காலத்தின் கொடுமை!

-பத்மன்

அபுல் கலாம் ஆஸாத்

அபுல் கலாம் ஆஸாத்

இந்தியாவின் பெருமை மதச்சார்பின்மை. ஆனால் நடைமுறையில் அந்த மதச்சார்பின்மை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் வேதனை கலந்த வேடிக்கை. இதற்கு ஓர் உதாரணம், ‘பாரத் மாதா கீ ஜே’ என்ற முழக்கம் படுகின்ற பாடு.

மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினரான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்பவர் ‘பாரத மாதா கீ ஜே’ என்கிற கோஷத்தை தான் உச்சரிக்க மாட்டேன் என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு ஆளும் பா.ஜ.க. – சிவசேனை கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஒருமனதாக உறுப்பினர் வாரிஸ் பதானை கூட்டத் தொடர் முடியும்வரை தாற்காலிக நீக்கம் செய்திருக்கிறார்கள்.

‘பாரத் மாதா கீ ஜே’ என்பதற்கு ‘பாரத அன்னை வெல்க’ என்றும் ‘பாரத அன்னை நீடூழி வாழ்க’ என்றும் பொருள். இதில் எங்கே மத வழிபாடு வந்தது? ஆனால் சில முஸ்லிம் அடிப்படை வாதிகளும் அவர்களை ஆதரிக்கும் சில கட்சிகளும் பாரத மாதா என்பதே ஹிந்து மதக் கண்ணோட்டம் என்று கருதுகிறார்கள்.

அந்த வகையில், பாரத மாதா என்ற கருத்தியலை எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு (அல்லாவுக்கு) இணையாக வைப்பதாகக் கூறி, தங்களது மத அடிப்படையில் பாரத் மாதா கீ ஜே எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். வாரிஸ் பதான் ‘பாரத் மாதா கீ ஜே’ கோஷம் எழுப்பமாட்டேன் என்று கூறியதன் காரணம் இதுதான்.

நாட்டை, நதியை, இயற்கையை அன்னையாகக் கருதிப் போற்றுவது, சிலரால் வணங்கப்படுவது இந்திய சமூகக் கண்ணோட்டமேயன்றி, மதக் கண்ணோட்டம் அல்ல. பாரத அன்னை மட்டுமல்ல, காவிரி அன்னை, தமிழ்த் தாய் போன்றவை எல்லாம் இந்தக் கண்ணோட்டத்தில் எழுந்தவையே.

அன்பின், நன்றி காட்டுதலின் வெளிப்பாடுதான் தாயாகக் கருதி வணங்குதல். இது மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது. அதனால்தான் பாரத அன்னை என்பதை ஹிந்துக்கள் மட்டுமன்றி பெளத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், ஏன் விடுதலைப் போராட்டக் காலத்தில் முஸ்லிம்களும்கூட ஏற்றுக்கொண்டார்கள். அன்றைய முஸ்லிம் தலைவர்கள் யாரும்‘ பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மறுத்ததும் இல்லை, மறந்ததும் இல்லை.

கடவுளே இல்லை என்று கூறும் தமிழக நாத்திகர்கள்கூட தமிழ்த்தாய் என்று போற்றுகிறார்கள். அது மதம் சார்ந்ததா? தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்கள் அனைவரின் நாவிலும் ஒலிக்கப்படும்போது வராத மதத் தீட்டு, பாரத அன்னை வாழ்க என்று அனைத்து இந்தியர்களும் சொல்லும்போது மட்டும் வந்துவிடுமா?

மதங்களைக் கடந்த மகோன்னத பாரத அன்னையை மதச் சிமிழுக்குள் அடக்குவதை உண்மையான மதச்சார்பின்மை வாதிகள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதற்கு அவர்களது எதிர்வினை என்ன?

பாரத நாட்டை அன்னையாகக் கருதும் கருத்தியல் நோக்கில் மதம் எங்கே புகுந்தது? மாறாக, பாரத மாதா என்பதை ஏதோ ஹிந்துக்களின் கடவுள்களில் ஒன்று என்று கருதுவதில்தான் மதம் பிடித்துக்கொள்கிறது.

