வகுப்புவாதமும் பொது சிவில் சட்டமும்!

-எஸ்.குருமூர்த்தி

cvc

பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை மீண்டும் சர்ச்சைப் பொருளாகியிருக்கிறது. குடிமக்களின் உரிமையியல் தொடர்பான விஷயங்களில் நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும் என்பதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம். அது எவ்வாறு வகுப்புவாதத்துக்கு அடிபணிந்து முடக்கப்படுகிறது என்பதைக் காணும்போது வேதனை மிகுகிறது.

நமது நாடு குடியரசாகி, நமக்கென தனித்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 66 ஆண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால், அரசியல் சாசனத்தின் 44-ஆவது ஷரத்தும், 37-ஆவது ஷரத்தும் கூறியபடி அனைத்து இந்தியர்களுக்கும் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது இன்னமும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இது நமது அரசியலமைப்பின் தோல்விக்கு அடையாளமாகும். Continue reading

அன்றே சொன்னார் அண்ணல்!

-டி.எஸ்.தியாகராசன்  

வாழ்க நீ எம்மான்!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவர் அடையாளப்படுத்திய ஏழு பாவங்களை விலக்கி வாழ சற்றே வரலாற்றை திருப்புவோம். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30-இல் புது தில்லியில் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.

அப்போது பத்திரிகைகளுக்கு ஒருவர் விடுத்த செய்தி. “பாபு நமக்கு விட்டுச் சென்றுள்ள பணியை இனிது நிறைவேற்ற நாம் பகீரத முயற்சி செய்ய வேண்டும். பாபு வாழ்ந்ததும், இறந்ததும் நம் அனைவருக்காகவுமே. ஆண், பெண், குழந்தை ஒவ்வொருவருக்குமாக.

பகைமை, பேராசை, வன்முறை, பொய்மை என்னும் தீய வழியிலிருந்து நம்மைத் திருப்பும் பொருட்டும் பாபு தன் வாழ்நாளில் ஓயாது உழைத்தார். அதற்காகவே மரணத்தையும் தழுவினார்.

நாம் பாவங்களுக்காகப் பிராயசித்தம் செய்து, பாபுவின் புனிதக் குறிக்கோளுக்காகத் தொண்டாற்ற வேண்டுமானால், வகுப்புவாதம் எந்த வடிவில் தோன்றியிருந்தாலும் அது ஒழிய வேண்டும்.

அத்துடன் கள்ள வணிகம், லஞ்ச ஊழல், நியாயமற்ற சலுகைகள், பொறாமை, பகைமை உணர்வு, பொய்மை, வன்முறை ஆகியவற்றின் இருள் தோற்றங்கள் அனைத்தும் அகல வேண்டும். உறுதியான மனத்துடனும், தயங்காத கையுடனும் அவற்றை எதிர்க்க வேண்டும்.

பாபு அன்பே உருவானவர். மென்மையே அவர் பண்பு. ஆயினும் தீயவற்றுடன் போராடுவதில் அவர் தயங்கவில்லை. தன்னிடம் இருந்த தீமையை வென்றதால்தான், புறத்தே தலைதூக்கிய தீமையுடன் பாபுவால் போராட முடிந்தது. நம் முன்னுள்ள மகத்தான பணிக்கு நம்மை அருகதையாக்கும் வகையில் இறைவன் நம்மை தூய்மைப்படுத்துவாராக’.

-இப்படிச் சொன்னவர் பண்டித ஜவாஹர்லால் நேருவோ சர்தார் வல்லபபாய் படேலோ இல்லை. பல ஆயிரம் கல் தொலைவில் உள்ள இங்கிலாந்து நாட்டில் பிறந்து, தனது அறிவின் மேன்மையால், தனது ஆன்ம கடைத்தேற்றத்திற்கு சரியான “குரு’ பாரத நாட்டின் அண்ணல் காந்தியடிகள்தாம் என்பதை உணர்ந்த “மிஸ் ஸ்லோடு’ என்கிற மிஸ் மீரா விடுத்த செய்திதான் மேற்சொன்னவை.

பிரிட்டிஷ் கடற்படையின் கிழக்கிந்திய தலைமைத் தளபதியின் மகளான இவர் எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து எழுதிய காந்திஜி பற்றிய நூலால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளை தனது மானசீக குருவாக வரித்துக் கொண்டவர்.

