காலத்தின் கொடுமை!

-பத்மன்

அபுல் கலாம் ஆஸாத்

அபுல் கலாம் ஆஸாத்

இந்தியாவின் பெருமை மதச்சார்பின்மை. ஆனால் நடைமுறையில் அந்த மதச்சார்பின்மை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் வேதனை கலந்த வேடிக்கை. இதற்கு ஓர் உதாரணம், ‘பாரத் மாதா கீ ஜே’ என்ற முழக்கம் படுகின்ற பாடு.

மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினரான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்பவர் ‘பாரத மாதா கீ ஜே’ என்கிற கோஷத்தை தான் உச்சரிக்க மாட்டேன் என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு ஆளும் பா.ஜ.க. – சிவசேனை கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஒருமனதாக உறுப்பினர் வாரிஸ் பதானை கூட்டத் தொடர் முடியும்வரை தாற்காலிக நீக்கம் செய்திருக்கிறார்கள்.

‘பாரத் மாதா கீ ஜே’ என்பதற்கு ‘பாரத அன்னை வெல்க’ என்றும் ‘பாரத அன்னை நீடூழி வாழ்க’ என்றும் பொருள். இதில் எங்கே மத வழிபாடு வந்தது? ஆனால் சில முஸ்லிம் அடிப்படை வாதிகளும் அவர்களை ஆதரிக்கும் சில கட்சிகளும் பாரத மாதா என்பதே ஹிந்து மதக் கண்ணோட்டம் என்று கருதுகிறார்கள்.

அந்த வகையில், பாரத மாதா என்ற கருத்தியலை எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு (அல்லாவுக்கு) இணையாக வைப்பதாகக் கூறி, தங்களது மத அடிப்படையில் பாரத் மாதா கீ ஜே எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். வாரிஸ் பதான் ‘பாரத் மாதா கீ ஜே’ கோஷம் எழுப்பமாட்டேன் என்று கூறியதன் காரணம் இதுதான்.

நாட்டை, நதியை, இயற்கையை அன்னையாகக் கருதிப் போற்றுவது, சிலரால் வணங்கப்படுவது இந்திய சமூகக் கண்ணோட்டமேயன்றி, மதக் கண்ணோட்டம் அல்ல. பாரத அன்னை மட்டுமல்ல, காவிரி அன்னை, தமிழ்த் தாய் போன்றவை எல்லாம் இந்தக் கண்ணோட்டத்தில் எழுந்தவையே.

அன்பின், நன்றி காட்டுதலின் வெளிப்பாடுதான் தாயாகக் கருதி வணங்குதல். இது மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது. அதனால்தான் பாரத அன்னை என்பதை ஹிந்துக்கள் மட்டுமன்றி பெளத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், ஏன் விடுதலைப் போராட்டக் காலத்தில் முஸ்லிம்களும்கூட ஏற்றுக்கொண்டார்கள். அன்றைய முஸ்லிம் தலைவர்கள் யாரும்‘ பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மறுத்ததும் இல்லை, மறந்ததும் இல்லை.

கடவுளே இல்லை என்று கூறும் தமிழக நாத்திகர்கள்கூட தமிழ்த்தாய் என்று போற்றுகிறார்கள். அது மதம் சார்ந்ததா? தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்கள் அனைவரின் நாவிலும் ஒலிக்கப்படும்போது வராத மதத் தீட்டு, பாரத அன்னை வாழ்க என்று அனைத்து இந்தியர்களும் சொல்லும்போது மட்டும் வந்துவிடுமா?

மதங்களைக் கடந்த மகோன்னத பாரத அன்னையை மதச் சிமிழுக்குள் அடக்குவதை உண்மையான மதச்சார்பின்மை வாதிகள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதற்கு அவர்களது எதிர்வினை என்ன?

பாரத நாட்டை அன்னையாகக் கருதும் கருத்தியல் நோக்கில் மதம் எங்கே புகுந்தது? மாறாக, பாரத மாதா என்பதை ஏதோ ஹிந்துக்களின் கடவுள்களில் ஒன்று என்று கருதுவதில்தான் மதம் பிடித்துக்கொள்கிறது.

