முருகா எனும் நாமம்!

திருமுருக கிருபானந்த வாரியார்

    “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்”

என்பது கந்த புராணத் திருவாக்கு. இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, வரவு, உயர்வு, ஒப்பு முதலிய ஒன்றும் இல்லை.

பேரும் ஊரும் இல்லாத பெருமான் ஆன்மாக்களின் பொருட்டு – ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு பேரும் உருவும் தாங்கி வருகின்றான்.

இத்திருவருளின் இயல்பை உள்ளவாறு உணராத புலவர்கள் இறைவனுக்கு நாம ரூபம் நம்மால் கற்பிக்கப்பட்டன என்பார்கள்.

மூவாண்டுடைய சீகாழிப்பிள்ளையார் அழுதலும் அவருடைய பண்டைத் தவ வலிமையால் இறைவன் திருவுருவுடன் காட்சி தருகின்றான். வெள்ளை விடையும், பவளமலை போன்ற திருவுருவும், அருகில் மரகதக் கொடி போன்ற அம்பிகையும், பிறையணிந்த திருமுடியும், மான்மழு ஏந்திய திருக்கரங்களும், நீல கண்டமும், தோடணிந்த தாழ்செவியும், கருணை பொழியும் மலர்க் கண்களும், நீறணிந்த திருமேனியுங் கண்டு, அச்சிறியபெருந்தகையார் “தோடுடைய செவியன்” என்று பாடுகின்றார். அத்திருமேனியை மூவாண்டுக் குழந்தை கற்பனை புரியவில்லை. கண்ட காட்சியைக் கழறுகின்றது. Continue reading

தமிழுக்குத் தொண்டுசெய்த பிள்ளை

-இரா. நாறும்பூநாதன்

kasupillai

கா.சு.பிள்ளை

(1888 நவம்பர் 5 – 1945 ஏப்ரல் 30)

 

தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய முன்னோடி கா.சு.பிள்ளை என்ற தமிழறிஞர் என்று சொன்னால் பலரும் புருவத்தை உயர்த்திப் பார்ப்பார்கள். கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட அல்லது போதிய வெளிச்சம் விழாத தமிழறிஞர் இவர்.

திருநெல்வேலி டவுண் புட்டாரத்தி அம்மன் கோவில் பக்கம் போய்  ‘இங்கே கா.சு. பிள்ளை இருந்த வீடு எங்கே இருக்கு?’ என்று கேட்டால் ஒரு நிமிஷம் யோசித்து விட்டு,  ‘எம்.எல். பிள்ளை வீடா அந்தா இருக்கு..’ என்று சொல்லும் வயசாளிகள் இன்னும் இருக்கிறார்கள்.

‘அது என்ன எம்.எல். பிள்ளை?’  என்று நாம் கேட்டால், அதுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

‘நீங்க ஊருக்கு புதுசு போல.. அவுக அப்பா காந்திமதிநாத பிள்ளையை பி.ஏ. பிள்ளைன்னு தான் சொல்லுவாங்க. அந்தக் காலத்தில் முதன் முதலில் பி.ஏ. பட்டம் வாங்கியவர். அவரோட மகன் கா.சு.பிள்ளை என்ற கா. சுப்ரமணிய பிள்ளை 1917-ஆம் வருஷத்திலேயே முதுகலை சட்டப்படிப்பில் சென்னை மாகாணத்தில் முதல் மாணவராக பாஸ் செய்தவர். அதனால், அவரை எம்.எல். பிள்ளைன்னு தான் இங்கே சொல்வாங்க’ என்று பூர்வ சரித்திரம் சொல்வதை கேட்கலாம்.

1888 நவம்பர் 5-ஆம் நாள் திருநெல்வேலியில் காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதிக்கு புதல்வராகப் பிறந்த இவர், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். பின்னர் ஷாஃப்டர் பள்ளியில் படித்தார். பள்ளி இடைவேளைகளில், நூலகத்தில் இருக்கும் ஆங்கில செய்தி தாள்களை வேகமாய் வாசிப்பாராம். அதில் வரும் தலையங்கங்களை மனப்பாடமாக உடன் படிக்கும் மாணவர்களிடம் பேசி காட்டுவது இவர் வழக்கமாம்.

மில்டனின்  ‘பாரடைஸ் லாஸ்ட்’ 12 பகுதிகளை பாராமல் சொல்லும் திறமை வாய்க்கப்பெற்றவர். தனது தந்தையிடம் மொழியறிவையும், செப்பறை சுவாமிகளிடம் தமிழ் இலக்கணத்தையும் கற்று தேர்ந்தார்.

