தேசபக்தத் துறவி!

-எஸ். குருமூர்த்தி

swami-dayananda-saraswati

சுவாமி தயானந்த சரஸ்வதி

(பிறப்பு: 1930 ஆக. 15 – மறைவு: 2015 செப். 23)

ஹிந்து தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து அதை மக்களிடையே எடுத்துச் சென்றவரும், சிறந்த ஞானியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி இன்று நம்மிடையே இல்லை.

ஆன்மிகம், கலை, கலாசாரம், சமூகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். “கடவுள் ஒருவர் அல்ல. கடவுளே எல்லாம்” என்று வலியுறுத்தியவர். வேத, தர்ம சாஸ்திரங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பலருக்கு ஆசானாக விளங்கினார்.

இவரிடம் வேத சாஸ்திரங்களைப் பயின்ற ஆயிரக்கணக்கானோர் இன்று மரபு வழியில் வந்த ஹிந்து கலாசார, பண்பாடுகளைத் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.

ஹிந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் பல்வேறு பிரிவினரை ஒன்றுபடுத்த “தர்ம ஆச்சார்ய சபா’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஹிந்து மதத்தின் மாண்புகளை எடுத்துக் கூறி, அத்வைத கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற தத்துவத்தையும் முன்வைத்தார்.

மதப் பிரசாரம் மூலம் மத மாற்றம் செய்வது எங்கள் உரிமை என்று கூறி வந்தவர்களிடம் அது தவறு என்று நிரூபித்துக் காட்டியதுடன் மத மாற்றமும் ஒருவகையில் வன்முறைதான் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டார். மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களைப் போல சிறந்த தேசபக்தராக விளங்கியவர்.

சிறந்த கல்வித் திறன் பெற்றிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, தாம் கற்ற வேத சாஸ்திரங்களையும், ஹிந்து மதக் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மக்களுக்குப் போதிப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார்.

ஹிந்து கலாசாரப் பண்பாடுகளைக் கட்டிக்காப்பதில் அவர் பெரும்பங்காற்றியதால்தான் இந்தியா இன்றளவும் தலைநிமிர்ந்து நிற்கிறது. இல்லையெனில், எப்போதோ மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் வேரூன்றி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்திருக்கும்.

ஹிந்துக்களின் தேசிய அடையாளம் வேத சாஸ்திரங்களைக் கற்று கலாசார மரபுகளைப் பின்பற்றுவதுதான். சுவாமி தயானந்த சரஸ்வதியின் பார்வையில், வேதாந்தம் என்பது வெறும் தத்துவம் மட்டுமல்ல, இந்திய வாழ்வியல் தர்மத்துடன் ஒன்றிணைந்தது.

இசை, இலக்கியம், சிற்பம், சமூகம், குடும்பம், இந்திய வழக்கப்படி முதியோர்கள், ஆசிரியர்கள், பெண்களை மதிப்பதை உள்ளடக்கியது. இந்தியா புனிதமான நாடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வேதாந்த தத்துவங்களைப் பரப்புவதற்காக பல்வேறு பள்ளிகளை நிறுவி செயலாற்றி வந்த சுவாமி சின்மயானந்தரின் மாணவராகச் சேர்ந்து வேத தர்ம சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து பின்னர் அவரின் சீடராகவும் இருந்தார்.

ஹிந்து தர்மத்தின் முக்கியத்துவங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி சமூகப் பணியாற்றி வந்த அவர், இதற்கென ஓர் இயக்கத்தை தோற்றுவித்து வேதங்களைப் பயிற்றுவித்து ஏராளமான ஆசிரியர்களை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள் உலகெங்கும் ஹிந்து தர்மத்தைப் போதித்து, கலாசார, பண்பாடுகளைக் கட்டிக்காத்து வருகின்றனர்.

1990-களில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு சென்னையில் தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் துறவிகள், ஆன்மிகவாதிகள், அறிவுஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பேச்சு மறக்க முடியாததாக இருந்தது.

