கர்மவீரர் நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா
(18.07.1918 – 05.12.2013)

உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக்கிறார்கள்; மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், ஒருவர் நம்முடன் வாழ்ந்தார், இப்போது மறைந்துவிட்டார்.

நெல்சன் மண்டேலாவின் மரணம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த சில ஆண்டுகளாகவே முதுமையும், உடல்நலக் குறைவும் அவரை நடைப்பிணமாக்கி விட்டிருந்தது. ஆனாலும் கூட, இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது, லட்சியவாதிகளுக்கும் சுயமரியாதை, சுதந்திரம் போன்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோருக்கும் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. இனி நாம், அண்ணல் காந்தியடிகளை நினைவில் நிறுத்தி செயல்படுவதுபோல, எங்கெல்லாம் இனவெறி எழுகிறதோ, எங்கெல்லாம் சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெல்சன் மண்டேலாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டாக வேண்டும்.

அண்ணல் காந்தியடிகளைத் தனது முன்னோடியாகக் கொண்டு, அவர் விட்ட இடத்திலிருந்து தனது பணியைத் தொடங்கியவர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்க இனவெறி அரசுக்கு எதிராக அவர் நடத்தியது ஆயுதப் போராட்டமல்ல. அண்ணலின் வழியிலான அமைதிப் போராட்டம், அகிம்சைப் போராட்டம். 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த நெல்சன் மண்டேலாவால், கருப்பர் இன மக்களின் சுதந்திர வேட்கை தணிந்துவிடாமல் பாதுகாக்க முடிந்தது என்றால், அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர் கொண்ட லட்சியத்தில் இருந்த பிடிப்பும்தான் காரணம்.

ஐந்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் போனால், அடையாளம் தெரியாதவர்களாகிவிடும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், 27 ஆண்டுகள் போராட்டக் களத்திலிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் அகற்றப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோதும், அந்தத் தலைவனால் உயிர்ப்புடன், மன உறுதி தளராமல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது என்பதுதான் நெல்சன் மண்டேலாவை ஏனைய தலைவர்களிலிருந்து அகற்றி நிறுத்துகிறது. அண்ணாந்து பார்க்க வைக்கிறது.

1994இல் தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி அகற்றப்பட்டு, குடியரசு அமைந்தவுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, தன்னை நிரந்தரத் தலைவராக அறிவித்துக் கொள்ளவில்லை. இரண்டாம் முறை போட்டியிட மறுத்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகள் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தவர், 2004இல் பொது வாழ்விலிருந்தே விலகிக் கொண்டுவிட்டார். தான் கொண்ட குறிக்கோளை அடைந்து, தென்னாப்பிரிக்கா நிரந்தரமாகத் தன்னுரிமை பெற்ற குடியரசாகத் தொடர்வதை உறுதிசெய்துவிட்டு, கடமை முடிந்தது என்று நடையைக் கட்டிய கர்மவீரர் நெல்சன் மண்டேலா.

27 ஆண்டு காராகிருகவாசம் அனுபவித்தபோது, கட்சியைக் கட்டிக் காத்தவர், போராட்டத்தின் வீரியம் குறையாமல் பாதுகாத்தவர் அவரது மனைவி வின்னி மண்டேலா. தென் ஆப்பிரிக்காவில் குடியரசு ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சராகப் பொறுப்பும் ஏற்றார். அமைச்சரான தனது மனைவி அதிகார போதை தலைக்கேறி செய்த ஊழல்கள் வெளிவந்தபோது, சற்றும் தயங்காமல், அதை மறைக்க முயலாமல் சட்டம் தனது கடமையைச் செய்யப் பணித்தவர் நெல்சன் மண்டேலா.

இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனிமைச் சிறையிலிருந்து விடுதலையானதும் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் நினைத்திருந்தால் தனது மனைவியைப் பாதுகாத்திருக்க முடியும். தவறுகளை மன்னித்திருக்க முடியும். பொது வாழ்க்கையில் நேர்மையும் தூய்மையும் பற்றி பலரும் பேசுவார்கள். நெல்சன் மண்டேலா வாழ்ந்து காட்டினார்.

அண்ணல் காந்தியடிகளைப் போல, அவரும் வாரிசு அரசியலுக்கு வழிகோலவில்லை. தனது குழந்தைகளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, தனது அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை, பதவிக்குப் பரிந்துரைக்கவும் இல்லை.

ஒரு சமுதாயப் போராளி, அரசியல் தலைவர், லட்சிய புருஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தனை நாளும் நம்மிடையே வாழ்ந்தவர் நெல்சன் மண்டேலா. நம்மில் பலர், குறிப்பாக அரசியல்வாதிகளில் பலர், அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை. இப்போது மரணமடைந்து விட்டார். மரணமாவது அவரைப் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தட்டும்.

நெல்சன் மண்டேலா பற்றி சொல்வதாக இருந்தால் இதுதான் சொல்ல முடியும் – ‘இனியொருவர் நிகரில்லை உனக்கு!’

நன்றி: தினமணி தலையங்கம் (07.12.2013)

காண்க: நெல்சன் மண்டேலா (விக்கி)

.

