பிரகதீஸ்வரம் – ஒரு விஸ்வரூபம்

 சிந்தனைக் களம் 
– பாலகுமாரன்-


அந்த
க் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.

எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.

அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ?
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.

பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா?
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா?

இல்லை.

இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.

முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.

அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.

பிறகு…?

மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.

அப்படியானால் சாரப்பள்ளம்.

சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம்.

இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?

பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).

எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று.

இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.

கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.

உளிகள், நல்ல எகு இரும்பால் ஆனவை. பெரிய கல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.

நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.

கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.

முதல் தானம் ராஜராஜனுடையது.
‘நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை.

கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.

மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.

கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்ன வித கோவில்?

விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.

இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார்.

இது போதுமா கடவுளைச் சொல்ல?

ரொம்ப பெரிசு ஐயா கடவுள்.

கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.

விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன்.

அதுவே பிரகதீஸ்வரம்.
அதுவும் விஸ்வரூபம்.
இன்றளவும்.

தகவல்: வி.ஸ்ரீனிவாசன்

காண்க: http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post_23.html

புயலைத் தாண்டினால் தென்றல்!

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

சிந்தனைக்களம் 
 
கடந்த 2012, பிப்ரவரி மாதம், இலங்கை சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அங்குள்ள 121 ஆண்டு கால யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்: 
 