தனிப்பட்ட முறையில் ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பொது விஷயங்களில் மதம் பார்க்கக் கூடாது, மதத்தைக் கடந்து சிந்திக்க வேண்டும் என்பதுதானே மதச்சார்பின்மையின் உட்பொருள்? அவ்வாறெனில், இஸ்லாமியர்களில் ஒவைஸி, வாரிஸ் பதான் போன்ற சிலர், பாரத நாடு என்ற பொது விஷயத்தைக்கூட மதம் சார்ந்துதான் சிந்திப்போம் என்றால் அதுதான் மதவாதம்.

அவர்களை மதச்சார்பின்மை பேசுபவர்கள் ஆதரிப்பதும் ‘பாரத் மாதா கீ ஜே’ கோஷம் எழுப்புவதும் எழுப்பாததும் அவரவர் தனியுரிமை என்று வக்காலத்து வாங்குவதும் போலி மதச்சார்பின்மையின் கோர முகமல்லாமல் வேறொன்றும் இல்லை.

இவ்வாறாக சிந்திக்கத் தொடங்கினால், வேறு சில பொது விஷயங்களுக்கும் இனி மதச்சாயம் பூசப்படலாம். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைப்பது, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது ஆகியவைகூட ஹிந்து மதம் சார்ந்ததாகக் கூறப்படலாம்.

பசுவைத் தாயாக வணங்குவதும், அதற்கு ஒரு தீங்கும் செய்யக்கூடாது என்று கருதுவதும் மதம் சார்ந்த கருத்து என்பதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். நான் பசுவைத் தாயாகக் கருதுவதால் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை, நீயும் அவ்வாறு கருதி சாப்பிடக்கூடாது என்று அடுத்தவரை நிர்பந்திப்பது தவறு என்பதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதற்கு வெகு காலம் முன்பிருந்தும் நமது இந்திய சமூகத்தை ஒன்றிணைக்கும் விஷயமான பாரத அன்னை என்ற கருத்தியலும், பாரத அன்னை வெல்க என்ற முழக்கமும் அப்படிப்பட்டதல்ல. உணவு சார்ந்ததல்ல, அடிப்படை தேசபக்த உணர்வு சார்ந்தது.

ஐந்து வேளை தொழுகை நடத்தும் ஓர் இஸ்லாமிய நெறியாளர் ‘எனது தாய்நாடு நான் வணங்குகின்ற கடவுளுக்கு இணையானது’ என்று பெருமை கொள்கிறார் எனில், அவர் மத விரோதி ஆகிவிடுவாரா? அவரை உடனடியாக மத நிந்தனையாளர் என்று கூறி தண்டிக்க வேண்டும் என்று கூறும்பட்சத்தில் அது மதச்சார்பின்மைக்கு விரோதம் ஆகாதா?

இஸ்லாமியர்கள் எல்லா விஷயங்களையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடுதான் அணுக வேண்டும் எனும் நிலைமை ஏற்பட்டால் மதச்சார்பின்மை மடிந்துவிடுகிறது. பாரத் மாதா கீ ஜே என்று இஸ்லாமியர்கள் சொல்ல மாட்டேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதானே, அதனை ஏன் வலியுறுத்த வேண்டும் என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி! மதச்சார்பின்மை என்பது குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்குக் கிடையாது என்றால் அதற்குப் பெயர் மதச்சார்பின்மையா?

இதுபோன்ற சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்படுகிறது. அது இந்துமத அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது.

‘பாரத் மாதா கீ ஜே’ முழக்கமிட்ட அபுல் கலாம் ஆஸாதும் காயிதே மில்லத் இஸ்மாயில் சாயுபுவும் இஸ்லாமிய விரோதிகள். வாரிஸ் பதானும், ஓவைசியும் இஸ்லாமியப் பாதுகாவலர்கள். காலத்தின் கொடுமை இது!

 

குறிப்பு:

திரு. பத்மன், பத்திரிகையாளர்.

நன்றி: தினமணி (1.4.2016)

.