1906-இல் மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்று, 1908-இல் மாகாணத்தில் முதல் மாணவராக எப்.ஏ. படிப்பில் தேறினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நண்பர்களுடன் இணைந்து  ‘சைவ சித்தாந்த சங்க’த்தை உருவாக்கினார். மாணவர்களுடன் சேர்ந்து பல்வேறு ஆராய்ச்சி உரைகளை நிகழ்த்தினார்.

அக்காலத்தில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசு அமைத்திருந்தார்கள். அந்தப் பரிசைப் பெற்ற தமிழர் கா.சு.பிள்ளை மட்டுமே. சட்டக்கலை குறித்து 12 சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும். கல்கத்தா பல்கலைக்கழகம் சென்று குற்றங்களின் நெறிமுறைகள் என்ற தலைப்பில் பன்னிரென்று உரைகள் நிகழ்த்தி இந்தப் பரிசினைப் பெற்றார் அவர்.

சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் இருந்த காலத்தில், மயிலாப்பூரில் ‘திருவள்ளுவர் கழக’த்தை ஏற்படுத்தினார். பின்னர், நெல்லை திரும்பி  ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலை எழுதினார். இன்றளவும் அது மிக முக்கிய நூலாக விளங்குகிறது.

வரலாறு குறித்தும், சமயம் குறித்தும் இவர் பல நூல்கள் எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் அருமையை மேல்நாட்டவர் உணர,  ‘நீதி நெறி விளக்கம்’,  ‘புறநானூற்றுப் பாடல்கள்’  போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

‘சைவ சித்தாந்தத்தின் இயற்கை தத்துவம்’,  ‘தேவாரத்தில் பழைய தெய்வ பனுவல்களிலும் இயற்கை’ என்ற தலைப்புகளில் ஆங்கில நூல்களை எழுதி இருக்கிறார்.

திருநெல்வேலி நகராட்சி உறுப்பினராக 1932 முதல் 1937 வரை பணியாற்றினார். நெல்லையப்பர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தாலும், தேவாரம் பாடிய பிறகே பக்தர்களுக்கு திருநீறு வழங்க வேண்டும் என்ற நெறிமுறையைக் கொண்டு வந்தார். கோவிலுக்குள் எல்லா சாதியினரும் சென்று வழிபட ஏற்பாடு செய்தார்.

இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த காலத்தில் இவரது மாணவர்களாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த இரா. நெடுஞ்செழியனும், க. அன்பழகனும். திராவிட இயக்க பற்று இருந்தபோதிலும், சமய ஈடுபாட்டின் காரணமாக அவரால், அதில் தொடர்ந்து நிற்க இயலவில்லை. இலங்கைக்கு சென்று பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

1934-இல், நெல்லையில் ‘சென்னை மாகாண தமிழ் சங்க’த்தின் முதல் மாநாட்டினை நடத்தி, தமிழின் பெருமைகளை ,தமிழரின் பெருமைகளை விளக்கும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். இன்றும் ‘மாநில தமிழ் சங்கம்’ நெல்லையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘செந்தமிழ் செல்வி’  இதழில் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். அதில் இந்து மத அறநிலைய பாதுகாப்பு மசோதா குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மிக முக்கிய ஆவணமாகும். இந்து மத அறநிலையத்துறை என்பதே அதன்பிறகு உருவாக்கப்பட்ட துறைதான்.

நெல்லை  ‘மணிவாசக மன்ற’த்தின் தலைவராக இருந்து  ‘மணிமாலை’ என்ற இதழை நடத்தினார்.

சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுபவராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த பல்கலைப்புலவர் கா.சு. பிள்ளை என்கிற கா. சுப்பிரமணிய பிள்ளை தனது

இறுதி காலத்தில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார்.
வீட்டு வாடகை கொடுக்கக்கூட வழியின்றி, வறுமையில் வாடியநிலையில் தனது 56-ஆவது வயதில் காலமானார்.

திருநெல்வேலியின் பெருமைக்குக் காரணமானவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்த தமிழறிஞர் கா.சு. பிள்ளையை இனியாவது தமிழ்கூறு நல்லுலகம் சற்றே திரும்பி பார்க்கட்டும்.

 

நன்றி:  தினமணி (05.11.2016)

.

இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்?

-சல்மா

the-hinthu-photo-thalaq

‘முத்தலாக்’ – இஸ்லாம் சமூகத்தில் பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் சுமந்து திரிகிற ‘முத்தலாக்’ விவகாரம் குறித்த சில விவாதங்களில் பேசிவிட்டுவந்த பிறகு, உண்டாகிய களைப்போடும் முத்தலாக் என்கிற விவகாரம் பொது சிவில் சட்டம் என்கிற நீட்சியை நோக்கி இந்தியாவைக் கொண்டுசெல்லக்கூடுமா என்கிற கேள்வியோடும் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.