மத மாற்றம் என்பதே வன்முறைதான் என்ற புதிய கருத்தை முன்வைத்தார். மத மாற்றம் என்பது ஆன்மிகம், மனோநிலை, கலாசாரத்தின் மீதான வன்முறையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

காந்திய வழியைப் பின்பற்றாத மதச்சார்பின்மையினர், அதுவரை மத மாற்றம் என்பது ஒருவரின் உரிமை என்றே கூறி வந்தனர். அதாவது, ஒருவர் மற்றொரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அந்த மதத்துக்கு மாறுவது தவறு இல்லை என்ற எண்ணமே அதுவரை இருந்து வந்தது. மத மாற்ற விவகாரத்தில் காந்திஜி அலட்சியம் காட்டியதால் மதச்சார்பின்மையினர், மத மாற்றமும் மதச்சார்பின்மையை உள்ளடக்கியதுதான் என்று கூறி அவரிடம் ஆதரவு தேட முயன்றனர்.

மத மாற்றம் என்பது ஒருவகையில் மத வன்முறைதான் என்று சுவாமி தயானந்த சரஸ்வதி கொடுத்த விளக்கம் புதிய சிந்தனையை ஏற்படுத்தியதுடன், மத மாற்றத்தின் உண்மையான முகத்திரையை வெட்டவெளிச்சமாக்கியது. 1999-ஆம் ஆண்டு அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி, பல்வேறு மதத் தலைவர்கள், அறிவுஜீவிகளுடன் சென்று போப்பை வரவேற்றார்.

அவரிடம், “அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன், நம்பிக்கை வைத்திருக்கிறேன், அனைத்து மதத்தினரையும் மதிக்கும் இந்தியாவுக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்’ என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், போப் அதற்கு உடன்படவில்லை. ஆனால், தைரியமும் திறமையும் ஒருங்கே கொண்டிருந்த தயானந்த சரஸ்வதி, மத மாற்றத்துக்கு எதிரான தனது போராட்டத்தை உலக அரங்குக்கு கொண்டு சென்றார்.

ஐக்கிய நாடுகள் சபையில் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் பேசிய தயானந்த சரஸ்வதி மத நம்பிக்கைகளில் சுயக் கட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை மதிக்க வேண்டும் என்றும், ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை தூஷிக்கக் கூடாது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்கள் மதத்தில் சேருமாறு யாரையும் தூண்டக் கூடாது என்றும், தங்களது மத நம்பிக்கையை வலுக்கட்டாயமாக மற்றொரு மதத்தினரிடம் திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மாநாட்டில் அவரது கருத்தை பலரும் வரவேற்றபோதிலும், அவரது மத நல்லிணக்கத் தீர்மானம் நிறைவேறவில்லை.

ஆனால், தமது கோரிக்கையின் அவசியத்தை உலக மதத் தலைவர்களிடம் எடுத்துரைத்து இணங்கவைக்க அவருக்கு மேலும் எட்டு வருடங்கள் ஆனது.

2008 டிசம்பர் 10-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 60-ஆவது ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட உலக அளவிலான மதத் தலைவர்கள், சுவாமி தயானந்த சரஸ்வதியின் புதிய அணுகுமுறையை ஏற்க முன்
வந்தனர்.

அதாவது, ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை மதிக்க வேண்டும்; ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை அவதூறாகவோ அல்லது தூஷிக்கும் வகையிலோ பேசக் கூடாது; அவர்களின் மத நம்பிக்கையையும், மதச் சின்னங்களையும் இழிவுபடுத்தக் கூடாது; வேறு மதத்தினரை தங்கள் மதத்துக்கு இழுக்கத் தூண்டும் வகையிலோ அல்லது கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்று தயானந்த சரஸ்வதி வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரகடனமாக வெளியிடப்பட்டது.

ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே பிரதமர் நரேந்திர மோடி தமது அணுகுமுறையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இதே கருத்தையே புனிதர் பட்டம் பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை சுவாமி தயானந்த சரஸ்வதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது ஹிந்து தர்ம ஆச்சார்ய சபையை அவர் நிறுவியது. இது இந்திய கலாசாரத்துக்கு அவர் ஆற்றிய சாதனையாகும்.

