வள்ளுவர் வழியில் காந்தியார்

Young Gandhi

தென் ஆப்பிரிக்காவில் காந்தி

-இரா செழியன்

இந்தியாவில் 1918-க்குப் பிறகு ஒத்துழையாமைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய காந்தியார் மகாத்மா என்று பாராட்டப்பட்டார். அதற்கு முன்னதாகவே அவருக்கு மகாத்மா என்ற சிறப்புப் பெயர் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தரப்பட்டது என்று பலரால் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த காலத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, எம்.கே.காந்தி, காந்தி ஆகிய பெயர்களில் தான் அவர்களுடைய கட்டுரைகள், கடிதங்கள், குறிப்புகள் எல்லாம் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் அவரது போராட்டங்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் காந்தி என்ற பெயர் பொதுவாக தரப்படுகிறது.

தமது ஆயுட்காலத்தில் மகாத்மா காந்தி எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் அனைத்தையும் எடுத்து இந்திய அரசாங்கத்தின் செய்தி – ஒளிபரப்பு அமைச்சகம் 98 தொகுப்புகளில் – தேதி உட்பட நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் – 1988-இல் வெளியிட்டது.

1907-இல் தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபொழுது, ஆங்கில காமன்வெல்த் அமைப்பின் தென்னாப்பிரிக்க அரசாங்கம் ஜெனரல் ஸ்மட்ஸ் தலைமையில் இருந்தது. 1907 மார்ச் மாதத்தில் இந்தியர்-சீனர்களைப் பாதிக்கும் டிரான்ஸ்வால் ஆசியாவினர் பதிவுச் சட்டம் போடப்பட்டது. அதன்படி, தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்களும் சீனர்களும் பத்து விரல்களின் பதிவுடன் அரசாங்கத்துக்கு தமது வாழும் விவரங்களைச் சட்டபூர்வமாகத் தரவேண்டும்.

அதற்குக் கடுமையான எதிர்ப்பு இந்திய – ஆசிய மக்களிடமிருந்து வந்தாலும், அமைதியான முறையில் அதன் விளைவுகளைச் சமாளிக்க காந்தியார் முதலில் பாடுபட்டார். ஆயினும் ஸ்மட்ஸ் தந்த ஒப்புதல்கள் நிறைவேற்றப்படாத நிலையில், அந்தச் சட்டப்பிரிவை செயல்படுத்த அரசாங்கம் முற்பட்டது.

கடைசியாக 1907 ஜூலை மாத இறுதியில் பிரிட்டோனியா நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அமைதியான தடுப்பு முயற்சி (பாசிவ் ரெசிஸ்டன்ஸ்) என்று காந்தியார் பின்பற்றும் சாத்வீக முறை பலவீனமானமானவர்கள் நடத்தும் செயல்முறை என்று பலர் நினைத்ததால், நீண்ட ஆலோனைகளுக்குப் பிறகு அமைதியான எதிர்ப்புப் போராட்டமான சத்யாகிரகத்தை (சத்யா என்றால் உண்மை, கிரகம் என்றால் பலமானது) முதலில் தென்னாப்பிரிக்காவில் காந்தி ஆரம்பித்தார். பிறகு இந்தியாவில் அது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் காந்தியாரின் சத்யாகிரகம் இடம் பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் நடத்திய சத்யாகிரகப் போராட்டங்களில் தமிழர்கள் பெற்ற பங்கினையும் தியாகத்தையும் விளக்கி, தமது  ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழில் பலமுறை அவர் எழுதியுள்ளார். அவற்றில் சில நிகழ்ச்சிகள் பின்வருமாறு: தொகுப்பின் (வால்யூம்) எண், தேதி ஆகியவற்றின் விவரங்கள் அடைப்புகளில் தரப்பட்டுள்ளன.

காந்தியின் சத்தியாகிரகங்களில் தமிழர்களின் பங்கு:

ஜோகன்ஸ் எல்லையை விட்டு 48 மணி நேரத்தில் அகன்றுவிட வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் இட்ட உத்தரவை காந்தி நிறைவேற்றவில்லை என்று, மறுநாள், 1908 ஜனவரி 10, மாஜிஸ்ட்ரேட்முன் குற்றவாளியாக அவர் நிறுத்தப்பட்டார். குற்றத்தை ஏற்றுக் கொண்டு, உரிய தண்டனைக்குத் தயாராக இருப்பதாக காந்தி கூறினார். இரண்டு மாத தண்டனை போதுமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுதான் காந்தி வாழ்க்கையில் முதல் தடவையாக சிறைக்குச் சென்ற நிகழ்ச்சி.

காந்தி சிறை சென்ற விவரத்தை வெளியிட்ட ராண்ட் டெய்லி மெயில் என்ற செய்தித்தாள், அவருடன் வழக்கில் இணைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள், பி.கே.நாயுடு, இ.எம்.பிள்ளை, ஜான் போர்ட்டன், எம்.ஈஸ்டன், எம்.ஈ.கட்வா ஆகியோர் என குறிப்பிட்டுள்ளது.

