இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்!

-ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்

அன்னி பெசன்ட்

அன்னி பெசன்ட் அம்மையார்

(1847, அக்.1 – 1933 செப். 20 )

அக்டோபர் மாதத்திற்குத் தனி மகிமை உண்டு. நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் பிறந்த மாதம் இது. மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயணன், வல்லபபாய் படேல், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிறந்த மாதம்.

நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர்களில் அன்னி பெசன்ட் அம்மையார் முக்கியமானவர். ஆனால், அவரைப் பற்றி நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர்,  “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தோரின் கரகோஷத்தைப் பெற்றதை நேரில் கண்டார் அன்னி பெசன்ட்.

மனிதப் பிறவியின் நோக்கம், பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவற்றுக்கானத் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உண்டாக, இந்தியாவின் தென்முனையான தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினார்.

இளம்பருவத்தில் அன்னி பெசன்ட்டுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருந்தால் அவர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.

ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, அவருடைய தாயார் இரு குழந்தைகளை இன்னல்களைப் பொருள்படுத்தாமல் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது. ஆனால்,  “மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள்” என்ற ஆழமான வைராக்கியத்தை அது அளித்தது.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இருந்தவருக்கு, தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தின. உண்மையைத் தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

இந்நிலையில், பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம். புகுந்த இடத்தில் நிம்மதியில்லை. அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை குணப்படுத்த மாதக்கணக்கில் போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள்.

குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து, குழந்தைகள் மீது உரிமை பெற நீதிமன்றத்தில் வழக்கு, அன்புத் தாயாரின் மரணம் இவையெல்லாம் மதங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.

1872-ஆம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் அன்னி பெசன்ட் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிசக் கொள்கைகளில் அதிகப் பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து, அப்போதைய உயரிய சிந்தனையாளர்களான பெர்னாட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப் போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

மனிதப் பிறவி, மதம், அரசியல், சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற உண்மைகள் அவரை மிகவும் பாதித்தன. மனிதப் பண்பு உயர பாடுபட வேண்டும், மனித நேயம் நிலைபெற உழைக்க வேண்டும் என்ற முடிவோடு பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடராக விவேகானந்தர் அமைந்தது போல், பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் அமைந்தார். பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் கலாசாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்துகொண்டு, ஆனால், அதைப்பற்றிய ஸ்மரணையின்றி அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.

பெண் கல்வியின் அவலநிலை கண்டு, பெண் கல்விக்காகப் பல முயற்சிகளை எடுத்தார். 1898-ஆம் ஆண்டு வாராணசியில் பெண்களுக்கான கல்விக் கூடத்தை நிறுவினார்.

காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை அடிப்படையாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவானது. இந்து சமயத்தையும், இந்தியப் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித் திட்டம், 1904-ஆம் ஆண்டு அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது. 1921-ஆம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். உண்மையாகவும், தைரியமாகவும் தனது கருத்துகளை எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரது கருத்துச் சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து திருமணம், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து பல கருத்துகளைத் துணிச்சலாகக் கூறினார். அக்கருத்துகள் பிற்போக்கான மதபோதகர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு அன்னிக்கு ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதனால் சோர்ந்துவிடவில்லை அன்னி. மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் – பெண் உறவு, விவாகம் பற்றிய தனது கருத்துகளை சிறு சிறு பிரசுரங்களாக வெளிட்டார். அவை லட்சக்கணக்கில் விற்பனையாயின. பல மொழிகளிலும் வெளிவந்தன.

அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாயச் சூழலைக் கண்டு வருந்தி, இந்நிலையை மாற்ற விழைந்தார். 1912-ஆம் வருடம்  ‘மகன்கள் – மகள்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மகன், மகள் இருவரும் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை வலியுத்தினார்.

இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. ஒருமித்த கருத்து கொண்ட இரு சமூக சீர்திருத்தவாதிகளும் இணைந்தனர். பெண்களின் நிலையை உயர்த்தவும், பிற்போக்குப் பிணைப்புகளிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913-இல் உருவாக்கினார்.

டாக்டர் முத்துலட்சுமியோடு அன்னி இணைந்து பெண்களுக்கு கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமை என பல முயற்சிகளை மேற்கொண்டார். ‘இந்தியாவே விழித்தெழு’ என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913-ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தினார்.

நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, ‘இந்திய இளைஞர்கள் சங்க’த்தை (YMIA) 1914-ஆம் ஆண்டு துவங்கினார். உடற்பயிற்சிக் கூடம் நம் உடலை எவ்வாறு வலுவடையச் செய்யுமோ அதுபோல, சீரிய குடிமக்களை உருவாக்கும் மையமாக இச்சங்கம் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்தார். அந்த “இந்திய இளைஞர்கள் சங்கம்’ இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.

‘சுயாட்சிப் பேரியக்கம்’ என்ற விடுதலைப் போராட்டத்தை (HomeRule Movement) சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலகர். விடுதலை வீரர் தாதாபாய் நெüரோஜி தலைவராகச் செயல்பட்டார். அன்னி பெசன்ட் விதைத்த விடுதலை விருட்சம் வளர்ந்து அதன் விழுதுகள் நாடெங்கும் இறங்கின.

