பகிரங்கமாக ஒரு பாவம்!

-பெ.சிதம்பரநாதன்

வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன்

நம்மில் பலருக்குத் தேசபக்தி இல்லாமல் இருக்கலாம். குடும்ப பக்திக்குள் குறுகிக் கிடக்கலாம். அவர்களை மெல்ல மெல்லத் தேசபக்திக்குத் தூண்டுவது சாத்தியம்.

ஆனால், தேசத் துரோகம் என்பது பஞ்ச மாபாதகங்களுடன் சேர்க்கப்பட வேண்டிய ஆறாவது பாவமாகும். அதுவும் பகிரங்கமாக இப்பாவம் நடந்துள்ளது அதிர்ச்சியாகும்.

சுதந்திர நாட்டில் தேசத் துரோகம் என்பது சொந்த நாட்டுக்கே துரோகம் செய்வதாகும். அன்னிய ஆட்சியில் அது விடுதலைப் போருக்கு வித்திடுவதாகும்.

தேசத்தை ஆட்சி செய்பவன் அன்னியன் என்றால், சொந்த தேசத்தில் அடிமைத்தனத்தை எதிர்த்து விடுதலைக்காகக் குரல் கொடுப்பார்கள். அதனைக் குற்றமாகக் கருதும் அன்னிய ஆட்சி அவர்களைச் சிறையில் தள்ளும், செக்கிழுக்கச் செய்யும், தூக்குத்தண்டனை தரும்.

மாவட்ட ஆட்சித் தலைவரான ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாலிபன் வாஞ்சிநாதன் வழிபாடு செய்யப்படுகிறான். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் திருப்பெயர்களை நமது சந்ததிகளுக்குச் சூட்டி மகிழ்கிறோம். அவ்வளவு ஏன்? 1922-இல் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்ட காந்திஜி, மகாத்மாவானார்.

2001-இல் நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதி பின்லேடன் கும்பல் இடித்ததால், அங்கிருந்த 5 ஆயிரம் மக்கள் பலியானார்கள். அதிபர் புஷ்ஷைத் தொடர்ந்து அதிபரான ஒபாமா எடுத்த நடவடிக்கையால், அமெரிக்க அதிரடிப் படையினர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை நேரடியாகச் சென்று சுட்டுக் கொன்றனர். பிரேதத்தைக்கூட அட்லாண்டிக் சமுத்திரத்தில் வீசினர்.

அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்க அதிரடி ராணுவம் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் எப்படி அனுமதியில்லாமல் பிரவேசிக்கலாம் என்று கேட்டது. அதற்கு ஒபாமா, பயங்கரவாதி எந்த நாட்டில் பதுங்கியிருந்தாலும் இப்படித்தான் செய்வோம். பலியானது 5 ஆயிரம் அமெரிக்கர்கள் என்றார். இந்த தேசபக்தி உணர்வுதான் விதி விலக்கில்லாமல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

1993-இல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானதற்கு மூளையாகச் செயல்பட்ட தேசத் துரோகி தாவூத் இப்ராஹிமும் டைகர் மேமனும் பாகிஸ்தானுக்குத் தப்பிவிட்டனர்.

டைகர் மேமனின் சகோதரன்தான் யாகூப் மேமன். இவர் மும்பையில் ஆடிட்டர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கைத் துப்புத் துலக்கியபோது அண்ணனுக்கு யாகூப் மேமன் பல தகவல்களைத் திரட்டிக் கொடுத்தது அம்பலமாகி 1994-இல் கைதானார். நீதி விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு 2015-இல் நாகபுரி சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட 30 ஜூலை அவர் பிறந்த தினமாக நேர்ந்தது.

யாகூப்புக்குத் தேசபக்தி இருந்திருக்குமானால், மும்பை உளவுத்துறையிடம் அண்ணனைப் பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியும். அதை ஏன் அவர் செய்யவில்லை? இதுதான் தேசத் துரோகம்.

இத்துரோகியின் தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்த சிலரில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வேமுலாவும் ஒருவர். வேமுலாவும், அவருடைய நண்பர்கள் நால்வரும் மாணவர் மோதல் காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுப் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், ரோஹித் வேமுலா மட்டும் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் தலித்துகளுக்கு எதிரானது மோடி அரசு என விமர்சிக்கப்பட்டது.

