காந்தி சகாப்த உதயம்!

-லா.சு.ரங்கராஜன்

காந்தி - 1915-ல்

காந்தி – 1915-ல்

இருபத்து மூன்று வயதில் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் சட்ட உதவியாளராகப் பணியேற்று 1893 மே 23 அன்று தென்னாப்பிரிக்கா சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திய  ‘புனிதர்’ பாரிஸ்டர் காந்தி 1914 வரை கோட்டும் சூட்டும் டையுமாக நவநாகரிக உடையில் வளைய வந்தார்.

தமது மனைவி கஸ்தூரிபாவுடன் தமது 46-ஆம் வயதில் 1915 ஜனவரி 9 அன்று (சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்) பம்பாய் துறைமுகத்தில் இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.

அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி – கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார்.

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய், பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பம்பாயிலிருந்து, காந்திஜி புறப்பட்டு ஜனவரி 15 அன்று ராஜ்கோட்டுக்கும் போர்பந்தருக்கும் சென்று அங்குள்ள தமது உறவினர்களை சந்தித்தார். ராஜ்கோட்டில் தாம் இளமையில் பயின்ற ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளிக்கு ஜனவரி 22 அன்று தமது மனைவியுடன் விஜயம் செய்தார். அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.’

காந்திஜியும் கஸ்தூரிபாவும் 1915 பிப்ரவரி 17 அன்று சாந்திநிகேதன் சென்று அங்கு ஒரு சில நாள்கள் தங்கி, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கக் காத்திருந்தனர். அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் தாகூர் எதிர்பாராத விதமாக கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

அச்சமயம் காந்திஜியின் அறிவுரையாளர் கோபாலகிருஷ்ண கோகலே புணேவில் திடுமென இறந்துவிட்டார் என்று பிப்ரவரி 19-ஆம் தேதி தந்திச் செய்தி வந்தது. தமது அரசியல் ஆசான் கோகலேயின் ஈமச்சடங்கில் கலந்து கொள்வதற்காக காந்திஜி அவசர அவசரமாக புணே புறப்பட்டுச் சென்றார்.

கோகலேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புணேவில் கிஸ்லோஸ்கர் அரங்கில் மார்ச் 3 அன்று (1915) பம்பாய் கவர்னர் வில்லிங்டன் பிரபு தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு இரங்கல் தீர்மானத்தை காந்திஜி முன் மொழிந்தார்.

புணேயிலிருந்து காந்திஜி மார்ச் 5 (1915) அன்று சாந்திநிகேதன் சென்றார். அங்கு அவரை அன்புடன் வரவேற்க தாகூர் காத்திருந்தார். அதுவே அவ்விருவரின் முதல் சந்திப்பு. பின்னர், அதுவே ஒருவருக்கொருவர் மரியாதை கலந்த பாசத்துடன் வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்புறவாக மலர்ந்தது.

1915 ஏப்ரல் முதல் வாரத்தில் காந்திஜி தன் மனைவி கஸ்தூர்பாவுடன் மதராஸ் வந்தார். அவரை வரவேற்க சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழுமியிருந்த மக்களுக்கு முதலில் ஏமாற்றம். ரயில் வந்து நின்றதும் அவர்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் அவரைத் தேடினர். எங்கும் காணோம். அவர்கள் வரவில்லை என்றெண்ணி சோர்வுற்றனர்.

அச்சமயம் அங்கு வந்த ரயில்வே கார்டு, “மிஸ்டர் மற்றும் மிஸஸ் காந்தி இந்த ரயிலில்தானே வந்தார்கள். கடைசி கோச்சுகளில் தேடிப் பாருங்கள்” என்று கூறவே, ஜனங்கள் கடைசிப் பெட்டிகளை நோக்கி ஓடோடிச் சென்றனர். அங்கு ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் மிஸ்டர் காந்தியும் மிஸஸ் காந்தியும் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திகைத்தனர்.