தனிப்பட்ட முறையில் ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பொது விஷயங்களில் மதம் பார்க்கக் கூடாது, மதத்தைக் கடந்து சிந்திக்க வேண்டும் என்பதுதானே மதச்சார்பின்மையின் உட்பொருள்? அவ்வாறெனில், இஸ்லாமியர்களில் ஒவைஸி, வாரிஸ் பதான் போன்ற சிலர், பாரத நாடு என்ற பொது விஷயத்தைக்கூட மதம் சார்ந்துதான் சிந்திப்போம் என்றால் அதுதான் மதவாதம்.

அவர்களை மதச்சார்பின்மை பேசுபவர்கள் ஆதரிப்பதும் ‘பாரத் மாதா கீ ஜே’ கோஷம் எழுப்புவதும் எழுப்பாததும் அவரவர் தனியுரிமை என்று வக்காலத்து வாங்குவதும் போலி மதச்சார்பின்மையின் கோர முகமல்லாமல் வேறொன்றும் இல்லை.

இவ்வாறாக சிந்திக்கத் தொடங்கினால், வேறு சில பொது விஷயங்களுக்கும் இனி மதச்சாயம் பூசப்படலாம். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைப்பது, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது ஆகியவைகூட ஹிந்து மதம் சார்ந்ததாகக் கூறப்படலாம்.

பசுவைத் தாயாக வணங்குவதும், அதற்கு ஒரு தீங்கும் செய்யக்கூடாது என்று கருதுவதும் மதம் சார்ந்த கருத்து என்பதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். நான் பசுவைத் தாயாகக் கருதுவதால் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை, நீயும் அவ்வாறு கருதி சாப்பிடக்கூடாது என்று அடுத்தவரை நிர்பந்திப்பது தவறு என்பதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதற்கு வெகு காலம் முன்பிருந்தும் நமது இந்திய சமூகத்தை ஒன்றிணைக்கும் விஷயமான பாரத அன்னை என்ற கருத்தியலும், பாரத அன்னை வெல்க என்ற முழக்கமும் அப்படிப்பட்டதல்ல. உணவு சார்ந்ததல்ல, அடிப்படை தேசபக்த உணர்வு சார்ந்தது.

ஐந்து வேளை தொழுகை நடத்தும் ஓர் இஸ்லாமிய நெறியாளர் ‘எனது தாய்நாடு நான் வணங்குகின்ற கடவுளுக்கு இணையானது’ என்று பெருமை கொள்கிறார் எனில், அவர் மத விரோதி ஆகிவிடுவாரா? அவரை உடனடியாக மத நிந்தனையாளர் என்று கூறி தண்டிக்க வேண்டும் என்று கூறும்பட்சத்தில் அது மதச்சார்பின்மைக்கு விரோதம் ஆகாதா?

இஸ்லாமியர்கள் எல்லா விஷயங்களையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடுதான் அணுக வேண்டும் எனும் நிலைமை ஏற்பட்டால் மதச்சார்பின்மை மடிந்துவிடுகிறது. பாரத் மாதா கீ ஜே என்று இஸ்லாமியர்கள் சொல்ல மாட்டேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதானே, அதனை ஏன் வலியுறுத்த வேண்டும் என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி! மதச்சார்பின்மை என்பது குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்குக் கிடையாது என்றால் அதற்குப் பெயர் மதச்சார்பின்மையா?

இதுபோன்ற சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்படுகிறது. அது இந்துமத அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது.

‘பாரத் மாதா கீ ஜே’ முழக்கமிட்ட அபுல் கலாம் ஆஸாதும் காயிதே மில்லத் இஸ்மாயில் சாயுபுவும் இஸ்லாமிய விரோதிகள். வாரிஸ் பதானும், ஓவைசியும் இஸ்லாமியப் பாதுகாவலர்கள். காலத்தின் கொடுமை இது!

 

குறிப்பு:

திரு. பத்மன், பத்திரிகையாளர்.

நன்றி: தினமணி (1.4.2016)

.

