் அழிந்தது, 
அமரபாரதம் வாழுது  காண்;
ஆதியும்  அந்தமும்  அற்ற  நாடிது! 
தூய்மையின் பண்பின்  காவலன் காண்;
போகவாதத்தின்  மாளிகை  சரிந்தது  மாறுது;
உலகின்  தாகம்  தீர்த்திட வல்லது  சங்க கங்கையே தான்.”
 .
உலகின் மிகப் பெரிய  நாகரிங்களை  உருவாக்கிய கிரெக்க,  எகிப்திய  அரசுகள்  தங்களது  டையாளங்களாக  பாழடைந்த கட்டிடங்களையும்,  சில பல நூல்களையுமே  விட்டுச் சென்றிருக்கின்றன.  உலகையே  தங்கள்  கொடியின்கீழ்  கொண்டுவர  ஆயிரக் கணக்கான  அதிகாரப்போர்களை  நடத்தின.
 .
அப்போர்களினால்  எங்கும் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. புதுப்புது  சட்டங்கள்  இயற்றப்பட்டு நீதிதேவனை தங்கள் சேவகனாக மாற்றிக் கொண்டனர். ஆட்சியென்னும்  போர்வையில்  பல லட்சக்கணக்கான  ஆண்களும், பெண்களும் மட்டுமல்லாது  குழந்தைகளும் கூட  அடிமைப்படுத்தப்பட்டனர். ஆட்சியாளர்களும். மதகுருமார்களும்  கைகோர்த்துக்கொண்டு தங்களை ‘கடவுளின்  பிரதிநிதிகளாக’ அறிவித்துககொண்டனர் . தங்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  கருவிகளையும், இயந்திரங்களையும் கூட  அயல்நாடுகளைத் தாக்கவும், அந்நாட்டு  வளங்களைச் சுரண்டவும் பயன்படுத்தி,   தங்களது போகவாழ்க்கைக்கு உரமாக்கிக் கொண்டனர்.
 .
இந்நிகழ்வுகளின்  சாட்சியங்களை  வரலாறு  தனது  ஏடுகளில்  பதிவுசெய்திருபபதை  நாம்  காண முடியும். கறைபடிந்த மேற்கத்திய நாகரிக  வரலாற்றைத்  தாண்டி  கீழைநாடுகளில் நம் பார்வையைத்  திருப்பினால்  வியத்தகு காட்சிகளை  நம்மால்   காண முடிகிறது. குறிப்பாக  அகண்ட  பாரத தேசத்தின்   புகழோங்கிய  கலாச்சாரமும், பெருமைமிகு ஆட்சியாளர்களும் தான்   நம்மை  வரவேற்கிறார்கள்.
 .
இங்கு பாராளும் மன்னர்களைவிட பிச்சை பெற்று  வாழும் மகரிஷிகள் வணங்கப் பெற்றர்கள். பாடம்  சொல்லிக் கொடுத்த  ஆசிரியர்கள்  தெய்வமாக  வழிபடப்பட்டார்கள். தட்சசீலத்திலும் , நாலந்தாவிலும்  அமைந்திருந்த  பல்கலைக்கழகங்கள் அன்றைய உயர்ந்த கல்வியைப் பறைசாற்றும்  கலங்கரை விளக்கங்கள்.  தில்லி  இரும்புத்த்தூணும்,  திருநள்ளாறு  சனிபகவான்  ஆலயமும்  விஞ்ஞான உலகத்தையே அதிசயக்க வைக்கின்ற விஷயங்களாகத் தானே  விளங்குகின்றன?
 .
வேதமும், கீதையும்  ஞானப் பொக்கிஷங்களாக  இன்றும் கல்வியில் சிறந்த  சான்றோர் கருதுவது  கண்கூடு . தஞ்சை  பெரிய கோயிலும்,  ஹம்பி  சிற்பங்களும் , ராமேஸ்வரக்  கோயிலின்  மூன்றாம் பிரகாரமும் , எல்லோரா  ஓவியங்களும் நமது கலைகளின்  உச்சத்தைத்  தொட்டுக் காட்டுகின்றன.