சபர்மதி ஆசிரமத்தில் சேர விரும்பிய அவருக்கு அண்ணல் ஓராண்டு ஆசிரம வாழ்க்கைக்கு தயார் செய்து கொண்ட பின்னர் அவர் வர விரும்பினால் வரலாம் என்று அனுமதி வழங்கினார்.

ஓராண்டு காலம் தன்னை ஒரு பாரத ஆசிரமவாசியாக மாற்றிக் கொள்ள இங்கிலாந்தில் தானாகவே பயிற்சி மேற்கொண்டார். நடை, உடை, உணவு மற்றும் பாரதத்தின் ஆன்மிக பனுவல்கள் இவற்றில் தேர்ச்சியுற்றார். பின்னர் கப்பலேறி இந்தியா வந்தார்.

சபர்மதி ஆசிரமத்தில் தன் வாழ்வை அர்ப்பணித்தார். 23 ஆண்டுகள் அண்ணலின் அன்பைப் பெற்று அவரது மகளாக “மீரா’வாக வாழ்ந்தார். அவர்தான் அண்ணல் சொல்லிய ஏழு பாவங்களை விலக்கும் விதமாக ஒரு இரங்கற் செய்தியை பத்திரிகைகளுக்கு அளித்தார்.

அந்த ஏழு பாவங்கள் 1. ஒழுக்கம் இல்லாத கல்வி 2. கொள்கையில்லாத அரசியல் 3. உழைப்பு இல்லாத ஊதியம் 4. நேர்மை இல்லாத வணிகம் 5. மனசாட்சி இல்லாத இன்பம் 6. மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் 7. தியாகம் இல்லாத வழிபாடு.

1. ஒழுக்கம் இல்லாத கல்வி: இன்றைய நாளில் மாணவர்களின் ஒழுகலாறுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஊடகங்கள் வாயிலாக கவனித்தால் மனம் அழுகிறது. கல்விக் கருவிகளான எழுதுகோல், ஏடுகள், நூல்கள் தூக்க வேண்டிய கரங்கள் கம்புகளையும், கத்திகளையும் ஏந்துகின்ற காட்சிகள் கண்களில் உவர்நீரை பெருக்குகின்றன.

ஒழுக்கம், நல்ல பழக்கம் பேண ஆசிரியர் அறிவுறுத்தினால் மாணவரின் அரிவாள் வெட்டுக்கு பலியாகிறார். மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவர்தம் வகுப்பறைகளிலேயே மது அருந்தி மகிழ்வதும் வழக்கமாகி வருகிறது. இந்த கொடிய சீர்கேட்டினைத்தான் காந்தி அன்றே ஒரு பாவமாக கருதினார்.

2. கொள்கை இல்லாத அரசியல்: ஆளுக்கொரு கட்சி, அவரவர்க்கு ஒரு கொள்கை, ஒரு கொடி. ஆனால் தேர்தல் களத்தில் நிறம் மாறும் பச்சோந்தி போலவும், மானத்தை விற்கும் மனிதர் போலவும், தனது லட்சியங்களுக்கு முரண்பட்ட கட்சிகளோடு உடன்பாடு கொண்டு அரசு கட்டிலில் அமரத் துடிக்கும் சில கட்சிகளைத்தான், கொள்கையில்லா அரசியல் என்று சொன்னார் தேசப் பிதா.

3. உழைப்பு இல்லாத ஊதியம்: போராட்டக் களமாகட்டும், கொள்கை விளக்கக் கூட்டமாகட்டும், கொடி பிடிக்கும் நேரமாகட்டும், எப்போதாவது நமது தொழிற்சங்கத் தலைவர்கள் யாரேனும் தொழிலாளர்களைப் பார்த்து உழைப்பின் உன்னதத்தை உணருங்கள். உற்பத்தியை பெருக்குங்கள், உழைக்காமல் ஊதியம் பெற எண்ணாதீர்கள். உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்யாதீர்கள்.