இதில் பங்கு பெற்ற நாயுடு மீண்டும் சிறை சென்றபொழுது அவரின் தியாகச் செயல்பற்றி காந்தி எழுதினார்:

“அப்பொழுது அவருடைய மனைவியின் குறைப் பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டது. இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், சமுதாயத்துக்கு தான் ஆற்றும் கடமையாக நாயுடு சிறைசென்றார். அவரைவிட அவர் மனைவி மேற்கொண்ட வைராக்கியம் குழந்தையை இழந்த ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. இதை ஆழ்ந்த துயரத்துடன் எழுதுகிறேன்”

(இந்தியன் ஒப்பீனியன் ஆசிரியராக இருந்த காந்தி இதனை தம்பெயரில் வெளியிட்டார் -தொகுதி 8 – தேதி 1908 ஆகஸ்ட் 3).

ஜோசப் ராயப்பன், டேவிட் ஆண்ட்ரூ, சாமுவல் ஆகியோர் இன்று மூன்று மாத தண்டனை பெற்றனர். எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிகமாக தமிழ் சமுதாயத்தினர் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் மட்டும்தான் இப்பொழுது போராட்டங்களில் ஈடுபடத் தயாராக இருக்கின்றனர். மற்ற வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அடங்கி விட்டார்கள். ராயப்பன் போக்கில் சத்யாகிரகத்தில் பங்கு பெற்றவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு வேறு பேர்வழிகள் யாரும் முன்வரவில்லை.

(தொகுப்பு 10 – தேதி 5 பிப்ரவரி, 1910)

சத்யாகிரகிகளுக்கு ஒரு ஆலோசனை:

”சத்யாகிரக அணிவகுப்பில் தற்பொழுது எஞ்சி இருப்பவர்கள் தமிழ் நண்பர்கள் மட்டும்தான். நான் குஜராத் மொழியில் எழுதும் கட்டுரை அவர்களுக்கு எட்டுமா என்பது தெரியவில்லை. அவர்களிலும் குஜராத் மொழி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சிறையில் இருப்பவர்களைச் சந்திக்க நான் விரும்பினேன். ஆனால் சிறையில் இருந்து வெளிவந்தவர்கள் சிறைக்கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.  சிறைக்குச் செல்லாதவர்கள் சிலர் கைதிகளைப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் உணர்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது”

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பற்றி, டி. ஸ்ரீநிவாசன், பாரிஸ்டர் அட் லா, கிரிட்டிக் ஆபீஸ், கோமளீஸ்வரன் பேட்டை, மவுண்ட் ரோடு, மதராஸ் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம்:

உங்களுடைய 20 ஜனவரி கடிதத்துக்கு உடனடி பதில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும். இங்குள்ள இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் பிள்ளை, முதலியார், நாயுடு, செட்டியார், படையாச்சி என்று இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு வந்த பிறகு சிலர் கிருத்துவர்களாக ஆகியுள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் சற்று முன்னேறியவர்கள். இது அவர்களுடைய நாட்டுப்பற்றைக் குறைத்துவிடவில்லை.

நமது போராட்டம் நிச்சயமாக வெற்றியை அடையும் காலம் வரும். அதில் எனக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது. வெற்றி பெறுவதை தமிழர்களின் விவரிக்க முடியாத வீரமும், மன திடமும் துரிதப்படுத்துகின்றன. தென்னாப்பிரிக்காவில் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து ஏதோ ஒரு வகையில் அவர்கள் பக்கம் நான் சென்றேன். ஆனால் யாரும் கனவு காண முடியாதபடி அவர்களுடைய தீவிரமும், நாட்டின் பிரச்னைக்காக பெரிய அளவில் ஈடுபடும் தியாக சக்தியும் இருந்தன. மேலும் நீங்கள் கடிதம் எழுதினால் நான் பதில் எழுதுகிறேன்.

-இங்ஙனம் எம்.கே.காந்தி,

(தொகுப்பு 10 – தேதி 1910 மார்ச் 24).

தொபிசாமி, செல்லையா, டேவிட் சாலமன், முனுசாமி செல்லன், முனுசாமி பால், ஜான் எட்வர்ட், ஆகியவர்கள் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோவிந்தசாமி நாராயண் பிள்ளை, கணபதி நாராயண் பிள்ளை, எல்லாரி முனுசாமி, மதுரை முத்து, முனுசாமி, சின்னசாமி, கோவிந்தசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிப்பட்டு தமது வேலை, சம்பளம் ஆகியவற்றை இழந்து, அரசாங்கம் தந்த கட்டாயக் குடியுரிமை ஏடுகளை எரித்தவர்கள். அவர்கள் எல்லோரும் தமிழர்கள். எத்தகைய அச்சமும் திகைப்பும் இல்லாமல் அவர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழ் சமுதாயத்தினர் செய்யும் தியாகத்துக்குத் தக்க இடம் உலகளாவிய வரலாற்றில் இடம் பெறும்

(தொகுப்பு 10 – தேதி 1910 ஏப்ரல் 4).

ரஸ்கின், தோரியோ கருதிய ஒத்துழையாமை இயக்கம்:

வன்முறையைத் தவிர்த்து சாத்வீகமான முறையில் மக்கள் நல் வாழ்வுக்கான முடிவுகளை அடைவதற்கு, காந்தி தமது போராட்ட முறையை வளர்த்துக் கொண்டார். ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் ,அமெரிக்க மேதை தோரியோ ஆகியோர் வெளியிட்ட கருத்துகள் காந்தியை மிகவும் கவர்ந்தன.