தூக்குமர நிழல்கள்…

கன்னையா குமார்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ‘எதிர்-சிந்தனையா’ அல்லது ‘தேச விரோதமா?’ -இந்தக் கேள்வி எல்லாருடைய மனதிலும் இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் வழக்கமான பணிகள் நிறுத்தப்பட்டு, ஜே.என்.யு. பற்றி விவாதிக்கப்படுகிறபோது, அந்த அளவுக்கு இந்தப் பல்கலைக்கழகம் மிகச் சிறப்புடையதா, மாற்றுச் சிந்தனையின் களமா என்று சாதாரண மனிதர்களிடமும் ஆச்சரியம் மேலிடுகிறது.

ஆங்கிலேயர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் பிரிட்டிஷ் அரசைப் பொருத்தவரை தேசத் துரோகி. ஆனால், விடுதலைபெற்ற இந்தியாவில் வாஞ்சிநாதன் ஒரு தியாகி; விடுதலை வீரர். அவருக்காக நாம் சிலை வைப்போம்; மணிமண்டபம் கட்டுவோம்.

வாஞ்சிநாதனைப் போல இந்த மண்ணில் பலர் ஆங்கிலேயரைக் கொன்று, தங்களை உயிர்த்தியாகம் செய்து கொண்டனர். விடுதலைபெற்ற இந்தியாவில் இவர்களுக்காக விழா நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதனை இந்தியாவில் கொண்டாடுவதைப் போல நாம் இங்கிலாந்தில் விழா நடத்த முடியுமா? நடத்தினால் அதன் பொருள் என்ன? இங்கிலாந்து அரசு அத்தகைய விழாவை அனுமதிக்குமா?

காஷ்மீர் பிரிவினைவாதிகளைப் பொருத்தவரை அஃப்சல் குரு ஒரு போராளி. காஷ்மீர் விடுதலைக்காக போராடும் முயற்சியில் தூக்குமரத்தை முத்தமிட்டவர். அவரது செயல் காஷ்மீர் பிரிவினைக்கான தொடர் போராட்டத்தில் இன்னொரு விதை.

ஆனால், அவர் இந்திய மண்ணில் குற்றவாளி. இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்தவர். பத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமானவர். இந்திய சட்டத்தின் கீழ் தூக்கிலிடப்பட்டவர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் அஃப்சல் குரு நினைவு நாளை ரகசியமாக கொண்டாடலாம். அதைத் தடுக்க முடியாது. இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் நீடிக்கும்வரை அவர்கள் வெளிப்படையாக அஃப்சல் குருவுக்கு விழா எடுக்க இயலாது. ஏனென்றால், அவர் இந்தியாவுக்கு எதிராக சதி செய்தவர்.

இந்நிலையில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய அரசு நிதியில் செயல்படும் பல்கலைக்கழகத்தில், அஃப்சல் குரு நினைவு தினம் அனுசரிப்பது சரியா?

இதை அந்தப் பல்கலைக்கழகம் எவ்வாறு நடத்த அனுமதித்தது? அனுமதி மறுக்கப்பட்டும் நடத்தப்பட்டிருந்தால் ஏன் அந்த மாணவர்களை வெளியேற்றாமல் இருக்கிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரத்தில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவசரநிலைக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்ததோடு அறிவுஜீவிகளுடன் இணைந்து போராடும் களமாகவும் இருந்தது என்பது உண்மையே.

அப்போது இந்தப் பல்கலைக்கழகம் தேசிய உயிர்ப்புடன் இருந்தது என்பதும் உண்மையே. ஆனால், அது இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். இந்திய நாட்டுக்கு எதிரான போராட்டம் அல்ல.

நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது அதை நீக்குவதற்காக போராடியவர் யாருமே தேசவிரோதிகள் அல்ல. அவர்கள் உண்மையான கருத்துமாறுபாடு கொண்டவர்கள். கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திப் போராடியவர்கள். அவர்கள் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். நாட்டுக்கு எதிராகப் போராடவில்லை.