வேலைநிறுத்தம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. உழைப்போம், ஊதியம் பெறுவோம். பிரச்னை எதுவாயினும் சரி உற்பத்தி கெடாமல் உயர்வு பெற சிந்திப்போம் என்று சொன்னதுண்டா? நாம் கேட்டதுண்டா? உழைப்பு நல்கா ஊழியம் பெறுதலை அண்ணல் ஒரு பாவமாகவே எண்ணினார்.

4. நேர்மை இல்லாத வணிகம்: வணிகச் சந்தையில் மக்கள் பெருமளவில் விரும்பி வாங்கும் ஒரு பொருளை அதன் வடிவமைப்பிலே போலியாக மற்றொரு பொருளை புழக்கத்தில் விடும் நேர்மையற்ற வணிக முறை இந் நாளில் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.

இயற்கை பேரிடர் காலங்களில், இன்னபிற நெருக்கடியான நேரங்களில் இன்றியமையாத பொருள்களை அதிக விலைக்கு விற்கும் வணிகர்களைக் காண்கிறோம். இப்படி நேர்மையற்ற வணிக முறையைத்தான் பாவம் என எச்சரிக்கிறார்.

5. மனசாட்சி இல்லாத இன்பம்: இன்றைய நாளில் பாலுணர்வு வக்கிரங்கள் நாடெங்கிலும் நடக்கிறது. பச்சிளம் குழந்தைகள் கூட முதிய ஆடவர்களின் காமப் பசிக்கு இரையாவதை கேட்கும்போது மனிதக் கட்டத்தில்தான் நாம் வசிக்கிறோமா என்ற ஐயமே மேலிடுகிறது.

பழங்காலம் தொட்டு கடைப்பிடிக்கின்ற மரபுகள் மீறப்படுகின்றன. வேலியே பயிரை மேய்வதைப் போல கொடும் பாவிகள் வாழும் இந்த சமூக அவலத்தைத்தான் பாபுஜி மனசாட்சி இல்லாத இன்பம் எனக்கூறி தன் வேதனையை கொட்டுகிறார்.

6. மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்: தாவரங்கட்கும் உயிர் உண்டு என்றார் இந்திய விஞ்ஞானி. எவ்வுயிரும் பேதமுறா என்கிறார் வள்ளல் பெருமான்.

ல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கிறார் ஈசன். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் பல்லாயிரக்கணக்கில் எலி, முயல், தவளை, குரங்கு என பல வகை உயிரியினங்களை, விஞ்ஞான அறிவின் மேன்மைக்காக சித்திரவதை செய்து, கொல்லவும் தயங்குவதில்லை.

பல்கோடி மக்களை கொல்லவும் விஞ்ஞான வளர்ச்சியாக ரசாயன கொலைக் கருவிகளை கண்டுபிடிக்கத் தவறுவதில்லை. மானுடம் பால் இவர்கட்கு சற்றேனவேயாயினும் அபிமானம் இருக்குமானால் பல்லூயிர் அழிக்க படைக்கலன் எதற்கு? எனவேதான் அடிகள் இதனை வெறுக்கிறார்.

7. தியாகம் இல்லாத பிரார்த்தனை: ஆண்டுதோறும், திங்கள்தோறும், வாரந்தோறும், நாள்தோறும் இறைவனை தரிசிக்க, பிரார்த்தனை செய்து முடிக்க யாத்திரைச் செல்லும் மக்கள் கூட்டம். இல்லந்தோறும் வழிபாடு, வீதிதோறும் இறைவன் திருவுலா, ஊர்தோறும் உற்ஸவ பெருவிழா. எனினும் பிறர்வாழ தன்னையே அர்ப்பணிக்கும் அற்புத மனிதர் தொகை பெருகிறதா? இல்லையே!

பொது நன்மை கருதி எதையும் இழக்கத் துணியும் தியாக மனப்பான்மை வளருகிறதா? இவை பெருகாத நிலையில் நமது பிரார்த்தனைக்கு பொருள் உண்டா? தியாகமற்ற வெற்று சடங்குகளுக்கு இறைவன் காது கொடுப்பாரா? இதனை கருத்தில் கொண்டுதான் காந்தியடிகள் தியாகம் இல்லாத பிரார்த்தனை ஒரு பாவம் என்றார்.

பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்கூட அண்ணலை நன்றாக புரிந்து கொண்டு அவரின் சொற்களை கவனமாக செவிமடுத்தனர் என்பதற்கு ‘மிஸ் ஸ்லோடு’ விடுத்த பத்திரிகை செய்தி ஓர் உதாரணம்.

இணையற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் “இப்படி எலும்பும், சதையும், குருதியும் கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை பின்வரும் சந்ததியினர் நம்ப மறுப்பர்’ என்று கூறியது மிகவும் சரி. பாரதத்தில் வாழும் நாம் அவரது போதனைகளை இதுநாள் வரை கற்றோம் இல்லை.

தன் இளமையைத் துறந்து, தன் அன்பிற்குரிய பெற்றோரை பிரிந்து, தன் நாட்டை மறந்து பாரதத்தை புண்ணிய பூமியாக கருதி, அண்ணலின் நிழலாக வாழ்ந்த அந்த இங்கிலாந்து காரிகையின் மொழிகளை காந்தி பிறந்த இந்த நன்னாளில் ஏற்று வாழ்வோமாக!

வாழ்க நீ எம்மான்!

நன்றி: தினமணி (01.10.2016)

இந்த யுகம் பாரதியின் யுகம்

– பி.ஸ்ரீ. ஆச்சார்யா

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!தமிழ் இலக்கிய சரித்திரத்திலே ஒரு புதுயுகத்தின் ஆரம்பத்தில் தோன்றியவர் பாரதியார், ஆங்கில இலக்கியத்தின் கூட்டுறவினாலும், தேசியப் பேரியக்கத்தினாலும் இந்தியா முழுவதும் ஒரு புதிய இலக்கிய மறுமலர்ச்சி மண்டியெழுந்த காலத்தில், பாரதியார் நம் நாட்டிலே கவிதைத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு நவீன இலக்கியத்துறைகளிலும், அரசியல் சமூகம் முதலான துறைகளிலும் தம் உள்ளொளியாலும் எழுத்து வன்மையினாலும் வேகத்தினாலும் ஒரு பெருவழி காட்டியிருக்கிறார். இம்மறுமலர்ச்சி யுகத்தை ‘பாரதியுகம்’ என்று சிறப்பித்துப் பேசலாம்.

இவரை நாம் ‘தேசிய கவி’ என்று சிறப்பித்துப் பேசுகிறோம். இத் தேசிய கவி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒருங்கே விடுதலை தேடித் தந்தவர். இவர் பாடல்களை ‘தேச உபநிஷதம்’ என்றும், ‘அரசியல் கீதை’ என்றும் போற்றுகிறோம்.

இந்த தேச உபநிஷத்தின் புதிய சிந்தனைகளோடு பழைய, காலங்கண்ட, இந்து தத்துவத்தின் சாரமான சிந்தனைச் சுடர்களையும், தொன்று தொட்டு வரும் தமிழ் நாகரிகப் பண்பாடுகளையும் பார்க்கிறோம். அகில இந்தியாவின் ஆன்மா தமிழகத்தின் ஆன்மாவாகவும் இக்கவிஞருக்குக் காட்சி தந்தது. ஆம், தமிழ்த் தெய்வமும் பாரத அன்னையும் இவருடைய பராசக்திதானே?

இந்த தேசிய கவி – பராசக்தியின் இந்த ஆஸ்தான கவி- தமிழன்னையின் புதுமைப் புரட்சிக் கவி – வருங்காலத் தமிழக அமைப்பிற்கு வழிகாட்டும் தீர்க்கதரிசியாகவும் திகழ்கின்றார்.

வேதகாலம் தொட்டு, பக்தர்களும் சித்தர்களும் ஞானிகளும் மூழ்கித் திளைத்த ஆன்ம ஒளி கடலில் இத் தேசிய கவியும் மூழ்கித் திளைத்தவர்; எனினும் புரட்சிக் கவிஞர். வேதப் பெருமை பாடிய வாயால் ரஷ்யப் புரட்சியையும் பாராட்டி பொதுவுடைமையின் வெற்றியையும் பாடுகிறார். ஆகவே இவரது புரட்சி மனப்பான்மையில் தெய்வ பக்திக்கும் சமய ஞானத்திற்கும் அஹிம்சா தர்மத்திற்கும் இடமுண்டு. எல்லா மதங்களுக்கும் பொதுவான, சக்திமயமான, புரட்சிகரமான விளைவுகளோடு கூடிய ஞான பக்திக்கும் இடமுண்டு.

