காந்தி சகாப்த உதயம்!

-லா.சு.ரங்கராஜன்

காந்தி - 1915-ல்

காந்தி – 1915-ல்

இருபத்து மூன்று வயதில் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் சட்ட உதவியாளராகப் பணியேற்று 1893 மே 23 அன்று தென்னாப்பிரிக்கா சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திய  ‘புனிதர்’ பாரிஸ்டர் காந்தி 1914 வரை கோட்டும் சூட்டும் டையுமாக நவநாகரிக உடையில் வளைய வந்தார்.

தமது மனைவி கஸ்தூரிபாவுடன் தமது 46-ஆம் வயதில் 1915 ஜனவரி 9 அன்று (சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்) பம்பாய் துறைமுகத்தில் இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.

அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி – கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார்.

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய், பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பம்பாயிலிருந்து, காந்திஜி புறப்பட்டு ஜனவரி 15 அன்று ராஜ்கோட்டுக்கும் போர்பந்தருக்கும் சென்று அங்குள்ள தமது உறவினர்களை சந்தித்தார். ராஜ்கோட்டில் தாம் இளமையில் பயின்ற ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளிக்கு ஜனவரி 22 அன்று தமது மனைவியுடன் விஜயம் செய்தார். அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.’

காந்திஜியும் கஸ்தூரிபாவும் 1915 பிப்ரவரி 17 அன்று சாந்திநிகேதன் சென்று அங்கு ஒரு சில நாள்கள் தங்கி, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கக் காத்திருந்தனர். அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் தாகூர் எதிர்பாராத விதமாக கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

அச்சமயம் காந்திஜியின் அறிவுரையாளர் கோபாலகிருஷ்ண கோகலே புணேவில் திடுமென இறந்துவிட்டார் என்று பிப்ரவரி 19-ஆம் தேதி தந்திச் செய்தி வந்தது. தமது அரசியல் ஆசான் கோகலேயின் ஈமச்சடங்கில் கலந்து கொள்வதற்காக காந்திஜி அவசர அவசரமாக புணே புறப்பட்டுச் சென்றார்.

கோகலேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புணேவில் கிஸ்லோஸ்கர் அரங்கில் மார்ச் 3 அன்று (1915) பம்பாய் கவர்னர் வில்லிங்டன் பிரபு தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு இரங்கல் தீர்மானத்தை காந்திஜி முன் மொழிந்தார்.

புணேயிலிருந்து காந்திஜி மார்ச் 5 (1915) அன்று சாந்திநிகேதன் சென்றார். அங்கு அவரை அன்புடன் வரவேற்க தாகூர் காத்திருந்தார். அதுவே அவ்விருவரின் முதல் சந்திப்பு. பின்னர், அதுவே ஒருவருக்கொருவர் மரியாதை கலந்த பாசத்துடன் வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்புறவாக மலர்ந்தது.

1915 ஏப்ரல் முதல் வாரத்தில் காந்திஜி தன் மனைவி கஸ்தூர்பாவுடன் மதராஸ் வந்தார். அவரை வரவேற்க சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழுமியிருந்த மக்களுக்கு முதலில் ஏமாற்றம். ரயில் வந்து நின்றதும் அவர்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் அவரைத் தேடினர். எங்கும் காணோம். அவர்கள் வரவில்லை என்றெண்ணி சோர்வுற்றனர்.

அச்சமயம் அங்கு வந்த ரயில்வே கார்டு, “மிஸ்டர் மற்றும் மிஸஸ் காந்தி இந்த ரயிலில்தானே வந்தார்கள். கடைசி கோச்சுகளில் தேடிப் பாருங்கள்” என்று கூறவே, ஜனங்கள் கடைசிப் பெட்டிகளை நோக்கி ஓடோடிச் சென்றனர். அங்கு ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் மிஸ்டர் காந்தியும் மிஸஸ் காந்தியும் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திகைத்தனர்.