ஜான் ரஸ்கின் (1819-1900) சமுதாய-பொருளாதார நிலைமைகளில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தினார். இயந்திரத் தொழிலின் பெருக்கம், பொருளாதாரத்தில் மக்களின் ஏற்றத் தாழ்வுகளை விரிவுபடுத்தியதுடன், மனிதர்களின் ஒழுக்கமுறைகளை சிதைத்துவிட்டது என்று அவர் கருதியது காந்திக்கு மிகவும் முக்கியமானதாகப் பட்டது.

ஹென்றி டேவிட் தோரியோ (1817-62) முன்வைத்த கோட்பாடு, அரசாங்கம் செய்யும் அநீதிகளைப் போக்க மக்களின் ஒத்துழையாமை இயக்கம் மிகவும் தேவையான ஒன்று. அரசாங்கத்தின் உள்நின்று சீர்திருத்தங்களைச் செய்ய முயல்வது பயன்தராது. அமெரிக்காவில் இருந்த அடிமைத்தனத்தைக் கண்டித்து வரி செலுத்த மறுத்து தோரியோ ஒரு நாள் சிறைவாசத்தை ஏற்றுக்கொண்டார். தோரியோவின் ஒத்துழையாமை இயக்கம் என்ற ஏற்பாடும் வரிசெலுத்த மறுத்து சிறைவாசம் மேற்கொண்டதும் காந்தியாரின் சத்யாகிரகப் போராட்டங்களில் இடம் பெற்றன.

டால்ஸ்டாய் அறிமுகப்படுத்திய திருக்குறள்:

லியோ டால்ஸ்டாய் (1828-1910) ருஷியாவின் பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய சிறுகதைகளும், தத்துவங்கள் நிரம்பிய கட்டுரைகளும் காந்தியின் கவனத்தை ஈர்த்தன. 1990 செப்டெம்பர் மாதத்தில் லண்டனில் வெளிவந்த இல்லஸ்ட்ரேட்டட் நியூஸ் வீக்லி என்ற பத்திரிகையில் டால்ஸ்டாய் எழுதிய ’இந்துவுக்கு ஒரு கடிதம்’ என்ற நீண்ட கட்டுரை காந்தியார் கவனத்துக்கு வந்தது.

டால்ஸ்டாய் அந்தக் கட்டுரையில் எழுதினார்: ஒரு வியாபாரக் குழு 20 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டை அடிமைப்படுத்தி விட்டது. என்ன நடந்தது என்றால், 30,000 பேர் பலசாலிகளாக இல்லை, எலும்பும் தோலுமாக இருந்தவர்கள் 20 கோடி மக்களை அடக்கிவிட்டார்கள் என்றால், அது இங்கிலீஷ்காரர்களின் சாமர்த்தியமல்ல; இந்தியர்கள் தம்மையே அடிமையாக்கிக்கொண்ட நிலைமை தான்.

பிறகு டால்ஸ்டாய்க்கு காந்தியார் கடிதம் எழுதி அவரின் அனுமதியைப் பெற்று கட்டுரையின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். அதிலிருந்து டால்ஸ்டாயுடன் காந்தி கடிதங்கள் மூலம் அவரின் கருத்துகளை அறிந்து கொண்டார். ஒரு வன்முறையை எதிர்த்து நிற்க மற்றொரு வகை வன்முறையை மேற்கொள்ளாமல் அமைதியான வகையில் செயல்படலாம் என்ற கோட்பாடு எப்படி டால்ஸ்டாய்க்கு வந்தது என்று காந்தி வினவிய பொழுது, டால்ஸ்டாய் பதிலளித்தார், ’நான் திருக்குறளின் மொழிபெயர்ப்பை படித்தபொழுது வள்ளுவர் எழுதிய இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் உள்ள இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறள் தந்த உணர்வுதான்’ என்று பதில் அனுப்பினாராம்.

அந்தக் குறளின் முழு வடிவம்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

இதன் பொருள் ’தனக்குத் துன்பம் கொடுத்தவரைத் தண்டிக்கும் முறையாவது, அவர் வெட்கப்படும்படியான அளவுக்கு நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமையையும் தான் செய்த நன்மைகளையும் ஒருங்கே மறந்துவிடுதலாகும்’.

இதுபற்றி மகாத்மா காந்தி அவர்களே வெளிப்படையாகக் கூறினார்:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அதன் மொழியிலேயே படிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்மொழியை நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததற்குக் காரணம். அந்த நூலைப்போல் ஒழுக்க நெறிமுறைகளை மக்களுக்கு ஊட்டும் அறிவுக் களஞ்சியம் வெறெதுவும் இருக்கமுடியாது.

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் வழிநின்று தமிழர்கள் அவருடைய போராட்டங்களில் ஈடுபட்டனர்.  தமிழ்ப் பெரும் புலவர் வள்ளுவர் வகுத்த வழியிலேயே காந்தியார் தமது போராட்டங்களை நடத்தினார்..

நன்றி: தினமணி (02.10.2013)

.