காளியும் கண்ணனும் முருகனும் அல்லாவும் கிறிஸ்துவும் ஹரிஜனங்களின் தேசமுத்துமாரியும் இவருக்கு ஒரே தெய்வத்தின் பல பெயர்களே. எத்தனையோ தெய்வ வழிபாடுகளுக்கிடையே பிற்காலத் தமிழர்கள் மறந்துவிட்ட சுதந்திர தேவிக்கு இவர் தனிச் சிங்காதனமிட்டு, பராசக்தியின் அதி முக்கிய அம்சமாகப் பாடியிருக்கிறார். சுதந்திர தேவியின் அருள் பெறாதவர்கள் பாவிகள் என்கிறார்.

‘அரசியல் சுதந்திரமற்ற பாவ பூமியில் புதிய புதிய கலைகளும் காவியங்களும் தோன்றுவதற்கு வழியில்லை, எனவே தமிழிலக்கியமும் க்ஷீணகதியுற்றுப் பாலைவனமாகிவிட்டது’ என்பதை உணர்த்தும் பாரதியார், சுதந்திர வெறி கொண்டு தமிழிலக்கியத்துக்கு புத்துயிர் அளித்தார்.

எல்லாரும் ஓர் குலம்

எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர் நிறை

எல்லாரும் ஓர் விலை

என்ற சுதந்திரக் கனவு நனவாகும்போது புதுமைத் தமிழிலக்கியமும் புதுமைத் தமிழகமும் உலகத்துக்கே ஒரு புதுமையாக வளர்ந்தோங்கும் என்பது திண்ணம்.

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம்

எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து

கழிகவே!

என்று பாடிய பாரதியாரின் சுதந்திர உணர்ச்சி அரசியலில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் புரட்சிகரமாக வெளிப்பட்டது. ஆண்களோடு பெண்களுக்கும் சரிநிகர் சமானமாக விடுதலை வேண்டியவர். பல்வேறு வகுப்பினருக்கும் – முக்கியமாக ஹரிஜனங்களுக்கு – உடனே விடுதலை வேண்டினார். வறுமையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை வேண்டினார். கருத்துச் சுதந்திரம், மத சுதந்திரம் முதலான சகல சுதந்திரங்களும் வேண்டினார்.

இவர் கவிதையை தமிழ்ப் பெருமக்களின் அழியாத அட்லாண்டிக் மகாசமுத்திரத்திலும் கரைந்து போகாத சுதந்திர மகா சாஸனம் என்று சொல்ல வேண்டும். இத்தகைய மகா சாஸனத்தை நமக்கு அளித்த பாரதியாரின் மகத்தான மனப் பண்பையும் ஆத்ம சக்தியையும் பாரதியம் எனலாம்.

ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசத்துடன் நம் மக்கள் இதயப் பிரவேசமும் அளிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி ஹரிஜனப் பிரச்னையை முக்கியமான தேசியப் பிரச்னை ஆக்கியவர் மகாத்மா காந்தி என்பதை அறியாதார் இல்லை. ஆனால் காந்தியடிகளுக்கு முன்பே இத்துறையில் பெருவழி காட்டியவர் பாரதியார் என்பதை தமிழர்களும் நன்றாக அறிந்து கொள்ளவில்லை.

1917ஆம் ஆண்டில் பாரதியார் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஹரிஜனங்களுக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை என்பதை வற்புறுத்தியிருக்கிறார். பட்டணத்து ஹரிஜனங்களைக் குறித்து பாரதியார் பேசவில்லை. கிராமங்களில் உள்ள ஹரிஜனங்களையே குறிப்பிடுகிறார்.

‘அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு… ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து இந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதறவிடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக் கூடிய கைங்கரியம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமான கைங்கரியம்’. ‘நமக்கு மண் உழுது நெல் அறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேர்மையாய் நடத்த வேண்டாமா?’