 
 யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கியவுடன் முதல் எண்ணம் எனக்குத் தோன்றியது என்னவென்றால், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ராமேஸ்வரத்தில் எனக்கு ஓர் அருமையான கணித ஆசிரியரிடம் கிடைத்த அனுபவம்தான்; அதைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் பெயர் கனக சுந்தரனார். 
 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மறவன்புலவு க. சச்சிதானந்தனை சமீபத்தில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் சந்தித்தபோது அவரைப்பற்றி விசாரித்தேன். அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து, படித்து வளர்ந்தவர். அவரை ராமேஸ்வரத்தில் நான் சந்தித்தபொழுது, அவர் ஓய்வுபெற்ற கணித ஆசிரியராக இருந்தார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு துறவியாகவும் இருந்தார். அதுமட்டுமல்ல, எல்லோராலும் போற்றப்பட்டவர் அவர்.
அதாவது தினமும் அதிகாலை 5 மணிக்கு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் 5 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாகக் கணிதம் பயிற்றுவிப்பார். கணிதம் பயிற்றுவிப்பதை அவர் ஒரு தொண்டாகக் கருதினார். அவரிடம் கணிதம் பயின்றால், மாணவர்கள் கணிதத்தில் நல்ல தேர்ச்சி அடைவார்கள்.  
அப்படிப்பட்ட கணிதத் துறவியிடம் எனக்குக் கணிதம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் கணிதம் மட்டும் பயிலவில்லை. அவருடைய அற்புதமான வாழ்க்கை நெறியையும், காலை 5 மணிக்கு எழுந்து பணிசெய்தால் அந்தக் கல்வி நம் மனதில் நீடித்து நிலைக்கும் என்ற நல்ல வழிமுறையையும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் என்னுடைய ஆசிரியர் பிறந்த இடமாக இருப்பதால், அந்த யாழ்ப்பாணத்தை வணங்குகிறேன். 
யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.  நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய் – என்று பினாச்சியோ என்ற கவிஞர் சொல்கிறார்.  நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.  
என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.  
இத்தருணத்தில் விடாமுயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக, என் வாழ்வில் அச்சாணியாகத் திகழ்ந்த திருக்குறளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு  
இடும்பை படாஅ தவர்.
-அதாவது, தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்பதுதான் இந்தத் திருக்குறளின் மூலக்கருத்து ஆகும். 
நண்பர்களே, கடந்த 12 ஆண்டுகளில், இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். 
சமீபத்தில் இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில் என்ஜினீயர், டாக்டர் எத்தனை பேர்? ஐஏஎஸ்/ ஐபிஎஸ் ஆபீசர் எத்தனை பேர்? டீச்சர் எத்தனை பேர்? எத்தனை பேர் நிர்வாகி ஆகப் போகிறீர்கள்? என்று கேட்டேன். சில நூறு இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள். எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்துக்கும், போக விரும்புகிறீர்கள்? என்று கேட்டேன். அனைவரும் கையைத் தூக்கினார்கள். 
எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள்? என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள். அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். 
ஒரு மாணவன் ‘இந்தியாவை 10 ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன்’ என்று சொன்னான். ஒரு மாணவி சொன்னாள், ‘லஞ்சத்தை ஒழிப்பேன்’ என்று. இன்னொரு மாணவன் – ”இளைய சமுதாயத்துக்கு  ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால், ‘இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்’ என்று நம்பிக்கையைக் கொடுப்பேன்” என்று கூறினான்.  
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களைப் பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைப்பேசியைப் பார்க்கும்போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகில் தோன்றுகிறார். 
சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருக்கும்போது ஏன் கடலின் நிறமும், அடிவானமும் நீல நிறத்தில் தோன்றுகிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால், லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்குப் பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானிக்கு அந்தக் கேள்வி வந்தது. அந்தக் கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல், அதுதான் சர்.சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. 
இப்படிப்பட்ட வரலாற்றின் பக்கங்களை, தனது பக்கங்களாக மாற்றிய ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்தான். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒருபக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது இளைஞர்களாகிய உங்கள் ஒவ்வொருவரது கைகளில், சிந்தனைகளில், செயல்களில்தான் உள்ளது. 
நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால், இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. ‘அந்த மாய வலையில் நான் விழமாட்டேன். நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்’ என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி, வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.  
மன எழுச்சியடைந்துள்ள இளைஞர்கள் ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிக்க, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ – மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.  
திருக்குறள் என் வாழ்வில் இணைந்த மிக முக்கிய வாழ்க்கைச் சித்தாந்தம். என் மாணவப் பருவத்தில் நான் அறிந்த திருக்குறள், என்னுடைய வாழ்வில் முக்கிய அங்கமாகி, என் மனதில் லட்சியப் பொறிகளை உருவாக்கியது.  1946-ல் ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர், வினைத்திட்பம் 67-வது அதிகாரத்திலிருந்து 666-வது திருக்குறளைப் பாடிப்பாடி பரவசப்படுத்தினார். அன்று மனதில் பதிந்த குறள், என் வாழ்வில் லட்சியங்களைக் கொண்டு வரும் விண்கலம் போன்றதோர் சக்தி மிக்க குறளானது.  
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  
திண்ணியர் ஆகப் பெறின்”.  