‘மிஸ்டர் காந்தி நீடூழி வாழ்க!’ ‘மிஸஸ் காந்தி நீடூழி வாழ்க!’, ‘வந்தே மாதரம்’ என்ற கோஷங்கள் ஒலித்தன. அவர்களது வரவேற்பை ஏற்கும் வகையில் மிஸ்டர் காந்தி தலை வணங்கினார்.

காந்திஜி அதுகாறும் பிரிட்டிஷ் அரசு மீது நல்லெண்ணம் கொண்டவராகவே இருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரஜைகளோடு இந்தியர்கள் சம உரிமை பாராட்ட முடியும் என்பதே அன்னாரது எண்ணம்.

ஆகவேதான் மதராஸ் வழக்குரைஞர் குழாம், சட்டத் தொழில் சார்ந்தோரின் வருடாந்திர சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள அவரை அழைத்தபோது, அதை அவர் உடனடியாக ஏற்றார். மதராஸ் பீபிள்ஸ் பார்க்கை ஒட்டிய விசாலமான திடலில் திறந்த வெளி விருந்து ஏப்ரல் 24 (1915) அன்று அட்வொகேட் ஜெனரல் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் காந்திஜி பேசும்போது, ”எனது ராஜ விசுவாசம் சுயநலம் சார்ந்தது! சாத்விக எதிர்ப்பாளராகிய நான் ஒன்று கண்டு கொண்டேன். அதாவது, சத்தியாக்கிரக இயக்கங்களுக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அனுமதிக்கும் தாராளமான சுதந்திரம் வெறேந்த நாட்டிலும் கிடையாது என்று தெரிந்துகொண்டேன். பிரிட்டிஷ் அரசாட்சியின் ஒருசில லட்சியங்களின் மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்றார்.

தேசியத் தலைவராக உருவாகக் கூடிய காந்தி இவ்வாறு அப்பட்டமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகப் பேசியது குறித்து மதராஸ் மாகாண செய்தித் தாள்களில் கண்டனக் கடிதங்கள் வெளியாயின.

1915 ஜூன் 16 அன்று பிரிட்டிஷ் பேரரசு காந்திஜிக்கு ‘கெய்ஸர்-ஐ-ஹிந்த்’ தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது.

இந்திய அரசியல் அரங்கில் 1919-ஆம் ஆண்டு அடுத்தடுத்துச் சூறாவளியாய் எழுந்த நாடு தழுவிய தேசிய மல்லாட்டங்கள் அதுகாறும் பிரிட்டிஷ் அபிமானியாக இருந்துவந்த காந்திஜியை பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர எதிர்ப்பாளராக உருமாற்றின. “இந்த சாத்தான் அரசை திருத்துவோம் அல்லது தீர்த்துக் கட்டுவோம்’ (WE ARE ALL MEND OR END THIS SATANIC GOVERNMENT) என்ற தீர்மானத்துடன் காந்திஜி தீவிர அரசியலில் அடிவைத்தார்.

1919 மார்ச் மாதம் அமலுக்கு வந்த   ரவுலட் சட்டமும், அதையடுத்து நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையும் அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் ராணுவ சட்டத்தின் கீழ் தலைவிரித்தாடிய அரசின் அதிக்கிரமங்களும் இந்த எதிர்பாராத திடீர்த் திருப்பத்திற்கு காரணங்களாக அமைந்தன; இந்தியரின் தன்மானத்திற்கு பெரும் சவாலாக ஆயின.

அதுகாறும் ஓரளவு அரசியல் உரிமைகளைப் படிப்படியாக வேண்டிப் பெறுவதன் பொருட்டு சட்ட திட்டங்களுக்கு உள்பட்ட மிதவாத எழுச்சியாக இருந்துவந்த நிலைமை மறைந்து, அன்னிய ஆட்சிக்கு எதிராக உருபெற்ற பெரும் போராட்டமாக மாற்றம் கண்டது.