அத்தலித் மாணவனின் மரணத்தால் பாரதத் தாய், அறிவுள்ள தனது புதல்வனை இழந்துவிட்டதாக பிரதமர் மோடி நெகிழ்ந்து கூறினார்.

இதேபோல, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையாகுமாரின் நடவடிக்கையும் கண்டனத்துக்கு உரியதாக இருந்தது. அப்பல்கலைக்கழகம் அறிவுஜீவிகளை உற்பத்தி செய்வதில் தேசத்திலேயே உயர் தரமானது என்கிறார் அங்கு படித்த மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி.

அப்பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தேசத்தின் சமூக, பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றியும் அலசி, ஆராய ஜனநாயக மாணவர் சங்கம் என்பதை அமைத்திருக்கிறார்கள்.

அச்சங்கம் காந்திய அணுகுமுறைக்கு எதிரான மார்க்சிய, லெனினிய, மாவோயிச அணுகுமுறைகளைக் கொண்டது. அந்தளவு சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது என்பதற்கு அச்சங்கமே சாட்சி.

2001-இல் நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு அஃப்சல்குரு என்ற காஷ்மீரி திட்டம் தீட்டிக் கொடுத்தது புலன் விசாரணையில் பிழையில்லாமல் நிரூபிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க முயன்ற 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களின் மனைவியர்க்கு மத்திய அரசு விருது வழங்கிச் சிறப்பித்தது.

தண்டனை தராமல் வழக்கு காலதாமதமாவதைக் கண்டு வெகுண்ட, கணவன்களைப் பறிகொடுத்த 9 விதவைகளும் அவ்விருதுகளைத் திருப்பி ஒப்படைத்துவிட்டு, அஃப்சல் குருவுக்குக் கருணையே காட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்கள். அவரோ விசாரணை, மேல்முறையீடு, கருணை மனு என்று காலம் கடத்தி 12 ஆண்டுகளைச் சிறையில் கழித்த பிறகு, 2013-இல் மன்மோகன் சிங் ஆட்சியில் பிப்ரவரி 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

இந்த பிப்ரவரி 9-ஆம் தேதியை மாணவர் பிரிவு ஒன்று கலாசார விழாவாக நடத்துவதற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அனுமதி பெற்றார்கள். அந்த விழாவை 2016 பிப்ரவரி 10-ஆம் தேதியென்றுகூட அவர்கள் மாற்றிக் கேட்கவில்லை. இதற்கு மாணவர்களிடையே எதிர்ப்பு இல்லையென்று சொல்ல முடியாது.

நடந்த அவ்விழாவில், இந்தியாவிலிருந்து காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் ஆகிய எல்லை மாநிலங்கள் பிரிந்து தனி நாடுகளாக வேண்டும் என்றும் அஃப்சல்குருவின் தூக்குத் தண்டனையை நீதிமுறைக் கொலை என்று கண்டனம் செய்தும் அம்மாணவர்கள் கோஷமிட்டார்கள்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் பேச்சுரிமை என்ற பெயரில் இப்படிக் கோஷமிடுவது தேசத் துரோகக் குற்றமல்லவா?

மாணவர்கள் அரசியல், சமூகப் பிரச்னைகளுக்குத் தார்மீக ஆதரவு தருவது தவறல்ல. ஆனால், இப்படிக் கோஷமிட்டதுதான் தவறு. மாணவர்களுக்கு முக்கியமானது படிப்புத்தான். அதுதான் அவர்களைப் படிக்க வைத்த பெற்றோர்களுக்கு உதவும்.

அதே பல்கலைக்கழகத்தில் படிப்பு, தேர்வு, மதிப்பெண் என்று இருக்கின்ற மாணவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களைக் கிணற்றுத் தவளைகள், புத்தகப் புழுக்கள் என இவர்கள் கேலி செய்வார்கள். மாணவர்கள் தங்களின் படிப்பில் அக்கறை செலுத்தாமல், திரைப்படங்களுக்குப் போவது, கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதெல்லாம் கூடாது.

தோழர் லெனினிடம் மாணவர்கள் மூன்று அறிவுரைகளைக் கேட்டபோது அவர் சொன்ன முதல் அறிவுரை, படியுங்கள் என்பது. அடுத்ததாகவும் படியுங்கள் என்றார். மூன்றாவதாகவும் படியுங்கள் என்றார் என்பது நினைவுகூரத் தக்கது.