-இக்குறள்தான் என் வாழ்வின் அஸ்திவாரமானது. எனது விஞ்ஞானப் பணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகள் சோர்வுறச் செய்தபோது, உள்ளத்துக்கு உரமூட்டிய குறள் இது. 
இந்தியாவில் பல விஞ்ஞானிகளின் எண்ணங்கள் பல வடிவங்களில் உருவெடுத்து அக்னி எழுச்சி பெற்று, ஏவுகணைச் சக்தியாக மலர்ந்தது, இந்தியா பல துறைகளில் தன்னிறைவு பெற்றுத் திகழ்கிறது. செயலில் உறுதி இருந்தால், வெற்றி நிச்சயம்.  
ஒருமுறை நான் படித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் சென்று இருந்தேன். அப்போது ஒரு மாணவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘நம் நாடு ஜனநாயக நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பல நன்மை, தீமைகள் நடக்கின்றன. வன்முறைகள், கலவரங்கள், நில அபகரிப்புகள், ஜாதி மத மோதல்கள், தீவிரவாதம், அடக்குமுறை, பழிவாங்குதல், யதேச்சாதிகாரம், சர்வாதிகாரம், வல்லவன் வகுத்ததுதான் வழி, பலமுள்ளவன்தான் பிழைக்க முடியும் என்பது போன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக இந்த ஜனநாயக நாட்டிலே நடக்கிறதே, அப்படி நடந்தால்கூட செய்தித்தாளிலும் தொலைக்காட்சியிலும் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே. வாழ்க்கை எப்போதும் இனிப்பாக இருக்க முடியுமா?’ என்று கேட்டார்.  
நான் அவருக்குப் பதில் சொன்னேன். “ஒவ்வொருவரின் வாழ்விலும் பல புயல்களையும் சில தென்றல்களையுமே எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும்போது, பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும் ஓரிரு சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால், பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெறவேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம்”.  
நான் ஒருமுறை 2003-ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘தவாங்’ என்ற இடத்துக்குச் சென்றேன். ஒருநாள் முழுவதும் இருந்து அங்கு புத்த பிட்சுகளைச் சந்தித்தேன். கடுமையான குளிரில், வாழ்வதற்கு மிகவும் சிரமப்படக்கூடிய சூழல் இருக்கும்போது அங்குள்ள மக்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பது கண்டேன். 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.  அங்கிருக்கும் தலைமை புத்த பிட்சுவிடம் கேட்டேன். இது எப்படி சாத்தியமாகும் என்று? அதற்கு அவர் சொன்னார்: ”இந்த உலகத்தில், நமக்கு பல்வேறு பிரச்னைகள், நம்பிக்கையின்மை, சுயநலம், சமூக பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்த தவஸ்தலம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் ‘நான், எனது’ என்ற எண்ணத்தை நம் மனத்தில் இருந்து அகற்றினால் நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும். தற்பெருமை மறைந்தால், மனிதர்களுக்கு இடையேயான வெறுப்பு அகலும். வெறுப்பு நம் மனத்தை விட்டுஅகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால் அமைதி நம் மனத்தைத் தழுவும்”.  என்ன ஓர் அருமையான விளக்கம்! 
ஆனால், எப்படி ‘நான், எனது’ என்ற எண்ணத்தை நம் மனத்தில் இருந்து அகற்ற முடியும்? எவ்வளவு கஷ்டமான விஷயம்? இதற்கான பக்குவமான கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது என்பதுதான் நம்மிடையே உள்ள சவால். அந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது, அமைதியை எப்படி அடைவது என்ற என் கேள்விக்கு விடை தேடிய என் பயணம் தொடர்ந்தது. 
நான் பல்கேரிய நாட்டுக்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவ தவஸ்தலத்துக்குச் சென்றேன். தவாங்கில் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக அங்குள்ள முதிர்ந்த பாதிரியார் ஒரு வாக்கியத்தைத் தந்தார். ‘மன்னிப்பு’ என்ற உன்னதமான வாக்கியத்தைத் தந்தார். மன்னிப்பு என்பது எப்படி ஒரு வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் என்பதை பற்றிய அருமையான விளக்கம் பெற்றேன்.  
அதன் தொடர்ச்சியாக விவேகானந்தரது பிறந்த இடத்துக்குச் சென்றேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது அங்கு கிடைத்த பதில் என்னவென்றால், கொடை, அதாவது கொடுக்கும் குணம், இத்தனை குணங்களுடன் கொடையும் சேர்ந்து இருந்தால் நாட்டில் அமைதிக்கு அது வித்திடும் என்பதாகும். 
இந்தத் தகவலோடு அஜ்மீர் ஷெரீப் சென்றேன். அங்கு சென்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சுபி பெரியவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் ”ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு; சைத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களுக்கு வித்திடும், நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும், அன்பு அமைதிக்கு வித்திடும்” என்றார்.  
நல்ல செயல்களைப் பற்றி எண்ணும்பொழுது, காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காந்திஜியின் 9-வது வயதில் அவரது தாயார், அவருக்கு ஓர் அறிவுரையைத் தந்தார். 
அந்த அறிவுரையாவது: ‘மகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும், யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாகப் பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்’. 
மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். 
ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை. கோழை கேட்பான், இது பாதுகாப்பானதா, பேராசைக்காரன் கேட்பான் – இதனால் எனக்கு என்ன லாபம் என்று,  தற்பெருமைக்காரன் கேட்பான் – நான் மகானாக முடியுமா என்று, இச்சையானவன் கேட்பான் – அதில் என்ன சந்தோஷம் உண்டு என்று, ஆனால், மனசாட்சி ஒன்றுதான் கேட்கும், அது சரியா என்று! ஆனால், ஒட்டுமொத்தமான பதில் என்ன – தன் மனசாட்சி படி நேர்மையாக நடப்பது ஒன்றுதான்.  
எனவே, மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே, கனவு காண்பது என்பது ஒவ்வொரு குழந்தையின் இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓர் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேறக் கடுமையாக உழைக்க வேண்டும். 
தொடர்ந்து அறிவைப் பெற, அதைத் தேடிச் சென்றடைய வேண்டும், விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மையைத் தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். 
தகவல் உதவி: வி ஸ்ரீநிவாசன்  
.

