அறச் சீற்றமா, அரைச் சீற்றமா?

-மாலன்

Sahitya academy award

 

இலக்கிய விருதுகள் அளிப்பதற்குப் பின்னால் எந்த அளவிற்கு அரசியல் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அந்த விருதுகளைத் திரும்ப அளிப்பதற்கும் மறுதலிப்பதற்கும் பின்னாலும் அரசியல் உண்டு.

ரவீந்திரநாத் தாகூருக்கு 1913-ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அதையடுத்து 1915-ஆம் ஆண்டு அவருக்கு சர் பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டது. 1919-ஆம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையைக் கண்டிக்கும் விதமாக தாகூர் தனது சர் பட்டத்தைத் துறந்துவிட்டார்.

நோபல் பரிசையே வேண்டாம் என்று சொன்ன ஓர் எழுத்தாளர் உண்டு. அவர் ழன் பால் சார்தர்.

ஹாலிவுட் திரைப்படங்களில் செவ்விந்தியர்கள் கேவலமாகச் சித்திரிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி ஆஸ்கர் விருதை நிராகரித்த மார்லன் பிராண்டோ, ஆடையில்லாத பெண்ணின் உருவத்தைப் பரிசாக அளிப்பதை ஏற்க முடியாது என்று ஃபிலிம்பேர் பரிசை ஏற்க மறுத்த லதா மங்கேஷ்கர், காலம் தாழ்ந்து அளிக்கப்படும் கௌரவம் என்று பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த பாடகி எஸ். ஜானகி என்று வரலாறு நெடுக இங்கொன்றும் அங்கொன்றுமாக மறுதலிக்கப்பட்ட பரிசுகள் இறைந்து கிடக்கின்றன. அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஏனெனில், எழுத்தாளன் என்பவன் வானத்திலிருந்து பால் வீதி வழியாக வந்திறங்கும் தேவன் அல்ல. அவன் சமூகத்திலிருந்து உருவாகிறவன். அவனது வளர்ப்பும், வாசிப்பும், அனுபவங்களும், அவதானிப்புகளும் அவனது நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அந்த நம்பிக்கைகள் சார்ந்து அவனது அரசியல் உருவாகிறது.

அந்த அரசியல் எழுத்தில் நிழலிடுவதைப் போல, பரிசுகளை நிராகரிப்பதிலும் வெளிப்படுகிறது.

தனக்கு அளிக்கப்பட்ட விருதை அறச் சீற்றத்தோடு திருப்பி அளிப்பதை அரசியல் எனச் சொல்வதா எனச் சில புருவங்கள் நெரியலாம். முகங்கள் சுளிக்கப்படலாம். ஆனால், அது அறச் சீற்றமா அல்லது அரைச் சீற்றமா என்ற கேள்வி அவர்களது நடத்தையை ஆராயும்போது எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

1974-ஆம் ஆண்டு எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கிற்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டது. பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த “ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நடவடிக்கையை அடுத்து 1984-ஆம் ஆண்டு அவர் அந்த விருதை திருப்பி அனுப்பினார்.

2007-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்ட போது அதை அவர் ஏற்றுக் கொண்டார். 1984-இல் தவறு செய்த அதே இந்திய அரசுதான் – இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், அதே காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் 2007-இல் பதவியில் இருந்தது.

இப்போது விருதைத் திருப்பி அனுப்பியுள்ள நயன்தாரா ஷகலுக்கு 1986-ஆம் ஆண்டு “ரிச் லைக் அஸ்’ என்ற ஆங்கில நாவலுக்காக சாகித்ய அகாதெமி பரிசளிக்கப்பட்டது. அதன் பின் நடந்த பாபர் மசூதி இடிப்பை எதிர்த்தோ, கோத்ரா கலவரங்களைக் கண்டித்தோ, குஜராத் கலவரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ, அவர் ஏன் தனது விருதை திருப்பி அளிக்கவில்லை?

அப்போதெல்லாம் இந்தியாவின் பன்முகத் தன்மை காணாமல் போய்விட்டது அவருக்குத் தெரியவில்லையா?

இன்றைய அரசின் செயல்பாடுகளை அல்லது மௌனத்தை ஏற்க முடியவில்லை என்பதற்காக விருதுகளைத் திருப்பிக் கொடுக்கிறோம் என இவர்கள் காரணம் சொல்கிறார்கள்.

இந்தக் காரணத்தின் பின் உள்ள தர்க்கத்தின்படி பார்த்தால், கடந்த அரசுகளின் செயல்பாடுகளோடு உடன்பட்டதால்தான் அவர்கள் அப்போது இந்த விருதை ஏற்றுக் கொண்டார்களா?

கலபுர்கி படுகொலையாகட்டும், தாத்ரியில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதாகட்டும் நிச்சயமாக கண்டனத்திற்குரியவை. அதில் எனக்கு எள்முனையளவும் சந்தேகமில்லை. நான் அந்தச் செயல்களைக் கண்டிக்கிறேன். ஆனால், கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு சாகித்ய அகாதெமி மீது பாய்வது அபத்தமானது.

ஏன்?

முதலில் பத்ம விருதுகளைப் போலவோ, அர்ஜூனா விருதுகளைப் போலவோ, சாகித்ய அகாதெமி விருதுகளை அரசு தீர்மானிப்பது இல்லை. அகாதெமி பரிசு என்பது எழுத்தாளர்கள், எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கௌரவம்.

