இந்த யுகம் பாரதியின் யுகம்

– பி.ஸ்ரீ. ஆச்சார்யா

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!தமிழ் இலக்கிய சரித்திரத்திலே ஒரு புதுயுகத்தின் ஆரம்பத்தில் தோன்றியவர் பாரதியார், ஆங்கில இலக்கியத்தின் கூட்டுறவினாலும், தேசியப் பேரியக்கத்தினாலும் இந்தியா முழுவதும் ஒரு புதிய இலக்கிய மறுமலர்ச்சி மண்டியெழுந்த காலத்தில், பாரதியார் நம் நாட்டிலே கவிதைத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு நவீன இலக்கியத்துறைகளிலும், அரசியல் சமூகம் முதலான துறைகளிலும் தம் உள்ளொளியாலும் எழுத்து வன்மையினாலும் வேகத்தினாலும் ஒரு பெருவழி காட்டியிருக்கிறார். இம்மறுமலர்ச்சி யுகத்தை ‘பாரதியுகம்’ என்று சிறப்பித்துப் பேசலாம்.

இவரை நாம் ‘தேசிய கவி’ என்று சிறப்பித்துப் பேசுகிறோம். இத் தேசிய கவி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒருங்கே விடுதலை தேடித் தந்தவர். இவர் பாடல்களை ‘தேச உபநிஷதம்’ என்றும், ‘அரசியல் கீதை’ என்றும் போற்றுகிறோம்.

இந்த தேச உபநிஷத்தின் புதிய சிந்தனைகளோடு பழைய, காலங்கண்ட, இந்து தத்துவத்தின் சாரமான சிந்தனைச் சுடர்களையும், தொன்று தொட்டு வரும் தமிழ் நாகரிகப் பண்பாடுகளையும் பார்க்கிறோம். அகில இந்தியாவின் ஆன்மா தமிழகத்தின் ஆன்மாவாகவும் இக்கவிஞருக்குக் காட்சி தந்தது. ஆம், தமிழ்த் தெய்வமும் பாரத அன்னையும் இவருடைய பராசக்திதானே?

இந்த தேசிய கவி – பராசக்தியின் இந்த ஆஸ்தான கவி- தமிழன்னையின் புதுமைப் புரட்சிக் கவி – வருங்காலத் தமிழக அமைப்பிற்கு வழிகாட்டும் தீர்க்கதரிசியாகவும் திகழ்கின்றார்.

வேதகாலம் தொட்டு, பக்தர்களும் சித்தர்களும் ஞானிகளும் மூழ்கித் திளைத்த ஆன்ம ஒளி கடலில் இத் தேசிய கவியும் மூழ்கித் திளைத்தவர்; எனினும் புரட்சிக் கவிஞர். வேதப் பெருமை பாடிய வாயால் ரஷ்யப் புரட்சியையும் பாராட்டி பொதுவுடைமையின் வெற்றியையும் பாடுகிறார். ஆகவே இவரது புரட்சி மனப்பான்மையில் தெய்வ பக்திக்கும் சமய ஞானத்திற்கும் அஹிம்சா தர்மத்திற்கும் இடமுண்டு. எல்லா மதங்களுக்கும் பொதுவான, சக்திமயமான, புரட்சிகரமான விளைவுகளோடு கூடிய ஞான பக்திக்கும் இடமுண்டு.

காளியும் கண்ணனும் முருகனும் அல்லாவும் கிறிஸ்துவும் ஹரிஜனங்களின் தேசமுத்துமாரியும் இவருக்கு ஒரே தெய்வத்தின் பல பெயர்களே. எத்தனையோ தெய்வ வழிபாடுகளுக்கிடையே பிற்காலத் தமிழர்கள் மறந்துவிட்ட சுதந்திர தேவிக்கு இவர் தனிச் சிங்காதனமிட்டு, பராசக்தியின் அதி முக்கிய அம்சமாகப் பாடியிருக்கிறார். சுதந்திர தேவியின் அருள் பெறாதவர்கள் பாவிகள் என்கிறார்.