தாய்மொழி தினம் கொண்டாடுவோம்!சிந்தனைக் களம் (சர்வதேச தாய்மொழி தினம்: பிப். 21)

ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. 
இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம்.
சர்வதேசத் தாய்மொழி தினம் என்பது ஒரு தாய்மொழிக்கான தினம் இல்லை. ஒவ்வொரு தாய்மொழிக்கான தினம். அதிகமான மக்கள் பேசும் தாய்மொழி, குறைந்த எண்ணிக்கையிலான தாய்மொழி, எழுத்து கொண்ட தாய்மொழி, எழுத்து இல்லாத தாய்மொழி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தாய்மொழி என்ற முறையில் எல்லா மொழிகளும் ஒன்றுதான். உலகத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தாய்மொழிகள் பேசப்படுகின்றன.
எல்லா மொழிகளும் ஒலிகள்தான். மனிதர்கள் வாய்வழியாக எழுப்பும் நாற்பத்திரண்டு ஒலிகள்தான் லட்சக்கணக்கான வார்த்தைகள் கொண்ட மொழிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஒரே கூட்டமாக வாழ்ந்த மக்கள் நல்வாழ்க்கையைத் தேடிச் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள். அதன் காரணமாகப் புதிய மொழிகள் தோன்றின. மக்கள் புலம் பெயர்ந்ததை ஆராய்ந்த அறிஞர்கள் ஒரே மொழியில் இருந்துதான் எல்லா மொழிகளும் தோன்றின என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக மனிதர்களின் உறவுச் சொற்கள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறார்கள். மனிதர்கள் புலம் பெயர்ந்த சரித்திரமும் தாய்மொழிகளின் சரித்திரமும் ஒன்றாகவே இருக்கின்றன.
இந்தியாவில் தாய்மொழிகள் பற்றிய கணக்கெடுப்பு 1881-ம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு முதன்முதலாக நடத்தப்பட்டது. குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளோடு பேசும் மொழிதான் தாய்மொழி என்று வரையறை செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் 872 தாய்மொழிகள் பேசப்படுகின்றன என்பது தெரிய வந்தது. நகரங்களைவிட வனங்களிலும், மலைப் பகுதிகளிலும் குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் தாய்மொழிகள் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தாய்மொழி பேச்சு மொழி. அவற்றுக்கு எழுத்துகள் கிடையாது. 1961-ம் ஆண்டு மக்கள்தொகை விரிவான கணக்கெடுப்பின்படி 1652 தாய்மொழிகள் பேசப்படுவது தெரிந்தது.
மனிதர்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தான கண்டுபிடிப்பென்பது மொழியும் எழுத்துந்தான். ஆனால், இரண்டும் ஒரே காலத்தில் கண்டறியப்பட்டதில்லை. மொழி, திருத்தம் பெற்று பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மொழியை எழுதும் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில மொழிகள் எழுத்தைப் பெற்றுத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டன. பண்டைய காலத்தில் எகிப்து, சுமேரியா, சிந்துவெளி மக்கள் தாய்மொழிகள் எழுத்தைப் பெற்று இருந்தன. அவர்கள் பிரமிடுகளிலும், பானை ஓடுகளிலும் எழுதி வந்தார்கள். பெரும் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தபோது அவர்கள் தாய்மொழியும், எழுத்தும் அழிந்து போயின. பல நாடுகளில் அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் தாய்மொழிகளைத் திட்டமிட்டு அழித்தன. ஒரு நாடு என்பது ஒரு மொழி நாடுதான். அதில் இன்னொரு மொழிக்கு இடமில்லை என்பது கொள்கையாக இருந்தது. கல்வி வேலைவாய்ப்புகள், நிர்வாகம், சட்டம், நீதிக்கு பெரும்பான்மையான மக்கள் மொழிக்குத்தான் இடமளித்தார்கள்.
