இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்!

-ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்

அன்னி பெசன்ட்

அன்னி பெசன்ட் அம்மையார்

(1847, அக்.1 – 1933 செப். 20 )

அக்டோபர் மாதத்திற்குத் தனி மகிமை உண்டு. நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் பிறந்த மாதம் இது. மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயணன், வல்லபபாய் படேல், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிறந்த மாதம்.

நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர்களில் அன்னி பெசன்ட் அம்மையார் முக்கியமானவர். ஆனால், அவரைப் பற்றி நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர்,  “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தோரின் கரகோஷத்தைப் பெற்றதை நேரில் கண்டார் அன்னி பெசன்ட்.

மனிதப் பிறவியின் நோக்கம், பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவற்றுக்கானத் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உண்டாக, இந்தியாவின் தென்முனையான தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினார்.

இளம்பருவத்தில் அன்னி பெசன்ட்டுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருந்தால் அவர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.

ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, அவருடைய தாயார் இரு குழந்தைகளை இன்னல்களைப் பொருள்படுத்தாமல் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது. ஆனால்,  “மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள்” என்ற ஆழமான வைராக்கியத்தை அது அளித்தது.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இருந்தவருக்கு, தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தின. உண்மையைத் தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

இந்நிலையில், பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம். புகுந்த இடத்தில் நிம்மதியில்லை. அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை குணப்படுத்த மாதக்கணக்கில் போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள்.

குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து, குழந்தைகள் மீது உரிமை பெற நீதிமன்றத்தில் வழக்கு, அன்புத் தாயாரின் மரணம் இவையெல்லாம் மதங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.

1872-ஆம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் அன்னி பெசன்ட் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிசக் கொள்கைகளில் அதிகப் பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து, அப்போதைய உயரிய சிந்தனையாளர்களான பெர்னாட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப் போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

மனிதப் பிறவி, மதம், அரசியல், சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற உண்மைகள் அவரை மிகவும் பாதித்தன. மனிதப் பண்பு உயர பாடுபட வேண்டும், மனித நேயம் நிலைபெற உழைக்க வேண்டும் என்ற முடிவோடு பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடராக விவேகானந்தர் அமைந்தது போல், பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் அமைந்தார். பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் கலாசாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்துகொண்டு, ஆனால், அதைப்பற்றிய ஸ்மரணையின்றி அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.

பெண் கல்வியின் அவலநிலை கண்டு, பெண் கல்விக்காகப் பல முயற்சிகளை எடுத்தார். 1898-ஆம் ஆண்டு வாராணசியில் பெண்களுக்கான கல்விக் கூடத்தை நிறுவினார்.

காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை அடிப்படையாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவானது. இந்து சமயத்தையும், இந்தியப் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித் திட்டம், 1904-ஆம் ஆண்டு அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது. 1921-ஆம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். உண்மையாகவும், தைரியமாகவும் தனது கருத்துகளை எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரது கருத்துச் சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து திருமணம், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து பல கருத்துகளைத் துணிச்சலாகக் கூறினார். அக்கருத்துகள் பிற்போக்கான மதபோதகர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு அன்னிக்கு ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதனால் சோர்ந்துவிடவில்லை அன்னி. மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் – பெண் உறவு, விவாகம் பற்றிய தனது கருத்துகளை சிறு சிறு பிரசுரங்களாக வெளிட்டார். அவை லட்சக்கணக்கில் விற்பனையாயின. பல மொழிகளிலும் வெளிவந்தன.

அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாயச் சூழலைக் கண்டு வருந்தி, இந்நிலையை மாற்ற விழைந்தார். 1912-ஆம் வருடம்  ‘மகன்கள் – மகள்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மகன், மகள் இருவரும் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை வலியுத்தினார்.

இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. ஒருமித்த கருத்து கொண்ட இரு சமூக சீர்திருத்தவாதிகளும் இணைந்தனர். பெண்களின் நிலையை உயர்த்தவும், பிற்போக்குப் பிணைப்புகளிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913-இல் உருவாக்கினார்.

டாக்டர் முத்துலட்சுமியோடு அன்னி இணைந்து பெண்களுக்கு கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமை என பல முயற்சிகளை மேற்கொண்டார். ‘இந்தியாவே விழித்தெழு’ என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913-ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தினார்.

நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, ‘இந்திய இளைஞர்கள் சங்க’த்தை (YMIA) 1914-ஆம் ஆண்டு துவங்கினார். உடற்பயிற்சிக் கூடம் நம் உடலை எவ்வாறு வலுவடையச் செய்யுமோ அதுபோல, சீரிய குடிமக்களை உருவாக்கும் மையமாக இச்சங்கம் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்தார். அந்த “இந்திய இளைஞர்கள் சங்கம்’ இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.

‘சுயாட்சிப் பேரியக்கம்’ என்ற விடுதலைப் போராட்டத்தை (HomeRule Movement) சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலகர். விடுதலை வீரர் தாதாபாய் நெüரோஜி தலைவராகச் செயல்பட்டார். அன்னி பெசன்ட் விதைத்த விடுதலை விருட்சம் வளர்ந்து அதன் விழுதுகள் நாடெங்கும் இறங்கின.

ராஜாஜி, சர் சி.பி. ராமசாமி, திரு.வி. கல்யாண சுந்தரனார், சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்றோர் அகில இந்திய அளவிலும் செயல்பட்டனர். பிரிட்டிஷ் அரசு 1917 ஜூன் மாதம் அன்னையை சிறையிலிட்டது. ஆனால், எதிர்ப்பு அதிகரிக்கவே அவரை விடுவித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1917-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் அம்மையார்தான்.

1907-இல் அன்னி பிரம்ம ஞான சபையின் தலைவராகி மதங்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். உண்மை நெறி, நேர்மையான பாதை, மனித நேயம், சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.

இந்தியாவையும் இந்தியர்களையும் அன்னி வெகுவாக நேசித்தார். மகாத்மா காந்தி “அன்னி பெசன்ட்தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை ஊட்டினார்” என்று பாராட்டியுள்ளார்.

தமிழறிஞர் திரு.வி.க. அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.  “அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்று கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது; வெஸ்லி பள்ளிப் பணியை விட்டுவிடத் தூண்டியது;    ‘தேசபக்தன்’ இதழுக்கு ஆசிரியனாக்கியது; தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது; மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி, சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ், படேல் போன்றோருடன் அன்னி பெசன்ட் அம்மையாரையும் மறவாமல் நினைவுகூர்வோம்.

இன்னொரு அன்னை வசந்தையோ, காந்தியோ, சாஸ்திரியோ, அம்பேத்கரோ, அன்னி பெசன்ட்டோ வரமாட்டார்கள்.

அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய சமூக சேவையாகும்.

 

நன்றி: தினமணி (16.10.2014)

 

கே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி

கே.பி.சுந்தராம்பாள்

கே.பி.சுந்தராபாள்

 (அக்டோபர் 11, 1908 – செப்டம்பர் 19, 1980)

தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ்.

இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான்.

இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப் பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர். “15 வயதுக்குள்ளாகவே சுந்தராம்பாள் ‘அயன் ஸ்திரிபார்ட்’ பதவிக்கு வந்துவிட்டாராம். இது ஆச்சரியம்தான். நாடக மேடையில் இத்தகைய ‘பிரமோஷன்’ யாருக்குமே இருந்ததில்லை” என்கிறார் வ.ரா.

கந்தர்வ கான செங்கோட்டை இசைச் சிங்கம் கிட்டப்பாவை அந்தக் காலத்திலேயே சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். இவர்கள் இருவரும் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் சென்று தமிழ் நாடகத்தை உயிர் பெறச் செய்தார்கள்.

ஈடுஜோடு இல்லாத பெருமை

“இவருடைய பெயர் தமிழ்நாடெங்கும் பரவச் செய்தது, இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக-தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடுஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்கவாத்தியம் இல்லாமலேயே மிகவும் இனிமையாகப் பாடும் திறமையாம். அநேக சங்கீத வித்வான்கள் பக்கவாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்கவாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு மாதிரியாக இருக்கும். இவரது பாட்டில் அப்படி இல்லை. பக்கவாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாக இருக்கும். இது ஒரு அரிய குணம்” என்கிறார் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.