‘அரசியல் சுதந்திரமற்ற பாவ பூமியில் புதிய புதிய கலைகளும் காவியங்களும் தோன்றுவதற்கு வழியில்லை, எனவே தமிழிலக்கியமும் க்ஷீணகதியுற்றுப் பாலைவனமாகிவிட்டது’ என்பதை உணர்த்தும் பாரதியார், சுதந்திர வெறி கொண்டு தமிழிலக்கியத்துக்கு புத்துயிர் அளித்தார்.

எல்லாரும் ஓர் குலம்

எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர் நிறை

எல்லாரும் ஓர் விலை

என்ற சுதந்திரக் கனவு நனவாகும்போது புதுமைத் தமிழிலக்கியமும் புதுமைத் தமிழகமும் உலகத்துக்கே ஒரு புதுமையாக வளர்ந்தோங்கும் என்பது திண்ணம்.

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம்

எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து

கழிகவே!

என்று பாடிய பாரதியாரின் சுதந்திர உணர்ச்சி அரசியலில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் புரட்சிகரமாக வெளிப்பட்டது. ஆண்களோடு பெண்களுக்கும் சரிநிகர் சமானமாக விடுதலை வேண்டியவர். பல்வேறு வகுப்பினருக்கும் – முக்கியமாக ஹரிஜனங்களுக்கு – உடனே விடுதலை வேண்டினார். வறுமையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை வேண்டினார். கருத்துச் சுதந்திரம், மத சுதந்திரம் முதலான சகல சுதந்திரங்களும் வேண்டினார்.

இவர் கவிதையை தமிழ்ப் பெருமக்களின் அழியாத அட்லாண்டிக் மகாசமுத்திரத்திலும் கரைந்து போகாத சுதந்திர மகா சாஸனம் என்று சொல்ல வேண்டும். இத்தகைய மகா சாஸனத்தை நமக்கு அளித்த பாரதியாரின் மகத்தான மனப் பண்பையும் ஆத்ம சக்தியையும் பாரதியம் எனலாம்.

ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசத்துடன் நம் மக்கள் இதயப் பிரவேசமும் அளிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி ஹரிஜனப் பிரச்னையை முக்கியமான தேசியப் பிரச்னை ஆக்கியவர் மகாத்மா காந்தி என்பதை அறியாதார் இல்லை. ஆனால் காந்தியடிகளுக்கு முன்பே இத்துறையில் பெருவழி காட்டியவர் பாரதியார் என்பதை தமிழர்களும் நன்றாக அறிந்து கொள்ளவில்லை.

1917ஆம் ஆண்டில் பாரதியார் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஹரிஜனங்களுக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை என்பதை வற்புறுத்தியிருக்கிறார். பட்டணத்து ஹரிஜனங்களைக் குறித்து பாரதியார் பேசவில்லை. கிராமங்களில் உள்ள ஹரிஜனங்களையே குறிப்பிடுகிறார்.

‘அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு… ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து இந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதறவிடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக் கூடிய கைங்கரியம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமான கைங்கரியம்’. ‘நமக்கு மண் உழுது நெல் அறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேர்மையாய் நடத்த வேண்டாமா?’

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்கும் கலெக்டருக்கும் சம்வாதமாக பாரதியார் ‘நந்தன் சரித்திரக் கீர்த்தனை’ மெட்டில் பாடியிருந்த பாடல்கள் பாரதியாரை ஓரளவில் கவிஞரென்று அறிமுகப்படுத்திவிட்டது. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’, ‘வந்தே மாதரம் என்போம்’ முதலான தேசியப் பாடல்கள் ஒருபுதிய தேசிய கவிதையின் உதயத்தை அறிவித்தன. எனினும் ‘பாஞ்சாலி சபதத்’தைப் பார்த்தபோது தான், தமிழ் இலக்கிய வானத்தில் உண்மையாகவே ஒரு புதிய மேதை உதயமாகிவிட்டது தெரியவந்தது.

