சிரத்தையின் தீவிர வடிவம்

உருத்திரபசுபதி நாயனார்
(திருநட்சத்திரம்: புரட்டாசி- 26 -அஸ்வினி)
(அக். 13)

காவிரி பாயும் சோழ நன்னாட்டில் மறையவர் வளர்க்கும் சிவவேள்வியின் பயனாக மாதம் மும்மாரி பொழிந்தது. அம் மறைக்குலத்தில் பசுபதி நாயனார் அவதரித்தார். வேதவிற்பனர்கள் கண்மலரென நினைக்கும் திருஉருத்திர மந்திரத்தினைத் தூய அன்புடன் பசுபதி நாயனார் நியமத்துடன் ஓதி வந்தார்.

இறைஅருளைப் பெற அவசியம் தேவை சிரத்தை. இந்தச் சிரத்தையினால்தான் நசிகேதன் மரணத்தை வென்றவனானான்; இந்தச் சிரத்தையினால்தான் மார்கண்டேயன் சிரஞ்சீவியானான்; பல ஞானிகள் முக்தியை அடைந்தது இந்தச் சிரத்தையினால்தான். தொடர்ந்து ஒரு நற்செயலை விடாமல் செய்து வரும்பொழுது அச்செயலே முக்திகான வழிக்காட்டியாகி விடுகின்றது என்பதை பாரத நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளும், மகாத்மாக்களும் நிரூபித்துள்ளனர். அவ்வகையில் உருத்திரபசுபதி நாயனார் உருத்திர ஜபம் செய்து இறைவனை அடைந்தார். உருத்திர ஜபம் செய்வது அவர் எடுத்துக்கொண்ட நியமம்.

நாயன்மார்களின் வரலாறு மானுடர்கள் முக்தியை அடைய பல வழிகளை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறெல்லாம் நாயன்மார்கள் முக்தியை அடைந்தனர் என்பதை நோக்கும்போது, பிள்ளைக் கறி சமைத்து சிவத்தொண்டு செய்தவரும் உண்டு; உடலை உருக்கி பேய் உரு எடுத்து இறைவனை அடைந்தவரும் உண்டு; கண்களைப் பிடுங்கி இறைவனுக்குச் சமர்ப்பித்து முக்தி அடைந்தவரும் உண்டு; இதைப் போல எத்தனையோ கதைகள் உண்டு. நமக்கு இக்கதைகள் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன. அது சிரத்தையோடும், அர்ப்பண உணர்வோடும், உண்மையோடும் செய்யும் எச்செயலும் இறைவனை அடையும் வழியாகும் என்பதே.

நமக்குத் தெரிந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் தவிர சமகாலத்திலும் சத்தியப் பாதையில் சிரத்தையோடு இறையனுபூதி பெற செயல்படும் சிரோன்மணிகள் நம் பாரதநாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் சத்தியத் தேடலும், பக்தியின்பால் ஈடுபாடும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அப்பாதையில் செல்லும் போது, அப்பாதையில் சென்ற முன்னோரின் வரலாறு பல தடைகளைக் கடந்து போக நமக்கு உதவும். எனவே, நாயன்மார்களின் வரலாறும், ஆழ்வார்களின் வரலாறும், மேலும் பாரத நாட்டில் தோன்றிய ஞானிகளின் வரலாறும் தெரிந்து கொள்வது ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படையாக அமையும்.

உருத்திரம் என்பதன் விளக்கம்:  யஜுர்வேதம் ஏழு காண்டங்களை உடையது. இடையில் உள்ள காண்டத்தினுள் பதினோரு அநுவாகங்களை உடையது திருவுருத்திரம். இதன் இடையில் பஞ்சாக்கிரமும், அதன் இடையில் சிகாரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாக்கிரமாகும். வேதத்தின் கண் திருவுருத்திரம்; கண்மணி திருஐந்தெழுத்து என்பார்கள். உருத்திரன் என்ற சொல் ‘துன்பத்தினின்றும் விடுவிப்பவர்’ என்ற பொருளைத் தருகிறது.

– ராஜேஸ்வரி ஜெயகுமார்

காண்க:

உருத்திர பசுபதியார் (விக்கி)

URUTTIRA  PASUPATHI NAYANAR (saivam.org)

உருத்திர பசுபதி நாயனார் (பேரூர் ஆதீனம்)

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

உருத்திர பசுபதி நாயனார் (தமிழ்க் களஞ்சியம்)

உருத்திர பசுபதியார் (தினமலர்)
 
திருத்தலையூர்

உருத்திர பசுபதி நாயனார் (பெரியபுராண சொற்பொழிவு)

உருத்திர பசுபதியார் (திண்ணை)

உருத்திர பசுபதியார் (ஆறுமுக நாவலர்)