 .
வால்மீகியின் ராமயணமும், வள்ளுவனின்  முப்பாலும்  எப்பாலோர்க்கும்  என்றைக்கும்  எப்பொழுதும்  எந்நாட்டவர்க்கும்  வழிகாட்டும் இலக்கியங்கள் தானே? அன்றுமுதல் இன்றுவரையிலும்  கோடிக் கணக்கான  மக்கள் கங்கை நதியை  புனிதமாக வழிபடுவதும் , இமயமலை இறைவன் வாழும்  இடமாக  போற்றுவதும்,  குமரிமுனைப்  பாறையில்  இறைவி கன்னியாய்  தவம் செய்யும்  தலமாகக் காண்பதும்  வெறும் கற்பனையல்ல.  இம்மண்ணில் வாழும் கோடிக் கணக்கான மக்களின் நாடிநரம்புகளில்  கலந்துவிட்ட  வாழ்வியல்நெறி தானே?
 .
இவ்வாறு பல்லாயிரமாண்டுகளாக  கங்கையின் நீரோட்டம்போல்  இங்கு  பாரம்பரியமான பண்பாட்டு நதி   ஓடிக்கொண்டிருப்பதின்  ‘ரிஷிமூலம்’ எது ?  காலச்சூறாவளியில்  அகப்படாமல் பாரதப் பண்பாடு  கம்பீரமாய் தலைசிறந்து  நடைபோடுவதனின் ‘மூலரகசியம்’ தான்  என்ன ?  அந்த ரிஷிமூலத்தை அறிவிக்கும் நாள்தான்  ‘தீபாவளித் திருநாள்’.
 .
இத்தேசத்தில்  தனிமனிதனைவிட  குடும்பம்  பெரிது. குடும்பத்தைவிட  ஊர் பெரிது.  ஊரைவிட  சமூகம்  பெரிது.  சமூகத்தைவிட  நாடு  பெரிது.  நாட்டைவிட  தருமம்  எனப்படும் அறம்  பெரிது. ஆண்டவனே ஆனாலும் , அதிகாரம் மிக்க  அரசனே  ஆனாலும்,  பிச்சை பெற்றுண்ணும்  வாழ்க்கை வாழும்  ஆண்டியேயானலும்,  இங்கு வாழ்க்கையின்  மையம்  அறம; தருமமே.
 .
தான்  ஈட்டிய  பொருளையோ, தன்வசமிருக்கும்  திறனையோ  பிறர்நலனுக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும்  தருமம் சாராத  நெறியில்  செலவழிக்காத  எவரும்  இங்கு சாதனையளராவதுமில்லை; சரித்திரமாய்  வணங்கப்படுவதுமிலை.  தான்  ஈன்ற பிள்ளையேயானாலும்  தர்மநெறிகளை  அழிக்க முற்பட்டால், அதர்மச் செயல்களில்  ஈடுபட்டால்  அவனை  அழிக்கவும்  தயங்காத  அன்னையர்களே  இப்பூமியில்  வணங்கத்தக்கவர்கள்.
 .
இத்தகு ‘தருமம்  காக்கும்  நல்லோர்கள்  அனைவருக்கும்  ஆண்டவனின்  ஆசிகள்  மட்டுமல்ல; வழிகாட்டுதலும்   உண்டு’ என்பதையே  நரகாசுரனும்  சத்தியபாமாவும்  பகவான்  ஸ்ரீ கிருஷ்ணனும்  நமக்கு  பாடமாக  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 .
நம் பொய்யாமொழிப் புலவர்  திருவள்ளுவரும்  இத்தர்ம நெறியினை  குறளாக  பதிவுசெய்துள்ளார்:
 .
“குடிசெய்வே  மென்னும்  ஒருவருக்கு  தெய்வம்
மடிதற்று  தான்  முந்துறும்”
 .
– அனைவருக்கும்  இதயங்கனிந்த  தீபாவளித்  திருநாள்  வாழ்த்துக்களை  தேசிய சிந்தனைக்  கழகம்  அகமகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறது.
.

கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு – படத்தொகுப்பு

ஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கடந்த 16.11.2013, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு நடைபெற்றது.
.
சுவாமி விவேகானந்தர் 150 ஜெயந்தியை முன்னிட்டு,  தேசிய சிந்தனைக் கழகமும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.அதன் புகைப்படப் பதிவுகள் இங்கே…

1Kuththuvilakku1
கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி துவங்கிவைக்கிறார் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் உதவி செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
.
2Kuththuvilakku 2
குத்துவிளக்கேற்றுகிறார் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்.
.
3Kuththuvilakku 3
குத்துவிளக்கேற்றுகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
.
5Principal ravichandran
வரவேற்புரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. ஆ.த.ரவிசந்திரன்.
.
6Secy Shivanandhan
வாழ்த்துரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
.
7Swami Nirmaleshananda
கருத்தரஙகைத் துவங்கிவைத்து, ‘விவேகானந்தரும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றி, ஆசியுரை வழங்குகிறார் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
.
8Audiance 2
கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி.
.
9Kuzalenthi
‘விவேகானந்தர் விரும்பிய பாரதம்’ என்ற தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் திரு. குழலேந்தி உரையாற்றுகிறார்.
.
10Pramodhkumar
‘பாரதம் உலகிற்கு அளித்த நன்கொடைகள்’ என்ற தலைப்பில், கோவை அமிர்தா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் திரு.மா.பிரமோத்குமார் உரையாற்றுகிறார்.
.
11Prof Kanagasabapathi
’இனிவரும் காலம் இந்தியாவின் கைகளில்’ என்ற தலைப்பில் கோவை- தமிழ்நாடு நகரியல் கல்வி மையத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி உரையாற்றுகிறார்.
.
12Prof Kumarasamy
’விவேகானந்தரின் இன்றைய அவசியம்’ என்ர தலைப்பில், சேலம்- பெரியார் பல்கலைக்கழக- விவேகானந்தா கல்வி மையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் திரு.க.குமாரசாமி உரையாற்றுகிறார்.
.
13RPrabakar
நன்றி நவில்கிறார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் திரு. சேலம் இரா.பிரபாகரன்.
.
14Audiance 1
கருத்தரங்கில் பங்கேற்றோரில் ஒரு பகுதி.
.

இந்நிகழ்வில், பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் கண் மருத்துவருமான  டாகடர் திரு.எம்.எல்.ராஜா, ‘விவேகானந்தரும் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில் பேசினார்..

கருத்தரங்கில் 6 கல்லூரிகளிலிருந்து 150-க்கு மேற்பட்ட ஆசிரிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
.

நிவேதனம் நூல் வெளியீடு

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நிவேதனம் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்த நூலில், நமது நாட்டின் ஆன்றோர் பெருமக்களின் திருநட்சத்திரங்களும், அவதார தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன அதேபோல நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சான்றோரின் பிறந்த, நினைவு தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும், சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் தேதி வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனை நண்பர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம் தொகுத்திருக்கிறார்.

இவை மட்டுமல்லாது, சுவாமி விவேகானந்தரின்  150வது ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிஜி குறித்த நான்கு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “சுவாமி விவேகானந்தரும் அம்பேத்கரும்’  என்ற கட்டுரை, பேராசிரியர் திரு. ப.கனக சபாபதி எழுதிய ‘சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்’ கட்டுரை, பத்திரிகையாளர் திரு.வ.மு.முரளி எழுதிய ‘ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்’ கட்டுரை, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய ‘விவேகானந்த சுடரை நாடெங்கும் ஏற்றுவோம்’ கட்டுரை ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலுக்கு மதுரை ராமகிருஷ்ன மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், கோவை ராமகிருஷ்ண  வித்யாலயத்தின் செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்தர், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்தர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் திரு. சூரிய நாராயண ராவ் ஆகியோர் ஆசியுரை வழங்கி உள்ளனர்.

இந்நூலின் விலை: ரூ. 15.00

இந்த நூலைப் பெற
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் (90031 40968)
அவர்களை தொடர்பு கொள்ளவும்.