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

-பத்மன்

Gandhi statue

இந்தியாவைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட்டுகள் கடைப்பிடிக்கும் ஒரே இலக்கணம் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். உழைக்கும் வர்க்கத்துக்கான போராட்டம் என்று அவர்கள் முன்னிறுத்தும் முழக்கங்கள் எல்லாம், பிழைக்கும் வழிக்கான போராட்டத்தின் போது பின்னுக்குத் தள்ளப்படும். இப்போது கம்யூனிஸ்ட்டுகள் எடுத்திருக்கும் ஜீவனோபாய போராட்ட ஆயுதம், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற போர்வையிலான பயங்கரவாத ஆதரவுப் போராட்டம்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கான பின்னணியும் இதுதான். கம்யூனிஸத்தை வளர்க்கும் தொட்டிலாகக் கருதப்படும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீப காலமாக, வலதுசாரிகள் என்று வர்ணிக்கப்படும் ஏபிவிபி மாணவர் அமைப்பினரின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. இதனால் தங்களது இருப்பை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மரண தண்டனை எதிர்ப்புப் போராட்டம் என்பதைக் கையில் ஏந்தியிருக்கிறது இடதுசாரி மாணவர் அமைப்பு.

ஆனால் இதற்குள்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது. மரண தண்டனையை முற்றிலுமாக அகற்றுவதா அல்லது வேண்டாமா என்பது பலத்த விவாதத்துக்குரிய மற்றொரு விஷயம். அதே நேரத்தில் மரணதண்டனையை அகற்றவேண்டும் என்று வலியுறுத்துவதற்கான முக அடையாளமாக கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் முன்னிறுத்தி இருப்பது யாரை? தில்லி நாடாளுமன்ற வளாகத்தின்மீது தாக்குதல் நடத்திய சூத்திரதாரியான அஃப்சல் குருவை. அவர் தூக்கிலிடப்பட்ட தினத்தை ஒட்டித்தான் மரணதண்டனை எதிர்ப்புப் போராட்டத்தை ஜேஎன்யு வளாகத்தில் இடதுசாரி மாணவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

மரணதண்டனை மூலம் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சுட்டிக்காட்டுப்படுவதற்கு, மனித உயிர்களை ஈவுஇரக்கமின்றி பறித்த பயங்கரவாதியின் முகம்தானா இலட்சினை? உண்மையில், அவ்வாறு காட்டுவதன்மூலம் ஹிந்து – முஸ்லிம் என்ற பிரிவினையைத் தூண்டுவதுதான் அவர்களது லட்சியம்! அஃப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற பயங்கரவாதக் குற்றவாளிகளை மரண தண்டனையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளாக முன்னிறுத்துவதன் மூலம் பாஜகவும் ஏபிவிபியும் எதிர்வினை ஆற்றும், அதை வைத்து முஸ்லிம்கள் என்பதற்காகத்தான் இத்தகைய எதிர்ப்பை வலதுசாரிகள் காட்டுகிறார்கள் என்று பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்பதே கம்யூனிஸ்டுகளின் கணக்கு. அந்தக் கணக்கு அவர்களுக்கு ஓரளவு கைகொடுக்கவும் செய்திருக்கிறது.

பயங்கரவாத ஆதரவு கோஷத்துக்காக தேசவிரோத வழக்குப் பிரிவுகளின்கீழ், இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டதும், மரண தண்டனை எதிர்ப்பு என்பது தேசவிரோதச் செயலா என்று நியாயவான்போல் கேள்வி கேட்கிறார்கள். தேசபக்தி குறித்து எங்களுக்கு யாரும் நற்சான்றிதழ் தர வேண்டாம் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் முழங்குகிறார்கள். ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் பாஜக அரசு ஒடுக்குவதாகச் சாடுகிறார்கள்.

ஆனால், வரலாற்றையும், சித்தாந்தத்தையும் கம்யூனிஸ்ட்டுகள் வசதியாக மறந்துவிடுகிறார்கள், அல்லது மறைத்துவிடுகிறார்கள். 1942-ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, பிரிட்டீஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். மேலும் காந்திஜி அறைகூவல் விடுத்த ‘செய் அல்லது செத்துமடி’ போராட்டத்தின் போது நடைபெற்ற தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைத்தவர்கள்தானே கம்யூனிஸ்டுகள். இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் ரஷியா மீது ஜெர்மனி படையெடுத்ததால், ரஷியாவும் பிரிட்டனும் ஓரணியில் திரண்டதே, இந்தியாவில் பிரிட்டீஷ் அரசுடன் கம்யூனிஸ்டுகள் கைகோத்ததுக்குக் காரணம்.