ஹிந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினர் ஒன்றுபடாமல் இருந்தநிலையில், மத மாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, சுவாமி தயானந்த சரஸ்வதி தனது பெரு முயற்சி மூலம் ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தினார்.

அவரது மற்றொரு முயற்சி அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றுபடுத்துவது. இதிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. அனைத்து மதமும் புனிதமானது. அனைத்து மதமும் மதிக்கப்பட வேண்டியது. எந்த ஒரு மதமும் மற்றொன்றைவிட உயர்ந்தது என்று யாரும் பேச அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு சில மதங்கள்தான் உண்மையானவை, மற்றவை போலியானவை என்ற எண்ணம் கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். மத துவேஷமும், மோதல்களும் ஏற்படுவதற்கு அதுதான் முக்கியக் காரணம் என்றார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்திய கலாசார, பண்பாடுகளை கட்டிக்காக்கவும், வேத தர்ம சாஸ்திரங்கள் தழைத்தோங்கவும் அரும்பணியாற்றி அதில் அவர் வெற்றி கண்டது ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

மகரிஷி அரவிந்தர் ஒரு முறை, “பெரிய மனிதர்களின் அரிய சாதனைகள் சில சமயங்களில் பேசப்படாமல் இருக்கும்” என்று சொன்னார். இது சுவாமி தயானந்த சரஸ்வதிக்கும் பொருந்தும்.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவின் மூலம் ஹிந்து மதம் ஒரு தலை சிறந்த துறவியை, மதக் காவலரை இழந்துவிட்டது. நாடு ஒரு சிறந்த தேசபக்தி மிக்க துறவியை இழந்துவிட்டது.

 

நன்றி: தினமணி (25.9.2015)

இந்திய தொழிற்சங்கத்தின் தந்தை

Narayan-Malhar-Joshi

நாராயண் மல்கார் ஜோஷி (1875 – மே 30, 1955)

நாராயண் மல்கார் ஜோஷி,  மராட்டிய மாநில தலைநகர் மும்பையிலுள்ள கோரேகான் பகுதியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து, பட்டம் பெற்ற பின்  ‘ஆர்ய பூஷன்’ அச்சகத்தில் பணியாற்றும்போது, அங்குள்ள தொழிலாளர்களின் அன்றாடப் பிரச்னைகளை கூர்ந்து கவனித்து, நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றதால், தீர்வு கண்டார். இதன்பின் பிற தொழிலாளர்களும் ஆர்வத்தோடு இவரை அணுகி சங்கம் அமைத்தனர்.

இதனால் ஊக்கம் கண்ட ஜோஷி, மும்பையிலுள்ள சங்கங்களை ஒன்றுபடுத்தி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்,  31.10.1920இல் ஆரம்பித்தார். அகில இந்திய அளவில் இதுதான் தாய் ஸ்தாபனம்.

ரயில்வே மிகப்பெரிய பொதுத் துறையாக இருந்ததால், தனியாக அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தை 16.2.1925இல் தொடங்கி, வடமேற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த திவான் சமன்னாலை தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.

தொழிலாளர்களும், முதலாளிகளும் தோழமை உணர்வோடு உற்பத்தியைப் பெருக்கி, நாட்டின் நலன்களுக்கும் முன்னேற்றத்திற்கும் இணைந்து உழைக்க வேண்டுமெனும் உன்னதமான லட்சியத்தை அவர்களின் இதயத்தில் விதைத்தார்.

இவரது தன்னலமற்ற செயல்பாடுகளை அறிந்த ஆங்கில அரசு இவரை மத்திய சட்டசபை உறுப்பினராக நியமித்தது. 1926இல் சென்னை உயர்நீதிமன்றம் ஆலைகளின் உற்பத்தியை சீர்குலைக்க சதி செய்ததாக சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதுடன், ஏழு லட்ச ரூபாய் நஷ்டஈடு நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டுமென்ற தீர்ப்பை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நிரந்தர நிவாரணம் காண, ஜோஷி மத்திய சட்டசபையில் தீர்மானம் கொணர்ந்து வலுவான வாதங்களுடன் பேசியபின், இதனால் ஏற்படும் பின் விளைவுகளை தவிர்க்க  ‘தொழிலாளர் சட்டம் 1926′ முதன் முதலாக சட்ட அங்கீகாரத்தை பெற்றதோடு, 25.3.1926இல் விவாதித்து 1.5.1927இல் நிறைவேறியது. இது இவரது இமாலய சாதனையாக கருதப்படுகிறது.