Advertisements

கிருஷ்ணஸ்வாமி அய்யர் என்ற மாமனிதர்

– பிரபா ஸ்ரீதேவன்

V. Krishnaswami Iyer

வி.கிருஷ்ணசாமி ஐயர்
(1863, ஜூன் 15 – 1911, டிசம்பர் 28)

வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் நூற்று ஐம்பதாவது நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. பள்ளிப்படிப்பு முடித்து சென்னை வந்து பட்டப்படிப்பு முடித்தார். அவரை சட்ட படிப்பு படிக்குமாறு அறிவுரை தந்தவர் ஹிந்து பத்திரிகை நிறுவனர் கஸ்தூரிரங்க அய்யங்காரின் தமையனார் ஸ்ரீனிவாச ராகவ அய்யங்கார். 1885 இல் வக்கீல் சன்னது பெற்று பாலாஜி ராவ் சேம்பர்ஸில் சேர்ந்தார். பிறகு 1888 இல் வக்கீலாக தன் முத்திரையை பதித்து நன்கு சம்பாதிக்க தொடங்கினார். 1911 இல் அவர் வாழ்க்கைப் பயணம் முடிந்தது.

கல்வி, சமூகவியல், சுற்றுப்புறசூழல், அரசியல், வணிகவியல், மருத்துவம், சட்டம், கலாசாரம், இலக்கியம், சமயம் என்று அவர் தடம் பதித்த துறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மறக்க முடியாத மாமனிதர். மறக்க கூடாத மாமனிதர். இன்று மெரினாவிற்கு காற்று வாங்கப்போனால் அவருக்கு நன்றி கூறவேண்டும். ஏன் என்று சொல்கிறேன்.

1890 களில் தென்னிந்திய ரயில்வே, மயிலையையும் கிண்டியையும் இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தது. அதற்கு மெரினா வழியாகவே தடம் செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . 1903 இல் வேலை துவங்கும் நிலையில் ஒரு மாபெரும் கூட்டத்தை வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் கூட்டினார். அந்தக் கூட்டத்தைக்கண்டு அரசு அஞ்சியது என்று சரித்திர ஆர்வலரும் எழுத்தாளருமான வி. ஸ்ரீராம் கூறுகிறார். அங்கே வி. கிருஷ்ணஸ்வாமி “இந்த கடற்கரைதான் இந்த நகரத்தின் நுரையீரல், அதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்’ என்றார். அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது.

எப்படிப்பட்ட தொலைநோக்குப்பார்வை? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் .  ’நீ என்ன கூட்டம் கூட்டுவது நான் என்னக் கேட்பது’ என்று அரசு பொதுமக்களின் உணர்வுகளை புறக்கணிக்கவில்லை. மெரினா அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது . நம் சென்னைக்கு இயற்கை அளித்த செல்வத்தை இன்றும் அவர் சிலையாக நின்று பார்த்து மகிழ்கிறார்.

நாட்டுப்பற்றும் தேசிய உணர்வும் தனது கலாசாரத்தைப்பற்றிய பெருமையும் உள்ள ஒருவர் எப்படி சிந்திப்பார் என்பதற்கு அவர் 1910 இல் அலாகாபாதில் ஒரு கூட்டத்தில் பேசியதே சான்று “நம்மிடையே சில அதிர்வுகள் இருக்கலாம்; நம் நாட்டின் முன்னேற்றத்தை ஏதோ தடுப்பது போல தோன்றலாம்; சாதிப் பிரிவுகளோ மதப்பிரிவுகளோ இருக்கலாம்; வெளியில் தெரியும் மாறுபாடுகள் நம் மக்கள் முன்னேறி பீடு நடைபோடுவதைத் தடுப்பது போல தோன்றலாம்; ஆனால் ’ஒற்றுமையான இந்தியா’ என்ற அடித்தள உயிர்ப்பு இருக்கிறது அது நிச்சயம் மெய்ப்படும். அந்த நாள் வரும்பொழுது, நம் நாடு இளங்காலையாக இல்லாமல் உச்ச்சத்தில் ஜொலிக்கும் கதிரவனாக இருக்கும். கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்த நமக்கு எதிர்காலமும் நிச்சயம் ஒளிரும்”

இந்தச் சொற்பொழிவை சென்னை சம்ஸ்க்ருத கல்லூரியின் பொன் விழா மலரில் படித்தேன். அன்று அவர் பேசப்பேச கரகோஷங்கள் ஒலித்திருக்கின்றன.  ‘நிறுத்தட்டுமா’ என்று அவர் கேட்டும் அரங்கத்தினர் அவரைத் தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

சென்னை சர்வகலாசாலையில் அவர் செனட், சிண்டிகேட் இரண்டிலும் அங்கத்தினராக இருந்தார். 1911 ஆம் ஆண்டு பட்டமளிப்பு உரையின் முடிவில் அவர் கூறுகிறார்,  ‘நம் கடமை நம் நலத்தைப் பேணுவதில் மட்டும் முழுமை அடையாது, நமக்குப் பின்னால் வருபவர்கள் நன்மைக்காக நாம் உழைக்க வேண்டும். புத்தன் முழுமை பெற்றது பிறர் நலனுக்காக உழைத்தபோதுதான். கப்பல் படைகளோ, ஆயுதங்களோ , பன்னாட்டு வணிகமோ, அரசியல் அமைப்புகளோ, பொருள் வளமோ இவை எதுவுமே அறிவுச்செல்வத்திற்கு ஈடாகாது. கல்வியும் அறிவுமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உலக அமைதிக்குப் பணியாற்ற வழி வகுக்கும்’.

இன்று அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அவர் அன்றே அதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்தார். மைசூர் கலாசாலையில் முதல் முதலாக பி.ஏ பட்டம் பெற்ற இரு பெண்மணிகளை சென்னைக்கு வரவழைத்து கெüரவித்தார்.