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்கும் கலெக்டருக்கும் சம்வாதமாக பாரதியார் ‘நந்தன் சரித்திரக் கீர்த்தனை’ மெட்டில் பாடியிருந்த பாடல்கள் பாரதியாரை ஓரளவில் கவிஞரென்று அறிமுகப்படுத்திவிட்டது. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’, ‘வந்தே மாதரம் என்போம்’ முதலான தேசியப் பாடல்கள் ஒருபுதிய தேசிய கவிதையின் உதயத்தை அறிவித்தன. எனினும் ‘பாஞ்சாலி சபதத்’தைப் பார்த்தபோது தான், தமிழ் இலக்கிய வானத்தில் உண்மையாகவே ஒரு புதிய மேதை உதயமாகிவிட்டது தெரியவந்தது.

பாரதியார் பாரத ஜாதியை – தமிழ் ஜாதியை ஒன்றாக்க முயன்றார். அந்த முயற்சிக்கு, ஹரிஜனங்கள் மற்றவர்களோடு இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்று அபிப்ராயப்பட்டார். கங்கையிலே வந்துசேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாக மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறி, தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றனர்.

பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும் இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.

‘ஜாதி பேதங்கள் பிரயோஜனமில்லை என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக்காக, சமத்துவ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லட்சணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்! ஊண், உடை, பெண் கொடுக்கல் முதலிய விஷயங்களில் மூடத்தனமான கட்டுப்பாடுகளும் விதிகளும் தடைகளும் இருப்பதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.. சகல மனிதரும் சகோதரர். மனித வர்க்கம் ஓர் உயிர்’ இவ்வாறு முழங்குகிறது பாரதி முரசு.

பாரதியாருக்கு உண்மையான இந்தியாவும், உண்மையான தமிழ்நாடும் ஆரிய பூமியும் அல்ல; திராவிட ராஜ்யமும் அல்ல. நமது வேதம், நமது சாஸ்திரம், பாஷைகள், நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள், இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து.

காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளஸீ தாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி (இவை பாரதியார் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் படித்த நூல்கள்’) இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து. தஞ்சைப் பெரிய கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனங்கள், எல்லோராவின் குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரபசாஸ்திரியின் புல்லாங்குழல்- இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து’ என்று முரசு கொட்டுகிறவருக்கு, ஆரியனாவது திராவிடனாவது?

இந்த மகத்தான சம்பத்தே பாரதியாரின் இந்தியா-பாரதியாரின் தமிழ் வீடு. இவ்வீட்டிலே தம்பிகளான ஹரிஜனங்களிடம் அண்ணன்மார் விசேஷ அன்பு காட்ட வேண்டும் என்பது பாரதி மதம், பாரதியம்.

‘ஒரு புதுக்கட்டுப்பாடு செய்து கொள்வோமே, அந்தக் கட்டுப்பாடு யாதெனில்- ஒருவருக்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை; ஒருவருக்கொருவர் பயப்படுவதில்லை.

மானிடரே! இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவருக்கொருவர் கோபம், அல்லது அவமதிப்பு, அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். (சாதித்திமிர் உள்ள இந்துக்களும் ஹரிஜனங்களும் நடந்து கொண்ட மாதிரி இது; நிறத் திமிருடன் கூடிய வெள்ளையரும் மற்றவரும் நடந்து கொண்ட மாதிரியும் இதுதான்.)

மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்திருக்கிறது. இதை மாற்றி அன்பை மூலாதாரமாக்க வேண்டும்’.

இந்தப் பாரதிவாக்கை, அரசியல் சுதந்திரம் பெற்ற தமிழர் விரைவில் அமைத்துக் கொள்ள வேண்டிய ஒரு புதுவாழ்வு, இயக்கத்திற்கு அஸ்திவாரக் கல் என்று சொல்லலாம்.

இந்த அஸ்திவாரத்திலே உறுதியான கட்டடமாக அமைய வேண்டும் நமது தமிழர் புதுவாழ்வு இயக்கம். பாரதியத்தைத் துணையாகக் கொண்டால், கட்டடத்தைப் புதுமையாகவும், பெருமையாகவும், அழகாகவும், உறுதியாகவும் கட்டி வாழலாம்.

(கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலுக்கு பி.ஸ்ரீ. ஆச்சார்யா எழுதிய முன்னுரையிலிருந்து…)

இன்று பாரதியார் பிறந்த நாள்.

நன்றி: தினமணி (11.12.13)