இந்த கால கட்டத்திலேதான் இந்திய முஸ்லிம்களும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அதற்கான எழுச்சியே ‘கிலாஃபத் இயக்கம்’ எனப்படுவது. அவ்வியக்கத்திற்கு இந்துக்களின் ஆதரவைப் பெற முஸ்லிம்கள் விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, 1919 நவம்பர் 3 அன்று டில்லியில் கூடிய அகில இந்திய கிலாஃபத் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை வகிக்க காந்திஜி இசைந்தார்.

இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்க அதுவே கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்று நம்பிய காந்திஜி, அந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி இட்டுச் செல்லவும் ஒப்புக்கொண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடுத்து அமலுக்கு வந்த பஞ்சாப் ராணுவச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற அட்டூழியப் பிரச்னை, கிலாஃபத் அநீதி ஆகிய இரண்டையும் சாமர்த்தியமாக இணைத்து, அன்னிய ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட்ட ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

அரசு அமைப்புகள், சட்டப்பேரவை, நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றை ஒருங்கே பகிஷ்கரிப்பதே அந்த ஒத்துழையாமை இயக்கத்தின் செயல் திட்டம்.

இவ்வாறு அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைத்தால் ஒரே ஆண்டில் சுயராஜ்யம் கிட்டும் என்று காந்திஜி ஆங்காங்கே கூட்டம் போட்டு மக்களை உற்சாகப்படுத்தினார்.  அவரும், கிலாஃபத் தலைவர் முகமதலியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.

நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்ட் முதல் தேதி துவக்கம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிகரற்ற தீவிர தேசியத் தலைவராகத் திகழ்ந்து வந்த பாலகங்காதர திலகருக்கு அந்த இயக்கத்தில் நாட்டம் இல்லை. இந்திய சுதந்திர லட்சியத்திற்கும், எங்கோ துருக்கி சுல்தானின் அதிகாரப் பறிப்புக்கும் என்ன சம்பந்தம் என ஒதுங்கிவிட்டார். தீவிர நோய்வாய்ப்பட்டுக் கிடந்த திலகர் 1920 ஜூலை 31 நள்ளிரவில் காலமானார்.

இந்த திடீர்த் திருப்பத்தில் காலியாகக் கிடந்த தேசிய தலைமைப் பீடத்தில் காந்திஜி அமர வாய்ப்புப் பெற்றார். 1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு மாநாட்டில் காந்திஜியின் அகிம்சாபூர்வமான ஒத்துழையாமை இயக்கம் பலத்த சர்ச்சைகளுக்கிடையே அரைமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

1920 ஆகஸ்ட் 31 அன்று காந்திஜி காதி பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அதனை இவ்வாறு எழுத்தில் பதித்தார்: “இன்றைய தினத்திலிருந்து நான் கையால் நூற்ற கதர் ஆடையையும், கதர்க் குல்லாவையும் மட்டுமே அணிவேன்”.

1921 செப்டம்பர் 22 அன்று காலையில் மதுரையில் நெசவாளர் கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது காந்திஜி, வெற்று மார்புடனும் இடுப்பில் முழங்காலுக்குமேல் வரிந்து கட்டிய அரை வேட்டியுடனும் மேடையில் தோன்றினார்.

“கந்தல் அரை வேட்டி அல்லது கோவணத்துடன் உழலும் கோடிக் கணக்கான இந்திய ஏழை மக்களுடன் ஒற்றுமை காண்பதற்காகவே நான் அரை வேட்டிக்கு மாறினேன்” என்று பல ஆண்டுகளுக்குப்பின் அந்நிகழ்வை நினைவுகூர்ந்து  ‘யங் இந்தியா’வில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆம்! மதுரையில் 1921 செப்டம்பர் 22 அன்று பூண்ட ஆண்டிக் கோலத்தில் காந்திஜி தமது தோற்றத்திலும் பூரண மகாத்மாவாகத் தலையெடுத்தார்.