‘முத்தலாக்’ என்பது, இஸ்லாம் சமூகத்தில் கணவன் ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக் தலாக் தலாக்’ என்று கூறித் தன் மனைவியை விவாகரத்து செய்வது. இது இந்தியாவின் பல இடங்களில், பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது. தொலைபேசி, வாட்ஸ்அப் போன்ற தொலைத்தொடர்புச் சாதனங்களின் மூலமாகவும் அதிகம் நடைபெறக்கூடியதாக இது இருக்கிறது.

பிரச்சினையின் ஆணிவேர்

மூன்று தலாக்குகளுக்கு இடையிலும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்கிற குரானின் வாசகம் இந்தியாவில் பல வேளைகளில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால், ஆயிரமாயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, விவாகரத்து செய்யப்படுகிற இந்திய இஸ்லாமியப் பெண்களில் 60% பேர் இந்த நடைமுறையினால் பாதிக்கப்படுவதாக பாரதிய மகளிர் அமைப்பு ஆதாரங்களைக் காட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.

இந்தக் கொடுமையான பாதிப்பிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும், முஸ்லிம் மகளிர் அமைப்பும் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை அணுகியதுதான் இந்த விவாதங்களின் அடிப்படை.

இந்த வழக்கு குறித்து, நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அறிக்கை தந்திருக்கும் மத்திய அரசு, முத்தலாக் செல்லாது என்று கூறியதோடு நில்லாமல், பொது சிவில் சட்டம் தேவை என்கிற ஒரு விஷயத்தை நோக்கியும் தனது கவனத்தை முன்னெடுத்திருக்கிறது. தனது பன்முகத்தன்மையினால்தான் இந்த நாடு ஒரே நாடாக நீடித்துவருகிறது. இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடொன்றைப் பொது சிவில் சட்டத்தின் கீழாகக் கொண்டு வர இயலும் என்று நம்புவது மிக வேடிக்கையான ஒன்று. அது நடைமுறையில் எள்ளளவும் சாத்தியமில்லை. இது மத்தியிலுள்ள ஆட்சியாளர்களும் அறிந்ததுதான்.

முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்

இதில் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் அதன் தோழமை அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்து, “பொது சிவில் சட்டம் தேவை இல்லை. தலாக் போன்ற விஷயங்கள் முஸ்லிம்களின் உள் விவகாரம்: அதில் அரசோ, நீதிமன்றமோ தலையிட உரிமை இல்லை” என்று கடுமையாகச் சொல்லியிருக்கின்றன. ஆனால், இதே அமைப்புகள் பொது அரங்குகளில் இந்த விவாதம் நடக்கும்போது, தலாக்குக்குப் பிறகு, அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குரானில் சொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் முத்தலாக் நடைமுறை குரானில் உள்ளதுபோல நடைமுறையில் இல்லை என்றும் ஒப்புக்கொள்கின்றன. இந்த முரண்பாடுதான் பிரச்சினையின் மூல வேர்.

எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் வழக்கத்தில் இல்லாத, ஒரே சமயத்தில் கூறப்படும் முத்தலாக் முறை இந்தியாவில் பல வேளைகளில், நடைமுறையில் உள்ளது என்பதையும், அதனால் தங்களது சமூகத்துப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தே அதைக் கண்டும் காணாமல் புறக்கணித்துவந்திருக்கிறது இந்த அமைப்பு. முத்தலாக்குக்குப் பிறகு, ஜீவனாம்சம் தரலாம் என்று குரானில் கூறியிருப்பதாக பிளேவியா ஆக்னஸ் என்கிற கட்டுரையாளரின் மேற்கோள்களைக் காட்டிப் பொது விவாத அரங்குகளில் பேசும் இஸ்லாமிய அமைப்பினர், இந்த அநீதிகளுக்கு எதிராகப் பல காலங்களாகப் பாராமுகமாக இருப்பது ஏன் எனும் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்றத்துக்கான காரணமும் வாய்ப்பும் மார்க்கத்திலேயே இருப்பதாக வாதிடுபவர்கள், இத்தனை காலம் அதைச் செய்யாமல் இருந்தது ஏன்? பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனைக்குத் தீர்வுகாண முன்வராமல் இருப்பது ஏன்?