சாகித்ய அகாதெமி பரிசுக்கு ஒரு நூல் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது? பல்வேறு வகையான பார்வைகள், இலக்கியக் கொள்கைகள் கொண்ட எழுத்தாளர்கள், பேராசிரியர்களிடமிருந்து பரிசுக்குப் பரிசீலிக்கத் தகுந்தவை என அவர்கள் கருதும் நூல்களின் பட்டியல் கோரப்படுகிறது.

அடிப்படைப் பட்டியல் (ground list) என்று இதற்குப் பெயர். பின் அந்தப் பட்டியல்கள் சீராய்விற்காக Reviewers எனப்படும் வேறு சில எழுத்தாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் பரிந்துரைக்கும் நூல்கள் முற்றிலும் எழுத்தாளர்களைக் கொண்ட நடுவர் குழுவிற்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் கூடி விவாதித்து பரிசுக்குரிய நூலை இறுதி செய்கிறார்கள்.

இதில் எந்த நிலையிலும் அரசின் தலையீடு கிடையாது. நடுவர் குழுவை ஒவ்வொரு மொழிக்குமான ஆலோசனைக் குழுவின் தலைவரின் ஒப்புதலோடு அகாதெமியின் தலைவரும், செயலரும் முடிவு செய்கின்றனர்.

அந்த நடுவர் குழு பெரும்பாலும் முன்பு சாகித்ய அகாதெமியின் பரிசு பெற்றவர்களையும் எதிரெதிர் இலக்கியக் கொள்கைகளைக் கொண்டவர்களாகவும் அமைந்து விடுவதுண்டு. இடதுசாரி எழுத்தாளரான பொன்னீலனும், பெண்ணிய எழுத்தாளரான அம்பையும் ஒரு குழுவில் நடுவர்களாக இடம் பெற்றதுண்டு.

அரசின் தலையீடோ அரசியல்வாதிகளின் தலையீடோ பொதுவாக இருப்பதில்லை என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். இதுவரை எந்த ஒரு மாநிலத்தின் முதல்வரும் – அவர் எழுத்தாளராக இருந்த போதும் – சாகித்ய அகாதெமி பரிசு பெற்றதில்லை.

கருணாநிதி, வீரப்ப மொய்லி போன்றோர் அவர்களது மொழியில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்கள். ஏன் நரசிம்ம ராவே கூட இன்சைடர் என்று ஆங்கிலத்தில் புதினம் எழுதியிருக்கிறார். வாஜ்பாய் நாடறிந்த கவிஞர். இவர்கள் யாரும் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றதில்லை.

இரண்டாவது, சாகித்ய அகாதெமி மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெறுகிறது என்பது உண்மைதான். ஆனால், அது முற்றிலும் அரசால் நிர்வகிக்கப்படுவதில்லை. அதன் உச்ச அதிகாரம் செயற்குழுவிடம் இருக்கிறது. அதன் உறுப்பினராக உள்ளவர்கள் அனைவரும், 24 இந்திய மொழிகள் ஒவ்வொன்றின் ஆலோசனைக் குழுவின் தலைவர்கள்.

இந்த 24 பேரும் அந்தந்த மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் அல்லது ஆய்வு செய்யும் பேராசிரியர்கள். அகாதெமியின் பொதுக்குழு ஒரு தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறது. அவர்களும் எழுத்தாளர்களே.

இப்போது தலைவராக இருக்கும் முனைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி இந்திக் கவிஞர். துணைத் தலைவராக உள்ள சந்திரசேகர கம்பார் கன்னட எழுத்தாளர். இதில் எந்த நிலையிலும் அரசின் குறுக்கீடு இல்லை.

(இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால், அரசின் அலுவல் மொழியாக இந்தி இருந்தும், இந்தி பரவலாக பல மாநிலங்களில் பேசப்பட்டும், சாகித்ய அகாதெமியின் 61 ஆண்டு வரலாற்றில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுதான் முதல் முறை).

சரி, கலபுர்கியின் படுகொலையை சாகித்ய அகாதெமியின் சார்பில் அதன் தலைவர் கண்டித்திருக்க வேண்டாமா?

வேண்டும். ஆனால், அகாதெமியின் தலைவர் அகாதெமியின் சார்பில் தன்னிச்சையாக அறிக்கைகள் விட முடியாது. செயற்குழுவின் ஒப்புதலோடுதான் அறிக்கை அளிக்க இயலும். அகாதெமியின் விதிமுறைகள் அப்படி. அந்தப் படுகொலைச் சம்பவத்திற்குப் பின் இன்னும் செயற்குழு கூடவில்லை. ஆனால், கலபுர்கியின் படுகொலையை அடுத்து பெங்களூருவில் அகாதெமியின் சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

கலபுர்கியின் படுகொலைக்கு எழுத்தாளர்கள் ஆற்ற வேண்டிய எதிர்வினை, அவரது எழுத்துகளை எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து பரப்ப வேண்டும் என அகாதெமியை வற்புறுத்துவதுதான்.

அதைவிடுத்து, விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதில் கிடைக்கும் விளம்பரத்தைத் தவிர வேறு பலன் ஏதுமில்லை. ஏனெனில், அதுபோன்ற செயல்களால் சமூக மாற்றம் விளையாது.

குறிப்பு:

திரு. மாலன் ‘புதிய தலைமுறை’ வார இதழின் ஆசிரியர்.

நன்றி: தினமணி– 15.10.2015