ஜே.என்.யு.வில் நடந்த அந்த நிகழ்ச்சி தூக்கு தண்டனைக்கு எதிரான ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்று சொல்லப்படுமேயானால், அதை ஏன் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளில் பிப்ரவரி 9-ஆம் தேதி நடத்த வேண்டும்? வேறு எத்தனையோ பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள். ஏன் ஒரு பொதுநாளை தேர்வு செய்திருக்கக் கூடாதா?

எந்தத் தேதியில் வேண்டுமானாலும் தூக்குதண்டனைக்கு எதிரான போராட்டம் நடத்தலாம் என்றால், நவம்பர் 21-ஆம் தேதிகூட, அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட நாளைக் கூட, தேர்வு செய்யலாம்தான்.

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாவோயிஸ்ட்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. அதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தை யாரும் ஒன்றும் செய்துவிடவில்லை.

தண்டேவாடா வனப்பகுதியில் காவலர்கள் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டபோது ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இனிப்பு வழங்கியதாக மாணவர்களே குறிப்பிடும் நிகழ்ச்சி இந்திய அரசுக்கு தெரிந்திருந்தும் அதை பொருள்படுத்தவில்லை.

ஏனென்றால், அதுவும் கூட மாற்றுச்சிந்தனையாகவே கருதப்பட்டது. ஏனென்றால், மாவோயிஸ்ட்டுகள் ஆட்சிக்கு எதிரானவர்கள் மட்டுமே. அவர்கள் தனிநாடு கேட்பவர்கள் அல்ல. பிரிவினைவாதிகள் அல்ல.

அஃப்சல் குரு இந்திய ஆட்சிக்கு எதிரானவரா அல்லது பிரிவினைவாதியா?

ஒவ்வொரு செயலும் அவரவர் பார்வையில், அவரவர் மண்ணில் வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வரை எது எதிர்-சிந்தனை, எது தேச விரோதம் என்பதில் குழப்பம் இருக்கவே செய்யும்.

கன்னையா குமாரும் இதில் தொடர்புடைய மற்ற மாணவர்களும் தூக்குமரத்தின் நிழல்கள் மட்டுமே.

தூக்குமரத்தின் அடியில் சுயநல அரசியல்வாதிகள் தங்களை வெளிச்சம் போட்டுக்கொள்ளும்வரை நிழல்கள் இருக்கும். அவர்கள் வேறு இடத்தில் வெளிச்சம் போடும் சூழலில், இந்த நிழல்கள் காணாமல் போகும்.

 

குறிப்பு:

திரு. இரா.சோமசுந்தரம், பத்திரிகையாளர்.

நன்றி: தினமணி (26.02.2016)

நாட்டுப்பற்றும் மாட்டுக்கறியும்

-ஆர்.எஸ்.நாராயணன்

adimadu

இறை உணர்வுக்கும் இறைச்சி உணவுக்கும் தொடர்பு இல்லை. இறைச்சி உணவு அவரவர் விருப்பம், உடல் பாதுகாப்பு தொடர்பானது. எனினும், இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு மதத் தடை உள்ளது. மதம் மட்டும் அல்ல. சட்டமும் உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்து “பசு, கன்று, பால் வழங்கும் மிருகங்கள், உழவு மாடுகள் ஆகியவற்றைக் கொல்லக் கூடாது’ என்று தெளிவாகக் கூறுகிறது.

டாக்டர் அம்பேத்கர்தான் இப்படி ஒரு சட்டத்தைப் போட்டுள்ளார்! இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றிய காலகட்டத்தில் விவசாயத்தில் இயந்திரங்கள் அறிமுகமாகவில்லை. விவசாயப் பொருளாதாரம் உழவு மாடுகளை நம்பியிருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்து மாநில சட்டதிட்ட வரம்புக்குள் வருவதால், மாட்டுக் கொலைக்கும் மைய அரசுக்கும் தொடர்பு இல்லை. இடதுசாரிகள் ஆண்ட கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டைக் கொல்வது அனுமதிக்கப்படுகிறது. இடதுசாரி மாநிலங்களில்தான் மாட்டிறைச்சியைப் பக்குவப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் சக்கை போடு போடுகின்றன!

ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் மாட்டுக் கொலைகளைக் கண்டு கொள்வதில்லை. தமிழ்நாட்டில் பசுவதைச் சட்டம் உள்ளதால், மாடுகள் கேரளத்திற்குக் கடத்திச் செல்லும்போது, காவலர் கடமை மாமுல் வசூல் செய்வதுவே.

பசுக்களை தெய்வங்களாகப் போற்றும் மரபு இந்தியப் பண்பாடுகளில் ஓர் அம்சம். பசுவைக் கொல்வது பாவம் என்பது சரி. ஆனால், மாட்டிறைச்சி உண்டார் என்ற காரணத்திற்காக தாத்ரி, மயின்பூரி, உதம்பூர் ஆகிய ஊர்களில் மனிதர்களைக் கொல்வது அதைவிடப் பெரும் பாவம். இதனால் ஆமிர்கான் சகிப்புத் தன்மையைக் கேள்வி கேட்டுப் பின்னர் அடங்கிப் போனார்.

மாட்டுக்கறி உண்பதை எதிர்த்துக் கடுமையான சட்டம் போடுவது ஜனநாயகம் அல்ல. சாதம், ரொட்டி, பருப்பு, காய்கறி, பழம், பால் என்பது போல் இறைச்சியும் ஓர் உணவு.

இறைச்சி உணவைத் தவிர்ப்பது வேறு. மதம் வேறு. இறைச்சிக்காகக் காட்டில் திரியும் விலங்குகளைக் கொல்வது குற்றம். நாட்டுக்குள் வளர்ப்பு மிருகங்களாயுள்ள ஆடு, மாடு, கோழிகளைக் கொல்வது குற்றமாகாது.

மத அடிப்படையில் ஆட்டைக் கொன்றால் பாவம் இல்லை. கோழியைக் கொன்றால் பாவம் இல்லை. மாட்டைக் கொன்றால் மட்டுமே பாவம் ஒட்டும் என்பதில் பகுத்தறிவு இல்லை. எனினும், இந்தப் பிரச்னையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய வேண்டும்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய ஆரியர்களின் வாழ்வு ஆநிரைப் பொருளாதாரத்தை நம்பியிருந்தது. அன்று விவசாயம் மேம்படவில்லை. போதுமான அளவில் அரிசி, கோதுமை இல்லாத காரணத்தால் மாட்டிறைச்சி உண்ணப்பட்டது.

பின்னர், இறைச்சி உணவைக் கைவிட்டு சைவ உணவைப் போற்றும் அளவில் விவசாயம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் மெளரியப் பேரரசரான அசோகச் சக்கரவர்த்தி அகண்ட பாரதத்தை அரசாண்டார். நாட்டில் உணவு உற்பத்தி உயர, உழவு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அசோகர் புத்தமதம் மாறினார்.

“பசு, காளை மற்றும் பால் தரும் வீட்டு மிருகங்களைக் கொல்வோர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தண்டனைக்குள்ளாவர்..’ என்று எழுதி வைத்த அசோகரின் சாசனம், அப்படியே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்தாக ஏற்கப்பட்டுள்ளது.

அசோக சக்கரவர்த்தி ஆண்ட அகண்ட இந்தியாவின் காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 26.1.1948 வரையில், இந்திய விவசாயத்திற்கு உழவு மாடுகளே ஜீவாதாரமாயிருந்தன.

1960-களில் விவசாயத்தில் இயந்திரங்கள் அறிமுகமாயின. இன்று அறுவடைக்கும் இயந்திரம் வந்துவிட்டது. டிராக்டரும் டில்லரும் வந்த பிறகு மனிதனுக்கும் வேலை இல்லை; உழவு மாட்டுக்கும் வேலை இல்லை.

எனவே, விவசாய முக்கியத்துவம் கருதி மாடுகளைக் கொல்லக் கூடாது என்ற அசோகர் காலத்துச் சட்டம் இன்று பொருந்துமா? நல்ல பால் மாடுகளுக்கே போதிய தீவனம் கிட்டுவது இல்லை. மேய்ச்சல் நிலமும் இல்லை.