கச்சேரிகளில் கே.பி.எஸ். பாடி மக்களிடம் வரவேற்பு பெற்ற பல பாடல்கள், பின்னர் இவர் நடித்த நந்தனார், மணிமேகலை, ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை, முதலிய படங்களில் பயன்படுத்தப்பட்டன. மேலே கண்ட படங்களைத் தவிர, மகாகவி காளிதாஸ், பூம்புகார், உயிர் மேல் ஆசை, துணைவன், காரைக்கால் அம்மையார், சக்திலீலை, திருமலை தென்குமரி முதலிய விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில்தான் நடித்தார். நாடக நடிப்பும் பாட்டும், தேச விடுதலைக்காக கே.பி.எஸ். பாடிய பாடல்களும்தான் அவரை மக்கள் மத்தியில் கொண்டுசென்றது.

கே.பி.சுந்தராம்பாளுக்குக் கிடைத்த குரல் ஒரு வரப்பிரசாதம். இது போன்ற ஒரு குரல் தமிழக இசை வரலாற்றில் யாருக்கும் கிடையாது. பாடும் வல்லமையை அவர் தனக்குத் தானே வளர்த்துக்கொண்டார். விருத்தங் களை ராகமாலிகைகளில் பாடிப் புகழ் பெற்றவர் திருச்செந்தூர் சண்முகவடிவு. அவரிடமிருந்தே இம்முறையை கே.பி.எஸ். கற்றார்.

நாலரைக் கட்டை ஸ்ருதி

கே.பி.எஸ். நாலரைக் கட்டை ஸ்ருதியில் பாடுவது வழக்கம். உச்சஸ்தாயியில் பாடலின் சிறப்பான வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு அசக்கு அசக்குவது இவர் பாணி. அப்படி அசக்குவதிலேயே பிருகாக்கள் வெடிக்கும். பொதுவாக, பாடகர்கள் மெல்ல மெல்ல முயன்று உச்சஸ்தாயியில் நிலைகொள் வார்கள். இவரோ எடுத்த எடுப்பிலேயே அந்த இடத்துக்குச் சென்றுவிடுவார். இதற்குக் காரணம், நாடக மேடைதான். ஒலிபெருக்கி இல்லாத அந்தக் காலத்தில், நாடகத்துக்கு வந்திருக்கும் கடைசிப் பார்வையாளருக்கும் கேட்க வேண்டும் என்கிற சூழல். அதனால்தான் நாடகப் பாடகர்கள் பைரவி, கேதாரம், காம்போதி முதலிய ராகங்களை எடுத்துக்கொள்வார்கள். அவை உரத்து, நாடகத்தின் இயல்பைப் பார்வையாளனுக்குத் தொற்ற வைக்கும். “கே.பி.எஸ். அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் நாடகத்தில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு மைல் தூரம் கேட்கும்” என்கிறார் நடிகர் சாரங்கபாணி.

பழைய நாடகப் பாடல்களை இன்று கேட்கும்போது, என்ன வார்த்தை என்பதே புரியாது. கே.பி.எஸ். பாடலில் மட்டும்தான் சொல் சுத்தம், பொருள் தெரிந்து பாடும் அழகைக் கேட்க முடிகிறது. பாட்டுக்குக் காலப்பிரமாணம் முக்கியம். அது கே.பி.எஸ்ஸுக்குக் கைவந்த கலையாக இருந்தது.

குடம்குடமாகச் சொல் மகுடங்கள்

“இசையரங்குகளில் மரபாக முதலில் வர்ணம் பாட வேண்டும். ஆனால், வர்ணத்தைப் பாடாமல், அதற்கு நிகராக வர்ணத்தில் உள்ள பண்சுவை மிக்க இசைச் சுர அமைப்புகளையும் ‘ததிங்கிணத்தோம்’ வைக்கும் தாள முத்தாய்ப்பு அமைப்புகளையும் இனிய செந்தமிழ்ச் சொல் மகுடங்களாகவே அமைத்துக் காட்டி மகிழ்ச்சியூட்டுவார். இது போன்றே கற்பனைச் சுரங்கள் பாடுமிடத்திலே சொல்மகுடங்களைக் குடம் குடமாகப் பொழிந்து, துள்ளல் இசையைத் துய்க்கச் செய்வார்” என்று வி.ப.க. சுந்தரம் கே.பி.எஸ்ஸைப் பற்றிச் சொல்வார்.