மாணவர் கன்னையாகுமார் சென்ற பிப்ரவரி 9-ஆம் தேதி ஏற்பாடு செய்த கூட்டம் உண்மையில் கலாசாரக் கூட்டமல்ல. அது தேச விரோதக் கோஷங்களை எழுப்பிய கூட்டம்.

கன்னையாகுமார் தரப்பின் வாதம்கூட, தேச விரோதக் கோஷங்களை எழுப்பியவர்கள் கன்னையாகுமாரும் அவரைச் சார்ந்த மாணவர்களும் அல்ல, வெளியே இருந்து பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறிப் புகுந்த ஆட்கள்தான் என்கிறார்கள். இந்த கோஷங்கள் தவறானவை என்பது அம்மாணவர்களுக்கும் தெரிகிறது. அதனால்தான் இந்த கோஷங்களைத் தாங்கள் கூறவில்லை என்று தப்பிக்கிறார்கள்.

இதில் இழையோடும் அரசியல், மோடியின் ஆட்சிக்கு அல்ல, தேசத்துக்கு ஆபத்தானது. அதனால்தான் எனது கட்சியையோ, ஆட்சியையோ பற்றிய விமர்சனங்களைச் சகித்துக் கொள்வேன், தேசத் துரோகப் பேச்சைச் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

மதச் சிறுபான்மையினரை ஹிந்துத்வா அடக்கி ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டுகிறவர்கள், வங்கதேசத்திலும் பாகிஸ்தானிலும் மதச் சிறுபான்மையினரை ஒடுக்கும் மதம் எது எனப் பேசுவதில்லை. இதைப் பற்றி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தஞ்சமடைந்துள்ள நமது தில்லியிலிருந்து பேசிக் கொண்டே இருந்தாலும் அதை இவர்கள் கவனிப்பதாக இல்லை.

வெளிநாட்டு மூலதனத்துக்கு இந்தியாவை அடகு வைக்கிறார் மோடி என விமர்சனம் செய்பவர்கள், சீனாவின் வளர்ச்சிக்கு உதவிய வெளிநாட்டு மூலதனம் பற்றியும், ஊழல் இல்லாமல் ரஷிய விமானத்தை இந்தியா வாங்கியதைப் பற்றியும் ஏனோ பேசுவதில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவான மோடி ஆட்சியைச் செயல்பட விடக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிற, சென்ற தேர்தலில் தோற்றுப்போன சக்திக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகிவிடக் கூடாது.

ஹைதராபாத் – தில்லி பல்கலைக்கழக மாணவர் பிரச்னையை அரசியலாக்குபவர்களுடைய முயற்சிகளைப் பற்றி மாணவர்கள் முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பா.ஜ.க.வை வலதுசாரி வகுப்புவாத கார்ப்பரேட் கட்சி என விமர்சிக்கும் இடதுசாரிகள், தங்களுடைய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தைக் காட்டலாம். இடதுசாரிகளுக்குத் தேவை நேர்மையான ஓர் எதிர்க்கட்சிதான். பா.ஜ.க.வுக்கும் அதுதான் தேவை.

சந்தர்ப்பவாத அரசியல் கட்சி, தனது பலத்தை மீட்டெடுக்கவே மாணவர்களைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாளித்துவத்தின் கருவில்தான் அதன் எதிரியான தொழிலாளித்துவம் உருவாகிறது என்பது மார்க்சியச் சிந்தனையாகும். பா.ஜ.க. ஆட்சியில்தான் இடதுசாரி அரசியல் பிரகாசமடைய முடியும்.

மாணவர்களைத் தூண்டிவிடும் மலிவான சந்தர்ப்பவாத சக்திக்குத் துணை போகாமல், மக்கள் சக்தியைத் திரட்டிப் போராட இடதுசாரி இயக்கங்களுக்கு இதுவே உரிய தருணமாகும்.

குறிப்பு:

 திரு. பெ.சிதம்பரநாதன், கவிஞர், எழுத்தாளர்;  ‘ஓம்சக்தி’ மாத இதழின் பொறுப்பாசிரியர்.

நன்றி: தினமணி (30.03.2016)