அவர் மகன் சந்திரசேகரன் அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றில் சொல்கிறார், “அப்பொழுது கலாசாலைகளில் தீண்டத்தகாதவர் என்றும் கீழ்சாதியினர் என்றும் கூறி பட்டம் பெறுவதில் தடைகள் இருந்தன. கள்ளிக்கோட்டையில் இருந்த ஒரு கல்லூரி சென்னை சர்வ கலாசாலையில் சேர்க்கப்படாமலே இருந்து வந்ததாம். அதை சேர்த்தால் அங்கு கல்வி பெறும் தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்ட இனத்தைச்சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று கருதினார்கள்.

சர்வகலாசாலை ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் அந்த கல்லூரியை இணைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார். இப்படி அக்கலாசாலையை சென்னை சர்வகலாசாலையுடன் சேர்த்ததால் பிற்பாடு தீண்டத்தகாதவர்கள் என்று புறக்கணிக்கப்பட்டு வந்த சமூகத்தினரை மேல் படிப்பிலிருந்து விலக்க வழியில்லாமல் போய்விட்டது. அவருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்துடன் ராரிச்சன் மூப்பன் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி அவருக்கு ஒரு தீபஸ்தம்பம் உயர்த்தினார்கள் என்று கி. சந்திரசேகரன் எழுதுகிறார்.

அவர் இன்னும் அதிக காலம் வாழ்ந்திருப்பாரேயானால், மற்ற ஊர்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்னைகளைத் தீர்க்க வழி செய்திருப்பார் என்றும் எழுதியுள்ளார்.

“ஒருமுறை ஒரு சமஸ்கிருத பண்டிதர் சமஸ்கிருதத்தின் பெருமைபற்றி பேசினாராம். கிருஷ்ணஸ்வாமி அய்யர் நானும் அவைகளைப் படித்திருக்கிறேன். உயர்ந்த அர்த்தம் அவைகளில் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் பாடிய மாத்திரத்தில் மனதைக் கவ்விக்கொண்டு உருக்குவதில் தேவார திருவாசகங்களுக்குச் சமமாக ஏதோ ஒன்று இரண்டுதான் அப்படி இருக்கலாம்” என்று அழுத்தமாகக் கூறினார் என்று அவருடைய தமிழபிமானத்தைப்பற்றி மகாமஹோபாத்யாய டாக்டர் உ.வே சாமிநாத அய்யர் பதிவு செய்கிறார்.

வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் பாரதியாரை பல பாடல்களைப் பாடச்சொல்லி அவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார். ஒருமுறை திருவாசகம் பாடிக்கொண்டிருந்த பாடகரை வேறு பாட்டை பாட சொன்னவரிடம் “தேவாமிர்தத்தைச் சாப்பிட்டுகொண்டிருக்கும்போழுது கொஞ்சம் பிண்ணாக்கு கொண்டுவா வென்று சொல்வதுபோலிருக்கிறது உம் பேச்சு’ என்றாராம்.

அர்பத்னாட்டு வங்கி மூழ்கியதும் அதற்கு காரணமாக இருந்த சர் அர்பத்னாட்டை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் மிக பிரசித்தம். அந்த வங்கி திவாலான பின்தான் அவர் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி துவக்க முடிவெடுத்தார்.

அக்காலங்களில் பாரிஸ்டர்கள் மட்டுமே இன்சால்வன்சி நடவடிக்கைகளை நடத்த முடியும். வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் பாரிஸ்டர் அல்ல வக்கீல்தான். ஆகையால் நீதிமன்றத்தில் வக்கீல் அங்கியைக் கழற்றி தான் சுதேச நிதியின் சார்பில் பணம் இழந்தவராக (பார்ட்டி இன் பெர்சன்) வாதிட்டார்.

அன்று வானொலி கிடையாது. தொலைக்காட்சி கிடையாது. அவருடைய குறுக்கு விசாரணையைக் கேட்க மக்கள் நீதிமன்றத்தில் கூடுவார்களாம். அவரது குறுக்கு விசாரணைகளை பத்திரிகைகள் அப்படியே பிரசுரித்தனவாம். அவருடைய கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் குற்றவாளிகள் திணறியதை சரித்திரம் பதித்துள்ளது.

ஈகைக்குணம் அவருடனே பிறந்தது என்று சொல்லலாம். ஒருமுறை அவர் உணவருந்திக்கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் பிரச்னை தீர ஒரு குறிப்பிட்ட தொகை பண உதவி கேட்டு அவர் கிராமத்திலிருந்து ஒருவர் வந்தார். கொடுக்கிறேன் என்று சொல்லி பாதி உணவிலேயே எழுந்துவிட்டாராம். ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் கேட்ட தொகை முழுவதும் கொடுக்கலாம் என்று இப்பொழுது எண்ணுகிறேன். சில நிமிடம் சென்றால் மனம் மாறிவிடலாம், அதனால்தான் என்றாராம்.