இவரது ஆலோசனையை ஏற்று அரசு, ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக இருந்த எஸ். குருசுவாமியை மத்திய சட்டசபைக்கு உறுப்பினராக நியமித்தது. 1946இல் இடைக்கால அரசு,  ‘தொழில் தகராறு மசோதா 1947′ விவாதத்திற்கு வந்தபோது, அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டினார்கள்.

அதன் முக்கிய விதியான  ‘கட்டாயத் தீர்வு’ என்பதற்கு பதில்  ‘விருப்பமான தீர்வுக்கு விடல்’ என்று மாற்றினார்கள். அத்துடன் வேலை நிறுத்தத்தை கட்டுப்படுத்தும் விதியை விலக்கிட வேண்டுமென்று வலியுறுத்தியதோடு, விடுதலை போராட்டத்தில் தொழிலாளர்கள் நேரடியாக ஆதரவு கொடுக்க முடியாத சூழ்நிலையில், உண்ணா நோன்பு போன்ற அறவழிகளில் உற்பத்தி பாதிக்காது பங்கு பெற்றதை சுட்டிக்காட்டினர்.

ரயில்வே தொழிலாளர்களுக்காக, மே 10, 1946இல் ஓய்வுபெற்ற நீதிபதி சீனிவாச வரதாச்சாரியார் தலைமையில் அமைக்கப்பட்ட  ‘முதல் ஊதியக் குழு’வில் தொழிலாளர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகளில் ஒன்றான, போனசாக மூன்று மாத ஊதியம் என்பதை பரிந்துரைக்க வற்புறுத்தியதோடு, அதனை ஏற்க ஊதியக்குழு உடன்படாததால் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஏற்காதவர். அதற்காக அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்காதவர். இவரது தொழிற்சங்க சட்ட ஞானத்தை அறிந்த காந்தியடிகள், ஆலை தொழிலாளர்களுக்காக அகமதாபாத்தில் நிறுவிய சங்கத்தை, இவரது ஆலோசனைகளை கேட்டறிந்து செயல்பட வைத்தார்.

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸில், எட்டு முறை ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஜோஷி மட்டுமே. சுதந்திரம் பெற்ற பின், தொழிற்சங்கங்கள் தன்னலமற்ற தலைவர்களின் அரவணைப்பிலிருந்து அகன்று, கட்சிகளின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு பல கூறுகளாக பிரிந்து கூர்மை மழுங்கி பலவீனப்படுவதை கண்டு மனம் வெதும்பினார்.

பொது வாழ்வில் தூய்மையோடு வாழ்ந்தவர், இல்லற வாழ்வில் துயருற்றார். இவரது மனைவி ரமாபாய் இளவயதில் இறந்தார். குடும்பத்தை கவனித்து வந்த மூத்த மகள் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு பூதவுடலை நீத்தார். தனது ஒரே மகன், அச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி, மருத்துவமனையில் மாண்டார். இளைய மகள் இவற்றையெல்லாம் கண்டு மனநோயாளியானார்.

துன்பங்கள் தன்னைச் சுற்றி சூழ்ந்து துவளச் செய்தாலும், தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காகவே தொடர்ந்து எவ்வித பயனையும் எதிர்பாராது உழைத்த உத்தமர்.

என்.எம். ஜோஷி, தனது 77ஆவது வயதில், மண்ணுலகை விட்டு விண்ணுலகம் விரைந்தாலும்  ‘இந்திய தொழிற்சங்கத்தின் தந்தை’ என்று இன்றும் புகழாரம் சூட்டப்பட்டு பாராட்டப்படுகிறார்.

க.வேங்கடராமன்

நன்றி: தினமணி (29.05.2014)

காண்க: என்.எம்.ஜோஷி (விக்கி)

‘பால்காரர்’ காட்டிய பாதை…

வர்கீஸ் குரியன்
(26, நவம்பர்  1921 – 9, செப்டம்பர் 2012)இந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.