மக்களின் உள்ளங்கவர் அறச்சீல அரசியல் தலைவராகத் திகழத் தொடங்கிய மகாத்மா காந்தி, படித்தவர், படிக்காதவர், எளியோர், பெரியோர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரு சேர அரவணைத்து, இந்திய மக்களை சுதந்திரப் பாதையில் இட்டுச் செல்லலானார்.

காந்தி சகாப்தம் உதயமானது.

நன்றி: தினமணி (09.01.2015)

தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்!

எம்.பக்தவத்சலம்

எம்.பக்தவத்சலம்

(1897 அக்டோபர் 9 – 1987ஜனவரி 31 )

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும்.

பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம்” என்று சொல்லியிருந்தார் அளகேசன்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1987 மார்ச் 13-ம் நாள் பக்தவத்சலத்துக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசும்போது, “மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது” என்றார் கேரளத்தின் முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன். பக்தவத்சலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடிய இரு குறிப்புகளாக இவற்றைச் சொல்லலாம்.

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு பக்தவத்சலம்தான் இலக்கணம். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர் என்றும் சொல்வார்கள். கேள்வி களுக்குச் சட்டமன்றத்தில் ராஜாஜி பதில் சொல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், பதில் சொல்லும்படி தன்னைத்தான் அவர் தூண்டுவார் என்று சொல்லி, ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கையைக் குறித்து பக்தவத்சலம் பெருமைப்பட்டுக்கொள்வார்.

மாற்றுக் கட்சியானாலும் நண்பர்தான்

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

ஐந்து லட்சம் கொடுத்தால் கல்லூரி

ஐந்து லட்சம் கொடுத்தால் கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று பக்தவத்சலம் காலத் தில் ஒரு திட்டம் இருந்தது. பெரியார் பார்த்தார், “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்று கொடுத்தார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

தன்னிடம் வரும் எந்தக் கோப்பிலும், அதற்கான முடிவைத் தானே எடுத்து, குறிப்பு அனுப்புவது பக்தவத்சலத்தின் வழக்கம். “ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை” என்று பக்தவத்சலம் ஒருமுறை என்னிடம் கூறினார். கக்கனும் அப்படித்தான். “கக்கனிடமிருந்து ஏதேனும் வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்; எங்களுக்குச் சங்கடம் ஏதும் இருக்காது” என்று முன்னாள் தலைமைச் செயலர் கார்த்திகேயன் சொல்வதுண்டு. ‘பரிசீலித்துப் பார்வைக்கு வைக்கவும்’ என்று மட்டுமே அமைச்சர்கள் குறித்து வைப்பதைத்தானே பின்னாட்களில் பார்க்கிறோம்?

பக்தி பழமைவாதியாக்கிவிடவில்லை

இறைப்பற்றாளர் பக்தவத்சலம். ஆனாலும், பக்தியை எங்கே நிறுத்திவைக்க வேண்டும் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்களில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் அவர். கோயில்களுக்கு நிலச்சொத்து ஒத்துவராது. குத்தகை, பண்ணைச் சாகுபடியெல்லாம் பார்த்தாகிவிட்டது. பலனில்லை. காணி நிலத்துக்கு பாரதியார் ஏங்கவில்லையா? ஆண்டவனுக்கே நிவேதனம் என்ப தெல்லாம் அகம்பாவம். எனவே, நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்களிடமே விற்று முதலீடு செய்து, வட்டிப் பணத்தில் கோயில் களைப் பராமரிக்கலாம் என்பது 1976-ல் அவரது திட்டம். அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு, மயிலாப்பூர் அகாடமி கூட்டத்தில் பதில் சொன்னார், “நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.”

துணியின் இழைகளைப் பிரிக்கலாமா?

இந்திய ஓர்மையில் தளராத நம்பிக்கையுள்ளவர் பக்தவத்சலம். இனவழி அரசியலைக் குறிப்பிட்டு “வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்” என்றார். “புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?” இப்படியெல்லாம் இந்திய ஒற்றுமையை விளக்குவார்.