திருநீற்றுக்கு அடியார்

 
நரசிங்க முனையரைய நாயனார்
(திரு நட்சத்திரம்: புரட்டாசி – 21 – அவிட்டம்)
சோழநாட்டிற்கும் தொண்டைநாட்டிற்கும் இடையில் உள்ள நாட்டிற்கு நடுநாடு என்று பெயர். அந்நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டில் தான் சமயக்குரவர்களாகிய நால்வர்களில் திருநாவுக்கரசர் சுவாமிகளும்,  சுந்தரமூர்த்தி நாயனாரும் அவதரித்தனர்.
திருமுனைப்பாடி மன்னர் மரபில் நரசிங்க முனையரைய நாயனார் அவதரித்தார். இவர் திருநீற்றின் மீது அளவற்ற அன்பு பூண்டிருந்தார். சிவபெருமானுடைய கோயில்தோறும் வழிபாடுகள் வழுவாது நடைபெறுமாறு செய்தார். திருவாதிரை தோறும் சிவமூர்த்தியை மிகவும் சிறப்பாக வழிபாடு செய்வதோடு அடியவர்களுக்கு அன்னமளித்து ஒவ்வோர்  அடியவருக்கும் ஒரு நூறு பொன் கொடுத்து வணங்குவார்.
ஒரு நாள் திருவாதிரை நாளில் வழக்கம் போல அடியார்கள் வந்தார்கள். ஒருவர் தீய எண்ணம் கொண்டவராகவும், காமக்குறியுடனும் காணப்பட்டார். அவரைக் கண்டு மற்ற அடியவர்கள் ஒதுங்கினர். அதைப் பார்த்த நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி, “நீங்கள் இவ்வாறு இகழக் கூடாது. தீயவராக இருந்தாலும் திருநீறு பூசியவர்களை இகழ்ந்தால்  நரகம் அடைவது நிச்சயம். எனவே, எவராக இருந்தாலும் திருநீறு பூசியவரைப் பூசிக்க வேண்டும்என்று கூறினார். அதோடு மட்டுமின்றி அவருக்கு இரட்டிப்பாக இருநூறு பொன் கொடுத்து, கனியமுதன்ன இனிய மொழி கூறி விடைகொடுத்தனுப்பினார்.
இந்தக் கதையில் தீயவராக இருந்தவருக்கு திருநீறு  அணிந்த காரணத்தினால் மன்னன் இருநூறு பொன்கொடுத்து, மதித்த செயல் பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. இந்நிகழ்விற்கு திருமுருக கிருபானந்த வாரியார் தரும் விளக்கம் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
“திருநீறு பூசினால் யாவராயினும் அவரை வணங்கி வழிபட வேண்டும் என்பதை நரசிங்க முனையரைய நாயனார் உலகமறியக் காட்டியருளினார். அது சரிதானா? என்று ஐயுறுவாரும் உளர். அரசாங்கத்தில் வேலை பார்ப்போரில் ஒழுக்கமில்லாதவர், அரசாங்க உடையுடுத்து வருவாராயின் அவரை ஏனைய குற்றங் குறைகளைக் கவனியாது, அந்த உத்யோக உடை கண்டு அவரை மதிக்கின்றோமல்லவா? அதேபோல நீறணிந்தார்,  அந்தரங்கத்தில் தவறுளராயினும் அவர் அணிந்த திருநீற்றை மதித்து வணங்குதல் வேண்டும் என உணர்க என்று கூறுகின்றார்.
திருநீறு அணிந்தவரை மதிக்கும் பழக்கம் குற்றம் குறைகளை காணும் குணத்திலிருந்து நம்மை விடுதலை செய்கின்றது என்பது இவரது புராணத்தின் மூலமும், வாரியாரின் விளக்கத்தின் மூலமும் உணர முடிகின்றது. 

நரசிங்கமுனையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர்தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர், சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார்.
நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்க முனையரையர்   அவரை அரசத்  திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றார்.

-ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:

நரசிங்க முனையரைய நாயனார் (தினமலர்)

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

NARASINGA MUNAIYARAYA NAIYANAR

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் (வினவு)

.

 

நீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்

ஏனாதி நாயனார்
(திருநட்சத்திரம்: புரட்டாசி – 18 – பூராடம்)

“ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்”

சோழர்களுடைய வெண்கொற்றகுடையின் கீழ் புகழ்பெற்று விளங்கிய நாடு சோனாடு. ஈழக் குல சான்றோர் மரபில், அம்மரபு செய்தத் தவத்தால், சைவ நலம் ஓங்கத் தோன்றியவர் ஏனாதிநாதர்.