விவசாயமே தொழில். அப்பகுதியில் ‘ஆனந்த்’ என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.

‘பால்சன்’ என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

இத்தருணத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவன்தாஸ் படேல் என்னும் விடுதலை வீரர், “”வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு 1945-ல் ஊர் திரும்பினார்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, ஏதேனும் வழிசெய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார் திருபுவன்தாஸ் படேல். இதுதொடர்பாக, ஆலோசனை பெற, தன் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். நிலைமையை ஏற்கெனவே அறிந்திருந்த வல்லபபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றே சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவரே.

திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று, கூட்டுறவின் மூலம் பெறக்கூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946-ம் ஆண்டு இறுதியில் 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது.

ஆனந்தில் தொடங்கப்பட்ட இக் கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் – அமுல்) “அமுல்” என்கிற மந்திரச் சொல் ஆனது.

கூட்டுறவுக் கோட்பாடுகளிலிருந்து வழுவாமல் அதேசமயத்தில் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தது. இதை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனிசெஃப்’ அமைப்பு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் அமுலுக்குக் கணிசமான நிதி உதவி செய்தது.

“பசியிலிருந்து விடுதலை” என்கிற திட்டத்தின் வாயிலாக, விலைமதிப்புள்ள கருவிகளை நன்கொடையாக, ஐ.நா.வின் உணவு வேளாண் அமைப்பு (எஃப்.எ.ஓ.) வழங்கியது. அமுலின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் திருபுவன்தாஸ் படேல், மற்றொருவர் டாக்டர் வர்கிஸ் குரியன்.

1946-ல் கூட்டுறவு ஒன்றியம் பதிவு செய்யப்பட்டது முதல் 1973 ஜூலை மாதம் தானாக முன்வந்து ஒய்வுபெற்றது வரை திருபுவன்தாஸ் படேல் ‘அமுல்’ தலைவராக மட்டுமல்லாமல், ஒரு கர்மவீரராக, கெய்ரா மாவட்ட ஒன்றியத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

உலகின் கவனத்தை ‘அமுல்’ ஈர்க்கும் வகையில், 1949 முதல் சில ஆண்டுகள் முன்வரை, பால் கூட்டுறவு இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாக்டர் வர்கிஸ் குரியன்.

சர்வதேச அளவில் ‘பால் வளத்துறை நிபுணர்’ என்ற அங்கீகாரம், மகஸúஸ, பத்மபூஷண் மற்றும் பல உலக விருதுகளைப் பெற்ற குரியன், ஆரம்பகாலத்தில் பால்வளத் துறையில் நுழைந்ததே தற்செயலாகத்தான்.

இவர் பின்னணி இதுதான்: கேரள மாநிலம் கோழிக்கோடில் 1921 நவம்பர் 26-ல் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பிறகு கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றார். மத்திய அரசின் ‘ஸ்காலர்ஷிப்’ உதவியுடன், அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பொறியியல் பட்டம் பெற்றார். இவர் விரும்பிக் கேட்டிருந்தது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு; கிடைத்ததோ, பால்வளத்துறை பொறியியல் – கிடைத்ததை ஏற்றார்.

அமெரிக்க மேல்படிப்புக்குப்பின் நாடு திரும்பிய குரியன் ஆனந்திலுள்ள மத்திய அரசு பால் பண்ணை ஆய்வகத்தில் பொறியாளராக 1949-ல் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே மூடப்படும் நிலையில் இருந்த அந்த அலுவலகம், சில மாதங்களிலேயே மூடப்பட்டது.

மத்திய அரசு பண உதவியுடன் வெளிநாட்டில் படித்தார் என்பதால், அரசுப் பணியில் சில வருடங்கள் தொடர வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதற்கிடையே திருபுவன்தாஸýக்கும், குரியனுக்கும் ஆனந்தில் பரிச்சயம் ஏற்பட்டது. குரியன், கெய்ரா கூட்டுறவு அமைப்பில் தொடர வேண்டும் என்று திருபுவன்தாஸ் விரும்பினார். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. கெய்ரா மாவட்டம் சர்தார் படேலின் தொகுதியும்கூட.