சோவியத் ரஷியா மீது ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் படையெடுக்கும்வரையில், கம்யூனிஸ்டுகள் அவருக்குப் புகழாரம் சூட்டி வந்தார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, மகாத்மா காந்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் ‘குருட்டு தீர்க்கதரிசிகள்’ என்றும் வசைபாடினார்கள். ஆனால், சுதந்திர இந்தியாவில் நேதாஜியின் ஃபார்வர்டு பிளாக் கட்சியுடன் கூட்டணி வைக்க கம்யூனிஸ்டுகள் பிற்காலத்தில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. அதேபோல் தாங்கள் வசைபாடிய காந்திஜியை இந்தியாவின் மிக உன்னதமான தலைவர் என்று பிற்காலத்தில் புகழ்ந்துரைத்து சந்தர்ப்பவாதம் செய்யவும் தவறவில்லை.

இருப்பினும், கம்யூனிஸ்டுகளை காந்திஜி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். அதனால்தான் 1944-ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி, அன்றைய ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சி.பி. ஜோஷிக்குத் தாம் எழுதிய கடிதத்தில் 5 முக்கிய கேள்விகளை மகாத்மா எழுப்பினார்:

1. மக்கள் போர் என்று கம்யூனிஸ்ட்டுகள் கூறுகின்ற போரில் மக்கள் என்று குறிப்பிடுவதை யாரை? அது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கானதா? இல்லையேல் ஆப்பிரிக்கா அல்லது அமெரிக்காவில் வாழ்கின்ற கருப்பின மக்களுக்கானதா? இல்லையேல் அனைவருக்குமானதா?

2. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் பண உதவிகள் பொதுத் தணிக்கைக்கு உட்பட்டதா? அவ்வாறெனில் அக் கணக்குகளை நான் காண இயலுமா?

3. கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தும் தலைவர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் கைது செய்ய அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி உதவுகிறதாமே?

4. தீய நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சிக்குள் தமது ஆட்களை ஊடுருவச் செய்யும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறதே?

5. கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாட்டுக்கு வெளியே இருந்து உத்தரவுகள் வருகின்றன அல்லவா?

இந்த 5 கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாத ஜோஷி, இந்தியாவின் ஏழை மக்களுக்குப் பொருளாதார பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைத்ததாக விளக்கம் அளித்தார். இதுதானா உழைக்கும் மக்களின் உயர்வுக்காகப் போராடுவதன் லட்சணம்?

எளிய வாழ்க்கை வாழ்ந்த காந்திஜி கம்யூனிஸ்டுகளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் என்றால், பகட்டான வாழ்க்கை வாழ்ந்ததாலோ என்னவோ ஜவாஹர்லால் நேருவுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றி நன்கு தெரியவில்லை. அதனால்தான் கம்யூனிஸ்ட்டாக இருந்த கிருஷ்ண மேனனை காங்கிரஸுக்குள் சேர்த்துக்கொண்டு, பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி கொடுத்தார். (காந்திஜி, கம்யூனிஸ்ட் தலைவர் ஜோஷிக்கு எழுதிய கடிதம் பற்றி இவருக்குத் தெரியாதோ!) இதற்கான விலையை இந்தியா, 1962-இல் நடந்த சீனப் போரின்போது கொடுக்க நேர்ந்தது. சீனா, இந்தியாவின் எதிரி நாடு அல்ல என்று கிருஷ்ண மேனன் ஏமாற்றி வந்ததை வெகு காலத்துக்குப் பிறகுதான் நேரு வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இந்திய – சீனப் போரின்போதும் கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி வெளிப்பட்டது. அது இந்திய தேசத்தின் மீதான பக்தி அல்ல, சீன தேசத்தின் மீதான பக்தி. இன்றும்கூட பல கம்யூனிஸ்டுகள் இந்தியாதான் சீனாவின் பகுதியை ஆக்கிரமித்ததாகவும், சீனப் பகுதியான திபெத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தை (உண்மையில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான திபெத்தியர்களின் உரிமைப் போராட்டம்) இந்தியா தூண்டிவிட்டதாகவும் கூறிவருகிறார்கள்.