விழித்தெழுக என் தேசம்!

ரவீந்திரநாத் தாகூர்
(மறைவு: ஆக. 7)

 

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,

சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு

எங்கே பூரண விடுதலை உள்ளதோ,

குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்

வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே
உடைபட்டு துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,

வாய்ச் சொற்கள் எங்கே

மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து

வெளிப்படையாய் வருகின்றனவோ,

விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி

பூரணத்துவம் நோக்கி

தனது கரங்களை நீட்டுகிறதோ,

அடிப்படை தேடிச் செல்லும்

தெளிந்த அறிவோட்டம் எங்கே

பாழடைந்த பழக்கம் என்னும்

பாலை மணலில்

வழி தவறிப் போய்விட வில்லையோ,

நோக்கம் விரியவும்,

ஆக்கப் பணி புரியவும்

இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே!

விழித்தெழுக என் தேசம்!
 
ரவீந்திரநாத் தாகூர் (கீதாஞ்சலி)
 
காண்க:
.

இயற்கையை நேசித்த காவியக் கவிஞர்

மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
(பிறப்பு: மே 7)
தாகூர் 150 வது ஆண்டு
காலைப் பசும்புல்லில் காணும் பனித்துளி
அப்போது தான் துளிர்க்கும் புதிய இலைகள்
மனதை மெல்லியதாக்கும் தென்றல் காற்று
நறுமணத்தைப் பரப்பி நாற்றிசை கமழும் பூக்கள்
சாரலாய் விழுந்து மண் நனைக்கும் மழை…
– என்றெல்லாம் இயற்கையழகை தனது கவிதைகளினூடேவைப்பதில் வல்லவர் நம் தேசத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்லாது, குழந்தைகள்மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டவராகத் திகழ்ந்தவர்.
தாய்மொழிதான் குழந்தை-கள் மனதில் வளமான சிந்தனைகளை விதைக்கும், கற்பனை ஊற்றை விளைவிக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ குழந்தைகளுக்கு கற்றுத்தர விரும்பியவர். மரப்பலகையில் உட்கார்ந்து எந்திரம் போல் கற்காமல் விருப்பம் போல் ஆடிப்பாடி அவர்கள் அறிவுப்பசியை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை குழந்தைகளுக்கு தர வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தவர்.
பண்டைய கால பாரத தேசத்து ஆசிரமங்களைப் போல ‘போல்பூர் பிரம்மச்சரிய ஆசிரமம்’ ஒன்றை மலையடிவார பூமியான சாந்தி நிகேதனில் ஆரம்பித்தார். தாகூரே மாணவர்களுக்குக் கற்பித்தார்; அவர்களுடன் விளையாடினார்; கதைகள் சொல்லி மகிழ்வித்தார்.
படிக்க வந்த மாணவர்களில் ‘மாடர்ன் வியூ’ பத்திரிகை ஆசிரியரான ராமனந்த சாட்டர்ஜியின் மகனும் ஒருவன். அவர் பள்ளியை பார்த்துவர சென்றபோது, மரத்தடியில் தாகூர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பத்து, பதினைந்து பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றெண்ணியபடியே அருகே சென்ற ராமானந்தர் அதிர்ச்சியடைந்தார். அங்கே கீழே மரத்தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைகளை விட, மரத்தின்மீது உட்கார்ந்திருந்த பிள்ளைகள் அதிகமாக இருந்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
“குரங்குகளைப் போல மரத்தின் மேல் ஏறி உட்கார பிள்ளைகளை ஏன் அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார் சாட்டர்ஜி.
தாகூர் பதிலளித்தார்: “தரையில் அமர்ந்து படிக்கும் குழந்தைகளை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. மரத்திலுள்ள காய்கள் பழுத்து வருகின்றன. அவற்றின் இனிய மணத்தை காற்று எல்லா திசைகளிலும் எடுத்து செல்கிறது. மரத்தின் அழைப்பு இது. கனிமரத்தின் அழைப்பை குழந்தைகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் யார்தான் ஏற்றுக்கொள்வது? மரத்தின் கீழ் அமர்ந்து படிக்கும் குழந்தைகள் இப்போதே முதியவர்கள் ஆகிவிட்டார்கள். மரத்தின் அழைப்பு அவர்களை சென்றடையவில்லை. இதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது.”
இப்பதிலிலிருந்து தாகூரின் அன்பும், கனிவும் கண்டு சாட்டர்ஜி நெகிழ்ந்து போனார்.
ஏராளமான கட்டிடங்களும், பொருட்களும், வசதிகளும் மட்டுமே வாழ்விற்கு கல்வியை, மகிழ்வை கற்றுத்தராது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே அமைதி தரும் என்று அறிவுறுத்தியவர் ரவீந்திரநாத் தாகூர்.
பள்ளிக்கூடங்கள் நகரங்களுக்கு இடையேவிட காடுகளுக்கு இடையே அமைய வேண்டும் என்பதே கவிஞரின் கொள்கை.    
ம.கொ.சி. ராஜேந்திரன்

காண்க:

.