கெய்ரா பகுதியில், ‘பால்ஸன்’ என்னும் அன்னிய பால் நிறுவனத்தின் கோரப் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும், எளிய பால் உற்பத்தியாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949-ல் நியமிக்கப்பட்டார்.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். பால் வரத்து பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழி செய்வதே குரியனின் உடனடிக் கடமையாக இருந்தது. பி.எம்.எஸ். என்னும் மும்பை அரசு பால் திட்ட அமைப்புகளுக்கு பால், வெண்ணெய் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தீவிரமாக முயன்றார்.

இந்த ஒப்பந்தத்தால், மகாராஷ்டிர அரசுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள், நியாயமான விலை, உயர்தரம், கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய அரசின் பொறுப்பு ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம், முதல்முறையாக அமுலுக்கு வந்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் ஊட்ட உணவான பால் பெüடர் மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து வகை பால் உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத் தரத்தை மிஞ்சினார். இதன் பயனாக, நீண்டகாலமாக இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த ‘கிளாங்கோ’, ‘ஆஸ்டர் மில்க்’ போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் ‘குழந்தை உணவுப் பெüடர்கள்’ இந்தியச் சந்தையிலிருந்து படிப்படியாக மறைந்தன.

ஒரு கூட்டுறவு நிறுவனம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பது முதன்முதலாக நிரூபணம் ஆனது.

இந்த வெற்றிக்குக் காரணம், குரியனின் சில உத்திகளே ஆகும். கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பால் உற்பத்தியில் குடும்ப உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினார்கள். உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை – கிராமம் முதல் ஒன்றியம் வரை – தாங்களே நிர்வாகம் செய்தனர். வெளியார் தலையீடு சிறிதும் அனுமதிக்கப்படவில்லை.

அர்ப்பணிப்பு உணர்வு, செயல் திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், பொருத்தமான அணுகுமுறைகள், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. உலகின் சிறந்த நவீன தொழில்நுட்பம், உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகள் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக விவசாயிகளின் ஈடுபாடு நிலைத்து நின்றது.

விவசாயிகளின் வறுமை பழங்கதையானது. விவசாயிகளுக்கு வீடுகள், நல்ல சாலைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகளுக்கு உயர் கல்வி ஆகியவை எளிதாகக் கிடைத்தன. சுருக்கமாகச் சொன்னால், அந்தப் பகுதியே ஒரு சொர்க்க பூமியானது.

இதனால், ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கினார் வர்கிஸ் குரியன். இன்னும் சொல்வதென்றால், உலகிலுள்ள 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை ரூ. 13,000 கோடி. உலகில் உள்ள மிகப் பிரபலமான “பிராண்டு’ பெயர்களில் “அமுல்’ ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல! பல ஆசிய நாடுகள் இன்று “குரியன் மாடலை’ப் பின்பற்றுகின்றன.

இத்தனை சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் வர்கிஸ் குரியன் 9-9-2012-ல் காலமானார். வெண்மைப் புரட்சியின் தந்தை மறைந்துவிட்டார். நண்பர்களாலும், பத்திரிகைகளாலும் செல்லமாக, ‘பால்காரர்” என்றழைக்கப்படும் குரியன் மறைந்தாலும் அவர் காட்டிய பாதை கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.

குரியன் அடிக்கடி கூறி வந்தார். “நாங்கள் பாடுபடுவது மாடுகளுக்காக அல்ல; மனிதர்களுக்காகவே!” கூட்டுறவு கோட்பாடுகள்; மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக இயல்; உள்ளூர் மக்களின் ஈடுபாடு. இம் மூன்று அம்சங்களின் இணைப்பே, குரியனின் பாணி! பல நாடுகள் குரியன் மாடலைப் பின்பற்ற முடியுமானால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாமே? நோய்வாய்ப்பட்டிருக்கும் கூட்டுறவு இயக்கம் – புத்துயிர்பெற அவர் காட்டிய பாதை உதவட்டும்!

– எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி: தினமணி  (13.09.2012)

Verghese Kurien (wiki)