கொடுக்கவேண்டும் என்று தோன்றினால் கேட்பது எந்த ஒரு ஸ்தாபனமோ, மனிதரோ, அவர் கை கொடுத்துவிடும். சுவாமி விவேகானந்தர் சிகாகோவிற்கு உலக மதங்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு வழியனுப்பவும், சுவாமி திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளில் அவரும் ஒருவர். சுவாமி விவேகானந்தருக்கு நூற்று ஐம்பதாவது ஆண்டு விழா நடக்கும் இவ்வாண்டில் இந்தக் கட்டுரையின் நாயகருக்கும் விழா நடப்பது பொருத்தமே. 49 ஆண்டுகளே வாழ்ந்த அவர் எப்படி இத்தனை சாதனைகள் புரிந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

கோகலே, ரானடே பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்று நாடெங்கும் அவரை அறிந்தவர் பலர். அவர் இறந்த அன்று நாள் முழுவதும் அவ்வப்பொழுது பீரங்கி வெடித்து அரசு தனது இரங்கல் மரியாதையை அறிவித்தது. நம் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் அவரை “மகாபுருஷர்’ என்று வர்ணித்தார்.

எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், அது நான் வி. கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பதுதான். எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால் அதற்கும் காரணம் நான் வி. கிருஷ்ண ஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பதுதான்!

.

குறிப்பு: கட்டுரையாளர், ஓய்வு பெற்ற உயர்நீதின்ற முன்னாள் நீதிபதி.

நன்றி: தினமணி (23.09.2013)

காண்க: V. Krishnaswamy Iyer (wiki)

.

ஓவியக் கலைஞர் காப்பியக் கவிஞர் ஆனார்!

 -டாக்டர் சரஸ்வதி ராமநாதன்

 

Ramalingampillai

நாமக்கல் கவிஞர்

வெ. ராமலிங்கம் பிள்ளை

(அக். 19, 1888 – ஆக. 24 ,1972)

 மூதறிஞர் ராஜாஜி,  “திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்தது” என்று கூறினார். அது நூற்றுக்கு நூறு சரியே!

பாரதியிடமிருந்து அவனது கவிதா  மண்டலம் பெற்றவை எனப் பின்வருமாறு சொல்வேன்:

  • தமிழுணர்வு, புரட்சி – பாவேந்தராக, சுரதாவாக
  • காந்தியம் – நாமக்கல்லாராக
  • தொழிலாளர் நலன் – திரு.வி.க. வாக
  • பொதுவுடைமை – ஜீவா, பட்டுக்கோட்டையாராக
  • பக்தி, தத்துவம் – கண்ணதாசனாக!

”ஒன்று மட்டும் உண்மை – அறிவு

ஊற்றில் எழும் பாட்டெழுதும்

செந்தமிழ் மாகவிக்கு மரணம்

வந்தபின்பு தான் பெருமை ஜனனம்”

என்ற கண்ணதாசன் வாக்கு சரியில்லாமல் போனது.

நாமக்கல்லாரும், கவியரசரும் வாழும் போதே பெருமை பெற்று ‘அரசவைக் கவிஞர்’ ஆகிவிட்டனரே!

சிறந்த ஓவியராக ராமலிங்கம் படங்கள் வரைந்து அவற்றை விற்று எளிய வாழ்வு வாழ்ந்து வந்தார். “நாட்டு விடுதலையில் நான் கொண்டிருந்த தீராத தாகமே என்னை ஓவியத்திலிருந்து காவியத்துக்கு இழுத்து வந்தது” என ‘என் கதை’ எனும் சுயசரிதையில் எழுதுகிறார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1953ல் ஜவஹர்லால் நேருவிடம் கவிஞரை அறிமுகப்படுத்தும்போது,  “மகாகவி பாரதிக்குப் பின் தேசிய கவிகளை இயற்றி, காந்தியடிகளின் அறப்போராட்டங்களுக்குக் கவிதை எழுதி, மக்களைச் சத்தியாகிரஹப் போராட்டங்களில் ஈடுபடுத்தியதுடன், தானும் சிறை சென்றார். காந்தியை, காந்தியத்தைக் குறித்து நாமக்கல் கவிஞர் போல எந்த மொழிக் கவிஞரும் எழுதவில்லை” என்று பாராட்டினார்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!”

-இது விடுதலைப் போர்வீரர்களுக்கு வீரநடைப் பாட்டு ஆனது. காந்தியின் சத்யாகிரஹத்தை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா?

”1906 கர்சனின் வங்கப் பிரிவினையால் நாடெங்கும் எழுந்த தேசியக் கிளர்ச்சியே எனது தேசாபிமான உணர்ச்சியின் எழுச்சி” என்கிறார் நாமக்கல்லார். அரவிந்தரின் ‘கர்மயோகி’ ‘வந்தே மாதரம்’; மோதிலால் கோஷ் நடத்திய ‘அமிர்த பஜார்’ ஆகிய பத்திரிகைகள் கவிஞரைப்போல் பல இளைஞர் நெஞ்சில் தேச பக்திக்கனலையும், சுதந்திர மூட்டின. 18 வயது . (அந்தக் காலப் புகுமுக வகுப்பு) படித்துக் கொண்டிருந்த சராசரி இளைஞனுக்கு உரிய கோரிக்கை விருப்பம் எதுவுமின்றி இந்திய சுதந்திர வேள்வியில் ஈடுபட்டார். இளமனதில் வீர சுதந்திரக்கனலை மூட்டிய அரவிந்தர் என்ற மகானைக் காணப் புதுவை சென்றார்.  வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா ஆகியோரை மட்டும் பார்த்து வந்தார்.