‘மிஸ்டர் காந்தி நீடூழி வாழ்க!’ ‘மிஸஸ் காந்தி நீடூழி வாழ்க!’, ‘வந்தே மாதரம்’ என்ற கோஷங்கள் ஒலித்தன. அவர்களது வரவேற்பை ஏற்கும் வகையில் மிஸ்டர் காந்தி தலை வணங்கினார்.

காந்திஜி அதுகாறும் பிரிட்டிஷ் அரசு மீது நல்லெண்ணம் கொண்டவராகவே இருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரஜைகளோடு இந்தியர்கள் சம உரிமை பாராட்ட முடியும் என்பதே அன்னாரது எண்ணம்.

ஆகவேதான் மதராஸ் வழக்குரைஞர் குழாம், சட்டத் தொழில் சார்ந்தோரின் வருடாந்திர சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள அவரை அழைத்தபோது, அதை அவர் உடனடியாக ஏற்றார். மதராஸ் பீபிள்ஸ் பார்க்கை ஒட்டிய விசாலமான திடலில் திறந்த வெளி விருந்து ஏப்ரல் 24 (1915) அன்று அட்வொகேட் ஜெனரல் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் காந்திஜி பேசும்போது, ”எனது ராஜ விசுவாசம் சுயநலம் சார்ந்தது! சாத்விக எதிர்ப்பாளராகிய நான் ஒன்று கண்டு கொண்டேன். அதாவது, சத்தியாக்கிரக இயக்கங்களுக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அனுமதிக்கும் தாராளமான சுதந்திரம் வெறேந்த நாட்டிலும் கிடையாது என்று தெரிந்துகொண்டேன். பிரிட்டிஷ் அரசாட்சியின் ஒருசில லட்சியங்களின் மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்றார்.

தேசியத் தலைவராக உருவாகக் கூடிய காந்தி இவ்வாறு அப்பட்டமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகப் பேசியது குறித்து மதராஸ் மாகாண செய்தித் தாள்களில் கண்டனக் கடிதங்கள் வெளியாயின.

1915 ஜூன் 16 அன்று பிரிட்டிஷ் பேரரசு காந்திஜிக்கு ‘கெய்ஸர்-ஐ-ஹிந்த்’ தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது.

இந்திய அரசியல் அரங்கில் 1919-ஆம் ஆண்டு அடுத்தடுத்துச் சூறாவளியாய் எழுந்த நாடு தழுவிய தேசிய மல்லாட்டங்கள் அதுகாறும் பிரிட்டிஷ் அபிமானியாக இருந்துவந்த காந்திஜியை பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர எதிர்ப்பாளராக உருமாற்றின. “இந்த சாத்தான் அரசை திருத்துவோம் அல்லது தீர்த்துக் கட்டுவோம்’ (WE ARE ALL MEND OR END THIS SATANIC GOVERNMENT) என்ற தீர்மானத்துடன் காந்திஜி தீவிர அரசியலில் அடிவைத்தார்.

1919 மார்ச் மாதம் அமலுக்கு வந்த   ரவுலட் சட்டமும், அதையடுத்து நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையும் அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் ராணுவ சட்டத்தின் கீழ் தலைவிரித்தாடிய அரசின் அதிக்கிரமங்களும் இந்த எதிர்பாராத திடீர்த் திருப்பத்திற்கு காரணங்களாக அமைந்தன; இந்தியரின் தன்மானத்திற்கு பெரும் சவாலாக ஆயின.

அதுகாறும் ஓரளவு அரசியல் உரிமைகளைப் படிப்படியாக வேண்டிப் பெறுவதன் பொருட்டு சட்ட திட்டங்களுக்கு உள்பட்ட மிதவாத எழுச்சியாக இருந்துவந்த நிலைமை மறைந்து, அன்னிய ஆட்சிக்கு எதிராக உருபெற்ற பெரும் போராட்டமாக மாற்றம் கண்டது.

இந்த கால கட்டத்திலேதான் இந்திய முஸ்லிம்களும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அதற்கான எழுச்சியே ‘கிலாஃபத் இயக்கம்’ எனப்படுவது. அவ்வியக்கத்திற்கு இந்துக்களின் ஆதரவைப் பெற முஸ்லிம்கள் விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, 1919 நவம்பர் 3 அன்று டில்லியில் கூடிய அகில இந்திய கிலாஃபத் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை வகிக்க காந்திஜி இசைந்தார்.

இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்க அதுவே கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்று நம்பிய காந்திஜி, அந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி இட்டுச் செல்லவும் ஒப்புக்கொண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடுத்து அமலுக்கு வந்த பஞ்சாப் ராணுவச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற அட்டூழியப் பிரச்னை, கிலாஃபத் அநீதி ஆகிய இரண்டையும் சாமர்த்தியமாக இணைத்து, அன்னிய ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட்ட ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

அரசு அமைப்புகள், சட்டப்பேரவை, நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றை ஒருங்கே பகிஷ்கரிப்பதே அந்த ஒத்துழையாமை இயக்கத்தின் செயல் திட்டம்.

இவ்வாறு அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைத்தால் ஒரே ஆண்டில் சுயராஜ்யம் கிட்டும் என்று காந்திஜி ஆங்காங்கே கூட்டம் போட்டு மக்களை உற்சாகப்படுத்தினார்.  அவரும், கிலாஃபத் தலைவர் முகமதலியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.

நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்ட் முதல் தேதி துவக்கம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிகரற்ற தீவிர தேசியத் தலைவராகத் திகழ்ந்து வந்த பாலகங்காதர திலகருக்கு அந்த இயக்கத்தில் நாட்டம் இல்லை. இந்திய சுதந்திர லட்சியத்திற்கும், எங்கோ துருக்கி சுல்தானின் அதிகாரப் பறிப்புக்கும் என்ன சம்பந்தம் என ஒதுங்கிவிட்டார். தீவிர நோய்வாய்ப்பட்டுக் கிடந்த திலகர் 1920 ஜூலை 31 நள்ளிரவில் காலமானார்.

இந்த திடீர்த் திருப்பத்தில் காலியாகக் கிடந்த தேசிய தலைமைப் பீடத்தில் காந்திஜி அமர வாய்ப்புப் பெற்றார். 1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு மாநாட்டில் காந்திஜியின் அகிம்சாபூர்வமான ஒத்துழையாமை இயக்கம் பலத்த சர்ச்சைகளுக்கிடையே அரைமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

1920 ஆகஸ்ட் 31 அன்று காந்திஜி காதி பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அதனை இவ்வாறு எழுத்தில் பதித்தார்: “இன்றைய தினத்திலிருந்து நான் கையால் நூற்ற கதர் ஆடையையும், கதர்க் குல்லாவையும் மட்டுமே அணிவேன்”.

1921 செப்டம்பர் 22 அன்று காலையில் மதுரையில் நெசவாளர் கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது காந்திஜி, வெற்று மார்புடனும் இடுப்பில் முழங்காலுக்குமேல் வரிந்து கட்டிய அரை வேட்டியுடனும் மேடையில் தோன்றினார்.

“கந்தல் அரை வேட்டி அல்லது கோவணத்துடன் உழலும் கோடிக் கணக்கான இந்திய ஏழை மக்களுடன் ஒற்றுமை காண்பதற்காகவே நான் அரை வேட்டிக்கு மாறினேன்” என்று பல ஆண்டுகளுக்குப்பின் அந்நிகழ்வை நினைவுகூர்ந்து  ‘யங் இந்தியா’வில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆம்! மதுரையில் 1921 செப்டம்பர் 22 அன்று பூண்ட ஆண்டிக் கோலத்தில் காந்திஜி தமது தோற்றத்திலும் பூரண மகாத்மாவாகத் தலையெடுத்தார்.

மக்களின் உள்ளங்கவர் அறச்சீல அரசியல் தலைவராகத் திகழத் தொடங்கிய மகாத்மா காந்தி, படித்தவர், படிக்காதவர், எளியோர், பெரியோர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரு சேர அரவணைத்து, இந்திய மக்களை சுதந்திரப் பாதையில் இட்டுச் செல்லலானார்.