மோசமான பிம்பம்

இஸ்லாமியச் சட்டங்கள் தெரிந்த வழக்கறிஞர்கள், ஹாஜி, கல்வியாளர்கள், மற்றும் பெண்கள் இணைந்த ஒரு சட்டரீதியான முறையீட்டு மன்றங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலாவது, இந்தப் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்களது தரப்பை முன்வைக்க ஒரு இடமாக அது இருந்திருக்கும். அவர்கள் நீதிமன்றங்களை நாடும் தேவையும் இருந்திருக்காது. அதைக் கூட இந்த முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அமைத்துத்தரவில்லை.

இஸ்லாமியச் சமூகத்தில் குரானுக்கு முரணாக நடைமுறையில் இருக்கும் இந்த முத்தலாக் போன்ற விஷயங்கள் இரண்டு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஒன்று, இஸ்லாமியப் பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மற்றொன்று, இந்த நடைமுறைகளால்தான் இந்திய அளவில் இஸ்லாமிய மண விலக்கு குறித்த மோசமான ஒரு பிம்பம் இந்தியப் பொதுச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நீதிக்கான இடம் நீதிமன்றம்தானே?

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்குச் சொத்துரிமை, பெண் கல்வி ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் பேசிய ஒரு மதத்தின்மீது மோசமான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? நடைமுறையை மாற்றும் பொறுப்பும் அதிகாரமும் இருந்தும் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது யார்? இந்த இரண்டு விஷயங்களையும் யார் சரி செய்திருக்க வேண்டும்? மதத்துக்குக் கெட்ட பெயரை உருவாக்கியதில் அந்த அமைப்புகளுக்குப் பங்கு இருக்கிறது அல்லவா?

தங்களை அதிகாரம்மிக்கவர்களாக முன்னிறுத்தி, பெண்களின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியபடி இருக்கிற யாரிடமிருந்தும் தங்களுக்கு நீதி கிடைக்காது என்கிற நிலையில்தான், அந்தப் பெண்கள் அமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக நீதிமன்றத்தை அணுகிற்று. குடும்பமும் சமூகமும் கைவிட்ட பிறகு அவர்கள் செல்லவிரும்புவது நீதிக்கான ஒரு இடம். அது நீதிமன்றமாகத்தானே இருக்க முடியும்?

மாற்றத்துக்கான குரல்கள்

இஸ்லாமியச் சட்டங்களிலும் நடைமுறை களிலும் வேறு ஒருவரும் தலையிடக் கூடாது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறுகிறது. ஆனால், சீர்திருத்தும் உரிமைபெற்ற இந்த அமைப்பு, இந்தனை ஆண்டுக் காலமும் என்ன செய்துகொண்டு இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் தேட வேண்டுமே தவிர, வழக்குப் போட்டவர்கள் மீதோ நீதிமன்றத்தின் மீதோ குறை சொல்வதில் பொருளில்லை.

salma

சல்மா

மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழையவும் வழிபடவும் உரிமை உண்டு என்று சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அடியொற்றி, நீதிமன்றங்கள் வழியே தங்களது உரிமைகளை உறுதிசெய்வதை யாரும் தடுக்க இயலாது என்று இஸ்லாமியப் பெண்கள் இன்று நம்புகிறார்கள்.

இந்திய இஸ்லாமிய அமைப்புகள் பலவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிகமும் விலகி இருந்துவிட்டன. ஷாபானு வழக்கின்போதே இஸ்லாமியச் சமூகம் விழித்திருக்க வேண்டும். இப்போது பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுக்க அவர்களது மத அடிப்படைவாதம் மட்டும் காரணமல்ல. பரிதவித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் மீதான இஸ்லாம் சமூகத்தின் பாராமுகமும்தான் காரணம் என்பதை இந்த அமைப்புகள் சற்றுத் தீவிரமாகவே யோசிக்க வேண்டும்.

மனித உரிமைகளுக்கு எதிரான நடைமுறைகள் மாறித்தான் ஆக வேண்டும். மாற்றத்துக்கான குரல்கள் இப்போது உள்ளிருந்தே உரக்க ஒலிக்கின்றன. நியாயமான இந்தக் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய கடமை இஸ்லாமியச் சட்ட அமைப்புகளுக்கு இருக்கிறது. இதைக் கண்டுகொள்ள மறுத்தால், மாற்றத்தைக் காலம் அவர்கள் மீது சுமத்திவிட்டுப் போவதைத் தவிர்க்க முடியாது.

 

குறிப்பு:

திருமதி சல்மா, கவிஞர், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்.

தொடர்புக்கு: tamilpoetsalma@gmail.com

நன்றி: தி இந்து (24.11.2016)