ஊர் ஊராகச் சென்று அரசியல் சொற்பொழிவுகள் நடத்தியதுடன் இயன்ற வழிகளில் எல்லாம் சேவை செய்தார். 1914, திருச்சி அரசியல் மாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரைச் சந்தித்து, தான் வரைந்த சில படங்களையும் தந்து ஆசி பெற்றார். தேசபக்தியை நாடக வழி ஊட்டிய டி.கே.எஸ். சகோதரர்கள், கிட்டப்பா ஆகியோருக்குப் பல பாடல்கள் எழுதித் தந்தார். இவரது தேசபக்தி, இவர் செய்து வந்த ஆசிரியத் தொழிலிலிருந்து பணி நீக்கம் செய்ய வைத்தது. (போர்டு உயர்தர ஆரம்பப் பாட சாலை)

‘சுயராஜ்ஜியம் என் பிறப்புரிமை; எப்படியும் அதை அடைந்தே தீருவேன்’ என்ற திலகரின் கோஷ்டி, தீவிரவாத கோஷ்டி என்றனர். முடிவு மட்டுமல்ல, முறையும் சாத்வீக முறையாக இருக்க வேண்டுமென்ற காந்தி, கோகலே கோஷ்டி மிதவாத கோஷ்டி எனப்பட்டது. (காங்கிரஸ் என்றாலே கோஷ்டி எப்போதும் உண்டு போல!) 1914ல் தூத்துக்குடியில் கவிதைப் போட்டி ஒன்று நடத்தப் பெற்றது. தேசபக்திப் பாடல்கள் 100 புனைபவருக்குத் தங்கப் பதக்கமும் 500 ரூபாயும் பரிசு. நாமக்கல் கவிஞரும் 100 கவிதைகள் யாத்து அனுப்பினார். ஆனால் அரவிந்தர், திலகர் குறித்த பாடல்களை நீக்கினால் பரிசு தருவோம் என்ற அமைப்பாளரின் கருத்தை மறுத்து, எனக்கு உங்கள் பரிசு பெரிதல்ல; என் கொள்கையே பெரிது” என்று மனத்திட்பத்துடன் திரும்பினார் ராமலிங்கம்.

பரிசுக்கு ஏங்கியவரல்லர் கவிஞர். பின்னர் சேலத்தில் அந்தப் பாடல்கள் ராஜாஜி, சேலம் அனந்தாச்சாரியார், சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. ‘புலவர்’ என்று பட்டம் தந்தனர்.

”டி.கே.எஸ். சகோதரர்கள்,  ம.பொ.சி. இவர்களைப் பலமுறை நான் பார்த்துப் பேசி, அவர்கள்முன் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். தூய வெள்ளை நிறக் கதர் தவிர பிற ஆடை அறியாதவர்கள். தேசபக்தி, தெய்வபக்தி நிறைந்தவர்கள். டி.கே. சண்முகம் அவர்கள் நாமக்கல்லாரின் ‘ஆடு ராட்டே’ பாட்டு ஒவ்வொரு தமிழனின் இதய வீட்டிலும் ஆடியது” என்றார்.

‘ஆடு ராட்டே! சுழன்று ஆடு ராட்டே!

சுழன்று சுழன்று சுழன்றாடு ராட்டே!

சுயராஜ்ஜியம் வந்ததென்று ஆடு ராட்டே!

அந்நியர்கள் நூல் கொடுத்தும் ஆடை கொடுத்தும்

அங்கத்தை மூடுகின்ற பங்கம் ஒழியும் – நம்

கன்னியர்கள் நூற்கப் பல காளைகள் நெய்ய – நாம்

காத்துக் கொள்வோம் மானம் என்று ஆடு ராட்டே!’

-இதை அவர் முன்னிலையிலேயே, தமிழிசைப் பள்ளி மாணவியர்  நாங்கள் பாடி வாழ்த்துப் பெற்றோம் (வருடம் 1953). செட்டிநாட்டுடன் நிறையத் தொடர்பு கொண்டவர் நாமக்கல்லார். எங்கள் பள்ளத்தூர் முத்தையா ஆச்சாரி, சுப்பையா ஆச்சாரி சகோதரர்கள் கவிஞரைப் பலமுறை அழைத்துவந்து தங்கவைத்து, உதவிகள் செய்ததை நான் அறிவேன். அவர்களும் மிகச் சிறந்த காந்தி பக்தர்கள்.

1914, கானாடுகாத்தானில் பாரதியைச் சந்தித்தார் கவிஞர். வெங்கட கிருஷ்ணய்யா கவிஞரை ”இவர் நல்ல ஓவியரும் ஆவார்” என்று அறிமுகப்படுத்தியதும் பாரதி, ”நீர் என்னை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்” என்று சொல்லிக் கலகல என்று சிரித்தாராம். கிருஷ்ணய்யா, ”இவர் கவிதையும் புனைவார் என்றாராம். ஒரு பாட்டு பாடுமே!” என்றார் பாரதி.

ராமகாதையில் சீதையைப் பிரிந்திருந்த ராமன் தன்னையே நொந்து பாடுவது போல் நாடகத்திற்குப் பாட்டெழுதி இருக்கிறேன்.

‘நம்மரசைப் பிறர் ஆள விட்டு விட்டுத்

தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்,

தன் மனைவி பிறர் கொள்ளத்

தன்னுயிர் தாங்கி நின்று புலம்புவோரும்

இம்மையிலும் மறுமையிலும் இழிவடைந்து

எரி  நரகில் அழுந்திடுவார்!