பாரதியார் பாரத ஜாதியை – தமிழ் ஜாதியை ஒன்றாக்க முயன்றார். அந்த முயற்சிக்கு, ஹரிஜனங்கள் மற்றவர்களோடு இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்று அபிப்ராயப்பட்டார். கங்கையிலே வந்துசேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாக மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறி, தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றனர்.

பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும் இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.

‘ஜாதி பேதங்கள் பிரயோஜனமில்லை என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக்காக, சமத்துவ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லட்சணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்! ஊண், உடை, பெண் கொடுக்கல் முதலிய விஷயங்களில் மூடத்தனமான கட்டுப்பாடுகளும் விதிகளும் தடைகளும் இருப்பதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.. சகல மனிதரும் சகோதரர். மனித வர்க்கம் ஓர் உயிர்’ இவ்வாறு முழங்குகிறது பாரதி முரசு.

பாரதியாருக்கு உண்மையான இந்தியாவும், உண்மையான தமிழ்நாடும் ஆரிய பூமியும் அல்ல; திராவிட ராஜ்யமும் அல்ல. நமது வேதம், நமது சாஸ்திரம், பாஷைகள், நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள், இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து.

காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளஸீ தாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி (இவை பாரதியார் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் படித்த நூல்கள்’) இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து. தஞ்சைப் பெரிய கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனங்கள், எல்லோராவின் குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரபசாஸ்திரியின் புல்லாங்குழல்- இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து’ என்று முரசு கொட்டுகிறவருக்கு, ஆரியனாவது திராவிடனாவது?

இந்த மகத்தான சம்பத்தே பாரதியாரின் இந்தியா-பாரதியாரின் தமிழ் வீடு. இவ்வீட்டிலே தம்பிகளான ஹரிஜனங்களிடம் அண்ணன்மார் விசேஷ அன்பு காட்ட வேண்டும் என்பது பாரதி மதம், பாரதியம்.

‘ஒரு புதுக்கட்டுப்பாடு செய்து கொள்வோமே, அந்தக் கட்டுப்பாடு யாதெனில்- ஒருவருக்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை; ஒருவருக்கொருவர் பயப்படுவதில்லை.

மானிடரே! இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவருக்கொருவர் கோபம், அல்லது அவமதிப்பு, அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். (சாதித்திமிர் உள்ள இந்துக்களும் ஹரிஜனங்களும் நடந்து கொண்ட மாதிரி இது; நிறத் திமிருடன் கூடிய வெள்ளையரும் மற்றவரும் நடந்து கொண்ட மாதிரியும் இதுதான்.)

மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்திருக்கிறது. இதை மாற்றி அன்பை மூலாதாரமாக்க வேண்டும்’.

இந்தப் பாரதிவாக்கை, அரசியல் சுதந்திரம் பெற்ற தமிழர் விரைவில் அமைத்துக் கொள்ள வேண்டிய ஒரு புதுவாழ்வு, இயக்கத்திற்கு அஸ்திவாரக் கல் என்று சொல்லலாம்.

இந்த அஸ்திவாரத்திலே உறுதியான கட்டடமாக அமைய வேண்டும் நமது தமிழர் புதுவாழ்வு இயக்கம். பாரதியத்தைத் துணையாகக் கொண்டால், கட்டடத்தைப் புதுமையாகவும், பெருமையாகவும், அழகாகவும், உறுதியாகவும் கட்டி வாழலாம்.

(கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலுக்கு பி.ஸ்ரீ. ஆச்சார்யா எழுதிய முன்னுரையிலிருந்து…)

இன்று பாரதியார் பிறந்த நாள்.

நன்றி: தினமணி (11.12.13)

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

செங்கதிர்த்தேவன் 
சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்… 
அவன் எங்களறிவினைத் 
தூண்டி நடத்துக!

-காயத்ரி மந்திர விளக்கம்.
தமிழில் மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதத்தில்) 
அனைவருக்கும் இனிய சங்கராந்தி, பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மகாகவியின் பிரார்த்தனை

மகாகவி பாரதி
(பிறப்பு: டிச. 11)

வேண்டுவன

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

-மகாகவி பாரதி

காண்க:

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகட்டும்!