அடுத்ததாக, இவர்கள் முன்னிறுத்தும் ஜனநாயகம். கம்யூனிஸத்தின் அடிப்படை சித்தாந்தமே, பாட்டாளி வர்க்கத்தினரின் சர்வாதிகாரம்தான். அதில் எங்கே இருக்கிறது ஜனநாயகம்? பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி என்ற பெயரில் ஒற்றைக் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) ஆட்சி முறையைத்தான் கம்யூனிஸம் வலியுறுத்துகிறது. அங்கே மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமேது? பன்முகத் தன்மைக்கு எங்கே வாய்ப்பு?

ஜனநாயக உணர்வுகளுக்கு கம்யூனிஸ்டுகள் எப்படி மதிப்பளிப்பார்கள் என்பதற்கு சீனாவின் தியானென்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த படுகொலையே சான்று. 1989-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஜனநாயக உரிமைகள் கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்த சீன மாணவர்களையும், தொழிலாளர்களையும் ராணுவத்தால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது சீனக் கம்யூனிஸ அரசு. அப்போது ஆயிரக்கணக்கான சீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தியானென்மென் படுகொலையை நியாயப்படுத்தும் கம்யூனிஸ்டுகள், ஆயிரக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்த அந்த ஜனநாயக மீட்புப் போராட்டத்தை, புரட்சிக்கு எதிரான கலகம் என்றுதானே சிறுமைப்படுத்துகிறார்கள்?

காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறும் இடதுசாரி சிந்தனையாளர்கள், ஏன் திபெத் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பதில்லை? இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையே சீனாவின் பகுதி என்று நாக்கூசாமல் கூறும் அவர்கள், தங்கள் எல்லை கடந்த எஜமான விசுவாசத்தைக் காட்ட கம்யூனிஸ சீனாவின் பகுதிதான் தாந்திரீக பௌத்தர்களின் தாயகமான திபெத் என்று கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

இன்று ஜனநாயகத்துக்கு நெருக்கடி, பேச்சு சுதந்திரம் பறிபோகிறது என்று கூக்குரலிடும் ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்பின் தாய்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (சிபிஐ), நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த நெருக்கடி நிலை காலகட்டத்தில் இந்திரா காந்தியை அப்பட்டமாக ஆதரித்தார்கள். ஏனெனில் அவ்வாறு ஆதரிக்க வேண்டும் என்பது அன்றைய சோவியத் ரஷியத் தலைமையின் கட்டளை. அன்றைய சோவியத் ரஷியாவில் கம்யூனிஸ்டுகளை எதிர்த்தவர்கள், சைபீரியப் பாலைவனத்தில் ‘லேபர் கேம்ப்’ என்ற பெயரில் நூதன சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதுதானா கருத்துச் சுதந்திரத்தைக் காக்கும் மாண்பு?

சரி, ஜனநாயக ரீதியில் இந்தியாவில் சில மாநிலங்களில் ஆளுவதற்குக் கிடைத்த வாய்ப்புகளையாவது கம்யூனிஸ்டுகள் முறையாகப் பயன்படுத்தினார்களா? கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அரசியல் எதிரிகளை கம்யூனிஸ்டுகள் எப்படி ஒடுக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது இருக்கட்டும். “நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம்” என்ற பாட்டையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தினார்களா? மேற்கு வங்கத்தில் உழைக்கும் விவசாயிகளுக்கு ஓரளவு நிலம் சொந்தமானது என்னவோ உண்மை. ஆனால் அதை வைத்து கூட்டுப் பண்ணை விவசாயத்தை சாதித்தார்களா? இல்லையேல், குஜராத்தில் குரியன் நிகழ்த்திக்காட்டிய அமுல் கூட்டுறவு சங்கத்தின் வெற்றியைப்போல் பல கூட்டுறவு அமைப்புகளை மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ நிறுவி சாதனை படைத்தார்களா? எதுவும் இல்லையே!