பசு வளர்த்துப் பால் தரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் ஒரு விவசாயியின் மனநிலையில் சிந்திப்பது நன்று. பால் விற்பனையில் ஏற்படும் நஷ்டம் மலடாகிவிட்ட பசுக்களை அடிமாடாக விற்றுப் பெறும் பணம் ஈடுசெய்து வருகிறது. அனைத்துலகச் சந்தையில் மாட்டிறைச்சிக்கு நல்ல விலை உள்ளது. மலட்டுப் பசுக்கள் ரூ.10,000 முதல் 12,000 வரை விலை போகும்.

நாளுக்கு நாள் இந்தியாவில் அடி மாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதின் காரணம் கறவை மாடுகள் சினைப் பிடிக்காமல் மலடாவது அதிகமாகி விட்டது. அன்று நம்மிடமிருந்த நாட்டுப் பசுக்கள் 7, 8, ஈத்துக்கள் போடும். இன்றுள்ள கலப்பினப் பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு ஈத்தோடு சரி, மலடாகிவிட்ட பசுக்களுக்குத் தீனி போடும் சக்தி பால் விவசாயிகளிடம் இல்லை. ஆகையால் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.

முன்பெல்லாம் பசுக்களைவிட காளைகளுக்கு மவுசு அதிகம். நல்ல விலை போகும் என்று வளர்ப்பார்கள். ஏனென்றால், உழவு மாடுகளுக்குத் தேவை இருந்தது.

இன்று கறவை மாடு கன்று ஈன்றதும் அது கிடாரி என்றால் வளர்ப்பார்கள். அதுவே காளை என்றால் ஈன்ற மாடு கறக்கும் வரை – சுமார் 7, 8 மாதங்களுக்கு மாடு சுரப்பு இறக்குவதற்காகக் காப்பாற்றுவார்கள். கறவை நின்றதும் வந்த விலைக்கு காளைக் கன்றை விற்று விடுவார்கள். அப்படி விற்கப்படும் இளம் கன்றுகள் கசாப்புக்குத்தான்.

ஜல்லிக்கட்டுக்காகப் பழக்கப்படும் காளைக் கன்றுகள் காங்கேய இனமென்றால் காப்பாற்றப்படலாம். கலப்பினக் காளைகள் வேலைக்கு ஆகாது. பாயவும் தெரியாது. பரம சாதுக்களாயிருக்கும்.

பால் விவசாயிகளும் மனிதர்களே. மேழிச் செல்வம் செழிக்க மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள். கறவை நின்ற மாடுகளையும் காளைக் கன்றுகளையும் மனதாற விற்பது இல்லை. பாவ உணர்வு இருந்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலை.

மேய்ச்சல் இல்லாவிட்டால், வைக்கோலைப் போட்டு வளர்க்கலாம் என்றால் வைக்கோல் மலிவாகக் கிடைப்பது இல்லை. காவிரி டெல்டா பகுதிகளில் மட்டுமே வைக்கோல் மலிவு. மானாவாரி வறட்சி மாவட்டங்களில் காசு கொடுத்தாலும் வைக்கோல் கிடைக்காது.

சோளத் தட்டை பன்மடங்கு விலை அதிகம். அப்படியே வைக்கோல் கிட்டினாலும் ஒற்றைக் கையால் தூக்கும் அளவில் உள்ள ஒரு குட்டிக் கட்டு வைக்கோல் ரூ.80க்கு விற்கப்படுகிறது! இப்படி விலை கொடுத்து வாங்கிப் பால் மாட்டைக் காப்பாற்றுவதே பெரும்பாடாயுள்ளபோது மலட்டு மாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? தீனியே வழங்க முடியாமல் பட்டினி போட்டு தினமும் சித்திரவதை செய்வதைவிட, அடிமாடாக விற்பது பாவம் குறைவுதான்.

இந்திய ஏற்றுமதியில் மாட்டிறைச்சி கணிசமான பங்கு வகிக்கிறது. சுமார் 5,000 கோடி டாலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணியும் கிட்டுகிறது. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான சூட்டோடு கார்கில், டெஸ்கோ போன்ற பன்னாட்டு பகாசூர உணவு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட அடிமாடுகளை வெட்டி நல்லமுறையில் பக்குவம் செய்து அலங்காரமாகப் பொட்டலம் கட்டி அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொட்டலங்கள் உள்ளூரிலும் கிடைக்கும்.