அதன் காரணமாகச் சிறுபான்மை மக்களின் தாய்மொழிகள் நெருக்கடிக்கு ஆளாகி அழிந்து விட்டன. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டினர் கடல் வழியாகச் சென்று புதிய நாடுகளைத் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார்கள். தொழில் புரட்சி மூலமாக வர்த்தகம் பெருகியது. மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். பல நூற்றாண்டுகளாகச் செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்களிடம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு தங்களின் ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டார்கள். அமெரிக்கா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தி, ஆங்கிலம் மட்டும் ஆட்சி மொழி என்றார்கள்.
செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்கள் பல நூற்றாண்டுகளாகப் பேசி வந்த ஐம்பத்திரண்டு தாய்மொழிகள் அழிந்து விட்டன. ஆஸ்திரேலியா ஒரு பழம்பெரும் நாடு. அதில் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பழங்குடி மக்கள் நாற்பதாயிரம் ஆண்டுகளாக இருநூற்றைம்பதுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மொழிகளுக்கு எழுத்துகள் கிடையாது. எனவே பள்ளிக்கூடங்களில் அவர்கள் மொழிகள் கற்றுக்கொடுக்கப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கப் புறப்பட்ட கேப்டன் ஜேம்ஸ் குக், 1770-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கரையிறங்கி பிரிட்டிஷ் கொடியை நட்டு இங்கிலாந்தின் காலனி எனப் பிரகடனப்படுத்தினார். ஆங்கிலேயர்கள் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா செல்ல ஆரம்பித்தார்கள். 1786-ம் ஆண்டில் இங்கிலாந்து சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவில் கரையிறக்கினார்கள். ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயக் குடியேற்றம் கைதிகளின் குடியேற்றந்தான். அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கப் பள்ளிக்கூடங்கள் ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டன. பழங்குடி மக்களின் தாய்மொழிகள் அழிய ஆரம்பித்தன. 250 தாய்மொழிகள் புழங்கிய இடத்தில் பதினெட்டுத் தாய்மொழிகள் சிலரால் பேசப்பட்டு வருகின்றன எனக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எங்கெல்லாம் காலனிகளை அமைத்தார்களோ அங்கெல்லாம் ஆட்சிமொழி, பள்ளிக்கூட மொழியாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் இருந்தன.
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா நாடுகளின் தாய்மொழிகளுக்கு எழுத்துகள் இல்லை. எனவே பள்ளிக்கூடங்கள் இல்லை. அவை பிரிட்டிஷ் காலனியாக இருந்தன. எனவே ஆங்கில மொழி பள்ளிக்கூடத்தில் முதல் மொழியாகக் கற்பிக்கப்பட்டது. பழங்குடி மக்களின் தாய்மொழிகள் அழிந்துவிட்டன. அதுவே பிரெஞ்சு காலனிகளிலும் ஏற்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து புறப்பட்ட வாஸ்கோடகாமா 1498-ம் ஆண்டில் கேரளத்தில் உள்ள கொச்சியில் வந்து கரையிறங்கினார். ஐரோப்பிய நாட்டினருக்குப் புதிய கடல் வழி தெரிந்தது. போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அமைத்துக்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் இருந்து மிளகு, துணிகள், முத்து, பவளம், அபின், நறுமணப் பொருள்கள் ஐரோப்பிய வணிகத்தில் முக்கியமாக இருந்தன. அதனால், இந்தியர்களில் சிலர் முதலில் போர்த்துக்கீசிய மொழி கற்றுக்கொண்டார்கள்.
பின்னர் பிரெஞ்சு, ஆங்கில மொழி கற்றார்கள். ஐரோப்பாவில் இருந்து வந்த வணிகர்களில் சிலரும் கிறிஸ்தவப் பாதிரியார்களில் பலரும், அதிகாரிகளில் சிலரும் தமிழ், சம்ஸ்கிருதம், இந்துஸ்தானி, தெலுங்கு, வங்காள மொழிகள் கற்றுக் கொண்டார்கள். வணிகத்திலும், மத மாற்றத்திலும் மொழிகள் முக்கியமான இடம் பெற்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பெரும் பகுதியைத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். மொகலாயர்கள் ஆட்சியில் நிர்வாக மொழியாக இருந்த பாரசீகம் அகற்றப்பட்டது. நாட்டில் வாழ்ந்த உயர் வகுப்பினர்கள் சம்ஸ்கிருதம் படித்து வந்தார்கள். சிறுபான்மையான மக்கள் தாய்மொழியான தமிழ், தெலுங்கு, வங்காளம், இந்துஸ்தானி படித்து வந்தார்கள்.