திருநீற்றின் பெருமையை நன்கு உணர்ந்தவர். திருநீரு புனைந்தவர் எவராகிலும், சிவமாகப் பாவித்து வணங்குவார். வீரர்களுக்கு வாள் வீச்சுப் பயிற்சி அளிக்கும் தொழில்தலைமைப் பெற்றிருந்தார். சிறந்த வாள் வலிமையும், தோள்வலிமையும் மிக்கவர். அனைவரிடத்திலும் அன்புடனும், கருணையுடனும் பழகும் பண்பினர்.

எல்லோரிடத்திலும் கருணையுள்ளத்தோடு அவர் பழகினாலும் பொறாமையுள்ளத்துடனும், ஆணவத்தின் வடிவத்துடனும் ஏனாதியாருக்குப் பகைவனாக அதிசூரன் என்பவன் அமைந்தான். அதிசூரனும் அதே பகுதியில் வாள்பயிற்சி அளிக்கும் உரிமைப் பெற்றிருந்தான். ஏனாதியாரின் தொழில் திறமை, பண்பு நலன்களுக்கு முன்னால் அதிசூரனின் புகழ் மங்கிவிட்டிருந்தது. அதனால் ஆத்திரம் அடைந்த அவன் ஏனாதியாரைப் போருக்கு அழைத்தான்.

ஏனாதியாரும் வீர்ர்களுக்குரிய இலக்கணங்களுடன் அதிசூரனுடன் போரிட்டு வெற்றிவாகைசூடினார். ஏனாதியாரின் திறன் கண்ட அதிசூரன் மேலும் ஆத்திரமடைந்தான். எவ்வகையிலாவது ஏலாதியாரைக் கொல்லவேண்டும் என்று உறுதிபூண்டான். அதிசூரன் சூழ்ச்சியின் துணைக்கொண்டு மறுமுறை ஏனாதியாரைப் போருக்குத் தனியே அழைத்தான். அஞ்சா நெஞ்ச கொண்ட ஏனாதியார் தனியே அதிசூரனுடன் போரிட சென்றார்.

ஏனாதியார் வீரத்துடன் வாளை வீச கையை உயர்த்தினார். அதிசூரன் முகத்தை பலகைக்கொண்டு மறைத்திருந்தான். அதை விலக்கியபோது ஏலாதியர், எப்போதும் திருநீறு பூசாத அதிசூரன் முகத்தில் திருநீற்றைக்கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார். தன் கை வாளையும், பலகையையும் நீக்க எண்ணினார். ஆனால் திருநீறு பூசியவர் நிராயுதபாணியைக் கொன்ற பழிக்கும்,  பாவத்துக்கும் ஆளாக நேருமே என்று கருதி அப்படியே நின்றார். பாதகன் அதிசூரன் தன் எண்ணத்தை நிறைவேற்றினான். ஏனாதியாரின் திருநீற்றின் மீதிருந்த அன்பை நன்கு உணர்ந்திருந்த சிவபெருமான் அருள்வெளியில் தோன்றி ஏனாதியாரைத் தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார்.

“அருள்மயமானது திருநீறு. வினைகள் நீறாக்குவதனால் நீறு எனப்பட்டது. தெய்வீகமானது ஆனபடியால் திருநீறு; பேய், பில்லி சூன்யம் நோய் முதலிய கொடுமைகளினின்றும் உயிர்களைக் காப்பாற்றுவதால் காப்பு (ரஷை) எனப்படும். மேலான ஐஸ்வர்யத்தைத் தருவனால் விபூதி எனப்படும்.

மெய்ப்பொருள் நாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் திருநீற்றின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள். இருவரும் முடிவில் விபூதியின் அன்பை வழுவாமல் வென்றனர். தோல்வியுற்றனர் முத்தினாதனும், அதிசூரனும். அவர்களுடைய உடம்பை அழித்தனரேயன்றி கருத்தை அழிக்க முடியவில்லை. வெற்றியென்பது கருத்தில் அடங்கியிருக்கின்றது.

அதிசூரனும் முக்திநாதனும் நரகிடை வீழ்ந்து துன்புற்றனர். மெய்ப்பொருளும், ஏனாதிநாதரும் சிவபதமடைந்து இன்புற்றனர்.” என்று கூறுவார், தவத்திரு கிருபானந்த வாரியார்.

 ராஜேஸ்வரி ஜெயகுமார், சென்னை  

காண்க:

ஏனாதி நாயனார் (விக்கி)

பகைவனுக்கும் அருளிய பண்பாளர்

ஏனாதி நாயனார் (பெரிய புராண சொற்பொழிவு)

ஏனாதி நாயனார் (திண்ணை)

ஏனாதி நாயனார் (திருத்தொண்டர் புராணம்)

Enathinatha Nayanar (saivam.org)

The Puranam  of Enathi Nayanar

ஏனாதிநாதர் (தமிழகக் கோயில்கள்)
 
ஏனாதி நாயனார் (தினமலர்)

.