அனைத்துலக மாட்டுக்கறிச் சந்தையில் பிரேசிலும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன. ஒரு காலத்தில் நிறைய சதைப் பற்றும், எடையும் கொண்ட ஓங்கோல், நெல்லூர் வெள்ளை மாடுகள் இந்தியாவில் இருந்தன. இவை அனைத்தும் இப்போது பிரேசிலில் உள்ளன.

உலக முன்னணி உணவு பகாசூரர்கள் இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு இறக்குமதி செய்து அங்குள்ள பசுக்களுக்கு ஓங்கோல் விந்து செலுத்துவதுடன், கலப்பு இல்லாத தூய ஓங்கோல் ரகமும் வளர்க்கப்படுகிறது. ஆகவே, பிரேசில் மாட்டுக்கறி நல்ல விலை பெறுகிறது.

இந்திய மாட்டுக்கறிச் சந்தையில் நாட்டு ரக அடிமாடுகளுக்கு கலப்பின அடிமாடுகளைவிட ரூ.1,000 வரை மாட்டுத் தரகர்கள் சேர்த்துத் தருவதுண்டு. நம்மிடமுள்ள மாடுகள் பெரும்பாலும் ஜெர்சி, பிரீசியன், ஸ்விஸ் ரெட் கலப்பினம்.

எனினும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாட்டுக்கறி கணிசமாக உயர்வதன் காரணம், பெரும்பாலான இந்தியர்கள் மாட்டுக்கறி உண்பது இல்லை. பசுவதைச் சட்டத்தை விட மதத்தடை காரணம். பெரும்பாலான இந்துக்கள் மாட்டுக்கறி உண்பது இல்லை. இஸ்லாமியர்களும் ஆடு, கோழியைத்தான் அதிகம் விரும்புவார்கள். கிருத்துவர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் மாட்டுக்கறிக்கு மதத் தடை இல்லை.

தில்லித் தலைநகரில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி எரிகிறது. விஷயம் நாட்டுப்பற்றைச் சார்ந்தது. தேசத் துரோகி அஃப்சல் குருவுக்கு ஏன் தூக்கு தண்டனை என்று இடதுசாரிக் கூட்டம் கேள்வி கேட்கிறது. மாணவர் தலைவர் கன்னைய குமார் கோஷ்டி கைதாகியுள்ளது. தில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. இவர் கைதாகுமுன்பு பா.ஜ.க.வை வெறுப்பேற்ற பன்னாட்டு நிறுவனமான கார்கில் தயாரித்த மாட்டுக்கறிப் பொட்டலத்தை வேண்டுமென்றே உண்டதாக போலீஸ் தரப்பில் ஒரு தகவல் உண்டு.

நாட்டுப்பற்றுக்கும் மாட்டுக்கறிக்கும் என்ன தொடர்பு? கன்னையா என்றால் கிருஷ்ண பகவான். பசுவின் காவலர் அப்படி செய்யலாமா? மாட்டுக்கறி உண்பது உடல் நலத்தைப் பொறுத்த விஷயம். மாட்டுக்கறி ஏற்றுமதி பொருளாதார விஷயம்.

விவசாயத்தில் இயந்திரங்களைப் புகுத்தி நமது மேழிச் செல்வங்களைக் கோழைப்படுத்தியது யார் குற்றம்? குறைந்தபட்சமாக நம்மிடம் காங்கேயம் காளைகள் எஞ்சியுள்ளன. ஜல்லிக்கட்டுக்குச் சட்ட ரீதியான அனுமதி வழங்கி காங்கேயக் காளைகளைக் கறியாக்கி விற்காமல் வளர்ப்பதும் நாட்டுப்பற்றுதான்.

 

குறிப்பு:

திரு. ஆர்.எஸ்.நாராயணன், வேளாண்மை எழுத்தாளர்.

நன்றி: தினமணி (27.02.2016)