நான் தனியாக நின்றேன்

காங்கிரஸ் வழியிலான அவரது மொழிக் கொள்கை, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவர் கையாண்ட விதம், இவை இரண்டையும் குறைகூறுவார்கள். 1965 முதலாகவே மாறிவந்த அரசியல் சூழலை பக்தவத்சலம் கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள். இந்த விமர் சனங்களுக்கு அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்?

1950 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் உறுதி செய்தது. அந்த ஏற்பாடு தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இருப்பவர்கள் இந்தியில் ஒரு அட்சரம்கூடக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்கக் கூடாது என்பதல்ல. 1937-ல் நடந்ததைப் பார்த்திருந்ததால் இங்கே இந்திக்கு மாணவரிடையே ஒரு ஒவ்வாமை இருப்பது தெரிந்தது. எனவே, விரும்பினால் அந்த மொழியைக் கற்கலாம் என்பதாக மட்டுமே இருந்தது. எதற்கும் வழுக்கலாகப் பதில் சொல்லி அறியாத பக்தவத்சலத்தின் பதில் இதுவேதான்.

தன் கட்சிக்காரர்களே குறை சொல்வதைப் பற்றிக் கேட்டால், “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? சூழ்நிலையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. நான் தனியாக நின்றேன்” என்பார். சரியா, தவறா என்பதெல்லாம் வரலாற்றுப் பொருளாக விவாதிக்கப்படும். ஆனால், இவர் கட்சியைக் கைவிட மறுத்தார், கட்சி இவரைக் கை விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

– தங்க.ஜெயராமன்

(ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்)

நன்றி: தி இந்து (09.10.2014)

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

வினோபா பாவே: காந்தி மெச்சிய காந்தியவாதி

ஆச்சார்ய வினோபா பாவே

ஆச்சார்ய வினோபா பாவே

(செப்டம்பர் 11, 1895 – நவம்பர் 15, 1982)

காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் ‘பூதான இயக்க’த்தின் தந்தை ஆசார்ய வினோபா பாவே. “காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்” என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபாஜி.

வினோபா பாவே, மகாராஷ்டிரத்தின் கொலாபா மாவட்டத்து ககோடா கிராமத்தில் 11.9.1895-ல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விநாயக். இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் பிடிக்கும்.

ஆனால், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார். காசியிலேயே இருந்து சாமியாராவதா, கல்கத்தா சென்று புரட்சி வீரனாகிவிடுவதா என்று 20 வயது விநாயக்கின் மனதில் போராட்டம். ஒரு நாள், செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால், காசி இந்து சர்வகலாசாலையில் காந்தி ஆற்றிய உரை கண்ணில் படுகிறது. வாசிக்க வாசிக்க அவருக்கு வழி புரிந்துவிட்டது. காசியும் இல்லை, கல்கத்தாவும் இல்லை. இனி நாம் போக வேண்டிய இடம் அண்ணலின் திருவடி நோக்கி என்று அவரிடமே 7.6.1916-ல் அடைக்கலம் புகுந்தார்.

காந்தி ஆசிரமத்தில் தங்கி சேவை செய்தார். காந்தியின் கட்டளையை ஏற்று வார்தா ஆசிரமப் பொறுப்பை 8.4.1921-ல் ஏற்றார். கதர் தயாரிப்பு, கிராமத் தொழில்வளர்ச்சி, புதிய கல்வி, கிராம சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். 1938-ல் பௌனார் என்ற இடத்தில் பரந்தாம ஆசிரமத்தை நிறுவினார். 1925-ல் வைக்கம் ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க காந்தியால் கேரளத்துக்கு அனுப்பப்பட்டார்.1940-ல் தனிநபர் சத்தியாகிரகத்துக்கு வினோபாவைத்தான் காந்தி முதலில் தேர்வுசெய்து அனுப்பினார்.