அகர, இகர, உகர ஒலிகள் மூலமாகப் புதுப் படைப்புக் கோவைகள் போன்ற அமைப்பைக் காட்டிக் களிப்பூட்டுவார். ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்கிற போது ‘ஞா’வை நீட்டிப் பாடுவதையும் ரசம் என்று பாடும்போது நீட்டாமல் குறுக்கிப் பாடுவதையும் கேட்டுப்பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.

800 பாடல்கள்

இதுபோல் கே.பி.எஸ். சுரம் பாடி அழகு சேர்த்த பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல்களையும் சொல்லலாம்: ‘மனக்குறை ஏது முருகா?’, ‘தத்துவம் என்ன சொல்லுவாய்?’, ‘தனித்திருந்து வாழும் மெய்த் தவமணியே’, ‘ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண’. இந்தப் பாடல்களில் பழைய காலப் பாடும் முறையை கே.பி.எஸ். அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். விருத்தத்தின் அழகையும் பாடும் முறையையும் சங்கரதாஸ் சுவாமிகள் பாடல்கள், திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ், சுப்பிரமணிய பதிகம், முதலியவற்றின் பாடல்களில் ரசிக்கலாம். பல பாடல்களை கே.பி.எஸ். தானே இயற்றியும் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட 800 பாடல்கள் கைவரப்பெற்றிருந்தார். இசைத்தட்டுக்களில் இதுவரை 250 பாடல்கள் கிடைத்துள்ளன.

கே.பி.எஸ். இசை நிகழ்ச்சி குறைந்தது 6 மணி நேரம் நடக்கும். தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், முதலிய ஊர்களில் பாடும்போது மட்டும் ராகம், தாளம், பல்லவி, ஆலாபனை, லய விந்நியாசம் எல்லாம் முடிந்த பின்னர்தான் திரைப்படப் பாடல்களுக்கு வருவார். கச்சேரியில் மற்றவர்கள் பாடாத ராகங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அந்த ராகங்களுக்கு அழகைக் கொடுத்துக் கச்சேரியைக் களைகட்டச் செய்வார்.

இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் கே.பி.எஸ்-தான். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, அடுத்த பாடலைக் கேட்காமல் சென்ற ரசிகர் யாருமே கிடையாது. கச்சேரி முடியும் வரை தமிழிசை என்ற மாயக் கயிற்றுக்குள் கட்டிப் போட்டுவிடுவார். எனவே, தமிழின் உச்சஸ்தாயி என்றுதான் கே.பி.எஸ்ஸைச் சொல்ல வேண்டும்.

– ப.சோழநாடன்

கட்டுரையாசிரியர், ‘கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள்’ என்ற வரலாற்று நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: arasunizhal@gmail.com

நன்றி: தி இந்து (11.10.2014)

சக்கரவர்த்தியின் மனைவி

 அலர்மேலு மங்கம்மாள் (எ) திருமதி மங்கா ராஜாஜி
(1887 – 1916)

பெங்களூரில் இருந்து மெட்ராஸ் போகிற வழியில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்கிற ஊர் ஒன்று இருக்கிறது. இப்போதும் ரயிலில் பிரயாணம் செய்யும் போது இந்த ஊரில் சில வினாடிகள் ரயில் நின்று விட்டுச்  செல்லும் போது பார்க்கலாம். இந்த ஊருக்கு அருகே உள்ள லட்சுமிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவள் அவள். பெயர் அலர்மேலு மங்கம்மாள் (1887 – 1916). சுருக்கமாக அலமேலு என்றோ மங்கா என்றோ அழைப்பார்கள். பெயரும் ஊரும் லட்சுமிகரமாக இருந்தாலும் அவள் பிறந்த குடும்பம் என்னவோ ஏழைக் குடும்பம்.

ங்காவின் தந்தையார் திருமலை சம்பங்கி அய்யங்கார் ஊர் ஊராகச் சென்று ஹரி கதைகள் சொல்லுபவர். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கா தான் ராஜாஜி என்று நாடே புகழும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் மனைவி….

ராஜாஜியின் சகதர்மிணியும் அவரது நிழலுமான திருமதி மங்காவின் வாழ்க்கை குறித்த அறியப்படாத தகவல்களைக் கூறுகிறது தமிழ்  ஹிந்துவில் வெளியான இக்கட்டுரை.  

இதையும் காண்க:

ராஜாஜி 

.