ராஜாஜி, சர் சி.பி. ராமசாமி, திரு.வி. கல்யாண சுந்தரனார், சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்றோர் அகில இந்திய அளவிலும் செயல்பட்டனர். பிரிட்டிஷ் அரசு 1917 ஜூன் மாதம் அன்னையை சிறையிலிட்டது. ஆனால், எதிர்ப்பு அதிகரிக்கவே அவரை விடுவித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1917-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் அம்மையார்தான்.

1907-இல் அன்னி பிரம்ம ஞான சபையின் தலைவராகி மதங்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். உண்மை நெறி, நேர்மையான பாதை, மனித நேயம், சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.

இந்தியாவையும் இந்தியர்களையும் அன்னி வெகுவாக நேசித்தார். மகாத்மா காந்தி “அன்னி பெசன்ட்தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை ஊட்டினார்” என்று பாராட்டியுள்ளார்.

தமிழறிஞர் திரு.வி.க. அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.  “அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்று கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது; வெஸ்லி பள்ளிப் பணியை விட்டுவிடத் தூண்டியது;    ‘தேசபக்தன்’ இதழுக்கு ஆசிரியனாக்கியது; தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது; மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி, சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ், படேல் போன்றோருடன் அன்னி பெசன்ட் அம்மையாரையும் மறவாமல் நினைவுகூர்வோம்.

இன்னொரு அன்னை வசந்தையோ, காந்தியோ, சாஸ்திரியோ, அம்பேத்கரோ, அன்னி பெசன்ட்டோ வரமாட்டார்கள்.

அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய சமூக சேவையாகும்.

 

நன்றி: தினமணி (16.10.2014)

 

நிகரற்ற சாம்பியன் ஆனந்த்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் செஸ் உலகின் முடிசூடா மன்னனான விஸ்வநாதன் ஆனந்த்.

தனது 6-வது வயதில் செஸ் பயணத்தைத் தொடங்கிய ஆனந்த், கடந்த 20 ஆண்டுகளாக உலக செஸ் போட்டியில் கோலோச்சி வருகிறார். அவர் 42 வயதை எட்டியிருந்தாலும், அவருடைய ஆட்டத்தின் வேகத்துக்கு மட்டும் இளமை குறையவில்லை. 24 வயதில் விளையாடியதைப் போன்றே இப்போதும் விரைவாக காய்களை நகர்த்தி வெற்றியைத் தொடர்ந்து வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின் டை பிரேக்கர் சுற்றில் கெல்ஃபான்டுக்கு எதிராக அபாரமாக காயை நகர்த்திய ஆனந்தின் உத்வேகம், அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இடையே நடைபெற்ற படுவேக டைபிரேக்கர் சுற்றில் எவ்வித பதற்றமுமின்றி, லாவகமாக காய்களை நகர்த்தி முன்னணி வீரரான கெல்ஃபான்டை தோற்கடித்தார் ஆனந்த்.

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்த், தன்னுடைய தாயார் சுசீலாவிடமும், குடும்ப நண்பரான தீபா ராமகிருஷ்ணனிடமும்தான் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். செஸ் மீதான தீராத காதலால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்தார்.

5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவரான ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும்கூட. டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ஆனந்தையே சேரும். 2007-ல் இருந்து தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது அபரிமிதமான சாதனைக்காக 18-வது வயதிலேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

இந்த விருது அவருக்கு 2007-ல் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெற்ற முதல் வீரரும்கூட. சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார்.

செஸ் போட்டியில் ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதோடு, பல்வேறு சாதனைகளையும் படைத்து வந்தனர். செஸ் என்றால் ரஷியர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கோலோச்சினர். ஆனால் தொடர்ச்சியாக 4 முறை பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றியுள்ளார் ஆனந்த்.

கௌரவம்

2010, நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு விருந்து கொடுத்தார். அதற்கு அழைக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

கடந்து வந்த பாதை

1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.

1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.

தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.

1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.

1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.

1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.

பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.

1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.

2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.

2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.

2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.

2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

கிராம்னிக்

ஆனந்த் குறித்து ரஷியாவின் முன்னணி வீரரான விளாதிமிர் கிராம்னிக் கூறுகையில், “ஒட்டுமொத்த செஸ் வரலாற்றில் அசாத்திய திறமை கொண்ட வீரர்களில் ஆனந்தும் ஒருவர். அவர் நிகரற்ற சாம்பியன். செஸ் உலகின் ஜாம்பவான் காஸ்பரோவைவிட ஆனந்த் எந்தவகையிலும் பலவீனமான வீரர் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காரில் சென்று சாதித்த ஆனந்த்

2010-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனந்த். ஆனால் அந்த நேரத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் பறந்த சாம்பல் துகள்களால், அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து 40 மணி நேரம் காரில் பயணம் செய்து பல நாடுகள் வழியாக சுமார் 1,700 கி.மீ. தூரத்தைக் கடந்து சோபியாவை அடைந்தார் ஆனந்த். 40 மணி நேரம் பயணம் செய்தபோதிலும் அயராத ஆனந்த், சோதனையைத் தாண்டி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

– ஏ.வி.பெருமாள்
– நன்றி: தினமணி (01.06.2012)
.

காண்க:  

விஸ்வநாதன் ஆனந்த் (விக்கி)

VISWANATHAN ANAND