என்று பாட,  “பலே பாண்டியா! பிள்ளை, நீர் புலவரே! நம் அரசைப் பிறர் கொள்ள, வணங்கிக் கைகட்டி நிற்பவர் நரகு எய்தத் தான் எய்துவர்” என்று உரக்கக் கூவினாராம்.

‘காந்தி என்ற நாமம் நம்மைக்

காக்கும் தெய்வமாகுமே –

கருணை என்ற கருவி கொண்டு

உலகை வெல்லுவோமே  நாம்

ஆடுவோம் கூடுவோம் காந்தி புகழைப் பாடுவோம்”

– என்ற பாடலும்,

‘‘வனமகோத்சவ வைபவத்தினை

வான் மகிழ்ந்திட வாழ்த்துவோம்”

-என்ற பாடலையும்,

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் என்கின்ற ஜீவ நன்நாதம்

தேசத்தில் ஒற்றுமை சேர்க்கின்ற கீதம்

பேய் கொண்ட தன்மை நமைப் பிடித்தாட்டும்

பேத உணர்ச்சிகள் நாட்டை விட்டோட்டும்  (ஜெய்ஹிந்த்)

 

அச்சத்தைப் போக்கி நல் லாண்மையை ஊட்டி

அடிமை குணங்களை வேரொடு மாற்றித்

துச்சம் உயிரெனத் தொண்டுகள் செய்யத்

தூண்டிடும் சக்திகள் ஆண்டிடும் தூய (ஜெய்ஹிந்த்)

-என்ற பாடலையும் நானே மேடையில் பாடியிருக்கிறேன்.

காசி ஹிந்து சர்வகலாசாலைத் திறப்பு விழாவிற்குச் சென்ற கவிஞர், காந்தியடிகளைத் தரிசித்தார். உருகினார். காந்தியத்தில் ஈடுபாடு கொண்டு மிதவாதியானார். காந்தி பக்தராக, காந்தி பித்தராக மாறிவிட்டார்.

கரூரில் இவரது உரை கேட்டு அகிலன், கல்கி போன்ற எழுத்தாளர்கள் தேச விடுதலைச் சிந்தனையில் பெரிதும் ஈடுபாடு கொண்டனர். கவிஞர் பேச்சு, அவர் தலைமை வகித்த ஊர்வலம் எல்லாம் பலமுறை 144  தடை உத்தரவை சந்தித்தன. அவரது சாந்தம், காந்தியப்பற்று கண்டு அவரைக் கைது செய்யாமல் விட்டனர். ‘கதர்த் துணி வாங்கலையோ!’ என்று பாடி, மனைவியும், தொண்டர்களும் புடை சூழ மக்களைக் கதர் வாங்க வைத்தார்.

1937-ல் மதுக்கடை, கள்ளுக்கடை மறியல் செய்தார். ராஜாஜி மதுவிலக்குக் கொண்டு வந்ததும் மகிழ்ந்து பாடினார்  நாமக்கல்லார்:

‘விட்டது சனியன் விட்டது சனியன்

விட்டது நம்மை விட்டதடா!’

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழப்பதும்

கூசிட ஏசிடப் பேசுவதும்

சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்

சந்தி சிரிப்பதும் இனியில்லை’

உப்பு சத்தியாகிரகம் 1930ல் நடந்தபோது வழிநடைப் பாட்டாகக் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ பாடல் பிரபலமானது.

சுதந்திரம் இல்லாத நாடு, சூழ்புலி பேய் மிகும் பொல்லாத காடு” இப்படிப் பல கவிதைகள் சுதேச மித்திரன், கல்கி போன்ற ஏடுகளில், இதழ்களில் வந்து சுதந்திர வேள்வியில் பலரைக் குதிக்கச் செய்தன. 1932 சட்ட மறுப்பு இயக்கத்தில் சிறை சென்று, வேலூர்ச் காது பாதிக்கப்பட்டது.

தேச நலனுக்காகப் பாடியவர், வறுமையின் பிடியில் வாடியவர் கவிஞர். அந்திமக் காலத்தில் பொருள், புகழ், பதவி, பாராட்டு எல்லாம் கிடைத்தன.

”தமிழன் என்று சொல்லடா

தலைநிமிர்ந்து நில்லடா”

-என்ற வரிகள் எல்லா இடங்களிலும் பொறிக்கப்பட்டன.

”தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு”

-என்று பாடிய இவர் பெயர் தமிழகத் தலைமைச் செயலகத்திற்குச் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமே. அவரது நாமக்கல் வீடும், அவரது 50க்கு  மேற்பட்ட நூல்களும் நாட்டுடைமைஆக்கப்பட்டன.

தமிழ்ப்பணி, விடுதலை வேள்விப்பணி இரண்டையும் ஒருங்கே ஆற்றிய கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ஓவியக் கலைஞர், காவியப்புலவர், இசைக் கலைஞர், புதின எழுத்தாளர், உரையாசிரியர்,மொழி பெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட அறிவாளி. முதல் அரசவைக் கவிஞரும் அவரே என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தானே! வாழும் காலத்திலேயே புலவர்கள் பாராட்டுப் பெறுவது பெரும்பேறு.

 

நன்றி: விஜயபாரதம்