அரசு நிர்வாகம் ஆங்கில மொழி வழியாக நடைபெற்று வந்தது. இந்திய மக்கள் பல தாய்மொழிகளைப் பேசி வந்ததால், எந்த மொழியில் இந்தியர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது எந்த மொழியைக் கற்றுக்கொண்டால் அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று ஆலோசனை செய்தார்கள். மெக்காலே இந்தியர்களுக்கு ஆங்கில மொழியில் கல்வி கொடுக்கவேண்டும். அது அவர்களின் பாரம்பரிய மரபுகளை அறுக்கவும், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கவும் உதவியாக இருக்குமென யோசனை கூறினார். கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங் அதனை ஏற்று 1835-ம் ஆண்டில் ஆங்கில மொழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். இந்தியா ஏராளமான மக்கள் வாழும் நாடாகவும், பல மொழிகள் கொண்ட நாடும் ஆகும். அதில் பெரும்பான்மையான மக்கள் கல்வி கற்க முன்வரவில்லை என்பதோடு, அரசாங்கத்தோடு எவ்விதமான தொடர்பும் இல்லாமல் தங்கள் தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அரசாங்க வேலைக்குச் செல்ல விரும்பியவர்கள் ஆங்கிலம் படிக்க முன்வந்தார்கள்.
பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தன. வேலை எளிதாகக் கிடைத்தது. தாய்மொழி படிக்காமல் பிற மொழிகளைப் படிக்கிறவர்கள் மீது சமூகவியல் அறிஞர்கள் குறைகூறியே வந்தார்கள். 1879-ம் ஆண்டில் “பிரதாப முதலியார் சரித்திரம்’ என்று தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தாய்மொழி படிக்காமல் மற்ற மொழிகளைப் படிக்கின்றவர்களை அந்த மொழி புழங்கும் நாட்டுக்கே நாடு கடத்திவிட வேண்டுமென்று எழுதி இருக்கிறார். உ.வே. சாமிநாதையர் தாய்மொழியான தமிழ்ப் படிப்பைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலம் படிக்க சிலர் ஆலோசனையும், பொருள் உதவியும் செய்ய முன்வந்தது பற்றியும், அதனைப் புறந்தள்ளிவிட்டுத் தமிழ் படித்தது பற்றியும் “என் சரித்திர ‘த்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 
1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உதயமாயின. 1950-ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொழி தேவநாகரி எழுத்துகளில் எழுதப்படும் இந்தி மொழி. ஆங்கில மொழி பதினைந்து ஆண்டுகளுக்கு இணைப்பு மொழியாக இருக்கும். பின்னர் இந்தி மொழி மட்டுமே தேசிய மொழி என்று சட்டம் இயற்றினார்கள். அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் தேசிய மொழி உருது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அரசுப் பணிக்கான தேர்வுகள் உருது மொழியில் நடத்தப்படும் என்று உத்தரவு போடப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி வங்காளம். மதம் ஒன்றாக இருந்தாலும், தாய்மொழியில் வேறுபட்டிருந்த அவர்கள், தாய்மொழிக்காகப் போராட ஆரம்பித்தார்கள். தாய்மொழிக்கான போராட்டத்தில் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். 1948-ம் ஆண்டில் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா டாக்கா சென்றார். தாய்மொழிக் கிளர்ச்சியாளர்கள் அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். டாக்காவில் கர்ஸன் அரங்கில் பேசிய முகமது அலி ஜின்னா, உருது மட்டுமே பாகிஸ்தான் ஆட்சி மொழி என்றார். தாய்மொழிப் போராட்டம் தீவிரமடைந்தது. வங்க மொழியை அரபு எழுத்துகளில் எழுத வேண்டும் என்று அரசாங்கம் ஆணையிட்டது. 1954-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி கிழக்குப் பாகிஸ்தானில் தாய்மொழிக்கான போராட்டம் பெருமளவில் தொடங்கியது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். பொதுமக்கள் ஆதரவு கொடுத்தார்கள்.
அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கைது செய்தும் தாய்மொழிப் போராட்டத்தை அடக்கியது. ஆனால் தாய்மொழிப் போராட்டம் தனி நாடு போராட்டமாகியது. ஏராளமான மக்கள் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மக்களின் தாய்மொழிப் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. 1971-ம் ஆண்டில் மொழி அடிப்படையில் பாகிஸ்தான் உடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான், வங்க தேசம் என்ற சுதந்திர நாடாகியது. வங்க மொழி அதன் தேசிய மொழி. ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய “சோனார் வங்காளம்’ என்ற பாடல் தேசிய கீதமாகியது. தாய்மொழிக்கான போராட்டம், ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. 
இலங்கை, ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. சிங்களவர்கள் அதிகம். மக்கள் தொகையில் தமிழர்கள் குறைவு. ஆனால் சிங்களம், தமிழ் மொழி இரண்டும் நெடுங்காலமாக இலங்கையில் பேசப்பட்டு வந்தன. இரண்டு தாய்மொழிகளும் எழுத்துகள் கொண்டவை. சுதந்திர இலங்கையில் இரண்டு மொழிகளும் ஆட்சி மொழியாக இருந்து வந்தன. 1956-ம் ஆண்டில் சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி என பண்டாரநாயக அறிவித்தார். “சிலோன்’ என்ற பெயர் “ஸ்ரீலங்கா’ என பெயர் மாற்றப்பட்டது. 
தமிழர்கள் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். அது பெரும் போராட்டமாகியது. ஆயுதம் தாங்கிய தமிழர்களின் உள்நாட்டுப் போரை, இந்தியாவின் உதவியோடு ஸ்ரீலங்கா அரசு அழித்தது. ஸ்ரீலங்கா அரசு, தமிழில் பாடப்பட்டு வந்த தேசிய கீதத்தைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. 
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் 23 தாய்மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றில் சக்தி பெற்ற தாய்மொழிகள் என்றால் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சுதான். மற்ற தாய்மொழிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. தாய்மொழிக்கான போராட்டம் உலகத்தின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. தாய்மொழியை இழக்காமல் இருக்கவும், இழந்த தாய்மொழியை மீட்டெடுக்கவும் போராடி வருகிறார்கள். வங்க தேசத்தில் இருந்து கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்து வான்கூவர் வாசியான ரக்பி சாலமன், 1998-ம் ஆண்டில் ஐ.நா. சபையின் பொதுச்செயலருக்குச் சர்வதேச தாய்மொழிகள் தினம் கொண்டாட ஆவன செய்யுமாறு ஒரு கடிதம் எழுதினார். அக் கடிதத்தை, கனடா, வங்கதேசம், இந்தியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.
உலகத்தில் பல நாடுகளிலும் தாய்மொழிகள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. ஒரு தாய்மொழி அழிவது கலாசாரம், பண்பாட்டின் அழிவு. எனவே, அதைத் தடுக்க தாய்மொழிகளைக் காப்பது அவசியமென ஐந்து நாட்டுப் பிரதிநிதிக்குழு ஆலோசனை கூறியது. அதை, ஐ.நா. சபையின் 188 நாடுகளும் ஏற்றுக்கொண்டன. 
1999-ம் ஆண்டில் இருந்து சர்வதேச தாய்மொழிகள் தினம் உலகம் முழுவதும், வங்க தேசத்தில் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி தொடங்கிய பிப்ரவரி 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தன் தாய்மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் சிறப்பு அம்சம்.
தகவல் உதவி: வி.ஸ்ரீநிவாசன், ஆஸ்திரேலியா