வேலூர் சிறையில்…

‘வெள்ளையனே வெளியேறு’இயக்கத்தில் 1942-ல் பங்கேற்றபோது கைதுசெய்யப்பட்டு வேலூர், சியோனி ஆகிய ஊர்களில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் சக கைதிகளுக்கு பகவத் கீதையை விளக்கி உரைகள் நிகழ்த்தினார். அவை ‘வினோபாவின் கீதைப் பேருரைகள்’ என்றே புத்தகமாக வெளிவந்து நன்கு வாசிக்கப்பட்டது. சிறைகளில் இருந்தபோது ‘ஸ்வராஜ்ய சாஸ்திரம்’, ‘ஈஷாவாஸ்ய விருத்தி’, ‘ஸ்திதப்பிரக்ஞன் தரிசனம்’ போன்ற முக்கியமான நூல்களையும் எழுதினார். வேலூர் சிறையில் இருந்தபோது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றார். லோக நாகரி என்ற எழுத்து வடிவத்தையும் உருவாக்கினார்.

சர்வோதய சமாஜம்

1948 மார்ச்சில் காந்திஜியின் சீடர்கள் சேவாகிராமத்தில் ஒன்றுகூடி ‘சர்வோதய சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தேசப் பிரிவினையால் புண்பட்ட மக்களின் மனப் புண்களை ஆற்றவும் மக்களுக்குத் தேவைப்படும் கல்வி, தொழில், சுகாதாரம் ஆகியவற்றை அளிக்கவும் சர்வோதயத் தொண்டர்கள் புறப்பட்டனர். தங்கம், பணம் ஆகியவற்றைச் சம்பாதிக்கும் ஆசையை மக்கள் துறக்க வேண்டும் என்பதற்காக ‘காஞ்சன் முக்தி’என்ற இயக்கத்தை வினோபா பாவே 1950-ல் தொடங்கினார்.

பூதான இயக்கம்

1951-ல் தெலங்கானா பகுதியில் போச்சம்பள்ளியில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம், அவர்களின் முக்கியத் தேவை என்ன என்று வினோபா கேட்டார். விவசாயம் செய்யத் தங்களுக்கு 80 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள். “இதற்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கிராமத்தாரிடம் கேட்டார் வினோபா.

“என்னுடைய 100 ஏக்கர் நிலத்தைத் தருகிறேன்” என்று ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அறிவித்தார். வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த வினோபா பாவே, ‘பூமிதான இயக்க’த்தைத் தொடங்கினார். எதிர்பாராத வகையில், அன்றாடம் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையிலான நிலங்கள் தானமாகக் கிடைத்தன. உத்தரப் பிரதேசத்தின் மங்ராத் என்ற கிராம மக்கள் தங்களுடைய முழு கிராமத்தையே கிராமதானமாகக் கொடுத்தனர்.

வினோபாஜி நாடு முழுக்க நடந்து 41,94,271 ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றார். அதில் 12,85,738 ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. 18,57,398 எதற்கும் பயன்படாத களர் நிலங்களாக இருந்தன. எஞ்சியவை மீது தானம் கொடுத்தவர்களின் வாரிசுகள் வழக்கு போட்டதால் முடிவு காணப்படாமல் போய்விட்டது.

காற்று, தண்ணீர், வானம், சூரிய ஒளி போல நிலமும் இயற்கையின் கொடை. அதைத் தனிப்பட்ட நபர்கள் பேரில் சொந்த சொத்தாக அனுபவிப்பது கூடாது என்ற உயரிய நோக்கத்தை ‘பூமிதானம்’ வலியுறுத்தியது. ‘காந்தியம்’ என்பது கம்யூனிஸத்தின் அகிம்சை வடிவம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள்கூட வினோபாஜியை நடைப்பயணத்தின்போது சந்தித்து, தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைந்தார்கள். சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து, ஆசிரமத்தில் தங்களுக்கிடும் பணியைச் செய்வதாகக் கூறிச் சென்றார்கள்.

காந்தியத்தின் வலிமை இதுதான். சத்தியத்தின் முன் எந்த ஆயுதமும் செயலிழந்துதான் போகும்!

-ஜூரி

நன்றி: தி இந்து (12.09.2014)