காந்தி சகாப்தம் உதயமானது.

நன்றி: தினமணி (09.01.2015)

பெயரில் என்ன இருக்கிறது?

“காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ‘ஹரிஜனங்கள்’ என்று பெயர் சூட்டுவானேன்?” என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார்.

 வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ;வர்ண வியவஸ்தா’ என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 “முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஓர் மிகச் சிறந்த அமைப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது என்பது முற்றிலும் உண்மையே. அதேசமயம் அக்காலத்தில் எந்தப் பிரிவினர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு எழவில்லை. நான்கு வர்ணத்தினரும் சரிநிகர் சமானமானவர்களாகவே கருதப்பட்டனர். ஏனெனில், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அந் நான்கு பிரிவினரின் சரிநிகரான பணியும் சார்பு நிலையும் அத்தியாவசியமாக இருந்தன. ஆனால், போகப்போகப் பின் நாட்களில் உயர்வு – தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. இந்த மாற்றம் வர்ணாசிரம தர்மத்தை சின்னாபின்னமாக்கத் தொடங்கிற்று.

 அந்தணர்கள்  பிரும்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அடங்கிய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிவழியைக் கடைப்பிடித்த காலம் என்றோ மங்கி மறைந்துவிட்டது. இன்றைய குடும்பஸ்தர்களுக்கு பொருள் ஈட்டுவதும், சுகபோகங்களில் ஈடுபடுவதுமே அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கைக் குறிக்கோளாகிவிட்டது”.

 காந்திஜி தமது முன்னுரையை இவ்வாறு முடிக்கின்றார்:

 “நவீன சகாப்தத்தில் ஒருவர்க்கொருவர் போட்டாபோட்டி போடுவதும், உலகாயத நாட்டங்களுமே வாழ்க்கையின் அம்சமாகிவிட்டன. எவரும் எந்தவிதமான வேலை வாய்ப்பையும் தேடிக் கொள்ளலாம் என்கிற தற்கால சூழ்நிலையில் வர்ணாசிரம முறை நடவாத காரியம்; சோம்பேறிகளின் பகற் கனவு. அந்நெறி முறையைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் எண்ணம் குழந்தைத்தனமான மடமையே ஆகும்”.

 “ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்” என்ற தலைப்பில் காந்தி மகான் தமது  ‘அரிஜன்’ (16-11-1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில், “இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய  வர்ணாசிரம விதிமுறைகளுக்கு நேர்எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து, ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது” என்று ஐயந்திரிபற வலியுறுத்தியுள்ளார்.

 மற்றொரு கட்டுரையில் காந்திஜி, “பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய ஜாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர்ஜாதி – கீழ்ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக வாழ்வை இழிவுபடுத்திவிட்டது”, என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார். (‘அரிஜன்’, 2-5-1936).

 ‘பிறப்பினால் தீண்டத்தகாதோர் என்று சாத்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை. மேலும், பண்டைய வர்ணாசிரம தர்ம நியதிகளில் கலப்புத் திருமணத்திற்கும், சமபந்தி போஜனத்துக்கும் தடைகள் இருந்ததில்லை; ஸ்மிருதிகளிலும் வேறு நூல்களிலும் அவை குறித்துக் காணப்படும் தடைகள் மத்திய கால இடைச் செருகல்கள்’ என்பதும் காந்திஜியின் கருத்து. (‘அரிஜன்’, 16-11-1935).

 சேவாகிராம ஆசிரமப் பொறுப்பாளர் நரஹரி பரீக் என்பாருக்கு 1945 மே 6 அன்று எழுதிய நீண்ட கடிதத்தில் காந்திஜி, “தற்போது நிலவும் ஜாதி, உட்-ஜாதிப் பிரிவுகள் அகன்றபின், நாம் சற்றும் தயங்காமல் அதி – சூத்திரர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே எனது அண்மைக்கால இறுதியான எண்ணம்.  இது ஒரு முக்கியமான கடிதம் – பிரதியெடுத்து நமது அலுவலகப் பதிவேட்டில் குறித்து வைக்கவும்” என்று முத்தாய்ப்பு வைக்கிறார் மகாத்மா காந்தி.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜனங்கள்’ என்று 1931-இல் காந்திஜி பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்திஜி இவ்வாறு விளக்கம் அளித்தார்:

 “தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எங்கள் குலத்தவர்களை  ‘அந்தியஜாஸ்’ என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்த பங்கிகள்’, ‘பறையர்கள்’ பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது! ஆகவே ‘அந்தியஜாஸ்’ (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

 சுவாமி சிரத்தானந்தர் தான் முதன்முதலில் ‘தலித்’ என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால்,  தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும்வரை, எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள்’ என்று ‘நவஜீவன்’ (7-6-1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர்.  ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினன், ‘ஹரிஜன்’ என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில், “பல கிராமங்களில் ஏற்கெனவே ‘ஹரிஜனா’ என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும், மிகச் சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் – கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்’ என்று விளக்கமாக எழுதியிருந்தார்.

 ஆகவே, ‘ஹரிஜன்’ என்ற சொல் புதிதல்ல. குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெனவே புனையப்பட்டது. தவிர, ‘சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே’ என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது” (‘அரிஜன்’ 7-6-1931).

 1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், “ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா’, என்பதே எனது பிரார்த்தனை.

 நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது” என்று அறிவுறுத்தினார். (“தி ஹிந்து’ 4-2-1946).

 “பெயரில் என்ன இருக்கிறது?” என்ற தலைப்பில் தமது 14-4-1946 தேதியிட்ட ‘அரிஜன்’ வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்:

 “ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஓர் தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும், தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்றுவரை மிகமிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

 ஒவ்வொரு இந்துவும் உயர்வு – தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக்கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழந்தைகளாகி விடுவோம். அதுவே ‘ஹரிஜன்’ என்பதன் மெய்ப்பொருள்.

– லா.சு.ரங்கராஜன்

தினமணி (17.12.2012)

21-ம் நூற்றாண்டில் காந்தி

சிந்தனைக் களம்

 வையக வரலாற்றில் தடம் பதித்த மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 21-ம் நூற்றாண்டில் எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரக்கூடும் என்பதை, இந்த காந்தி ஜெயந்தி வாரத்தில் வெறும் சடங்குக் கடனாகவேனும் நினைவுகூர்வது ஆத்மார்த்த எழுச்சிக்கு வழிகோலும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார் காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார் போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின் சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை, அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு,  ‘மாட்டு வண்டிப் பொருளாதாரம்’ என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு – இவையே காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப் பாடங்களாகும்.

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை அரசியலில் ஈடுபடச் செய்தது. “சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத் தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது” என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

“சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும் அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது” என்று 1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது. மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப் பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம் எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும் உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. “கோபதாபங்களையும் காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும் வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்” என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.

மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின் அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும் சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம் ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும் ஆக்கிவிட்டன என்று சாடினார்.

“மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப் பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். “மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது, இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை, அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும் இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட வர்க்கத்துக்கு, “சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்” எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள் தீட்டுகையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல் மிக நன்று:

“நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய – ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்” (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: “”கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி” நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். ‘அரசியலில் ஆன்மிகம் இழைய வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது பற்று பெருக வேண்டும்’ என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக் குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: “”காந்திய சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. “கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின் வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்” என்பதை தெள்ளத் தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்” (-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ் நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).

“மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும்” என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், “மகாத்மா காந்தி – ஆன் இண்டர்பிரிடேஷன்” எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும் போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும் மனதிற் கொள்வோமாக: ”உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள் பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில் பின்பற்றுவதுதான் ஒரே தீர்வு.” (ஆதாரம்: ‘ஐன்ஸ்டைன் ஆன் பீஸ்’ – ஹெய்ன்ஸ் நார்டன் தொகுத்தளித்த நூல்).

-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (04.10.2012)
.