ஏழைகளை உயர்த்துவது நோக்கமல்ல, நமது வாக்கு வங்கிகளான ஏழைகளின் ஏழ்மையைத் தேர்தல் ஆதாயத்துக்காக நீட்டித்து வைத்திருக்க வேண்டும் என்பதுதானே கம்யூனிஸ்டுகளின் உண்மையான நோக்கம்? வாக்கு வங்கி அரசியலுக்காக கம்யூனிஸ்ட்டுகள் எதைத்தான் செய்யவில்லை? மேற்கு வங்கத்தில், ஜெர்மனியின் கைக்கூலி என்று தாங்கள் முன்பு வசைபாடிய நேதாஜியின் ஃபார்வர்டு பிளாக் கட்சியோடு (நேதாஜி மீதான மக்கள் அபிமானம் காரணமாக) கூட்டணி வைத்தார்கள். இதனை முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக எதிர்த்ததால், ஃபார்வர்டு பிளாக் கட்சி பிளவுபட்டது தனிக்கதை.

தேசப் பிரிவினைக்குக் காரணமானதால் மற்ற கட்சிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் லீக்குடன் கேரளத்தில் முதன்முறையாக கூட்டணி வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகளே. அப்போது, காங்கிரஸை எதிர்த்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட்டுகளின் மதவாத எதிர்ப்பு மறைந்துகொண்டது. இப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசை அகற்றி, ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் எதிர்ப்பும் முழுமையாகக் கரைந்துபோகக் காத்திருக்கிறது. இடையிடையே பல முறை பல்வேறு மாநிலங்களில் நேரடியாகவும், மத்தியில் மறைமுகமாகவும் காங்கிரஸோடு கம்யூனிஸ்டுகள் கைகோத்துள்ளனர். கேரளத்தில் ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக, வாக்கு வங்கியைக் குறிவைத்து கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களையும் கையில் எடுக்கத் தொடங்கி விட்டார்கள் கம்யூனிஸ்டுகள்.

அஃப்சல் குருவை தங்களது முக அடையாளமாக முன்னிறுத்தத் தயங்காத கம்யூனிஸ்டுகள், மிகச் சிறந்த தேசபக்தரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஏற்கத் தயங்கி, அதற்கான தேர்தலில் கேப்டன் லட்சுமியை முன்னிறுத்தினார்கள். காரணம், அழிவு ஆயுதமான அணுகுண்டு சோதனையை (இந்தியாவுக்காக) நிகழ்த்தியதில் பங்காற்றினாராம் கலாம். அப்படியானால், ரஷியாவிலும், சீனாவிலும் இருக்கும் அணுகுண்டுகளை அழிக்குமாறு கம்யூனிஸ்டுகள் இதுவரை ஏன் கோரவில்லை?

நேதாஜி, காந்திஜியை மட்டுமல்ல அம்பேத்கரைக் கூட கம்யூனிஸ்டுகள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரின் கருத்துகள்தான் தங்களது கருத்துகள் என்று வாக்கு வங்கிக்காக முழங்கும் கம்யூனிஸ்டுகள், இதுவரை ஏன் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தனது கட்சி தலைமை பீடத்தில் அமர்த்தவில்லை? தங்களுக்கு அரசமைக்கக் கிடைத்த சில வாய்ப்புகளின்போதுகூட, ஆட்சித் தலைமையேற்க தலித் சமுதாயத்தினருக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை?

தமிழகத்தின் கீழவெண்மணியில் தலித் விவசாயிகளின் படுகொலைக்குக் காரணமான தி.மு.க-வோடு பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகள் கைகோத்தது எதனால்? அம்பேத்கருக்கு கம்யூனிஸம் ஏற்புடையதாக இருந்தால் அவர் அக்கட்சியிலேயே சேர்ந்திருப்பாரே, குடியரசுக் கட்சி எனத் தனியாக ஏன் தொடங்க வேண்டும்? இப்போது அம்பேத்கருடன் ஒத்த கருத்து உடையவர்களாக கம்யூனிஸ்டுகள் கருதினால், தங்களது கட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுக் கட்சியில் இணைந்துவிடுவதுதானே?

அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பேச்சுரிமையை தற்போது வலியுறுத்தும் கம்யூனிஸ்டுகள், அரசியல் சாசனத்தை அவர் வகுத்தளித்தபோது அதனைக் கடுமையாகச் சாடினார்கள் என்பதே வரலாற்று உண்மை. கட்டுப்பாடற்ற பேச்சுரிமையை டாக்டர் அம்பேத்கர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. கடந்த 1949-ஆம் ஆண்டு, தமது தலைமையிலான அரசியல் சாசன வரைவுக் குழுவின் நிறைவுக் கூட்டத்தில் பேசிய அண்ணல் அம்பேத்கர், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்ட்டுகள் பற்றிக் கூறியதாவது:

“இந்திய அரசியல் சாசனத்துக்கு தற்போது இரண்டு தரப்புகளில் இருந்து கண்டங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று சோஷஸிஸ்ட் கட்சி. அவர்கள் ஏன் கண்டனம் செய்கிறார்கள்? உண்மையில் இந்த அரசியல் சாசனம் அந்த அளவுக்கு மோசமானதா? நான் துணிந்து சொல்வேன் ‘இல்லை’ என்று. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற கொள்கை அடிப்படையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கருதுகிறார்கள். ஆனால், நமது அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இருப்பதால் இதனை அவர்கள் கண்டிக்கிறார்கள்.

சோஷலிஸ்ட்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். ஒன்று, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து தனியார் சொத்துகளையும் எவ்வித நஷ்டஈடோ, இழப்பீடோ தராமல் நாட்டுடைமை ஆக்குவதற்கு அரசியல் சாசனம் முழுச் சுதந்திரம் தர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் கட்டுப்பாடற்ற முழுமையான பேச்சுரிமை கேட்கிறார்கள். அதன்மூலம் தாங்கள் ஆட்சிக்கு வர இயலாத நிலையில், அரசுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைப்பதோடு மட்டுமின்றி அதனைக் கவிழ்ப்பதற்கும் முழுச் சுதந்திரம் வேண்டும் என சோஷலிஸ்ட்டுகள் கருதுகிறார்கள்” என்றார் சட்ட மேதை அம்பேத்கர்.

மிகச் சரியாக கம்யூனிஸ்டுகளைத் தோலுரித்துள்ளார் அண்ணல் அம்பேத்கர். கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாத ஆதரவு, பிரிவினைவாத ஆதரவு இவையெல்லாம் ஜனநாயகம், பேச்சுரிமை என்ற போர்வைக்குள் எதற்காகப் பதுங்கியுள்ளன என்பது இப்போது புரிகிறதா? ஒருகாலத்தில் தாங்கள் எதிர்த்த அரசியல் சாசனத்தையும், அண்ணல் அம்பேத்கரையும் கம்யூனிஸ்டுகள் தற்போது துணைக்கு அழைப்பது அரசியல் தந்திரமின்றி வேறெதுவும் இல்லை.

ஒருசில மாற்றுக் கருத்துகள் இருந்தபோதிலும், காந்திஜி, அம்பேத்கர், பாரதி, விவேகானந்தர் போன்றோர் தேசம் முழுமைக்கும், பல்வேறு வகைப்பட்ட சிந்தனையாளர்களுக்கும் பொதுவானவர்கள். அவர்களை ஒரு பிரிவினர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது, அவர்கள் சார்ந்திருந்த கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

மனமயக்கும் கோஷங்களாலோ அல்லது மதிமயக்கும் போராட்டங்களாலோ அல்ல, மனப்பூர்வமான செயல்பாடுகளால்தான் மக்கள் மனங்களை நிஜமாகவே வென்றெடுக்க முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும். வாய் ஓயாமல் பிறருக்குத் தாம் போதிக்கும் ஜனநாயகம், மாற்றுக் கருத்துகளை மதித்தல், தேசாபிமானம் ஆகியவற்றை உண்மையாகவே தாம் கடைப்பிடிக்க கம்யூனிஸ்டுகள் முன்வர வேண்டும். செய்வார்களா?

 

குறிப்பு:

 திரு. பத்மன் பத்திரிகையாளர்.

நன்றி:  தினமணி (29.02.2016)